அலசல்
Published:Updated:

“பத்து வருஷமா வராதவரு... இப்ப மட்டும் எதுக்கு வர்றாரு?”

மலைக்கிராம மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மலைக்கிராம மக்கள்

பன்னீர் மீது பாயும் மலைக்கிராம மக்கள்!

செருப்பைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து செல்வது, ஜீப்பில் ஏறி மலைப்பாதையில் பயணம் செய்வது எனக் கடந்த சில வாரங்களாகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது தொகுதியில் பல சாகசங்களைச் செய்துவருகிறார். ‘‘இவரு எப்பவும் இப்படியெல்லாம் வேர்க்க விறுவிறுக்க எதுவும் பண்ற ஆள் இல்லையே... சென்னை, பெரியகுளம் வீடு, போடி கட்சி அலுவலகம்... இதைத் தாண்டி எங்கேயும் போகாதவரு, இப்போ காடு, மலைனு ஏறிக்கிட்டு இருக்காரே... என்ன விஷயம்?’’ என்று தங்களுக்குள் பேசிக்கொள்ளும் கட்சிக்காரர்கள், ‘‘தேர்தல் வரப்போகுதுல்ல… எல்லாம் அதுக்குத்தான்’’ என்று சொல்லிச் சிரித்துக்கொள்கிறார்கள். முதுவார்குடி, சிறைக்காடு, மேலப்பரவு, அகமலை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு வரிசையாக விசிட் அடித்த ஓ.பி.எஸ்., நலத்திட்ட உதவிகளையும் வளர்ச்சிப் பணிகளையும் வாரி வழங்கியிருக்கிறார். ஆனாலும், அவரையும் அவரது இந்தத் திடீர் அக்கறையையும் சந்தேகத்துடனேயே பார்க்கிறார்கள் மலைக்கிராம மக்கள்!

“பத்து வருஷமா வராதவரு... இப்ப மட்டும் எதுக்கு வர்றாரு?”

முதுவார்குடி: குரங்கணி தீ விபத்து ஏற்பட்டபோது, தீயில் சிக்கிப் படுகாயமடைந்தவர்களை மீட்க உதவியவர்களில் முதுவார்குடிப் பழங்குடியின மக்களின் பங்கு பெரிது. குரங்கணி முதல் முதுவார்குடி வரையிலான மலைப்பாதையில் ஜீப் செல்ல வனத்துறை தடைவிதித்து பல்வேறு இடையூறுகளைச் செய்தபோது, தங்கள் எதிர்ப்பைக் காட்ட, கடந்த நாடாளுமன்றத் தேர்தலை அம்மக்கள் புறக்கணித்தனர். முதுவார்குடிக்கு மலைப்பாதையில் ஜீப் பயணம் செய்தபோது, ‘‘முதுவார்குடி பத்திச் சொல்லக் கேட்டிருக்கேன். ஆனா, இவ்வளவு கஷ்டமா இருக்கும்னு நினைக்கலை’’ என அப்பகுதி மக்களிடம் ஓ.பி.எஸ் கூற, ‘‘ஆமா... ரொம்ப கஷ்டத்துல இருக்கோம்’’ என அங்கிருந்த பெண்கள் சொல்லியிருக்கிறார்கள். ‘‘எல்லாத்தையும் சரிபண்ணிடலாம்’’ என உறுதி கொடுத்துவிட்டு, குரங்கணி முதல் முதுவார்குடி வரை ரூ.49.20 லட்சம் மதிப்பீட்டில், 7 கி.மீ மலைப்பாதையில் கல் பாவும் பணியைத் தொடங்கிவைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

‘‘ரோடு இல்லாம நடுக்காட்டுல நாங்க படுற அவஸ்தைகள் யாருக்கும் வரக் கூடாதுங்க. ஏதாவது மருத்துவ அவசரமா இருந்தாக்கூட, 7 கி.மீ டோலி கட்டித்தான் தூக்கிட்டுப் போகணும். ஊர்ல எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதுவரைக்கும் ஒரு அதிகாரியும் வந்து எங்களைப் பார்த்தது கிடையாது; எங்க குறைகளைக் கேட்டது கிடையாது. இப்போ திடீர்னு ஓ.பி.எஸ் வந்தாரு... குறைகளைக் கேட்டாரு. இதே ஓ.பி.எஸ்., பத்து வருஷத்துக்கு முன்னாடி போடி தொகுதியில முதல் தடவை ஜெயிச்சவுடனேயே இங்கே வந்திருந்தா, இன்னிக்கு எங்க கஷ்டம் இல்லாமப் போயிருக்கும். இப்போ வந்ததாவது உண்மையான அக்கறையா இருக்கணும்... பாப்போம்’’ என்றார் முதுவார்குடி இளைஞர் ஒருவர்.

“பத்து வருஷமா வராதவரு... இப்ப மட்டும் எதுக்கு வர்றாரு?”

அகமலை: ‘‘தாய் மலைக்கிராமமான அகமலை, அதன் 18 உட்கடை கிராமங்கள்ல வாழ்றவங்களையும் சேர்த்து மொத்தம் 2,000 பேர் இந்த மலையில இருக்காங்க. சோத்துப்பாறை அணையிலருந்து அகமலை வரை மொத்தம் 16 கி.மீ தூரத்துக்கு இப்போ வரைக்கும் ரோடு போடலை. ஆனா, அன்னிக்கு வந்த ஓ.பி.எஸ்., ‘ரோடு போட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு’னு சொன்னார். இத்தனை வருசமா ரோடு கேட்டு கூப்பாடு போட்டும் கண்டுக்காம இருந்தவரு, இப்போ மட்டும் செஞ்சு கொடுக்குறேன்னு சொல்றது நம்புற மாதிரி இல்லை. அதுபோக, ‘பட்டா நிலமெல்லாம் வருவாய்த்துறை இடம்னு ரெக்கார்டுல எழுதப்பட்டிருக்கு. அதை மாத்தி எழுதணும்’னு அவர்கிட்ட போய் கேட்டுக் கேட்டு ஓஞ்சுபோயிட்டோம். அதை இதுவரைக்கும் சரிசெய்யவே இல்லை. இந்தத் தேர்தல்னு ஒண்ணு வரலைன்னா, இந்தப் பக்கம்கூட எட்டிப் பார்க்க மாட்டாரு துணை முதல்வரு’’ என்று கொதித்தார் அகமலை விவசாயி ஒருவர்.

‘‘அகமலைப் பகுதியில 15,000 ஏக்கர்ல விளையுற எலுமிச்சை, வாழை, நார்த்தங்காயை எங்க தலையிலயும் கழுதை முதுகுலயும் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் சுமந்து அலையணுமோ தெரியலையே... ஏன் இப்பிடி எங்க தலையில எழுதியிருக்கு?’’ என்று வேதனைப்பட்டார், அகமலையில் விவசாயம் செய்துவரும் சண்முகப்பிரியன்.

தி.மு.க-வைச் சேர்ந்த போடி முன்னாள் எம்.எல்.ஏ-வான லெட்சுமணனிடம் பேசினோம். ‘‘தேனி வீரபாண்டித் திருவிழாவின்போது, ராட்டினம் விடுபவர்கள் முதல் பெட்டிக்கடை வைப்பவர்கள் வரை வந்து குவிவார்கள். திருவிழா முடிந்ததும் காணாமல் போய்விடுவார்கள். அப்படித்தான் ஓ.பன்னீர்செல்வமும் அவருடன் இருக்கும் கூட்டமும். தேர்தல் வந்தால்தான் மக்கள் கண்ணுக்குத் தெரிவார்கள். நான் போடி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, 2008-ம் ஆண்டு முதுவார்குடிக்கு பள்ளிக்கூடக் கட்டடம் கட்டி, ஆசிரியரை நியமித்து அங்குள்ள மாணவர்களுக்குக் கல்வி கிடைக்க வழிசெய்தேன். ஆனால்,

ஓ.பி.எஸ் வந்த பிறகு அந்தப் பள்ளி மூடப்பட்டு விட்டது. சாலை போடுவேன் என வாக்குறுதி கொடுத்துவிட்டு, கல் பதித்துக்கொண்டிருக் கிறார்கள். மலைக்கிராம மக்களை ஜீப்பில் செல்ல விடாமல் வனத்துறையினர் தடுத்தபோது, இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர் ஓ.பி.எஸ். இப்படி முதுவார்குடி பற்றி மட்டும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று ஓ.பி.எஸ்-க்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் காடு, மலை எனச் சுற்றிக்கொண்டிருக்கிறார்’’ என்றார் காட்டமாக.

லெட்சுமணன்
லெட்சுமணன்

இது தொடர்பாகப் பேச ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவர் பிஸியாக இருப்பதாக அவரின் உதவியாளர்கள் தகவல் கொடுத்தனர். அவருக்கு நெருக்கமானவர்களிடம் இது பற்றிப் பேசியபோது, ‘‘கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 738 மலைவாழ் மக்களுக்கு 2.36 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஓ.பி.எஸ் வழங்கியிருக்கிறார். எப்போதும் குறை சொல்லிக்கொண்டேயிருந்தால் யார் நல்லது செய்வார்கள்?’’ என்று சுருக்கமாக முடித்தார்கள்.

ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் என மக்களையும் தொகுதியையும் மறந்துவிட்டு ஏதோ புதிதாக விழித்துக்கொண்டதுபோல, தேர்தல் நேரத்தில் போய் மக்களிடம் நின்றால், உதவி செய்கிறேன் என்று சொன்னால், அவர்கள் சந்தேகிக்கவும் விமர்சிக்கவும்தான் செய்வார்கள். வாக்காளர்கள் வேறு, மக்கள் வேறு அல்ல முதல்வர்களே!