நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட யானைப் பாடி பகுதியைச் சேர்ந்தவர் மாரி (50). பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், வீட்டுக்கு விறகு சேகரிக்க அருகிலுள்ள வனத்துக்கு நேற்றைய தினம் சென்றிருக்கிறார். ஆனால், இரவுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் மாரியைக் காணவில்லை. இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, மாரியைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுவந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தெப்பக்காடு யானைகள் முகாம் பகுதியில் மாரியின் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதை அதிகாலையில் வனத்துறையினர் கண்டறிந்திருக்கின்றனர். விறகு சேகரிக்கச் சென்ற மாரியைப் புலி தாக்கிக் கொன்று, உடல் பாகங்களைத் தின்றிருப்பதை பழங்குடிகள் உறுதிசெய்தனர். கடந்த மாதம் இதே பகுதியில் வேட்டைத் தடுப்புக் காவலர் ஒருவரை புலி தாக்கியதில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அடுத்தடுத்த சம்பவங்களால் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஊட்டி- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், ``தெப்பக்காடு யானை முகாமுக்கு அருகிலிருக்கும் பாடி கிராமத்திலிருந்து மாரி, வயது சுமார் 50 என்ற பெண் நேற்று மாலை அருகிலிருக்கும் வனப்பகுதிக்குள் விறகு சேகரம் செய்யச் சென்றிருந்தார்.

இரவு 9 மணி வரை திரும்பவில்லை என வனப் பணியாளர்களுக்கு அவருடைய வீட்டிலிருந்து தெரிவிக்கப்பட்டது. காலை 5 மணிக்கு வனப் பணியாளர்கள் தேடிப் பார்த்ததில் யானை முகாமிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அந்தப் பெண்மணி இறந்துகிடப்பது கண்டறியப்பட்டது.

புலி தாக்கி அந்தப் பெண்மணி இறந்திருக்கலாம். இது குறித்த தகவல் அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. சடலத்தைப் பிரேத பரிசோதனை செய்ய, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். உடனடி நிவாரணம் ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது" எனத் தெரிவித்திருக்கிறார்.