அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

தொடாத... கிட்டவராதனு விரட்டுறாங்க... துடிக்கும் சிறுமி... கலங்கும் தாய்!

கிரிஜா
பிரீமியம் ஸ்டோரி
News
கிரிஜா

என் மக படுற கஷ்டத்தைப் பார்த்து செத்துப் போயிடலாம்னுகூட சமயத்துல தோணும். ஆனா, எனக்குப் பின்னாடி இந்தப் புள்ளைய யார் பாத்துக்குவாங்கன்னு நினைக்கிறப்ப மனசு மாறிடும்

11 வயதான அந்தச் சிறுமியைப் பார்க்கும் எவரும் கலங்கிப்போவார்கள்... உடல் முழுக்கக் கொப்புளங்கள், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உரிந்துகொண்டிருக்கும் தோல் என விநோதமான நோயின் தாக்கத்தால், தினம் தினம் ரண வேதனையை அனுபவித்துவருகிறாள் கிரிஜா.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள தில்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிரிஜா, அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவருகிறாள். தில்லாம்பட்டி கிராமத்திலுள்ள அவளது வீட்டுக்கு நாம் போயிருந்தபோது தாத்தா, பாட்டி, அம்மா, தங்கை என அனைவரும் பரபரப்பாக ஏதோவொரு வேலை செய்துகொண்டிருக்க, கிரிஜா மட்டும் வீட்டுத் திண்ணையில் அமைதியாக அமர்ந்திருந்தாள். அறிமுகமில்லாத எங்களைக் கண்டு கூச்சப்பட்டாள்.

தொடாத... கிட்டவராதனு விரட்டுறாங்க... துடிக்கும் சிறுமி... கலங்கும் தாய்!

அவளுடைய பாட்டி அமுதவள்ளியிடம் பேசினோம். “திருச்சி ஜி.ஹெச்லதான் இவ பொறந்தா. ஆபரேஷன் தியேட்டர்லருந்து எடுத்துட்டு வந்து அவளை என் கையில கொடுத்தப்பவே, உடம்பெல்லாம் கொப்புளம் இருந்துச்சு. உடம்பு முழுக்க தோலும் உரிஞ்சு இருந்துச்சு. ‘ஏன் குழந்தை இப்பிடி இருக்கு?’னு டாக்டர்கள்கிட்ட பயத்தோட கேட்டேன். ‘முன்னாடியே ஸ்கேன் எதுவும் எடுத்துப் பார்க்கலையா... குழந்தைக்குத் தோல்ல ஏதோ பிரச்னை’னு சொல்லி கண்ணாடி அறையில கொண்டு போய் 20 நாள் வெச்சுட்டாங்க. எப்பிடியாவது பிள்ளையைச் சரிபண்ணிக் கொடுத்துடுவாங்கன்னு நினைச்சோம். ஆனா, எதுவும் சரியாகலை. ‘பிஞ்சு உடம்பு... வைத்தியம் பார்க்குறோம்னு ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க. அதுக்கு பதிலா குழந்தைக்குச் சத்தானதா வாங்கிக் கொடுத்து தேத்துங்க. புதுசா ரத்தம் ஊற ஊற தோல் உரியுற பிரச்னை சரியாக வாய்ப்பிருக்கு’ன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. 11 வருஷம் ஆகியும் இன்னும் அவளுக்கு எதுவும் குணமாகலை” என்று கலங்கினார்.

கிரிஜாவின் தாத்தா லோகநாதன் நம்மிடம், “இப்பகூட பரவாயில்லை... வெயில் காலம் வந்துட்டா குழந்தை தாங்க மாட்டா. துடிதுடிச்சுப் போயிடுவா. உடம்பெல்லாம் கொப்புளம் வந்து உடைஞ்சு, தோல் உரிய ஆரம்பிச்சுடும். அந்த வலியிலும், எரிச்சல்லயும் குழந்தை படுற கஷ்டத்தைக் கண்கொண்டு பாக்க முடியாது. உடம்புல தீப்புடிச்சு எரியுறது மாதிரி இருக்கும். எரிச்சல் தாங்க முடியலைனு உடம்புல தண்ணியை எடுத்து ஊத்திக்குவா. பல நாள், நடு ராத்திரியில் அழுதுக்கிட்டே குளிச்சிருக்கா” என்றார்.

தொடாத... கிட்டவராதனு விரட்டுறாங்க... துடிக்கும் சிறுமி... கலங்கும் தாய்!

கிரிஜாவின் தாய் கௌசல்யாவிடம் பேசியபோது, “மக படுற வேதனை ஒரு பக்கம், ‘இப்படி ஒரு பிள்ளையைப் பெத்து வெச்சுருக்கா... என்ன பாவம் பண்ணுனாளோ’ன்னு சிலர் பேசுறது இன்னொரு பக்கம்னு நரக வேதனை சார். ஊர் வாய்க்குப் பயந்து எந்த நல்லது கெட்டதுக்கும் நான் போறதில்லை.

‘ஸ்கூல்ல பிள்ளைங்க எல்லாரும் என்னைய தள்ளிப்போகச் சொல்றாங்க... அவங்க சாப்பிடுற தின்பண்டம் எதையும் கொடுக்க மாட்டேங்கறாங்க. நான் கொடுத்தாலும் வாங்க மாட்டேங்கறாங்க. தொடாத... கிட்டவராதனு விரட்டுறாங்க’ன்னு பாப்பா என்கிட்ட சொல்லும்போது துடிச்சுப்போயிடுவேன். ‘நீ ஒதுங்கியே இரு. யாரையும், எதுவும் சொல்லாத. நம்ம தலையெழுத்து இதுதான்’னு சொல்லி அவளைச் சமாதானப்படுத்திட்டு நானும் அழுவேன். இவளோட எதிர்காலம் என்ன ஆகுமோன்னு நினைச்சு தினமும் ராத்திரி தூக்கம் வர மாட்டேங்குது.

என் மக படுற கஷ்டத்தைப் பார்த்து செத்துப் போயிடலாம்னுகூட சமயத்துல தோணும். ஆனா, எனக்குப் பின்னாடி இந்தப் புள்ளைய யார் பாத்துக்குவாங்கன்னு நினைக்கிறப்ப மனசு மாறிடும். என் பிள்ளைக்காக மட்டும்தான் வாழுறேன்.

குழந்தை இப்படி இருக்குறதால, ‘இந்தக் குழந்தை நமக்கு வேண்டாம். ஊசிபோட்டு ஏதோ ஒண்ணு செஞ்சுடலாம்’னு என் வீட்டுக்காரர் சொன்னாரு. பெத்த மனசு தாங்க முடியாம சண்டை போட்டுட்டேன். அதனால அவரு எங்களைக் கைவிட்டுட்டாரு. இப்ப அம்மா, அப்பா வீட்டுலதான் இருக்கேன். இன்னொரு மகளும் இருக்கா. குடும்பக் கஷ்டத்துக்காக, தினம் 200 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போறேன். பெரிய ஆஸ்பத்திரியில சிகிச்சை கொடுத்தா பாப்பாவை நல்லா ஆக்கிடலாம்னு சொல்றாங்க. அரசாங்கம் ஏதாவது உதவி செஞ்சு கொடுத்தா புண்ணியமாப் போகும்” என்று கும்பிட்டபடி கதறி அழுதார்.

கிரிஜாவின் நிலை கண்டு அவளுடைய வகுப்பாசிரியை ஒருவர், உடலில் தடவுவதற்கு மருந்து பாட்டில் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். மிகுந்த நம்பிக்கையோடு, கிரிஜா அதை எடுத்து தினமும் உடலெல்லாம் பூசிக்கொண்டு, முகமோ உடலோ ஆரோக்கியமாக மாறியிருக்காதா என மறுநாள் ஏக்கமும் ஆர்வமுமாகக் கண்ணாடியைப் பார்க்கிறாளாம். கிரிஜாவின் நம்பிக்கை நிஜமாக வேண்டும்.

அரசும் நல்லிதயங்களும் அவளின் வாழ்க்கை மாற உதவிக்கரம் நீட்ட வேண்டும்!