திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக கடந்த ஒன்றரை ஆண்டுக்காலமாகப் பணியாற்றிவந்த கார்த்திகேயன், சமீபத்திய பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலால் திருச்சி மத்திய மண்டல ஐஜியாகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
மத்திய மண்டல ஐஜியாக புதன்கிழமை (நேற்று) பதவியேற்ற கார்த்திகேயன் கூறியிருப்பதாவது, ``மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களிலும் போதைப்பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க 2023-ம் ஆண்டில் அதிக முக்கியத்துவம் தரப்படும். கஞ்சா, குட்கா மற்றும் இதர போதைப் பொருள்களைக் கடத்துதல், பதுக்குதல், சட்ட விரோதமாக விற்பனை செய்யும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுபோன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுவர்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தகுந்த அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. காவல் நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது முறையாக விசாரணை நடத்தி தீர்வுகாண அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மணல் கடத்தல், சட்டவிரோதமாக சாராய விற்பனை, லாட்டரி விற்பனை போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள்மீது கடுமையான சட்டப்பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இணையதள மோசடிக் குற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்து பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சட்டவிரோத மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், குற்றச் செயல்களில் ஈடுபடும் ரெளடிகள், சமூக விரோதிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள். சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். என்னை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள், வேலை நாள்களில் தினந்தோறும் மதியம் 12 முதல் 1 மணி வரை வந்து புகார் அளிக்கலாம்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக இருந்த கார்த்திகேயன், அதற்கு முன்பு திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும், கோவை சரக காவல்துறை துணைத்தலைவராகவும் 2016-ம் ஆண்டில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.