‘சார்பட்டா பரம்பரை' படத்தில் குத்துச் சண்டையைக்கூட ஆக்ரோஷம் தவிர்த்து நளினமாகப் போடும் ‘டான்சிங் ரோஸ்' பாத்திரத்தை இயக்குதர் இரஞ்சித் படைத்திருப்பார். நடனம் ஆடுவதைப்போன்று நளினமாக சண்டை செய்யும் டான்சிங் ரோஸை மக்கள் ரசித்தனர். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர்-க்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது அவரின் சண்டைக் காட்சிகள்தான். அதுவும் எம்.ஜி.ஆர்-இன் கத்திச்சண்டைக்கு விசில் தூள் பறக்கும். அந்தக் கத்திச் சண்டைகளில் ஆக்ரோஷத்தைவிட நளினம் அதிகம் இருக்கும். எம்.ஜி.ஆர் நளினமாக வாள் சுழற்றும் லாகவத்தை மக்கள் ரசித்தனர். அதைப்போலவே 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ‘டான்சிங் ரோஸ்' அதிகம் ரசிக்கப்பட்டார். அவர் ஒரு ஆங்கிலோ இந்தியராகவே படத்தில் வருவார்.
இதேபோல அந்தக்கால 'பச்சை விளக்கு' படத்தில் இன்ஜின் டிரைவராக சிவாஜி நடிப்பார். டிரைவரின் உதவியாளரான ஃபயர் மென் ஜோசப் பாத்திரத்தில் வரும் நாகேஷை ஒரு ஆங்கிலோ இந்தியராகக் காட்டியிருப்பார்கள். காரணம், பல ஆங்கிலோ இந்தியர்கள் ரயில்வேயில் வேலை பார்த்தார்கள். அதன் சித்திரிப்புதான் 'பச்சை விளக்கு'. இப்பொழுது வரும் படங்களில் ஆங்கிலோ இந்திய பாத்திரங்கள் வருவதில்லை. 'சார்பட்டா பரம்பரை' கதை 1970-களில் நடப்பதாக வருவதால்தான் டான்சிங் ரோஸ் வருகிறார். காரணம், இன்றைய தமிழ்ச் சமூகத்தில் அவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

என் கல்லூரி காலத்தில் நான் ரயில்வே காலனியில்தான் இருந்தேன். அப்போது பல ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் அங்கு வசித்தார்கள். அதுபோலவே பொன்மலை ரயில்வே காலனியிலும் நிறைய ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் வாழ்ந்தார்கள். திருச்சியில் பொன்மலை பொன்மலைப்பட்டி, சுப்ரமணியபுரம், கல்லுக்குழி கன்டோன்மென்ட் மேரிஸ் தோப்பு பகுதிகளில் அதிகம் வாழ்ந்துவந்த இவர்களை இப்போது முன்புபோல் பார்க்க முடியவில்லை. எங்கே போனார்கள் என்று தேடுவதேகூட வரலாறாக மாறும்.
இடம் பெயர்தல் எல்லாக் காலங்களிலும் உலகெங்கும் நடந்துள்ளது. ஆட்சியைப் பிடிக்க, அதிகாரம் செலுத்த, வணிகம் செய்ய, புதிய வளங்களை அள்ள, பாதுகாப்பாய் வாழ, படிப்புக்காக என்று இந்த இடம் பெயர்தல் நடந்துகொண்டே இருந்தது; இருக்கிறது. பல கலப்பினங்களும் இந்தமாதிரி இடப்பெயற்சியால்தான் உருவாகின்றன. கலப்பினங்கள் வழியாகவே புதிய பண்பாடுகள் பிறக்கின்றன. இப்படி உருவான ஒரு கலப்பினம்தான் ஆங்கிலோ இந்தியர்கள்.
இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு விக்டோரியா ராணி கிழக்கிந்திய கம்பெனிக்கு கி.பி 1600-ல் அனுமதி கொடுத்தார். அவர்கள் 1608-ல் வணிகம் செய்ய இந்தியா வந்தனர். முதல் 100 ஆண்டுகள் இங்கிலாந்திலிருந்து பெண்களை இங்கு அழைத்துவர பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. அதனால் கம்பெனியின் ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தார்கள் இணைந்து வாழ்ந்தார்கள். இதற்கு சம்மதித்த பெண்களுக்கு ஒரு சவரன் தரப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. இப்படி பிரிட்டிஷ் ஆண்களுக்கும் இந்தியப் பெண்களுக்கும் பிறந்தவர்களை யுரேஷியன்ஸ் என்று அழைத்தார்கள். பிறகு ஆங்கிலோ இந்தியர்கள் என்று அழைக்கும் பழக்கம் வந்தது. ஆங்கிலப் பண்பாட்டை அதிகமும் ஏற்ற இந்தியர்களாக இவர்கள் வாழ்ந்தனர். ஒரு புதிய வகைப் பண்பாடு உருவானது. ஆங்கிலேயர்களைப் போல் சட்டை அணிந்ததால் இவர்களை சட்டைக்காரர், சட்டைக்காரி என்றும், ஆங்கிலம் கலந்து பேசியதால் பீட்டர் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர்.
மேலும் பெண்களை அம்மா என்று அழைத்துப் பழகிய நம்மவர்கள் இந்தப் பெண்களை மிஸ்ஸியம்மா என்றனர். ஒரு படம்கூட இந்தப் பெயரில் வந்தது. இவர்களின் உளவியலை முன்வைத்து எஸ்.ராமகிருஷ்ணன் ஷெர்லி என்ற ஆங்கிலோ இந்தியப்பெண் பற்றிக் கதையொன்று எழுதியிருப்பார். கிராப் வைத்துக்கொண்டு சிகரட் பிடிக்கிற கிறித்தவப் பெண்ணான அவள், தன்மீது எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு செலுத்திய தங்கரத்னம் மீது காட்டிய விஸ்வாசம்தான் கதை. இந்த மண்ணை நேசிப்பவளாக ஷெர்லி இருப்பாள். ஆனால் இங்குள்ளவர்கள் அவளை ஏற்பதில் மனத்தடை இருக்கும்.

ஆங்கிலோ இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமானபோது கவர்னர் ஜெனரலாக இருந்த கான்வாலிஸ் 1786-ல் இவர்களின் மேல் படிப்புக்கும் ராணுவப்பணிக்கும் தடை விதித்தார். பிறகு, இங்கிலாந்திலிருந்து படை வீரர்களை அழைத்துவருவதில் சிக்கல் வந்த பின்னால் மீண்டும் இவர்கள் ராணுவத்தில் சேர்ந்தனர். உடல் வலிமையை இயற்கையிலேயே பெற்றிருந்த இவர்கள் அதிக வெப்பம் நிறைந்த ரயில் இன்ஜினிலும் கனரகத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்தார்கள்.

1927-ல் நாகப்பட்டினத்திலிருந்து ரயில்வே தொழிற்சாலை திருச்சி பொன்மலைக்கு இடம் மாறியது. அதோடு சேர்ந்து ஆங்கிலோ இந்தியர்களும் அதிக அளவில் திருச்சி வந்தனர். பொதுவாக இவர்கள் உல்லாசப்பிரியர்கள். விளையாட்டிலும் மேற்கத்திய இசையிலும் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள். இவர்கள் பங்கேற்ற புட்பால், வாலிபால், ஹாக்கி டீம்கள் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தன. அதுபோலவே இவர்களின் நியுஇயர் கிறித்துமஸ் கொண்டாட்டங்கள் மிகவும் ரம்யமானவை. 1970-80களில் TELC சர்ச்சுக்கு எதிரேயுள்ள ரயில்வே இன்ஸ்ட்டிட்யூட், பொன்மலைப்பட்டியில் உள்ள பிராங்ளின் கிளப், பொன்மலை அம்பேத்கர் மண்டபம் அருகேயுள்ள ரயில்வே டான்ஸ் ஹால் -இவர்களின் கொண்டாட்டங்களால் களைகட்டிய காலங்கள் அவை. திருச்சியில் வாழும் ஆங்கிலோ இந்தியர்களுக்காக பொன்மலையிலும் திருச்சியிலுமாக இரண்டு சங்கங்கள் இயங்குகின்றன. கல்விக்கு உதவுவதும் இறுதிச் சடங்குகளுக்கு உதவி செய்வதும் இவற்றின் முக்கியப் பணி.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட ஆங்கிலோ இந்தியர்களுக்காக கல்கத்தாவிலும் சென்னையிலும் தொடங்கியதைப்போல் திருச்சியில் வெஸ்ட்ரி, கேம்பியன், ஆங்கிலோ இந்தியன் பெண்கள் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளை அன்றைய ஆங்கிலேய அரசும் கிறித்தவத் துறவியரும் உருவாக்கினார்கள். ஒட்டுமொத்தத் திருச்சி மக்களின் கல்வி வளர்ச்சியில் இப்பள்ளிகளின் பங்களிப்பு மகத்தானது. ‘செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி’ அருட்சகோதரிகளால் ஆங்கில வழியில் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட பள்ளி. இதை செயின்ட் ஆன்ஸ் தொடங்கினார். அன்னை கிளெவடின் எச்நீர், அன்னை வெரோனிகா இருவரும் இப்பள்ளியை உருவாக்கி வளர்த்தார்கள்.
Aim Higher and HIGHER என்ற நோக்கத்தோடு 1862-ல் இப்பள்ளி தொடங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த வெடி விபத்துகளால் (1763,1772) உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்காக ஆதரவற்றோர் இல்லமாகத் தொடங்கப்பட்டு பிறகு 1826-ல் செயின்ட் ஜான் வெஸ்ட்ரியால் பள்ளியாகவும் ஆதரவற்றோர் இல்லமாகவும் இன்றைய ‘வெஸ்ட்ரி பள்ளி’ உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் ஸ்வார்ட் பாதிரியார் முக்கியமானவர். புத்தூரிலிருந்த இப்பள்ளி 1880-ல் கன்டோன்மென்ட்டுக்கு வந்தது. அரசிடமிருந்து 12 ஏக்கர் நிலத்தைப் பள்ளி விரிவாக்கத்திற்கு கார்டினர் பெற்றுக்கொடுத்தார். விரிவான பள்ளி வளாகத்தையும், உயர் கல்வியைத் தரும் இப்பள்ளியையும் தென்னிந்திய திருச்சபை நடத்துகிறது. சிறந்த கல்வி தரும் இப்பள்ளி தனது 250வது ஆண்டுவிழாவை 1913-ல் கொண்டாடியது.

திருச்சியின் புகழ்பெற்ற பள்ளி கேம்பியன் பள்ளி. புனித எட்மண்ட் கேம்பியன் நினைவாக 1934-ல் திருமதி ஜோசப் டி ரோஸாரியோ அவர்களால் தொடங்கப்பட்டது. பள்ளியின் உள்ளேயே 1960-ல் தேவாலயம் கட்டப்பட்டது. 1979 முதல் மேல்நிலைப்பள்ளியான இது மான்ட் ஃபோர்ட் சகோதரர்களால் நடத்தப்படுகிறது. இப்பள்ளி விளையாட்டு மற்றும் இசை போன்ற பல்திறன் பயிற்சிக்கும் வாய்ப்பளிக்கிறது.
இப்பள்ளியில் உருவான ஆளுமைகள் - கார்கில் போர் வீரர் மேஜர் சரவணன், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் நலன் குமாரசாமி, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி.

ஆங்கிலோ இந்தியர்களுக்காக உருவான இந்த மூன்று பள்ளிகளும் இன்று எல்லோருக்குமானதாக வளர்ந்து திருச்சியின் அடையாளங்களாக மாறியுள்ளன. தங்கள் வாழ்க்கை முறையை, அதுதரும் சுதந்திரத்தை ஆங்கிலோ இந்தியர்கள் ரசிக்கிறார்கள். இன்றைய வாழ்க்கை நெருக்கடியில் புலம்பெயர்ந்து பிற நாடுகளுக்குப் போகும்போது தங்களின் இந்தக் கலாச்சாரம் மிகவும் பயன்படுவதாக ஆங்கிலோ இந்தியர்கள் கூறுகிறார்கள். தனித்த ஒரு சிறுபான்மையராகத் தங்களைக் கருத வேண்டும் என்ற இவர்களின் கோரிக்கை அரசிடம் இன்றும் உள்ளது.
ஜார்கண்ட் மலைகளுக்கிடையில் ஆங்கிலோ இந்தியர்களுக்காக மெக்லுஸ்கீ கஞ்ச் என்ற தனி நகரத்தை இயர்நஸ்ட் மெக்லுஸ்கீ உருவாக்கியுள்ளார். ஆங்கிலோ இந்தியர்கள் எவரிடம் பேசினாலும் அவர்கள் தவறாமல் உச்சரிக்கும் ஒரு பெயர் ‘ப்ராங்க் ஆண்டனி.’ இவர் ஒரு சட்ட வல்லுநர். தனது சட்ட அறிவால் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நியமன உறுப்பினர்களாக இரண்டு எம்.பி-க்கள் அமர வழிவகுத்தார். இவரே 40 ஆண்டுகள் எம்.பி ஆகவும் இருந்தார். அதுவும் 2020-ல் முடிவுக்கு வந்தது. மேலும் கல்வித்துறையில் ICSE Board வருவதற்கும் இவரே காரணம். 1948-57 ஆண்டுகளில் பார்லிமெண்டின் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற ஆளுமை இவர். அதுபோலவே சர் ஹென்றி கிட்னியும் முக்கியமானவர். மூன்றுமுறை வட்ட மேஜை மாநாடுகளில் ஆங்கிலோ இந்தியர்களுக்காகப் பேசினார். டெல்லியில் உள்ள ஆங்கிலோ இந்திய சங்கம் இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

சுதந்திரத்துக்கு முன்பு வரை செல்வாக்கோடு இருந்த ஆங்கிலோ இந்தியர்களின் இன்றைய நிலை குறித்து ஆசிரியர் மைக்கேல் வர்ணமும் அவரின் துணைவியார் மரியா வர்ணமும் பேசினார்கள். 41 ஆண்டுகள் ஒரு ஆங்கில வல்லுநராக காம்பியன் பள்ளி முதல் பல கல்லூரிகளுக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசான் இவர். திருச்சியில் ஏறத்தாழ 400 ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் வாழக்கூடும் என்றும், இவர்கள் பெரும்பாலும் ரோமன் கத்தோலிகர் என்றும் மரியா சொல்கிறார். ஆங்கிலோ இந்தியர்களில் சாதிப்பிரிவு இல்லை. திருமணம் பொதுவாக காதல் திருமணங்கள்தான். வரதட்சணை இல்லை. இவர்கள் உணவில் பால் கறியும் (Meatball Curry) டெவில் சட்னியும் வாயில் நீர் ஊறச்செய்பவை.
இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோனதற்கான காரணத்தை திரு.மைக்கேல் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ஆங்கில அரசு கொடுத்த பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி பலர் கனடா, ஆஸ்திரேலியா, யூகே போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துவிட்டார்கள். எந்த அளவிக்கு என்றால், விமானங்களை ‘ஆங்கிலோ இந்தியர் விமானம்’ என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் புலம்பெயர்ந்தார்கள். அதுமட்டுமல்ல, திருமண உறவில் ஆங்கிலோ இந்தியப் பெண் கிறித்தவரையோ பிறரையோ மணமுடித்தால் அவரை ஆங்கிலோ இந்தியராக அரசு ஏற்பதில்லை. இதனாலும் இவர்களின் எண்ணிக்கை குறைவதாகச் சொன்னவர், தங்களின் அகில இந்திய சங்கத்தின் மூலம் அரசிடம் பேசிவருவதாகவும் சொன்னார்.

திருச்சிக்குப் பல ஆளுமைகளைத் தந்த சமூகம் இது. புனித வளனார் கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவரும் இந்திய அளவில் சிறந்த ஓவியருமான யூஜின் டிவாஸ் முக்கியமானவர். பல கண்காட்சிகளில் இவரின் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதைப்போலவே மருத்துவர்கள் ரொசாரியோ,கிங்ஸ்லி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், பல நல்ல ஆசிரியர்களைத் தந்த சமூகமிது. குறிப்பாக ஆங்கிலம் கற்பிப்பதில் இயல்பான திறன் மிக்கவர்கள் இவர்கள்.
வண்ணங்களால் வழியும் ஓவியம் ஒன்று, காலச் சுழற்சியில் தன் வசீகரத்தை இழப்பதைப்போல ஏனோ ஆங்கிலோ இந்தியர்களின் இன்றைய இந்திய வாழ்க்கை நம்மைக் கவலைகொள்ள வைக்கிறது. இசையும் நடனமுமாக வாழ்ந்தவர்கள் அவர்கள். கடின உழைப்பும் விளையாட்டும் கலந்த வாழ்க்கை அது. வாழ்க்கையை ஓர் அனுபவமாக மாற்றும் பார்வை அவர்களிடமிருந்து எல்லோருக்கும் வரட்டும்.