Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு 22: `திரும்பிப்பார் திருச்சியை', முதலாம் மொழிப்போரில் திருச்சி!

இந்திமொழி எதிர்ப்புப் போராட்டம்
News
இந்திமொழி எதிர்ப்புப் போராட்டம்

இந்திமொழித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆளுமைகளின் பட்டியலே இந்தப் போராட்டம் அரசியல் கடந்தது என்பதை உரக்கச் சொல்லும்.

Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு 22: `திரும்பிப்பார் திருச்சியை', முதலாம் மொழிப்போரில் திருச்சி!

இந்திமொழித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆளுமைகளின் பட்டியலே இந்தப் போராட்டம் அரசியல் கடந்தது என்பதை உரக்கச் சொல்லும்.

இந்திமொழி எதிர்ப்புப் போராட்டம்
News
இந்திமொழி எதிர்ப்புப் போராட்டம்
இந்திமொழித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில், திருச்சியின் பங்களிப்பைப் பாராட்டி “திரும்பிப்பார் திருச்சியை” என்று விடுதலை ஏட்டில் அண்ணா தலையங்கமே எழுதினார். மொழிப் போராட்டத்தைச் சொல்ல வந்த அண்ணா, அதை “விழித்தெழு படலம்” என்றார். மொழிப் போராட்டம்தான் மற்ற இந்திய மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டைத் தனித்து அடையாளப் படுத்தியது என்பது அண்ணாவின் கணிப்பு. “இந்தியா ஒரு துணைக் கண்டம். அதில் நாங்கள் திராவிடர்கள். எங்களின் அடையாளம் எங்கள் மொழியாம் தமிழ்” என்ற பெருமிதத்தோடுதான் அவர் அரசியலுக்கும் வந்தார் நாடாளுமன்றமும் போனார்.

நாடாளுமன்றத்தில் அவரின் முதல் பேச்சே, ஒரு கட்சியின் தலைவர் என்பதையும் கடந்து எல்லோராலும் கவனிக்கப்பட்டது. ஒரு தொன்மை வாய்ந்த இனத்தின், மொழியின் பிரதிநிதியாகவே அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். அதன் வெளிப்பாடுதான் “I BELONG TO THE DRAVIDIAN STOCK” என்ற அவரின் புகழ்பெற்ற பேச்சு. அதில் அவர், “நான் திராவிட மரபு வழிப் பிரிவைச் சேர்ந்தவன். நான் என்னைத் திராவிடன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். இதற்குப் பொருள் நான் ஒரு வங்காளிக்கோ மராட்டியனுக்கோ அல்லது குஜராத்திக்கோ எதிரானவன் என்பதல்ல. ராபர்ட் பேர்ன்ஸ் குறிப்பிடுவதுபோல ‘என்னவாக இருந்தாலும் மனிதன் மனிதன்தான்.’ திராவிடர்களிடம் திண்ணியமானதும் , தனித்தன்மை பெற்றதும், வித்தியாசமானதுமான ஒன்று நாட்டிற்கு வழங்குவதற்கு இருக்கிறது என்பதுதான் நான் திராவிடன் என்று சொல்லிக்கொள்வதற்கான ஒரே காரணமாகும்” என்றார்.

அண்ணா
அண்ணா

அண்ணா 1962-ல் பேசிய இந்தப் பன்முகத்தன்மைதான் இந்தியாவின் உயிர்நாடி. இது கேள்விக்கு உள்ளானபோது வெடித்ததுதான் மொழிப்போராட்டம். அதனால்தான் ’இந்தித் திணிப்பை’ ஒரு மொழித் திணிப்பு என்பதைக் கடந்து, ஒரு பண்பாட்டுப் படையெடுப்பாக, அடையாள அழிப்பாக, தாய் மொழியாகிய தமிழைக் கீழே இறக்குவதாகத் தமிழ் அறிவுக்கூட்டம் சினந்தது. அறிவு வசப்பட்ட தமிழ்நாடு, ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டது. அறிவும் உணர்ச்சியும் சேர்ந்தபோது நடந்ததுதான் மொழிப்போராட்டம். இந்திய விடுதலைப் போருக்குப் பிறகு வெகு மக்கள் அதிகம் திரண்டது ’இந்தி எதிர்ப்பு’ போராட்டத்தில்தான் என்பது சமூக அறிஞர்களின் கருத்து.

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆளுமைகளின் பட்டியலே இந்தப் போராட்டம் அரசியல் கடந்தது என்பதை உரக்கச் சொல்லும்.

“இந்தி பொதுமொழி வேண்டாம்” என்னும் தலைப்பில் ’செந்தமிழ்ச் செல்வி’யில் 1936-ல் சுத்தானந்த பாரதியார் விரிவாக எழுதினார். “இந்தியை நாட்டின் முதல் மொழியாக்க சிலர் முயல்கின்றனர். தமிழ் இப்போதிருக்கும் நிலையில் நமக்கு வேறு மொழிகளில் ஈடுபட நேரமில்லை. நம் பள்ளிச் சிறார் தமிழைப் புறக்கணித்து வேறொருமொழிக்கு ஆக்கந்தருவது தமிழுக்கு நல்லதல்ல. முதலில் எல்லோரும் தாய்மொழியை நன்கு கற்க வேண்டும். பிறகு உலகுடன் பழக, தொழில் செய்ய உலகெங்கும் நன்கு அறிந்த ஒரு மொழியைக் கற்க வேண்டும். அத்தகைய மொழி இப்போது ஆங்கிலமே. மக்களுக்கு வேண்டுவன இரண்டு: அருள், பொருள். அருட்செல்லவம் தமிழில் மலிந்துகிடக்கிறது. உலகிற்கெல்லாம் வழங்கலாம். பொருட் செல்வத்திற்கு ஆங்கிலத்தின் துணை வேண்டும். இந்தியைக் கற்பவர் கற்கட்டும். கட்டாயம் கற்றே தீரவேண்டும் என்கிற தடபுடல் செய்ய வேண்டாம்.” கிட்டத்தட்ட தமிழ் நாட்டின் மொழிக்கொள்கையை அப்போதே சுத்தானந்த பாரதியார் தெளிவாக்கிவிட்டார்.

மறைமலை அடிகள், “இந்தி பொதுமொழியா” என்ற அரிய நூலை 1937-ல் வெளியிட்டார். அதில் வடமொழியின் வழிமொழியாகிய இந்தி ஒரு கலவை மொழி. இலக்கண இலக்கிய வளமற்றது. அறிவு நூல் கலைகள் அதில் இல்லை. பொதுமொழி ஆவதற்குரிய தகுதியற்றது என்பதையும் ஆய்வின் அடிப்படையில் முன்வைத்தார்.

தமிழகமெங்கும் மறைமலை அடிகளும் சுத்தானந்த பாரதியும் பேசினார்கள். அதைத் திருவள்ளுவர் தலைமையில் நக்கீரர் பேசியதுபோல் இருந்ததாக அறிவுலகம் கொண்டாடியது.

இவர்கள் மட்டுமல்ல, ’மார்டன் ரிவ்யூ’ ஆசிரியரான ராமானந்த சட்டர்ஜி “ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி என்பது படு கேடானது” என்றார். அறிவு வளர்ச்சி தடைபடும் என்றார். இந்திய தேசிய காங்கிரசின் செயலாளராக இருந்த ஆந்திர ரத்தின கோபால கிருஷ்ணமய்யா இன்னும் தெளிவாகப் பேசினார். “ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பெற்றால் தென்னாட்டவர்களுக்கு மிகுந்த கேடு உண்டாகும்” என்றார் அவர்.

“இந்தி கட்டாயம்” என்றதும் தமிழ்நாடு கொந்தளிக்க ஒரு சமூகக் காரணமும் பின்புலமும் இருந்ததை நாம் கவனிக்க வேண்டும். முதல் மொழிப் போர் தொடங்கி 84 ஆண்டுகள் முடிந்துபோன சூழலில், அந்தப் பின்புலம் பற்றியும் அறிந்துகொள்வதே தமிழ்ச் சமூகத்துக்கு நல்லது.

சம்ஸ்கிருதமே ஆட்சி மொழி. அதுவரை இந்திக்கு முன்னுரிமை தந்து அதை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற ஆளும் காங்கிரசாரின் குரல் தமிழை நீச பாஷை என்றது. ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் இந்தியை “ஆரிய பாஷா” என்று பெருமை பேசின. இதனால், நீண்ட நெடிய ஆரிய திராவிடப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தி எதிர்ப்பைத் தமிழ் அமைப்புகள் முன்னெடுத்தன.

மறைமலை அடிகள்
மறைமலை அடிகள்

தமிழில் சம்ஸ்கிருதம் கலப்பதை, மொழிக்கலப்பு என்று பார்க்காமல், அது அறிவின் தீட்சண்யமாகச் சித்திரிக்கப்பட்டது. இதை எதிர்த்தே தனித்தமிழ் இயக்கம் வந்தது. மறைமலை அடிகள் போன்றவர்கள் இந்தி எதிர்ப்பில் முன்னணியில் நின்றதை கவனிக்க வேண்டும். தமிழ் இசை புறக்கணிக்கப்பட்டது. மேடைகளில் தமிழ்ப் பாடல்கள் துக்கடாவாயின. இதை எதிர்த்தே அண்ணாமலைச் செட்டியார் போன்றவர்கள் தமிழிசைச் சங்கங்கங்களை ஆரம்பித்தார்கள். பண் இசையே பழைமையானது என்பதை ஆபிரகாம் பண்டிதர், குடந்தை ப.சுந்தரேசனார் போன்றவர்கள் மெய்ப்பித்தார்கள்.

கடவுள் வழிபாடு தொடங்கி எல்லா விழாக்களின் சடங்குகளிலும் சம்ஸ்கிருதமே கோலோச்சியது. இதனால் தமிழ் அழியுமோ என்ற கவலை வந்தது. இந்தக் கவலையும் இந்தி எதிர்ப்பில் வெளிப்பட்டது. வைதீக சனாதன எதிர்ப்பு ஒன்று தமிழ் மரபில் தொடர்ந்து இயங்கி வந்ததையும் நாம் கவனம் கொள்ள வேண்டும். புத்தர் தொடங்கி வள்ளுவர், கபிலர், திருமூலர், சித்தர்கள், இராமலிங்க அடிகள், பகுத்தறிவாளர் என்ற ஆழமான ஒரு ’தமிழ் அறிவியக்கம்’ இங்கு இயங்கிக்கொண்டே இருந்ததும் ’இந்தி எதிர்ப்பில்’ பளிச்சிட்டது.

இந்தப் பின்னணி புரியும்போதுதான், ’இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம்’ ஏன் தமிழ்நாட்டில் ’அரசியல் மாற்றம்’ வரை அழைத்துச் சென்றது என்பதும் புரியும். இந்த மாற்றத்துக்குக் கால்கோல்விழா நடத்திய ஊர் திருச்சி.

இராஜாஜி சென்னை மாகாணத் தலைமை அமைச்சராக 14-7-1937-ல் பொறுப்பேற்றார். (அந்த அமைச்சரவையில் திருச்சியைச் சேர்ந்த டி.எஸ்.எஸ் ராஜன் இடம்பெற்றிருந்தார்) அதன்பின்னால் சென்னை ராமகிருஷ்ணா மடத்தில் 10-8-1937-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, சென்னை மாகாணத்தில் உள்ள எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் இந்தி கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படும் என்று பேசினார்.

இந்தக் கட்டாய இந்தி அறிவிப்பு 10-ம் தேதி வெளிவந்த சில நாள்களிலேயே, 27-8-1937-ல் தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடந்தது. இதில் தமிழ்வேள் த.வே.உமாமகேசுவரனார் கலந்துகொண்டு உரையாற்றினார். அடுத்த இரண்டு நாள்களில் 29-8-1937-ல் திருவையாறு செந்தமிழ்க் கழகம் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தியது. அடுத்து சென்னை சௌந்தர்ய மகாலில் 5-9-1937-ல் ’தமிழர் கூட்டம்’ நடந்தது. நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்றார். தமிழ்வேள் உமாமகேசுவரனார், சுல்தான் பாக்தாதி, சி.என்.அண்ணாதுரை ஆகியோர் பேசினர்.

தமிழ்நாடு முழுவதும் இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் நடந்தன. 4-10-37 சென்னை கோகலே மண்டபத்தில் மறைமலை அடிகளும் நாவலர் பாரதியாரும் பேசினர். 12-10-37-ல் நெல்லையில் பூரணலிங்கம்பிள்ளையும் நாவலர் பாரதியாரும் அண்ணாதுரையும் பேசினார்கள். 7-11-37-ல் சேலத்தில்... இப்படி எங்கு பார்த்தாலும் கண்டனக் கூட்டங்கள்.

அடுத்து, திருச்சியில் கூடிய “சென்னை மாகாண தமிழர் மாநாடு” இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக மாறியது. 26-12-37-ல் கூடிய இந்த மாநாட்டில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட ஊர்வலம் மணிக்கூண்டிலிருந்து புறப்பட்டது. நான்கு யானைகள் தமிழ்க்கொடி ஏந்தி ஊர்வலத்தின் முதலில் வந்தன. மாநாட்டை கா.சு.பிள்ளை திறந்துவைத்தார். நாவலர் பாரதியார் தலைமை ஏற்றார். தமிழ்வேள் உமாமகேசுவரனார் வரவேற்றார். இதில் பெரியாரின் உரை ஆவேசமாக இருந்தது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா, பினாங்கு, இலங்கை முதலிய உலகின் பிறபகுதி தமிழர்களும் கலந்துகொண்டார்கள். பல தீர்மானங்களை முன்வைத்து ஏ.டி.பன்னீர்செல்வம், கி.ஆ.பெ.வி, அமைச்சர் முத்தையா முதலியார், சாமி சிதம்பரனார், தி.பொ.வேதாசலம், சேலம் சித்தையன் போன்ற அறிஞர்கள் பேசினார்கள்.

ஏ.டி.பன்னீர்செல்வம்
ஏ.டி.பன்னீர்செல்வம்

அரசுக்கு இறுதி எச்சரிக்கை தருவதற்கு காஞ்சியில் தமிழர் மாநாடு 27-2-1938-ல் கூடியது. இதில் கிருஷ்ணன் நாயரும் கே.வி.ரெட்டியும் கலந்துகொண்டனர்.

இராஜாஜி அசைந்துகொடுக்கவில்லை. இரண்டு பேர்தானே எதிர்க்கிறார்கள்? ஒருவர் ராமசாமி நாயக்கர் மற்றவர் பசுமலை பாரதியார் என்றார் எள்ளலாக, சட்டமன்றத்தில். எதிர் வரிசையிலிருந்த ஏ.டி.பன்னீர்செல்வம் சொன்னார், எதிர்ப்பவர்களாவது இரண்டு பேர், கொண்டுவருவது நீங்கள் ஒருவர்தானே? அப்போதுகூட பெரும்பான்மை எதிர்ப்பின் பக்கம்தான் இருக்கிறது என்றார் பதிலாக. ஆனாலும் அரசு 21-4-1938-ல் கட்டாய இந்திப் பாட உத்தரவைப் பிறப்பித்தது. 125 பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளுக்கு இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது.

1937-38 களில் வந்த கட்டாய இந்தியைத் தமிழ்நாடு எதிர்த்தது. இந்த இந்தி எதிர்ப்புப் போரைத்தான் “முதலாம் மொழிப்போர்” என்றது வரலாறு. முதலாம் மொழிப்போரில் திருச்சியின் இடமும் பங்கும் மிக முக்கியமானது. ஏப்ரலில் அரசாணை வந்தவுடன், எதிர்ப்புப் போரை வழி நடத்தும் ஆலோசனைக் கூட்டம் 28-5-1938-ல் திருச்சியில்தான் நடந்தது. தென்னூர் பழனிச்சாமி பிள்ளையின் பங்களாவில் கூட்டம் கூடியது. பேராசிரியர் பாரதியார் தலைமை ஏற்றார்.

இந்தத் திருச்சிக் கூட்டம்தான் ’இந்தி எதிர்ப்பு வாரியத்தை’ (THE ANTI HINDI HIGH COMMAND) அமைத்தது. இதன் தலைவராக காங்கிரசுக்காரரான நாவலர் பாரதியார் பொறுப்பேற்றார். உறுப்பினர்களாக - பெரியார் ஈ.வெ.ரா, உமாமகேசுவரனார், அ.சௌந்திர பாண்டியனார், கே.எம்.பாலசுப்பிரமணியம், கி.ஆ.பெ.விசுவநாதம் (செயலாளர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழு வகுத்த போர் முறைத் திட்டத்தை, திருச்சியிலிருந்து வந்த 'நகர தூதன்' விரிவாக எழுதியது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை காங்கிரசைச் சேர்ந்த டாக்டர் வரதராசலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப், கருமுத்து தியாகராச செட்டியார் போன்றவர்களும் ஆதரித்தனர். கல்வியாளர்களான டாக்டர் அருண்டேல், தேசியக் கல்லூரி பேரா.சாரநாதன், சேலம் முனிசிபல் கல்லூரித் தலைவர் ராமசாமி கவுண்டர், கல்கத்தா பல்கலை பேரா.சுனிதகுமார் சட்டர்ஜி ஆகியோரும் கட்டாய இந்தியை எதிர்த்தனர். பொதுவுடமைச் சிந்தனையாளர் ம.சிங்காரவேலர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, காஜாமியான் ராவுத்தர், ஜமால் முகமது, கலிபுல்லா எம்.எல்.ஏ போன்ற பல சமூகத் தலைவர்களும் அரசுக்கு எதிராகவே இருந்தனர்.

ஈழத்தடிகள், விபுலானந்தர், பொப்பிலி அரசர், பி.டி.ராசன், முத்தையா முதலியார் என்று பலரும் இந்தியை எதிர்த்தனர். உ.வே.சாமிநாதய்யர், சீனிவாச சாஸ்திரியார் போன்றவர்களும் அரசை எதிர்த்தனர். பல்வேறு சிந்தனைப் போக்குடைய பலரும் “கட்டாய இந்தி எதிர்ப்பு” என்ற புள்ளியில் ஒன்றுசேர்ந்தனர். இந்தி எதிர்ப்பு வாரியத்தின் பணி எல்லோரையும் அணிதிரட்டியது.

மாகாண அரசு மிகப்பெரிய அடக்குமுறையை ஏவியது. உண்ணா விரதமிருந்த பல்லடம் பொன்னுசாமிதான் இந்தி எதிர்ப்பில் கைதான முதல் வீரர். அவரைத் தொடர்ந்து 1271 பேர் கைதானார்கள்.

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை எழுதிய பலரும் திருச்சியை எதிர்ப்பு இயக்கத்தின் மூளை என்கின்றனர். ஏனென்றால், எல்லாப் போர்முறைத் திட்டங்களும் தீட்டப்பட்டது திருச்சியில்தான். இந்தப் போராட்டத்தில் திருச்சியைச் சேர்ந்த மணவை திருமலைசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் பங்கு மிக முக்கியமானது. அவர்களைப்போலவே வழக்கறிஞர் தி.பொ.வேதாசலம் பணி குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து சுந்தர நாடாரும் என்.சங்கரனும் சிறப்பாகப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

கி.ஆ.பெ.விசுவநாதம்
கி.ஆ.பெ.விசுவநாதம்

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திருச்சியிலிருந்து புறப்பட்ட பிரசார பேரியக்கத்தை, “தமிழர் பெரும்படை” என்றே மக்கள் அழைத்தனர். நடைப் பயணத்துக்கு விண்ணப்பித்த 500 பேரில் 100 பேரை மட்டுமே படைக்குத் தேர்வு செய்தனர். அவர்களே பெரும் படையின் வீரர்கள். திருச்சி உறையூரில் 1938 ஆகஸ்ட் 1 ஆம் தேதி புறப்பட்ட இவர்கள் வழி நெடுக பிரசாரம் செய்துகொண்டு நடந்தே சென்றனர். 42 நாள்கள் நடந்து 577 மைல்கள் கடந்து, சென்னை திலகர் கட்டத்தை (இன்றைய சீரணி அரங்கம்) செப்டம்பர் 11-ல் வந்தடைந்தனர். வரவேற்பதற்கு 1.5 லட்சம் மக்கள் திரண்டனர். இந்த நிகழ்ச்சியில்தான் பெரியார் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை முன்வைத்தார்.

வழி நடைப்பயணத்தை வடிவமைத்தவர் நகர தூதன் பத்திரிகையின் ஆசிரியர் மணவை திருமலைசாமி. தளபதியாக இருந்து படையை வழிநடத்தியவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் பயணத்தில் பங்கேற்றார். உறையூரிலிருந்து கிளம்பிய தமிழ்ப்படை டவுன் ஹால் மைதானம் வந்தது. பெரியார் தலைமை ஏற்றார். கலிபுல்லா சாகிப் வக்கில், தி.பொ.வேதாசலம் இருவரும் வாழ்த்த படை புறப்பட்டது. 234 கிராமங்களைக் கடந்து, 60 முக்கிய ஊர்களில் தங்கியது இந்தப் படை. 87 பொதுக்கூட்டங்களில் இவர்கள் பேசினார்கள். காந்தியடிகளின் தண்டி யாத்திரையோடு இந்த மொழிக்கான பயணம் ஒப்பிடப்பட்டது.

திருவல்லிக்கேணி திலகர் கட்டத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. மறைமலை அடிகள் தலைமை ஏற்றார். படைத் தலைவர் அய்.குமாரசாமிப் பிள்ளை, தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி, தாழ்த்தப்பட்டோரின் பெரும் தலைவர் என்.சிவராஜ், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி, சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம், நாவலர் சோமசுந்தர பாரதியார், பெரியார் ஈ.வெ.ரா முதலானோர் பேசினார்கள். இதில் முறுக்கிவிடப்பட்ட மீசையை மேலும் முறுக்கிக்கொண்டே பேசும் சோமசுந்தர பாரதியார் தமிழ் சூராவளியாக இருந்ததாக நகர தூதன் எழுதுகிறது.

இந்தத் தமிழர் படைக்கு பாரதிதாசன் எழுதிய வழிநடைப் பாட்டுதான் பிற்காலத்தில் எல்லோராலும் பாடப்பட்ட ஒன்றாக மாறியது. “மங்கை ஒருத்தி தரும் சுகமும்-எங்கள் | மாத்தமிழுக்கு ஈடில்லை என்றுறைப்போம்| மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை-நம்மை | மாட்ட நினைக்கும் சிறைச்சாலை | போன்ற வரிகள் இந்தப் பாடலில்தான் இடம்பெற்றிருந்தன.

முதல் மொழிப்போர் தமிழ்நாட்டில் பெரும் எழுச்சியை உருவாக்கியது. அதன் தாக்கம் பெண்களை அமைப்பாகத் திரட்டியது. அன்னை டாக்டர் தருமாம்பாள் சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் முற்றிலும் பெண்களே நடத்திய பெண்களுக்கான மாநாட்டை 13-11-38-ல் நடத்தினார். “தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு” என்ற அந்த மாநாடுதான் முதன் முதலில் ’பெரியார்’ என்ற பட்டத்தை அவருக்குத் தந்தது.

மறைமலை அடிகளின் மூத்த மகள் நீலாம்பிகை மாநாட்டுத் தலைமை ஏற்றார். மீனாம்பாள் சிவராஜ் தமிழ்க் கொடியை ஏற்றினார். டாக்டர் தருமாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் பெண்கள் முன்னேற்றம் குறித்துப் பேசினர். கலப்பு மணத்தை ஆதரித்தும், விதவை மணத்தை வரவேற்றும், தமிழைப் பள்ளியில் கட்டாயப் பாடமாக்கச் சொல்லியும் தீர்மானங்கள் வந்தன. டாக்டர் மா.இராசமாணிக்கனார் துணைவியார் கண்ணம்மாள், அண்ணாவின் துணைவியார் இராணி அம்மாள் ஆகியோர் தீர்மானங்களைக் கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர்கள். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு வியப்பூட்டுகிறது.

டாக்டர் தருமாம்பாள்
டாக்டர் தருமாம்பாள்

மாநாட்டின் அடுத்தநாளான 14-11-38 அன்று, காசி விசுவநாதர் கோயில் முன்பிருந்து டாக்டர் தருமாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், பட்டம்மாள், சீதம்மாள் (கையில் குழந்தையுடன்) முதலியோர் கையில் தமிழ்க்கொடியுடன் ஊர்வலமாகச் சென்று இந்தியைக் கட்டாயப் பாடமாக வைத்துள்ள தியாலாஜிகல் பள்ளி முன்பு மறியல் செய்தனர். ஏராளமான பெண்கள் ஊர்வலத்தில் வந்தார்கள். நீதிபதியின் வேண்டுகோளையும் மறுத்து, பெண்கள் கைதாகி 6 வாரம் சிறைத்தண்டனை அடைந்தார்கள்.

அதற்கு அடுத்த வாரம், உண்ணாமலையம்மையார் (1 வயதுக் குழந்தையுடன்), புவனேசுவரி (என்.வி.நடராசன் துணைவியார்) 2 வயதுக் குழந்தையுடன்... இப்படிப் பல பெண்கள் குழந்தைகளுடன் கைதானார்கள். மொத்தம் 73 பெண்கள் சிறை சென்றார்கள். முதலாம் மொழிப்போரின் வீச்சாக இது பார்க்கப்பட்டது.

மொழிக்காக நடந்த போராட்டத்தில் முதல் களப்பலி நடராசன். திருமணம் ஆகாத இளைஞர். வீட்டுக்கு ஒரே பிள்ளை. இவர் மறியல் செய்து 5-12-38-ல் கைதானார். உடல் நிலை மோசமடைந்தது. 30-12-38-ல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உயிர் ஊசலாடியது. அப்போதும் அரசு விடுதலை செய்யவில்லை. 15-1-39-ல் கைதியாக இருக்கும்போதே மரணமடைந்தார். அடுத்து கைதியாக இருந்த நிலையிலேயே தாளமுத்து 12-3-39 அன்று மரணமடைந்தார். திருமணமாகி சில மாதங்களே ஆகியிருந்தது. இருவரும் அடித்தட்டு மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள். இருவரின் மரணமும் மக்கள் மனதில் உணர்ச்சியலைகளை எழுப்பியது. இருவருக்கும் நடந்த இரங்கல் கூட்டங்களில் அண்ணாவின் உரை தமிழ் மக்களை அழ வைத்தது.

இந்தப் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் தண்டனை பெற்றார். முதலில் சென்னைச் சிறையிலும் அடுத்து பெல்லாரிச் சிறையிலும் கடைசியில் கோவைச் சிறையிலும் இருந்தார். 167 நாள்கள் சிறையில் இருந்த பெரியாரை காரணம் சொல்லாமலேயே அரசு விடுதலை செய்தது. 190 பவுண்டு எடையோடு போனவர் 166 பவுண்டாகக் குறைந்ததாக சாமி சிதம்பரனார் எழுதுகிறார். விடுதலையான பெரியாருக்கு திருச்சியில் 26-8-39 அன்று பிரமாண்டமான வரவேற்பு கிடைத்தது. பாலக்கரையிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் உறையூர் வழியாக புத்தூர் மைதானத்தை அடைந்தது. காஜாமியான் ராவுத்தர் தலைமையில் 40,000 பேர் கலந்துகொண்ட பொதுக்கூட்டமாக அது நடந்தது.

இந்தச் சமயத்தில்தான் அந்த அரசியல் மாற்றம் நடந்தது. 1939, செப்டம்பரில் தொடங்கிய இரண்டாம் உலகப்போர், இந்திய நிலைமையை மாற்றியது. இந்தியாவைக் கேட்காமலேயே போரில் இந்திய மக்களை பிரிட்டிஷ் அரசு ஈடுபடுத்தியதை காங்கிரஸ் எதிர்த்தது. அதன் விளைவாக 8 காங்கிரஸ் மாகாண அரசுகள் பதவி விலகின. அதில் இராஜாஜி தலைமையிலான அரசும் 27-10-39-ல் பதவி விலகியது.

புதிய ஆங்கிலேய கவர்னர் ஆட்சிக்கு வந்துள்ள சூழலில், தீவிர போராட்டத்தை 31-10-39-ல் பெரியார் நிறுத்திவைத்தார். இதற்கான காரணங்களை ஏ.டி.பன்னீர்செல்வம் விரிவாக எழுதினார். 13-11-39-ல் இந்தி எதிர்ப்பில் கலந்துகொண்டு சிறை சென்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 19-2-1940-ல் கோகலே மண்டபத்தில் “இதுவே இறுதி எச்சரிக்கை. அரசு கட்டாய இந்தியைக் கைவிடவேண்டும்” என்றார் பெரியார்.

“கட்டாய இந்தி முறை பெரும்பாலான பொதுமக்களின் எதிர்ப்பையும் அதிருப்தியையும் விளைவித்திருக்கிறது. எனவே 21-2-1940 முதல் எல்லாப் பள்ளிகளிலுமிருந்து இந்தி முற்றிலும் நீக்கப்படுகிறது” என்ற உத்தரவை ஆளுநர் எஸ்கின் வெளியிட்டார். 1937-ல் தொடங்கிய முதலாம் மொழிப்போர், பல படிப்பினைகளோடு 1940-ல் வெற்றியோடு முடிந்தது.

(இன்னும் ஊறும்)