Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 2: காந்தி வந்தார், மாநகரின் வரலாற்றில் நிறைந்தார்!

திருச்சியில் காந்தி
News
திருச்சியில் காந்தி

ஆட்சி மாற்ற அரசியலைத் தாண்டியும் மக்களிடம் பேசினார். அதுதான் அண்ணலை தலைவர் என்ற இடத்திலிருந்து ‘தேசத் தந்தையாக’ உயர்த்தியது. இந்தத் ‘தேசத் தந்தை’ என்னும் அடையாளத்தை உலகத்துக்குக் காட்டும் ஒரு இடமாக திருச்சி இருந்தே அதன் பெருமை.

Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 2: காந்தி வந்தார், மாநகரின் வரலாற்றில் நிறைந்தார்!

ஆட்சி மாற்ற அரசியலைத் தாண்டியும் மக்களிடம் பேசினார். அதுதான் அண்ணலை தலைவர் என்ற இடத்திலிருந்து ‘தேசத் தந்தையாக’ உயர்த்தியது. இந்தத் ‘தேசத் தந்தை’ என்னும் அடையாளத்தை உலகத்துக்குக் காட்டும் ஒரு இடமாக திருச்சி இருந்தே அதன் பெருமை.

திருச்சியில் காந்தி
News
திருச்சியில் காந்தி
தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஒரு ஊரின் போக்கிலும் வந்த பாதையிலும் மாற்றத்தை சில வரலாற்று நடப்புகள் தீர்மானிக்கும். காந்தி அடிகளின் திருச்சி வருகை அப்படியான ஒன்றுதான்.

இந்தியத் தலைவர்களில் பயணத்தை தன் வாழ்வின் ஒரு பகுதியாகக் கொண்டு எல்லா திசைகளிலும் பயணித்தவர் அவர். மனம், நிலம் என்று பிரிந்துகிடந்த இந்தியாவை இணைத்ததில் அவரின் பயண்திற்கு முக்கிய பங்குண்டு. அவர் தமிழர்களை அதிகம் நேசித்தார்.

இப்படி தமிழர்களை நேசித்த காந்தி திருச்சிக்கு ஆறு முறை பயணமாக வந்துள்ளார். தமிழ்நாட்டில் அவர் இருந்த 203 நாள்களில் திருச்சியில் 13 நாள்கள் அவர் தங்கி பயணித்துள்ளார். அண்ணலின் வரவை, தங்கிய நாள்களை இன்றும் திருச்சி தன் நினைவுகளில் பதிந்து வைத்துள்ளது.

முதன் முதலில் அடிகளின் காலடி திருச்சியில் பட்டது 1919, செப்டம்பர் 25ல். நூறு ஆண்டுகள் முடிந்துபோயின. நங்கவரம் மிராசுதார் சுப்புராமய்யரின் சிந்தாமணி இல்லத்தில் தங்கினார். தில்லையாடி வள்ளியம்மையின் மன உறுதியை குறிப்பிட்டு, பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசினார். ஹிந்து மெசேஜ் ஆசிரியர் டி.கே.பாலசுப்ரமணியம் வரவேற்றார்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

ஏறக்குறைய ஓர் ஆண்டு கழித்து அண்ணல் மீண்டும் திருச்சி வந்தார். 1920, ஆகஸ்ட் 17 வந்த காந்தி அடிகளை, திருச்சி பாலக்கரையில் தொடங்கி பெரிய ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் சௌக்கில் நடந்தது. இன்றைய டவுன்ஹால் எதிரேயுள்ள பழைய புத்தகக்கடைகளை ஒட்டிய பெரிய மைதானமே சௌக். (சௌக் என்ற உருதுச் சொல்லுக்கு மையம் என்று பொருள். அன்றைய திருச்சியின் மையமான பகுதியாக அந்த மைதானம் இருந்ததால் இந்தப் பெயர் வழங்கியிருக்கலாம்) இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

கிலாபத் குழுச் செயலாளரான வி.எஸ்.முகமது இப்ரஹிம் வரவேற்றார். இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அடிகளின் வருகை உறுதிசெய்தது. கூட்டத்தில் சில இளைஞர்கள் சின்ன குழப்பம் செய்ய, “ஒத்துழையாமையின் வலிமையை பாருங்கள். சிலரின் ஒத்துழையாமை பலரைக் கவனிக்க வைக்கிறது. இதையே அரசுக்கு எதிராக நீங்கள் எல்லோரும் செய்தால், விடுதலை உடனே கிடைக்கும்” என்ற அண்ணிலின் நகைச்சுவையால் கூட்டமே அதிர்ந்தது.

அடுத்த ஆண்டு மூன்று நாள் பயணமாக 1921செப்டம்பர் 18 வருவதாக முடிவு. காந்தியின் முழுமையான பயணத் திட்டத்தை டாக்டர் ராஜன் சுதேசமித்திரனில் செப்டம்பர் 13ல் வெளியிட்டார். அது வந்த அதே இதழில்தான் மகாகவி பாரதியின் மரணச்செய்தி கடைசி பக்கத்தில் வந்தது. காந்தியடிகளின் இந்தப் பயணத்தில் எங்குமே பாரதி குறித்து பேசவில்லை. பாரதியின் உயர்வை அன்றைய தலைவர்கள் அண்ணலுக்கு சொல்லாததின் விளைவே இது. இந்தப் பயணத்தின்போதுதான், தமிழ்நாட்டின் வரலாற்றில் நிர்வாகரீதியாக காந்தியை வரவேற்ற முதல் நகராட்சி என்னும் பெருமையை திருச்சி பெற்றது.

அந்த நாள் 1921, செப்டம்பர் 19. பெரிய பொதுக்கூட்டமாகவே அது இரவு 8க்கு தொடங்கி 11க்கு அண்ணலின் உரையோடு முடிந்தது.

“ஒரு மிருகம் நோய்வாய்ப்பட்டால் கவனிக்க ஆள் உண்டு; ஆனால் ஒரு தீண்டத்தகாதவர் நோய்வாய்ப்பட்டால் ஆண்டவன்தான் காப்பற்ற வேண்டும்” என்ற தன் நவஜீவன் கட்டுரையை சுட்டிப் பேசினார். அந்தக் கூட்டத்தில் நகரசபையின் வரவேற்பை மௌல்வி சையத் முர்த்துஜா சாகிப் வாசித்தார்,

டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்
டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்

இவரின் பெயரில்தான் அரசு மேல்நிலைப்பள்ளி இன்று இயங்குகிறது. இந்தப் பயணத்தின்போது காந்தியின் அழைப்பை ஏற்று மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறினர். அவர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் கல்கி. தேசியப்பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த அவர் சுத்தானந்த பாரதியோடு சேர்ந்து போராடி சிறை சென்றார். அவர் தனது முதல் குறுநாவலான ‘விமலா’ வை திருச்சி சிறையில்தான் எழுதினார். காந்தி அடிகள் பெரும்பாலும் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் வீட்டில்தான் தங்கினார். அங்கிருந்துதான் வேதாரண்யம் உப்பு யாத்திரை ராஜாஜி தலைமையில் புறப்பட்டது. அந்த இல்லம் இப்போது ஆம்னி பேருந்து நிலையம் அருகே ‘போஸ்டல் டெப்போவாக’ உள்ளது.

இந்தப் பயணத்தின்போது ஒரு சுவையான நிகழ்ச்சி நடந்தது. திருச்சி பயணத்தை முடித்து அடிகள் புதுக்கோட்டை வழியாக செட்டிநாடு செல்ல வேண்டும். ஆனால், புதுக்கோட்டை திவான் காந்திக்கு நுழைவுத்தடை விதித்தார். அந்தத் தடை ஆணையை அடிகளுக்கு தர ஒரு காவல் அதிகாரி நேரடியாக வந்தார். ஆணையை தந்த அவர், நடந்துகொண்டிருந்த சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்தார். டாக்டருக்கு கடும் கோபம். சாப்பிடக்கூடாது என்று எழுந்துபோகச் சொல்லிவிட்டார். செய்தி அண்ணலுக்குப் போனது.

தன் கடமையைச் செய்ய வந்தவரை இப்படி நடத்தலாமா? அவர் சாப்பிட்டால் மட்டுமே நான் சாப்பிடுவேன் என்று உணவை மறுத்துவிட்டார். டாக்டருக்கு பெரிய சங்கடம். போய்விட்ட அந்த காவல் அதிகாரியை பிடித்து சாப்பிட வைத்த பிறகுதான் காந்தி சாப்பிட்டார். இப்படி வந்த இடங்களிலும் காந்தியடிகள் வாழ்ந்து வழி காட்டினார்.

அடுத்த நாள் (20.9.1921) ஶ்ரீரங்கத்தில் வரவேற்பு. பனை ஓலையில்பொன் எழுத்துகள் ஆங்கிலத்தில். அடிகள் அதன் அழகை ரசித்தார். இவ்வளவு அழகானதை உங்கள் தமிழில் தந்திருக்கலாமே என்றார். வழக்கம்போல் பெண்களைச் சந்தித்தார். அவர்களை நம் நாட்டு துணிகளை அணியுங்கள் என்றார். இப்படி அண்ணலின் இந்த மூன்று நாள் பயணம் திருச்சி மக்களின் மனங்களில் அதிர்வலையை உண்டாக்கியது.

அடுத்து ஆறு ஆண்டுகள் திருச்சி மக்கள் காத்திருக்கவேண்டியிருந்தது காந்தி அடிகளை தரிசிக்க. அந்த நாளும் வந்தது. 1927, செப்டம்பர் 17 காலை திருச்சி வந்தார். அன்னை கஸ்தூரிபாயும் உடன் வந்திருந்தார்.

இன்று இடமாற்ற சர்ச்சைக்குள்ளாகியுள்ள ‘காந்தி மார்க்கெட்’ அக்காலத்தில் வார சந்தையாக இருந்தது. அந்த இடத்திலேயே ஒரு மார்க்கெட்டை நகராட்சி கட்டியது. அதற்கு காந்தி மார்க்கெட் எனப் பெயர் வைத்தனர்.
திருச்சி காந்தி மார்கெட்
திருச்சி காந்தி மார்கெட்
DIXITH

தன் பெயரில் அமைந்த ஒரு சந்தைக்கு காந்தியடிகளே அடிக்கல் நட்டார். அன்று மதியமே பொன்மலையில் உள்ள சங்கத் திடலில் ரயில்வே தொழிலாளர்களின் சங்க கட்டடத்திற்கு அடிகள் அடிக்கல் நாட்டினார். அநேகமாக அவர் நட்ட தொழிற்சங்க கட்டடம் இதுவாகத்தானிருக்கும். அன்று மாலை லால்குடியில் பொதுக் கூட்டம். கொள்ளிடம் பாலம் பழுதாகி இருந்ததால் ஆற்றைக் கடக்க மாட்டு வண்டி வந்தது. அடிகளோ ஆற்று மணலில் ’விசுக் விசுக்’ என்று நடந்தே கடந்தார். (கல்கி) அவரோடு வந்தவர்கள் பின்னால் ஓட வேண்டி வந்தது.

அதற்கும் அடுத்த நாள் காந்தி தேசியக் கல்லூரியில் கூடியிருந்த திருச்சி நகர மாணவர்களை சந்தித்தார். நல்ல தொகையொன்றை அடிகளிடம் நிதியாக தந்தார்கள். அடிகளின் மொழிக்கொள்கை வெளிப்பட்ட நிகழ்வாக அது மாறியது. மாணவர்கள் சமஸ்கிருதத்தால் அண்ணலை வரவேற்றார்கள். அடிகள்

சமஸ்கிருதம் தெரிந்தவர்களை கை உயர்த்தச் சொன்னார். வெகு சிலரே உயர்த்தினர்.

”எல்லோருக்கும் தெரிந்த தமிழிலேயே வரவேற்பை செய்திருக்கலாம். அதன் சுருக்கத்தை சமஸ்கிருதத்தில் வாசித்திருக்கலாமே” என்றார்.

பிறகு புத்தூர் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் கிறித்தவ மக்களை சந்தித்தார். அங்கு, ”மதப் பற்றும் நாட்டுப்பற்றும் இணைந்தே இருக்கவேண்டும்” என்றார். அன்று நடக்க வேண்டிய பொதுக்கூட்டம் கனமழையால் ரத்தாகி அடுத்த நாள் காலையில் நடந்தது. கதரின் அவசியம் பற்றி பேசிய அடிகள், மலஜலம் கழித்து காவேரியை மக்கள் அசுத்தப்படுத்துவதை வன்மையாக கண்டித்தார். சுத்தத்தின் மேன்மையை வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில்தான் நகரசபைத் தலைவர் ரத்தினவேல் தேவர் மூன்று கல் பதித்த விலை உயர்ந்த மோதிரத்தை கதர் நிதிக்குத் தந்தார். இந்த மூன்று நாள் பயணத்தின் சுவடுகள் இன்றும் திருச்சியில் உள்ளன.

மகாத்மா காந்தி அஸ்தி மண்டபம்
மகாத்மா காந்தி அஸ்தி மண்டபம்
DIXITH

காந்தியடிகள் ஏழு ஆண்டுகளுக்குப்பின் 1934, பிப்ரவரி 10-ம் தேதி, சோழவந்தானிலிருந்து அதிகாலை திருச்சிவந்து சேர்ந்தார். வழக்கம்பொல் பெரும் கூட்டம். இந்தமுறை அண்ணலை ‘காந்தியே திரும்பிப் போ’ என்ற நோட்டீசை தங்களை சனாதினிகள் என்று அழைத்துக்கொண்டவர்கள் வீசிக்கொண்டே முன்னால் சென்றனர். சில சிறுவர்கள் கறுப்புக்கொடியை கையில் வைத்திருந்தனர். அதில் ஒரு வேடிக்கையை காந்தி தன் கூட்டத்தில் சிரிக்கச் சிரிக்கச் சொன்னார்.

கையில் கறுப்புக்கொடி வைத்திருந்த சிறுவர்கள் ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்றது தன்னை கவர்ந்ததாகச் சொன்னார். எதிர்ப்பைக்கூட ஒரு நாகரிகத்தோடு செய்த சனாதினிகளை அடிகள் பாராட்டினார்.

ஶ்ரீரங்கத்திலிந்து பிச்சாண்டார் கோயில் வழியாக மணச்சநல்லூர் சென்றார். தொடக்கப் பள்ளி மாணவர்கள்கூட நிதி திரட்டித் தந்தார்கள். அங்கிருந்து சமயபுரம் சென்றார். பிறகு அதிகமாகக் கூடியிருந்த பெண்களிடம் நகைகளை நிதியாகப் பெற்றார். அதிகமான பெண்களால் நேசிக்கப்பட்ட இந்தியத் தலைவராக அண்ணலே இருந்தார் என்பது வரலாறு.

பிறகு தேசியக் கல்லூரி சென்றார். பெரும் மாணவர் கூட்டம். ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசினார். அந்த மரத்தின் நிழல் இன்றும் நினைவு நிழலாக குளிர்கிறது. பேரா.சாரனாதன் பண முடிப்பைத் தந்தார். அன்று மாலை புத்தூரில் நடந்த பொதுக்கூட்டம் போல் நடந்ததே இல்லை என்கிறார்கள். ஏற்பாடுகளை சர்வோதயவாதியான சங்கிலியாபிள்ளை செய்திருந்தார். அடுத்த நாள் (11.2.34) காந்தி விடை பெற்றார். ஒருவர், ”டாக்டரின் மகன் உங்களுக்கு பிரியா விடை தர விரும்புகிறான்” என்றார். "அடிகளோ, கட்டணம் (fees) இல்லாமலா?" என்றார். இதுமாதிரியான சுவையான உரையாடல் அவரது பலம்.

காந்தியடிகள் திருச்சிக்கு வந்த கடைசிப் பயணம் இதுதான். 1946, பிப்ரவரி 2-ம் தேதி அது நிகழ்ந்தது.

இந்திய விடுதலைப் போரில் காந்தி அடிகள் அடைந்திருந்த செல்வாக்கை காட்டுவதுபோல் திருச்சி ரயில் நிலையத்தில் மட்டும் இரண்டு லட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பு
திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பு
DIXITH

இன்றும் திருச்சி, காந்தியடிகளின் வருகை தந்த நினைவுகளை பத்திரமாக பொதிந்து வைத்துள்ளது. ஆட்சி மாற்ற அரசியலைத் தாண்டியும் மக்களிடம் பேசினார். அதுதான் அண்ணலை தலைவர் என்ற இடத்திலிருந்து ‘தேசத் தந்தையாக’ உயர்த்தியது. இந்தத் ‘தேசத் தந்தை’ என்னும் அடையாளத்தை உலகத்துக்குக் காட்டும் ஒரு இடமாக திருச்சி இருந்தே அதன் பெருமை.

காந்தி அடிகளின் பிறந்த நாளை அக்டோபர் 2-ல் கொண்டாடுவதுபோல், காந்தி அடிகள் திருச்சிக்கு வந்த நாள்களில் ஏதாவது ஒன்றை ‘காந்தி நாளாக’ திருச்சி மக்கள் கொண்டாடலாம். அவரை நகராட்சி வரவேற்ற செப்டம்பர் 19 அதற்கு பொருத்தமாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் யோசிக்கலாம். பள்ளிகளும் கல்லூரிகளும் முயற்சி செய்யலாம். தன் ஊருக்கு அண்ணல் வந்ததைக் கொண்டாடும்போது ஒரு நெருக்கம் வரும். அது அவரை நெருங்க பயன்படும்.