Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 5: ரயில் புராணம்!

திருச்சி ரயில்நிலையம்
News
திருச்சி ரயில்நிலையம்

மற்ற ஊர்களுக்கு ரயில் எப்படியோ, ஆனால் திருச்சிக்கு ரொம்ப ஸ்பெஷல். திருச்சியைப் பொறுத்தமட்டில், ரயில் இன்ஜின் ரயில் பெட்டிகளை மட்டுமல்ல, பல குடும்பங்களையும் இழுத்துச் சென்றதே உண்மை.

Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 5: ரயில் புராணம்!

மற்ற ஊர்களுக்கு ரயில் எப்படியோ, ஆனால் திருச்சிக்கு ரொம்ப ஸ்பெஷல். திருச்சியைப் பொறுத்தமட்டில், ரயில் இன்ஜின் ரயில் பெட்டிகளை மட்டுமல்ல, பல குடும்பங்களையும் இழுத்துச் சென்றதே உண்மை.

திருச்சி ரயில்நிலையம்
News
திருச்சி ரயில்நிலையம்
‘ஒரு புதிய வரவை’ மக்கள் வரவேற்பதன் அழகு வார்த்தையில் தெரியும். ‘ரயில்’ புதியவரவாக புகையோடு ஊருக்குள் வந்தது. அது வந்து நின்ற இடத்தை நாம் ‘புகைவண்டி நிலையம்’ என்றோம். எளிய கிராமத்து மக்கள் சர்வசாதாரணமாக ரயில் வந்து நிற்கும் இடத்தை ‘ரயிலடி’ என்றார்கள். அவர்களுக்குப் பழக்கமான சத்திரம் சாவடி என்பதுபோல. இதுதான் ஒரு அறிவியல் வரவு மக்கள்மயப்பட்டதன் அடையாளம்.

இவ்வளவுக்கும் அவர்கள் ஊருக்கு பஸ் அடிக்கடி வருகிறது. அது நிற்கும் இடத்தை யாரும் ‘பஸ்ஸடி’ என்று சொல்வதில்லை. இதில் ஏதோ உளவியல் இருப்பதாகவே தோன்றுகிறது. அவர்கள் ரயிலை நேசிக்க காரணம் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் பேச, சாமான் கொண்டுபோக, கொண்டுபோன சாப்பாட்டைத் திங்க, அவசரத்துக்கு ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போக, ஏதோ தங்கள் வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை ரயில் அவர்களுக்குத் தந்திருக்க வேண்டும். உ.வே.சா அவர்களுக்கே இந்த உணர்வை ரயில் தந்ததால்தான், “உண்ணலாம் தூசும் உடுத்தலாம் நித்திரையும் பண்ணலாம் நூல்கள் படிக்கலாம்...” என்கிறார். எப்படியோ ரயில் கூவும் குயிலானது.

பழங்கால ரயில்
பழங்கால ரயில்

மற்ற ஊர்களுக்கு ரயில் எப்படியோ, ஆனால் திருச்சிக்கு ரொம்ப ஸ்பெஷல். திருச்சியைப் பொறுத்தமட்டில், ரயில் இன்ஜின் ரயில் பெட்டிகளை மட்டுமல்ல, பல குடும்பங்களையும் இழுத்துச் சென்றதே உண்மை. பல திருச்சிக் குடும்பங்களில் அடுப்பு எரிந்ததே, ரயில் இன்ஜினில் எரிந்த நெருப்பினால்தான். இப்படி திருச்சிக்கும் ரயில்வேக்கும் நெருக்கம் அதிகம். விவசாயத்தைத் தாண்டினால், பீடி சுருட்டு, கைத்தறி போன்ற குடிசைத் தொழில்களே வாழ்க்கையாக இருந்த திருச்சிக்கு ஒரு நவீனத் தொழில் வாழ்க்கையை அறிமுகம் செய்தது ரயில்வேதான்.

பொதுவாக பெரிய வணிகக் குடும்பங்களைத் தவிர்த்து, எந்த வீட்டில் நுழைந்து விசாரித்தாலும், அப்பாவோ தாத்தாவோ மாமனோ சித்தப்பாவோ உறவில் யாரேனும் ஒருவர் ரயில்வேயில் வேலை பார்த்திருப்பார். அந்தக் குடும்பங்கள் முன்னேற பச்சை விளக்கை ரயில்தான் காட்டியிருக்கும். அப்படியொரு பிணைப்பு திருச்சிக்கும் ரயில்வேக்கும். இப்படி திருச்சி மக்களின் வாழ்க்கையோடு இணைந்து வளர்ந்த ரயில் வண்டி 159 ஆண்டுகளுக்கு முன்புதான் முதன்முதலில் திருச்சிக்கு வந்தது. அப்போது இன்றைய ரயில்வே ‘சவுத் இண்டியன் ரயில்வே’ (SIR) என்று அழைக்கப்பட்டது. முதன்முதலில் ரயில் வண்டி (steam loco) நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூருக்கும் அங்கிருந்து தஞ்சாவூருக்கும், அதன் பின் ஜிக்கு புக்கு ரயில் தஞ்சையிலிருந்து திருச்சிக்கு 11.3.1862 அன்று மேள தாளத்துடன் வந்து நின்றது. இதன் பின்புதான் நாகப்பட்டினத்தைத் தலைமை இடமாகக் கொண்டிருந்த SIR திருச்சிக்கு வந்தது.

திருச்சியில் நிற்கும் திருப்பதி எக்ஸ்பிரஸ் - 1981
திருச்சியில் நிற்கும் திருப்பதி எக்ஸ்பிரஸ் - 1981

இந்திய ரயில்வேயில் தனித்துவமான மிக அழகான கட்டடமாக மதிக்கப்படுகிற இன்றைய ‘டிவிஷினல் ரயில்வே மேனேஜர்’ அலுவலகக் கட்டடம் 1865-ல் கட்டப்பட்டது. மூன்று நிலைகளில் அது விரிவாக்கப்பட்டு 1900-ல் நிறைவடைந்தது. இன்றுகூட நம் திருச்சி ரயில்வே சந்திப்புக்கு வலப்புறம் உள்ள அந்தப் பேரழகான கட்டடத்தை ரசிக்க முடியும். அந்தக் கட்டடத்தை பெங்களூரைச் சேர்ந்த T.சாமிநாதன் என்பவர்தான் கட்டியுள்ளார். இதில் உள்ள இரும்பாலான சுருள் வடிவப் படிக்கட்டுகள் தனித்துவமிக்கவை. உலகப்போர் காலத்தில் ஆயுதங்களையும் வெடி மருந்தையும் சேமித்துவைக்க ‘சுரங்க அறை’ ஒன்று இந்தக் கட்டடத்தில் கட்டப்பட்டுள்ளது. இன்று அது வாசக சாலையாகப் பயன்படுவதாகத் தெரிகிறது. ஒருவகையில் இதுவும் சரிதான். வாசிப்பைவிட சிறந்த வெடி மருந்து வேறில்லை என்று யாரோ ஒரு புண்ணியவானுக்குத் தோன்றியிருக்கவேண்டும்.

மகாவீரர் சிலை
மகாவீரர் சிலை
DIXITH

இந்த ‘பொது நிர்வாகக் கட்டடம்' 1865-ல் கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டும்போது, ஒரு மகாவீரர் சிலை கிடைத்துள்ளது. அந்த மகாவீரர் சிலையை அன்றைய பிரிட்டிஷார் பாதுகாப்போடு இன்றும் நாம் பார்க்கும் விதத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். புத்தஜைன மதங்கள் பரவியிருந்ததன் சாட்சியாக இந்தச் சிலை உள்ளது. நாகப்பட்டினத்தில் இந்த ரயில்வே நிர்வாகம் இருந்ததன் சாட்சியாக, அங்கு 1908-ல் உருவாக்கப்பட்ட ‘வாட்டர் டாங்க்’ எடுத்துவரப்பட்டு திருச்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்றும் நாம் தண்ணீர் குடிக்கிறோம்.

ஒரு புதையல்போன்ற இடத்திற்கு நண்பர் மாதவன் அழைத்துப்போனார். இன்றுள்ள பார்சல் ஏற்றும் இடத்திற்கு எதிரேயுள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்திற்குப் பின்னால்தான் அந்தப் புதையல் இருக்கிறது. 1886-ல் இயங்கிய பழைய ரயில் நிலையம்தான் அந்தப் புதையல். வீட்டின் மூலையில் பாட்டி ஒருத்தி ஓரமாக உட்கார்ந்திருப்பதைப்போல் இருக்கிறது அந்த ஸ்டேஷன். இன்று வியாபித்துப் பரந்துள்ள திருச்சி சந்திப்புக்கு எதிரே உள்ள அந்த மூதாட்டி ஸ்டேஷனுக்கு வயது 135. அது இயங்கிய காலத்தில் நேரடியாகப் பார்த்த முதிர்ந்த ஆலமரம் ஒன்று இன்றைய சாட்சியாக, பச்சை இலை காட்டி வரவேற்கிறது.

மணிக்கூண்டும் அதில் உள்ள பிரமாண்ட ஆலய மணியும் அதில் கிளம்பும் பேரோசையும் மலைக்கோட்டைக் கோயிலின் தனித்த அழகு. 4 அடி உயரத்தில் 2.5 டன் எடையுள்ளது அந்த ஆலயமணி. 1918 முதல் அந்த ஆலயமணியின் ஓசையை நம்மைக் கேட்க வைத்தது திருச்சி ரயில்வேதான். ‘பொன்மலை’ இந்திய ரயில்வேயின் தனித்த அடையாளமாக உள்ளது.

அங்குள்ள ‘சென்ட்ரல் ஒர்க்‌ஷாப்பும்’ அதன் முக்கிய நுழைவாயிலான ‘ஆர்மரி கேட்டும்’ திருச்சி வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவை. இந்திய ரயில்வேயில் பொன்மலை சென்ட்ரல் ஒர்க்‌ஷாப் முக்கிய இடம் வகிக்கிறது. ரயில் பெட்டி பராமரிப்பு, சரக்கு வாகனப் பெட்டி தயாரிப்பு, நீராவி இஞ்சின் தயாரிப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள பொன்மலை பணிமனை 1928 ஜனவரி 16-ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் குடியிருப்பாகப் பொன்மலை ரயில்வே காலனி உருவானது. ரயில்வே தொழிற்சாலையும் சுற்றியுள்ள குடியிருப்பும் 210 ஏக்கரில் விரிந்துள்ளது. இந்தக் குடியிருப்பில் 2400 வீடுகளும்,மிகப்பெரிய மருத்துவமனையும், பள்ளிகளும், விளையாட்டு மைதானங்களும், சந்தையும், எல்லா மதக் கோயில்களும் அமைந்துள்ளன. திருச்சி முழுவதும் அரசியல், பண்பாடு, பொருளாதாரம் என்று எல்லாத் தளங்களிலும் பொன்மலை ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது. பெரிய தொழிற்சாலைக்கும் மிகப்பெரிய குடியிருப்புக்கும் தேவையான தண்ணீரை ரயில்வே நிர்வாகம் கொண்டுவந்து சேர்த்த விதம் பாராட்டுக்குரியதாகும். இன்றும்கூட பயன்பாட்டில் உள்ள 139 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியை தரை மட்டத்திலிருந்து 60 அடி உயரத்தில் பொன்மலையின் மீதே 1927-ல் கட்டினார்கள்.

திருச்சி பொன்மலை ஒர்க்ஷாப்
திருச்சி பொன்மலை ஒர்க்ஷாப்

திருச்சி ரயில்வேக்கான தண்ணீர்த் தேவைக்காக காவிரிக் கரையில் உள்ள சர்க்கார்பாளையத்தில் நீர் ஏற்று நிலையம் 1925-ல் தனியாக உருவாக்கப்பட்டது. இந்த பம்ப் ஹவுசில் இருந்துதான் பொன்மலை நீர்த் தேக்கத் தொட்டிக்கும் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. பொன்மலையில் உள்ள ரயில்வே மருத்துவமனை1928-ல் கட்டப்பட்டு 1946-ல் விரிவாக்கப்பட்டது. உயர்தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. பிளேக், காலரா, பெரியம்மை போன்ற தொற்றுகளால் மக்கள் தாக்கப்பட்ட அக்காலத்தில் இந்த மருத்துவமனை மிகச்சிறப்பாகச் செயல்பட்டது. இன்று இதன் புகழ் முன்புபோல் இல்லை. இந்த ரயில்வே காலனியில் அமைக்கப்பட்ட கழிவுநீர்ப் பாதைகளும், சுத்தகரிப்பு மையமும், அந்தக் கழிவுகளை உரமாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தோட்டங்களும் முன்னுதாரணமற்றவை.

தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்
தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்
பொன்மலை விளையாட்டு மைதானம் பல விளையாட்டு வீரர்களைத் தமிழ்நாட்டுக்குத் தந்துள்ளது. தமிழ்நாட்டில் காட்டப்பட்ட முதல் நகரும்படத்தை (மூவி) காட்சிப்படுத்திய சாமிக்கண்ணு வின்சென்ட் இங்கு வேலை செய்த தொழிலாளிதான். விடுதலைப்போர் வரலாற்றில் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்ட ஒரே தொழிலாளியான பெருமாள் இங்குதான் வேலை செய்தார். பொன்மலை ரயில்வே காலனியை ஒட்டியுள்ள `சங்கத் திடல்’ பல வரலாற்று நிகழ்வுகளைப் பார்த்த இடம். இங்கு அமைந்துள்ள தொழிற்சங்கக் கட்டடத்துக்குத்தான் அண்ணல் காந்தி அடிக்கல் நாட்டினார்.
காந்தியடிகள் திறந்த
பொன்மலை கல்வெட்டு
காந்தியடிகள் திறந்த பொன்மலை கல்வெட்டு

இந்தச் சங்கத்திடலில் எழுத்தாளர் கல்கி, நாமக்கல் கவிஞர் முதல் திரைப்படக் கலைஞர்களான கே.பி.சுந்தராம்பாள், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா வரை மேடை ஏறாத ஆளுமைகள் இல்லை. இங்கு உருவான தலைவர்கள்தான் எம்.கல்யாணசுந்தரமும் கே.ஏ.அனந்தநம்பியாரும்.

எழுத்தாளர் கல்கி
எழுத்தாளர் கல்கி

தமிழ்நாட்டின் ஜாலியன் வாலா பாக் என்று அழைக்கப்பட்ட பொன்மலை துப்பாக்கிச்சூடு 1946 மே 5-ல் இங்குதான் நடந்தது. 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். இவ்வளவு பெரிய தாக்குதலுக்குப் பிறகும்,1947-ல் நடந்த பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த கலவரத்தில் எவரும் ரயிலை இயக்க முன்வராதபோது, பிரதமர் நேருவின் வேண்டுகோளை ஏற்று பஞ்சாப் ரயில்களை பொன்மலைத் தொழிலாளர்களே இயக்கினர். இப்படி இந்திய வரலாற்றோடு திருச்சியைப் பிணைத்த இடம் பொன்மலையாகும். பொன்மலை ரயில்வே காலனி போலவே, பெல்ஸ் கிரவுண்டு காலனியும் கல்லுக்குழி காலனியும் முக்கியமானவை.

முறியடிக்க முடியாத சாதனை ஒன்றை தென்னக ரயில்வே 1929-ல் செய்தது. திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் 88 மைல் தூரமுள்ள மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக ஐந்தே மணி நேரத்தில் செய்து ஒரு இந்திய சாதனையைத் திருச்சி ரயில்வே செய்தது. சிறந்த திட்டமிடலுக்கும் ஊழியர் திறமைக்கும் எடுத்துக்காட்டாக இன்றளவும் இந்த சாதனை பேசப்படுகிறது. விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம் வழியாகத் திருச்சியை இணைக்கும் புதிய ரயில்பாதை chord line 1925 ஜனவரியில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் சென்னை செல்லும் பயண நேரம் குறைந்ததோடு லால்குடி அரியலூர் போன்ற ஊர்களுக்கு ரயில் வசதி கிடைத்தது. கொள்ளிடம் ஆற்றின் மீது ரயில் பாலம் போடப்பட்டதும் அப்போதுதான்.

தற்போதைய திருச்சி ரயில் நிலையம்
தற்போதைய திருச்சி ரயில் நிலையம்
DIXITH

திருச்சி ரயில்நிலைய சந்திப்பின் அழகிய தோற்றமும், எதிரே உள்ள மிகப் பெரிய வெளியும் வேறு எங்கும் காணக்கிடைக்காதவை. அதுபோலவே பயணிகள் நடைமேடைகளைச் சென்றடைவதற்கு அமைக்கப்பட்டுள்ள தரை வழி செல்லும் சுரங்கப் பாதையின் வடிவமைப்பு இன்றுகூட ஆச்சர்யப்பட வைக்கும் ஒன்றுதான். பயணிகளுக்குச் சோர்வு தராத வகையில் படிகளும் சுரங்கப்பாதையின் ஆழமும் தீர்மானிக்கப்பட்டதே இதன் சிறப்பு.அதுமட்டுமல்ல இதே போன்ற மற்றொரு சுரங்கப்பாதை பார்சல் மற்றும் சாமான்களை நடை மேடைகளுக்குக் கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் மின்தூக்கி அந்தக்காலத்தில் வேறெங்கும் இல்லாத தனித்துவமானது. இன்று நாம் காணும் திருச்சி ரயில்வே சந்திப்பு மறு வடிவம் பெறத் தொடங்கிய ஆண்டு 1925. ரயில் நிலையத்தின் இரு புறமும் உள்ள இரண்டு சாலை மேம்பாலங்கள் மற்றும் ஏழு நடைமேடைகள், இரண்டு தரைவழி சுரங்கப் பாதைகள் அடங்கிய முழு வடிவம் பெற்று முழுமை அடைந்தது 1935-ல்.

நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகே 2006-ல் திருச்சி ரயில் பாதை ‘மின் பாதை’ யாக மாற்றப்பட்டது. இன்று ‘ஆன்லைன் டிக்கெட்’ வந்துவிட்டது. சின்ன செவ்வக அட்டையில் அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டை இன்றைய தலைமுறை பார்த்திருக்காது. கசங்காமல் பையில் வைக்கத் தோதாக உருவாக்கப்பட்ட ஒன்று அது. இந்த டிக்கெட்டை அச்சடிக்கும் அச்சுக்கூடம் திருச்சி DRM அலுவலகத்திலேயே இருந்தது. மணிக்கு 12,000 டிக்கெட்களை அது அச்சிட்டது.
பெர்சி ரொதேரா சிலை
பெர்சி ரொதேரா சிலை
DIXITH

மனித உருவத்தைச் சிலையாக வடிப்பது ஒரு சவாலான காரியம். கோயில் சிற்பங்கள் வேறு வகையானது. திருச்சியில் உள்ள மனிதச்சிலைகளில் மிகவும் நேர்த்தியாகவும் தத்ரூபமாகவும் வடிவமைக்கப்பட்ட சிலை ‘பெர்சி ரொதேரா’வின் சிலைதான். டிவிஷனல் ரயில்வே மேனேஜர் அலுவலக நுழைவாயிலில் இந்தச் சிலை உள்ளது. இவர் ஒன்பது ஆண்டுகள் (1925-35) தென்னக ரயில்வேயின் தலைமை நிர்வாகியாக இருந்துள்ளார். இப்பதவியை அக்காலத்தில் ‘ஏஜென்ட்’ என்று அழைத்தனர். இவர் வடிவமைத்த பெரிய கர்டர்களால் ஆன பாலங்கள், இவருக்குக் கட்டுமானப் பொறியியலில் OBE விருதையும், Knight hood பட்டத்தையும் பெற்றுத் தந்தன. இவர் ரயில்வேயின் தலைமைப் பொறியாளராகப் பணி செய்தார்.

தென்னக ரயில்வே தன் ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கும், புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கும், புத்தாக்கப் பயிற்சி தருவதற்கும் ஒரு பயிற்சிப் பள்ளியை 1931-ல் அமைத்தது. இன்று அது வளர்ந்து ‘ஜோனல் ரயில்வே ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட்’டாகத் திருச்சியில் இயங்குகிறது. திருச்சியில் இயங்கும் ‘ரயில்வே அருங்காட்சியகம்’ பார்க்க வேண்டிய ஒரு இடம். ரயிலவே சந்திப்புக்கு அருகில் LIC க்கு எதிரே இது உள்ளது. இதில் ரயில்வேயில் பயன்பட்ட பல விதமான சிக்னல் விளக்குகள், மணிகள், கடிகாரங்கள், ரயில் தொடர்பான பல அபூர்வ ஓவியங்கள், ஒளிப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒரு நாடும் அந்தச் சமூகமும் வளர்ச்சியைச் சந்திக்க விரைவான ‘போக்குவரத்து’ முக்கியமானது. மன்னர்களுக்கு வரலாறு இருப்பதுபோல் போக்குவரத்துக்கும் வரலாறு உண்டு. அதில் ரயில் வரலாறு முக்கியமானது. ஒரு நாளில் 14,000 பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒரு கோடியே நாற்பது லட்சம் பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஏறக்குறைய பன்னிரண்டு லட்சம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். உலகின் இரண்டாவது பெரிய, இந்தியாவின் முதல் பெரிய பொதுத்துறையான ரயில்வே சிதையாமல் மக்களுக்கானதாகத் தொடர வேண்டும். எல்லா வளர்ச்சிக்கும் பின்னால் பலரின் அறிவும் உழைப்பும் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைத் தெரிந்துகொள்வதுதான் நாம் நன்றியோடு இருப்பதன் அடையாளம். நன்றியோடு இருக்கும்போதுதான் அக்கறையோடு புரிந்துகொள்ளத் தொடங்குவோம். அப்போதுதான் அடுத்த கட்ட வளர்ச்சி சாத்தியமாகும்.

(இன்னும் ஊறும்)