காவிரியின் ஒரு கரையில் சைவத்தின் அடையாளமாய் உச்சிப் பிள்ளையாரும், தாயுமானவரும். எதிர்கரையில் வைணவத்தின் அடையாளமான திருவரங்கப்பெருமாள்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழும் நத்ஹர்வலி தர்க்கா இசுலாத்தின் பெருமையாக இருப்பதும் திருச்சியில்தான்.
தமிழ் உரைநடையின் தந்தை என்று கொண்டாடப்படும் வீரமாமுனிவரால் பூசிக்கப்பட்ட புனித வியாகுல மாதா கோயில் இருப்பதும் திருச்சியில்தான்.
தமிழ்நாட்டின் மற்ற பெரிய நகரங்களைப் போலவே திருச்சியிலும் எல்லா மதத்தவர்களும் வாழ்கிறார்கள். சரி, இதில் திருச்சியின் தனித்த இடம் எது?

கட்டடங்களின் உயரமும்; புலங்கும் பணத்தின் அளவும் மட்டுமா ஒரு நகரத்தின் சிறப்பை எடைபோட பயன்படும்? இல்லை. மக்களின் வாழ்க்கை முறைதான் சரியான எடைகல்.
நவீன தமிழ் நாட்டின் வரலாற்றில், வேறு பெரு நகரங்களுக்கு இல்லாத ஒரு பெருமை திருச்சிக்கு உண்டு. ஆம், அது எந்த மதச் சண்டையும் சாதிக் கலவரமும் நடக்காத தமிழ் நாட்டின் ஒரே பெருநகரம் திருச்சிதான். அமைதிப் பூங்காக்களில் வெடிச்சத்தமும் அரிவாள் வீச்சும் சாதியின் உரசலால் மதத்தின் கைகலப்பால் நடந்தது உண்டு. திருச்சி மட்டும், "ஆயிரம் உண்டு இங்கு சாதி. அதனால் என்ன, அமைதியாய் இருப்பேன்" என்று சொல்லும் ஊர்.
காவிரியின் பால் குடித்து வாழும் பிள்ளைகள், "உன் மதமா? என் மதமா? ஆண்டவன் எந்த மதம்?" எனக் கேட்கும் முதிர்ச்சி மிக்கவர்கள். இந்த உயர்ந்த பண்பும் வாழ்க்கைப் பார்வையும்தான் உண்மையில் திருச்சியின் அடையாளம். இது ஏன்? எதன் விளைச்சல் இந்த உன்னதம்? நாம் தேடுவோம்.

அடையாளங்களாய் வரலாற்றுத் தடங்கள் இருப்பது வேறு. வாழும் வரலாறாய் மிளிர்வது வேறு. கல்லணை ஒரு வாழும் வரலாறு. டெல்டாவில் அசையும் கதிர்கள்தான் இதன் வரலாற்றின் சாட்சி. இன்று போய் கல்லணையில் நின்றாலும் கரிகால் பெருவளத்தானின் பெருமித சிரிப்பு கேட்கவே செய்கிறது.
இன்று பார்க்கும் கல்லணையை பெருவளத்தானின் தோள் அமர்ந்து விரிவாக்கியவர் ஆர்த்தர் காட்டன். அவர் ஏன் கல்லணை என்ற தமிழ் சொல்லை ஆங்கிலத்திற்கு பெயர்த்த போது 'கிராண்ட் அணைக்கட்' என்றார்? வியந்து போனதன் விளைவா? யோசிப்போம்.
சோழர்களின் தலை நகரங்களாக உறையூர், காவிரிப்பூம்பட்டினம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், பழையாறை ஆகியன குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் உறையூரும் காவிரிப்பூம்பட்டினமும் சங்ககால சோழர்களின் தலைநகரங்களாகும். இன்று திருச்சியின் ஒரு பகுதியாக உறையூர் உள்ளது.
இந்த உறையூரைத்தான், "மாட மதுரையும் பீடார் உறந்தையும்" என்று நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் புகழ்கிறது. 'பீடார் உறந்தை' என்றால் பெருமை மிகுந்த உறையூர் என்று அர்த்தம்.
அகநானூற்றுப் பாடல் இன்றுள்ள மலைக்கோட்டையை, "கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும் பெரும் குன்றத்து" என்று குறிப்பிடுகிறது. அதாவது உறையூருக்கு கிழக்கே உள்ள குன்றம் என்று மலைக்கோட்டையை அகநானூறு குறிப்பிடுகிறது. அதனால் இன்றைய மலைக்கோட்டைக்கு மேற்கே, இன்றுள்ள உறையூரோ அல்லது அதன் அருகேயோ சங்க கால உறையூர் இருந்துள்ளது என்று நாம் யூகிக்கலாம்.

சங்க கால உறையூர் கோழியூர் என்றும் அழைக்கப்பட்டது. கோழி என்றால் செழுமை என்று பொருள். கோழியூர் என்றால் வளமான செழுமையான ஊர் என்று பொருள்.
ஒரு யானையை கோழி ஒன்று எதிர்த்து வென்றதாகவும் அதைப்பார்த்த மன்னன் அந்த வீரத்தை வியந்து அங்கே ஒரு கோட்டை கட்டி அதை கோழியூர் என்றதாகவும் ஒரு புனைவு பேசப்படுகிறது.
பக்தி இலக்கிய காலத்தில் திருச்சிராப்பள்ளியை, "சிராப்பள்ளி குன்றுடையானைக் கூற என்னுளம் குளிரும்மே" என்று தேவாரம் குறிப்பிடுகிறது.

சமண முனிவர்கள் வாழ்ந்த இடங்களை 'பள்ளி' என்று அழைத்தனர். அப்படி சிரா என்ற சமணமுனிவர் வாழ்ந்த இடம் சிராப்பள்ளி ஆனது. சிறப்புக்காக திரு சேர்த்து திருச்சிராப்பள்ளி ஆனதாகவும் ஒரு பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது.
மன்னர்களின் அரண்மனைகள் இல்லாமல் போக அதே காலத்தில் எழுந்த அணைகளும், (கல்லணை) கோயில்களும் நிலைத்து நிற்கிறதே ஏன் என்ற கேள்வி வரத்தான் செய்கிறது. எந்தக் காலத்துக்கும் ஆன பதிலே அனுபவமாக விரிகிறது. அதிகாரத்தின் அடையாளமான அரண்மனைகள் அழிந்துபோக, பயன்பாட்டின் விளைச்சலான அணைகளும், கோயில்களும் வாழ்கின்றன. இப்படியான சரித்திர அனுபவமே திருச்சியின் வரலாறு. அதில் என்னென்னவோ இருக்கிறது.
"கல்வி சிறந்த தமிழ்நாடு" என்று பாரதி எழுத காரணமாக இருந்த ஊர்களில் திருச்சி முக்கியமானது. ஓர் ஊரின் வளர்ச்சியில், வாழ்வில் கல்வி வளர்த்த கூடங்களும் வரலாறும் முக்கியம். கல்வி வளர்த்த பல பள்ளிகளும், கல்லூரிகளும் திருச்சியின் அடையாளங்களாய் ஒளிர்கின்றன.
அதுபோலவே உலக அறிவை பரவலாக்கிய பத்திரிக்கைகளும், ஊடகங்களும் முக்கியமானவை.
160 ஆண்டுகளுக்கு முன்பே திருச்சி தன் பத்திரிகைப் பணியை தொடங்கிவிட்டது. 'அமிழ்த வசனி' தான் திருச்சியில் வெளிவந்த முதல் பத்திரிக்கை. அதிலும் ஒரு சிறப்பு - தமிழில் வெளிவந்த முதல் பெண்களுக்கான பத்திரிகையும் அமிழ்த வசனிதான். தமிழில் வந்த முதல் சிறுகதையாக பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'குளத்தங்கரை அரசமரம்' எழுதிய வ.வே.சு ஐயர் பிறந்தது திருச்சியில்தான். பழசும் புதுசுமாக எல்லா வகை இலக்கியங்களையும் வளர்த்த ஊர் திருச்சி. நாம் அறிந்துகொள்ள இன்னும் எவ்வளவோ உண்டு.

'மூவி' என்ற காரணப் பெயர் கொண்ட நகரும் படங்களை முதன் முதலில் காட்டிய சாமிக்கண்ணு வின்சென்ட் பணி செய்தது திருச்சியின் பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில்தான். பேசாபடம் பேசும்படம் ஆனபின்னால், தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.டி பாகவதர் வாழ்ந்ததும்; அடக்கமாகி வாழ்வதும் திருச்சியில்தான். நடிகர் திலகத்தையும், நடிகவேளையும் உருவாக்கிய எதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் ஊரும் திருச்சிதான்.
இப்படி சொல்ல சொல்ல தித்திக்கும் வரலாறு திருச்சிக்கு நிறையவே உண்டு.
தமிழ் ஆட்சி மொழியாகிய வரலாற்றை நாம் அறிவோம். அப்படி ஆட்சி மொழியான தமிழை அலுவலக மொழியாக்கிய ஆளுமை கீ.ராமலிங்கனார். அதனாலேயே ஆட்சி மொழிக் காவலர் என்றும் போற்றப்பட்டார்.

தமிழை பயன்பாடு மிக்க 'பயன் மொழியாக' அவர் நடைமுறைப்படுத்திய இடம் திருச்சி நகராட்சிதான்.
அன்றைய நகராட்சி கட்டடத்தில்தான் இன்றைய சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் இயங்குகிறது.
இப்படி எத்தனையோ சுவையான பக்கங்களால் நிரம்பி வழிவதுதான் திருச்சியின் வரலாறு.
திருச்சியின் பெருமைகளை, அதன் வரலாற்றை இனி இந்தத் தொடரில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படிக்கலாம்.
- பயணிப்போம்.