Published:Updated:

திருச்சி – ஊறும் வரலாறு 26: `மின்சாரக் கனவு' பாரத மிகு மின் நிலையம் – BHEL, திருச்சி!

திருச்சி BHEL
News
திருச்சி BHEL

BHEL உருவான கதையும் இந்தியா கட்டமைக்கப்பட்ட வரலாறும் பிண்ணிப்பினைந்தவை. இவற்றின் தொடக்கப்புள்ளிதான் திட்டக் கமிஷன். இது அறிவுஜீவிகளின் அரண்மனையாக அன்று இருந்தது.

Published:Updated:

திருச்சி – ஊறும் வரலாறு 26: `மின்சாரக் கனவு' பாரத மிகு மின் நிலையம் – BHEL, திருச்சி!

BHEL உருவான கதையும் இந்தியா கட்டமைக்கப்பட்ட வரலாறும் பிண்ணிப்பினைந்தவை. இவற்றின் தொடக்கப்புள்ளிதான் திட்டக் கமிஷன். இது அறிவுஜீவிகளின் அரண்மனையாக அன்று இருந்தது.

திருச்சி BHEL
News
திருச்சி BHEL

'சம்சாரத்தையும் மின்சாரத்தையும்' சம்பந்தப்படுத்தி படம் எடுத்தவர்களுக்குத் தெரியுமா என்று நமக்குத் தெரியாது, மின்சாரத்தைக் கண்டுபிடித்த மைக்கேல் ஃபாரடே (1791—1867), தன் சம்சாரத்தோடு நீண்டகாலம் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்தினார். அழகான தோற்றமுடைய சிறந்த பேச்சாளர் அவர். அவரது அறிவியல் பங்களிப்புகளுக்காக KNIGHTHOOD வழங்கப்பட்டபோது மறுத்துவிட்டார். புகழ் பணம் விருது எதுவும் அவரைக் கவரவில்லை. பிரிட்டிஷ் ராயல் கழகத்தின் தலைவர் பதவியையும் வேண்டாம் என்றார். இன்று நாம் பயன்படுத்தும் மின்மோட்டாரின் பாட்டி இவர் மகள்தான். “ஒரு கம்பிச்சுருள் வளையத்தினுள் காந்தத்தைச் செலுத்தினால், அந்த காந்தம் இயங்கிக்கொண்டிருக்கும் வரையில் அந்தக் கம்பியில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும் என்பதை 190 ஆண்டுகளுக்கு முன்பு (1831) ஃபாரடேதான் கண்டுபிடித்தார். இந்த விளைவையே 'மின்காந்தத் தூண்டல்' (ELECTROMAGNETIC INDUCTION) என்கிறோம். இந்தத் தூண்டலைக் கட்டுப்படுத்தும் விதியையும் இவரே வகுத்தார். இதையே FARADAY’S LAW என்கிறோம். இன்றைய நம் பல சந்தோஷங்களுக்கு நம் தலைவிதியைவிட ஃபாரடே விதி முக்கிய காரணமாக இருக்கிறது.

தன் மின்சாரக் கண்டுபிடிப்பை எலிசபெத் ராணியிடம் ஃபாரடே சொன்னபோது, இதனால் என்ன பயன் என்றாராம் ராணி. யோசித்த ஃபாரடே “What is the use of a child” என்று சொல்லிவிட்டு, உலகம் முழுதும் இது பரவும். ஒருநாள் நீங்கள் இதற்கு வரி விதிக்கலாம் என்றாராம். TAX என்றதும் ராணிக்கு சந்தோஷம். ஃபாரடே சிரித்துக்கொண்டார். உண்மைதான், ஃபாரடேயின் மின்மோட்டாரும் டைனமோவும், மின்காந்தத் தூண்டலும் ஒரு பாய்ச்சலில் உலகத்தைப் புரட்டிப்போட்டது. அதனால்தான், உலகத்தின் மீது அதிக செல்வாக்கு செலுத்திய 100 பேரைப்பற்றி ஆய்வு செய்து வரிசைப்படுத்தி 'THE 100' என்ற பிரமாதமான புத்தகம் எழுதிய மைக்கேல் ஹெச் ஹார்ட் என்னும் அமெரிக்கப் பேராசிரியர் ஃபாரடேவை 100 பேர் வரிசையில் 28-ம் இடத்தில்வைத்துக் கொண்டாடுகிறார்.

நேருவின் நம்பிக்கை
நேருவின் நம்பிக்கை
மேற்குலக நாடுகளில் தொழில் புரட்சியையும் உலகெங்கும் தொழில் வளர்ச்சியையும் வேகப்படுத்திய இந்த மின்சாரம் தாமதமாகவே சென்னைக்கு 1909-ல் வந்தது. அதன்பின் மின்சாரம் மலையேறி 1925ல் உதகமண்டலம் போனது. பிறகுதான் 1927ல் மின்சாரத்துறை அரசால் ஆரம்பிக்கப்பட்டது. விடுதலைக்கு முன்பு ஆங்கிலேய அரசு மூன்று மின் திட்டங்களை நிறுவியது. மூன்றுமே நீர்மின் திட்டங்கள். அவை பைக்காரா, மேட்டூர், பாபநாசம். (சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் பெரியாறு, குந்தா, பரமிக்குளம் ஆழியாறு, அமராவதி, கீழ்பவானி நீர்மின் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.)

நீர்மின் திட்டங்களைப்போலவே மின்சார உற்பத்தியில் அனல்மின் திட்டங்களுக்கும் பெரிய பங்குள்ளது. நீர்மின் திட்டங்களை பெரிய நதியுள்ள இடத்தில் மட்டுமே அமைக்க முடியும். ஆனால், அனல்மின் திட்டங்களைத் தேவைக்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். மேலும் உற்பத்தியின் அளவை தேவைக்கு ஏற்ப நாமே முடிவு செய்யலாம். தமிழ்நாட்டில் முதல்முறையாக 1947 ல் சென்னை பேசின் பிரிட்ஜ் ஒன்றும் 1951-ல் மதுரை சமயநல்லூரில் ஒன்றுமாக இரண்டு அனல்மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி படிமம் கண்டரியப்பட்டு, நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம் (NLC) அமைந்தது. இந்த நிலக்கரியைப் பயன்படுத்தி நெய்வேலி அனல்மின் நிலையம் 1960-ல் உருவானது. மின் தேவையோ மிக அதிகம். உற்பத்தியோ மிகக் குறைவு. இதுதான் அன்றைய நிலைமை, பிரச்னை எல்லாம்.

இந்தியப் பொருளாதாரம் அப்போது வேளாண்மையை மட்டுமே சார்ந்திருந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்னும் பெருமையோடு இந்தியா உலகில் பூத்தது. உலகம் இடது வலது என்று அணி பிரிந்திருந்தது. ஆனால் அணிசேராக் கொள்கையை மூன்றாம் பாதையாக முன்வைத்தார் நம் நேரு. கல்வியும் மின்சாரமும் நாட்டின் கண்கள் என்ற தெளிவோடு ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கினார். அணைகள், மின் உற்பத்தி, ஆலைகள், உயர் கல்வி, உணவுத் தன்னிறைவு, கனரகத் தொழில், எல்லாம் அவரின் பெரிய கனவுகள். சுயநலமற்ற, உயர்ந்த கனவுகள் காண்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அவருக்கு இருந்தது. அதனாலேயே 1954ல் நம் தேசக்கொடியை செங்கோட்டையில் பறக்கவிட்டுப் பேசும்போது, நாட்டின் தலைவர் பண்டிட் நேரு மக்களுக்குச் சொன்னார், “நமது கரங்கள் கொண்டுதான் உழைக்க வேண்டும். நமது கால்கள் ஊன்றியே முன்னேறி செல்லவேண்டும். வழிகாட்ட நமக்கு விண்மீன்கள் வராது. நமது பிரச்சனைகளை நாமேதான் சிந்தித்து நமது வலிமையால் தீர்வுகாண வேண்டும்.” என்றார்.

நேருவின் உரை
நேருவின் உரை

நம் பிரச்சனைகளைத் தீர்க்க நாமே சிந்தித்து உருவாக்கியதுதான் பொதுத்துறை நிறுவனங்கள். அதிக லாபம் தராத ஆனால் அதிக மூலதனம் தேவைப்படும் நிறுவனங்கள் அவை. நாட்டின் உள் கட்டமைப்பை வலுவாக்கும் இவற்றில் அரசே முதலீடு செய்தது. 1948 ல் நேரு தெளிவாகச் சொன்னார்,”LET US PRODUCE, BUT WHAT WE ARE PRODUCEING IS NOT FOR INDIVIDUAL POCKETS BUT FOR THE NATION, TO RAISE THE STANDARD OF THE PEOPLE AND THE COMMON MAN.” இந்த வார்த்தைகளில் உள்ள COMMON MAN (சாதாரண மனிதன்) 30 லட்சம் பேர், 5 ஆண்டுகளுக்கு முன்புதான், 1943 ல் வந்த வங்கப் பஞ்சத்தில் உணவில்லாமல் செத்துப்போனார்கள். இந்த “சாதாரண மனிதனுக்காக” தன் ராஜியத்தின் இருப்பிலிருந்த தானியங்களை “விரயம்” செய்ய சர்ச்சில் விரும்பவில்லை. சாதாரண மக்களை பசியிலிருந்து காப்பாற்றுவதை விரயம் என்று நினைத்தார் அவர். இந்த பார்வைதான் வங்கப் பஞ்சத்தின் அடிப்படை. இந்த “பிரிட்டிஷ் சர்ச்சிலை” தெரியும்போதுதான், “இந்திய நேருவை” நேசிக்க முடியும்.

திருச்சி BHEL
திருச்சி BHEL
நம் நேரு குறித்து, “இது உலகளாவிய சீர்கேடுகளின் குழப்பங்களின் காலம். இந்த பெரும்குழப்பத்தை ஒழுங்கு செய்யவே நேரு பிறந்து வந்துள்ளார்.” இப்படி சொன்னது யாரோ அல்ல, அறிவியல் மேதை ஐன்ஸ்டீன். நம் “சாதாரண மனிதனின்” வாழ்க்கைத்தரத்தை உயர்த்த நேரு உருவாக்கியதுதான் “ஐந்தாண்டுத் திட்டம்”. அந்த திட்டத்தின் குழந்தையே “பொதுத்துறை”. இந்த பொதுத்துறையின் கையில்தான் “மின் உற்பத்தி” தரப்பட்டது.
ஜன்ஸ்டீனுடன் நேரு
ஜன்ஸ்டீனுடன் நேரு

இவை எதுவும் வெற்று வார்த்தையில்லை. வெறும் கோஷமில்லை. 17 ஆண்டுகள் (1947-1964) நேரு காட்டிய பாதை மட்டுமல்ல, அவர் கட்டிய இந்தியக் கோட்டை. எல்லா துறைகளும் வளர்ந்தன. நாம் பேசப்போகும் மின் உற்பத்தியில் மட்டும் 1951-61 பத்து ஆண்டுகளில் நீர்மின்சாரம் 0.56 மில்லியன் KW இருந்து 1.93 மில்லியன் KW ஆக உயர்ந்தது. அனல் மின்சாரம் 1.74 மில்லியன் KW இருந்து 3.77 மில்லியன் KW வளர்ந்தது. மொத்த உற்பத்தி திறன் 2.3 மில்லியன் KW இருந்து 5.7 மில்லியன் KW ஆக உயர்ந்தது.

பொருளாதார வளர்ச்சியின் அடிவேர் தொழில் வளர்ச்சி. தொழில் வளர தடையற்ற மின்சாரம் வேண்டும். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடம்தான் மின் நிலையம் (POWER PLANT). இதில் நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் வழியாகவே அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல்மின் நிலையங்களை (THERMAL POWER PLANT) அமைப்பதுதான் BHEL ன் தலையான பணி. BHEL ன் பங்களிப்பை எளிய மனிதனின் வார்த்தையில் சொன்னால், நம் வீட்டில் 4 விளக்குகள் எரிந்தால் அதில் 3 விளக்குகள் BHEL ன் துணையோடுதான் எரிகின்றன.

இன்று மின் உற்பத்தியில் இந்தியா உலகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்று பல தனியார் நிறுவனங்கள் வந்திருந்தாலும், இந்த சாதனையின் மாலை பொதுத்துறையின் தோளுக்குத்தான். சுதந்திரம் பெற்ற 1947 ல் மின் உற்பத்தி 1360 mw தான். 2021 ல் நம் மின் உற்பத்தி 3,82,150 mw. இந்த வளர்ச்சியின் முக்கிய நாயகன் BHEL தான்.
திருச்சி BHEL
திருச்சி BHEL

BHEL உருவான கதையும் இந்தியா கட்டமைக்கப்பட்ட வரலாறும் பிண்ணிப்பினைந்தவை. இவைகளின் தொடக்கப்புள்ளிதான் திட்டக் கமிஷன். இது அறிவுஜீவிகளின் அரண்மனையாக அன்று இருந்தது. அதன் தலைவர் ஜவகர்லால் நேரு. அவரோடு வி.டி.கிருஷ்ணமாச்சாரி, பி.சி.மகலனோபிஸ், ஜே.ஜே.அஞ்சாரியா, தர்லோக் சிங், பெண்டரல் மூன், பீதாம்பர் பந்த் உடனிருந்தனர். அமைச்சர்களான தேஷ்முக், டி.டி.கே, ரஃபி அகமது, கிருஷ்ணமேனன் ஆகியோரும் அதில் இருந்தனர். இவர்களோடு, ஆற்றல்கொண்ட மாநில முதல்வர்களான காமராசர், நிஜலிங்கப்பா, கோவிந்த் வல்லப பந்த் ஆகியோரும் அங்கம் வகித்தனர்.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், ஆண்டுதோறும் 4000 mw மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் போதுமான அளவு நம்மிடமில்லை. எனவே மின் உற்பத்தி சாதனங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு ஒரு குழு எஸ்.ஏ.காட்கரி தலைமையில் அமைக்கப்பட்டது. அக்குழு மின்சக்தி சாதனங்களை பொதுத் துறையில்தான் தயாரிக்கவேண்டுமென்றது. அதன்படி HEAVY ELECTRICALS INDIA LTD – HEIL 1956 ல் போபாலில் உருவாக்கப்பட்டது. மேலும் இரண்டு மின் உற்பத்தி சாதனங்கள் தயாரிக்கும் நிலையங்கள் திட்டமிடப்பட்டன. ஒன்று வடக்கே ஹரித்வாரிலும் மற்றொன்று தெற்கே ஹைதராபாத்திலும் அமைந்தன. இதில் ஹைதரபாத் தொழிற்சாலையை இரண்டாகப் பகுத்து, டர்பன்களை ஹைதராபாத்திலும் உயர் அழுத்த பாய்லர்களை திருச்சியிலும் தயாரிப்பதென்று 1963ல் முடிவானது.

இதில் நாம் கவனிக்கவேண்டியது, அரசியல் பலம்மிக்க காமராஜர் தமிழக முதல்வராக இருந்ததும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.சுப்பிரமணியம் மத்திய அரசில் கனரகத் தொழில் அமைச்சராக இருந்ததும் முக்கியமானது. ஐந்தாண்டுத் திட்டங்களை மிகச்சரியாக காமராசர் பயன்படுத்தினார். அதன் விளைவை மாநிலங்கள் பெற்ற மின் இணைப்புகளில் நாம் பார்க்கலாம். 1963 ஆம் ஆண்டு கணக்கின்படி, குஜராத் 1136, ஒரிசா 215, பஞ்சாப் 4416 உ.பி 4688 மே.வ 506 மகாராஷ்டிரா 1611 மின் இணைப்புகளை பெற்றிருந்தபோது தமிழ்நாடு 7434 இணைப்புகளைப் பெற்று இந்தியாவில் முதல் இடத்தில் இருந்தது. கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியதிலும் தமிழ்நாடுதான் முதலிடம். இதன் தொடர்ச்சிதான், அமர்தியா சென் சொல்லும் “மனித மேம்பாடு குறியீட்டிலும்” தமிழ்நாடு மேலேயிருப்பது.

ஒரு கதை மக்களால் சொல்லப்படுகிறது. திருச்சியிலிருந்து தஞ்சை சென்ற காமராசர் மேட்டுப்பாங்கான ஒரு பெரிய பொட்டல் இடத்தைக் கடக்கிறார். “இங்க ஒரு தொழிற்சாலை வந்தா நல்லாயிருக்குமில்ல” என்று தனக்குள்ளேயே பேசிக்கொள்வதைப்போல் டிரைவரிடம் கேட்கிறார். அவரும் ஆமாய்யா என்று சொல்ல, பயணம் தொடர்கிறது. BHEL அமைக்க இடம்தேடி நிபுணர்குழு காமராசரை சந்திக்க, காமராசர் அடையாளம் காட்டிய இடம்தான் இன்றைய BHEL அமைந்துள்ள இடம். ஏறக்குறைய 750 ஏக்கர் பட்டா இடத்தையும் 2400 ஏக்கர் புறம்போக்கு இடத்தையும் மாநில அரசு BHEL உருவாவதற்காக கொடுத்தது.

தாய் நிறுவனமான HEIL தள்ளாடியது. காரணம் பழைய பிரிட்டிஷ் தொழில் நுட்பம். புதிதாக வந்த ஹரித்வார்,ஹைதராபாத்,திருச்சி மூன்றும் வளர்ந்தன. இந்த மூன்றையும் இணைத்து 1964ல் பாரத மிகு மின் நிலையத்தை (BHEL) மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் உருவாக்கினார். இப்படி உருவான திருச்சி BHEL ன் முதல் பொது மேலாளராக சிறப்பாக செயல்பட்டவர் ஆர்.எஸ்.கிருஷ்ணன். இவர் பிறகு BHEL தலைவராக உயர்ந்தார். இவரது சிலை தொழிலாளர்களின் பங்களிப்போடு இன்றும் திருச்சி BHEL ல் உள்ளது. இவர் பெயரால்தான் RSK பள்ளி, மருத்துவமனை எல்லாம் உள்ளன. இவருக்குப் பிறகு திருச்சி BHEL பொதுமேலாளராக டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி பதவி ஏற்றார்.

நவீன இந்தியாவின் சிற்பிகள்
நவீன இந்தியாவின் சிற்பிகள்

இன்று தமிழ்நாட்டில் இயங்கும் அனல்மின் நிலையங்களான தூத்துக்குடி, வடசென்னை, நெய்வேலி, எண்ணூர், மேட்டூர் இவை அனைத்திலும் BHEL பங்களிப்பே அதிகம். அதி சுத்தமான நீரை நீராவியாக்கி, அதற்கு ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தி, டர்பைன் காந்தம் இணைப்பின் மூலம் மின்சாரம் வெளிப்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த மாபெரும் உபகரணத்தின் பெயர்தான் அனல்மின் நிலையம்-THERMAL POWER PLANT. இதற்கான உற்பத்தி நிலையங்கள் இந்தியாவில் திருச்சி, ராணிப்பேட்டை, ஹரித்வார், போபால், ஜான்சி, பெங்களூர், ஹைதராபாத் ருத்ராபூர், கோவிந்வால் ஆகிய இடங்களில் உள்ளன.

அனல்மின் நிலையத்தின் இதயம் போன்ற பகுதி அதன் கொதிகலன் (BOILER). இதைத் தயாரிப்பதுதான் திருச்சி BHEL ன் வேலை. ஆரம்பத்தில் இதற்கான தொழில்நுட்ப உதவிகளை செகஸ்லோவாக்கியாவின் ஸ்கோடா எக்ஸ்போர்ட் நிறுவனம் செய்துகொடுத்தது. திருச்சியில் தயாராகும் கொதிகலன் 60 MW முதல் 800, 1000 MW வரை மின்சார உற்பத்திக்கு தேவையான நீராவியை உருவாக்கும் வலிமை கொண்டவை. இவை தவிர அணுமின் நிலையத்திற்கு தேவையான வெப்ப பரிமாற்றிகள், பாய்மப் படுகை எரிப்பு கொதிகலன்கள், மற்ற உதிரி பாகங்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
திருச்சி BHEL
திருச்சி BHEL

கொதிகலன்களை தயாரிப்பதோடு, அவைகளை மின்உற்பத்தி நிலையங்களில் நிறுவி, அவைகளை முறையாக ஓடவிட்டு, பழுதுகளையும் குறித்த காலத்தில் சரிசெய்து, உபரி பாகங்களை தருவதற்கு என்றே ஒரு துறை (SERVICE AFTER SALES) தனியாக இயங்குகிறது. இந்த தனிகவனமே உலகச் சந்தையில் BHEL யை முன்னிறுத்துகிறது. பயன்படுத்தப்படும் நிலக்கரியின் தரத்தை அளப்பதற்கும் தேவையை அறியவும் COAL RESEARCH INSTITUTE இங்கு இயங்குகிறது என்று உணர்ச்சி பொங்க “ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி” (R and D) துறையில் பணிசெய்த நண்பர் இளையபெருமாள் கூறுகிறார்.

“இணைப்பில்லா உருக்குக்குழாய்” பாய்லரின் முக்கியமான உறுப்பாகும். இது அதிகமாகவும் தேவைப்படுகிறது. இக்குழாய்களின் மூலம்தான் நீரானது நீராவியாகி அதிவேக சக்தியாகமாறி டர்பனை சுற்றவைப்பதன்மூலம் மின்சாரம் கிடைக்கிறது. இந்த வகையான குழாய்களை பலஅளவுகளில் தயாரிக்கும் தனி தொழில் கூடமான SSTP இங்கு செயல்படுகிறது. (இங்கு சில காலம் நான் பணி செய்தேன்) இன்றைய உடனடித்தேவையான ஆக்ஸிஜன் தயாரிப்பு நிலையமும் இங்கு இயங்குகிறது.

எளிய மக்களால் “டிரைனிங் சென்டர்” என்று அழைக்கப்படும் HRDC பயிற்சி மையம் முக்கியமான ஒன்று. ஆற்றல் மிகுந்த மனித சக்தியை உருவாக்கும் நோக்கத்தோடு 4-7-1963 ல் தொடங்கப்பட்டது இது. தொழில்நுட்ப கல்வி பெற்றவர்களை வேலையில் சேர்த்து, அவர்களின் தொழிலநுட்ப திறமையை மேம்படுத்தி பணிக்கு அனுப்புவது பயிற்சி மையத்தின் முக்கிய வேலை. மேலும், பணியிலிருக்கும் ஊழியர்களின் தொழிலறிவை காலத்துக்கு ஏற்ப புதுப்பிக்கும் பணியையும் இது செய்கிறது.

உயர் அழுத்தக் கொதிகலன் தயாரிப்பில் “வெல்டிங்” மிக நுட்பமானது. இதை மேம்படுத்த “வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்” ஒன்றை நிறுவி, உலோகங்கள் ஒன்றுடன் ஒன்றை பற்றவைப்பதற்கான ஆராய்ச்சி, உலகத் தரத்தில் இங்கு நடக்கிறது. அதுமட்டுமல்ல, செய்யும் வேலையை ஒட்டி வரும் உடல் பிரச்சனைகளை கையாள்வதற்கான OCCUPATIONAL HEALTH SERVICES PROGRAMME ஒன்றும் அதற்கான மருத்துவர்களையும் நியமித்த முன்னோடி நிறுவனம் திருச்சி BHEL. கணினி பயன்பாட்டிலும் திருச்சி BHEL முந்தியது. ICIM லிருந்து முதல் முறையாக வந்த மூன்று கனிணிகளில் ஒன்றை வாங்கி அதற்கான மென்பொருளையும் தாங்களே எழுதி சாதனை படைத்தது அது. இந்தியாவில் தன் தயாரிப்பை பற்றி விளம்பரம் வெளியிட்ட முதல் பொதுத்துறை நிறுவனமும் திருச்சி BHEL தான். இதன்மூலம் அதன் BRAND IMAGE உச்சம் தொட்டது. இவைகளின் விளைவுதான் உற்பத்தியை தொடங்கிய மூன்றாவது ஆண்டே(1967-68) திருச்சி BHEL 42 லட்சம் லாபம் ஈட்டியது என்று டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி பெருமையோடு கூறுகிறார். (இவர்தான் இப்போது திருச்சி தேசியக் கல்லூரியின் தலைவராக உள்ளார்)

தன் வீட்டின் ஹோலிப் பண்டிகையின்போது 1964
தன் வீட்டின் ஹோலிப் பண்டிகையின்போது 1964

ஒரு காலமிருந்தது, திருச்சி மார்கெட்டுக்கு BHEL காரர்கள் வந்தால் மற்ற வாடிக்கையாளர்களை கடைக்காரர் மதிக்கமாட்டார். கேட்ட காசைக் கொடுத்து அவர்கள் பொருளை வாங்குவார்கள். நல்ல சம்பளம். இரண்டு போனஸ். நிறைய சலுகைகள். அந்த சாம்பல் வண்ண யூனிபாமைக் கண்டால் சற்று பொறாமையாக இருக்கும். மற்ற இடத்தில் வேலை பார்ப்பவர்கள் மதிய சாப்பாட்டுக்கு டப்பா தூக்கும்போது BHEL காரர்கள் கைவீசிப் போவார்கள். அவர்களுக்கு கான்டீனில் சாப்பாடு 50 காசு, தோசை 15 காசு, வடை 10 காசு, டீ 6 காசு. (இப்போது கதை மாறிவிட்டது) படிக்கும்போது காதில் புகை போகிறதா. இதனாலெல்லாம் நஷ்டம் வராது என்றார் நிர்வாக இயக்குனராக (ED) பணி செய்த டாக்டர் வி.கோபாலகிருஷ்ணன். இவர் காலத்தில்தான் வாழையிலை போட்டு இனிப்புவைத்து தொழிலாளிகளுக்கு உணவு தரப்பட்டுள்ளது. BHEL ன் பட்ஜெட்டில் இதெல்லாம் கொசுறு என்றார் இவர். அப்போது BHEL லாபகரமாக இயங்கியதையும் நாம் கவனிக்கவேண்டும். ஊழியர்கள் கைகளில் பணப்புழக்கம் இருந்தபோது திருச்சி வணிகம் செழித்தது. தஞ்சாவூர் பால்பண்ணையிலிருந்து துவாக்குடி, NIT வரை திருச்சி வளர்ந்ததற்கு BHEL செழிப்பே காரணம். 16000 பேர் வேலை செய்த திருச்சி BHEL ல் இன்று 8000 பேர்தான் இருக்கிறார்கள். அதையும் 6000 ஆக்கும் முயற்சி நடக்கிறதாம். தனியாருக்கு தருவதற்கு வசதியாக நடக்கும் ஒழுங்கமைவாக (TRIMMING) இதை ஊழியர்கள் பார்க்கிறார்கள்.

பொதுத்துறை என்பதன் தத்துவமே, தொழிற்சாலையும் தொழிலாளியும் சேர்ந்தே வளர்வது சேர்ந்தே வாழ்வது. இதை நாம் இன்றும் BHEL கைலாசபுரம் டவுன்ஷிப்பில் பார்க்கலாம். தொழிற்சாலையின் அருகிலேயே குடியிருப்பு இருப்பதுதான் “வேலைத்திறனை” மேம்படுத்தும் என்ற அறிவியல் புரிதலோடு உருவாகுகப்படெடது அது. நல்ல சாலைகள், பெரிய மருத்துவமனை, நிறைய பூங்காக்கள், விளையாட்டரங்கம், பள்ளிகள், பொழுதுபோக்க மனமகிழ் மன்றங்கள், பெரிய கூட்ட அரங்குகள், பட்ஜெட் பத்மனாபனாக கல்யாணமண்டபங்கள், சினிமா தியேட்டர், வங்கி, வணிக வளாகம் என்று எல்லா வசதிகளோடும் அமைந்த டவுன்ஷிப் அது. இன்று பழைய பொலிவைக் காணோம்.

திருச்சி BHEL
திருச்சி BHEL

BHEL சார்ந்து 100 க்கும் அதிகமான துணை நிறுவனங்கள் (ஆன்சிலரி) நிறைய வேலைகளோடு இருந்தார்கள். 10000 பேராவது வேலை செய்தார்கள். இன்று பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. காரணம் BHEL க்கு வேலை குறைந்துவிட்டது. BHEL க்கு ஆர்டர் குறைந்து போனதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சைனா போன்ற நாடுகளின் போட்டியும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அடுத்து சுற்றுச்சூழல் பிரச்சனை. அனல்மின் நிலையம் உண்டாக்கும் மாசு, சூழல்கேடாக பார்க்கப்படுகிறது. இதனால் புதிய பாய்லர்கள் நிறுவப்படுவதில்லை.

இப்போது அனல்மின் நிலையத்தால் உண்டாகும் மாசை உலகத்தர அளவுக்கு குறைக்கும் தொழில்நுட்பத்தை BHEL கண்டுபிடித்து, அதற்கான கருவிகளையும் உற்பத்தி செய்து அவைகளை பழைய மின்நிலையங்களில் பொருத்தும் வேலையையும் செய்துவருகிறது. அணுமின் நிலையங்களுக்குத் தேவையான சில உதிரி பாகங்களையும் செய்கிறார்கள். திருச்சி BHEL, பாட்டரி பஸ் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஆனால் மாற்று வேலைகளை இன்னும் 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டிருக்க வேண்டும் என்ற வலுவான கருத்தும் மக்களிடம் உள்ளது. இவ்வளவு பெரிய தொழிற்சாலை எப்படிப் பயன்படப்போகிறது என்று தெரியவில்லை. ஆய்வுகள் நடந்துவருவதாகச் சொல்கிறார்கள்.

காமராஜர் சிலை
காமராஜர் சிலை
BHEL க்கு எதிரே, கைலாசபுரம் டவுன்ஷிப் நுழைவாயிலில், இடுப்பில் கைவைத்துக்கொண்டு காமராசர் கவலையோடு நடப்பவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு சிலையாக நிற்கிறார். இந்த BHEL அந்தத் தலைவனின் கனவு. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

(இன்னும் ஊறும்)