Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 17: அசதிக்கு சுடர்தந்த தேன் - கி.ஆ.பெ.விசுவநாதம்

கி.ஆ.பெ.விசுவநாதம்
News
கி.ஆ.பெ.விசுவநாதம்

வணிகர் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதாலேயே நீதிதேவதையின் கையிலுள்ள தராசு அவர்களிடம் தரப்பட்டுள்ளது என்று எடைபோட்ட வார்த்தைகளால் சொல்வார் கி.ஆ.பெ.விசுவநாதம்.

Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 17: அசதிக்கு சுடர்தந்த தேன் - கி.ஆ.பெ.விசுவநாதம்

வணிகர் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதாலேயே நீதிதேவதையின் கையிலுள்ள தராசு அவர்களிடம் தரப்பட்டுள்ளது என்று எடைபோட்ட வார்த்தைகளால் சொல்வார் கி.ஆ.பெ.விசுவநாதம்.

கி.ஆ.பெ.விசுவநாதம்
News
கி.ஆ.பெ.விசுவநாதம்
தமிழ்க் 'காதலராய்' வாழ்வைத் தொடங்கி தமிழ்க் 'காவலராய்' வாழ்வை நிறைவு செய்தவர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். இயல், இசை நாடகம் என்ற மூன்று தமிழையும் உள்வாங்கி; பேசியும் எழுதியும் இயங்கியும் காத்து நின்றதால் அவரைச் சரியாகவே 'முத்தமிழ் காவலர்' என்று திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் 1957-ல் விருது தந்து பாராட்டியது. இதை உணர்ந்தே

“பேச்சு பவளம்; பெருந்தொண்டு நல்முத்து

மூச்செல்லாம் தூயதமிழ்...”

என்று கவிஞர் சுரதா தங்க வார்த்தைகளால் கவி சொன்னார்.

1997-ல் திருச்சியில் அமைந்த அரசு மருத்துவக் கல்லூரி, அவர் பெயராலேயே 'கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி' என்று முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. இந்த பெயர் எவ்வளவு பொருத்தம் என்பதை வரலாறு சொன்னது.

சமஸ்கிருதம் தெரிந்தால்மட்டுமே மருத்துவ படிப்பில் சேரமுடியும் என்ற விதி இருந்த காலமுண்டு. ஒடுக்கப்பட்ட எளிய சாதி மக்களால் மருத்துவப் படிப்பில் இதனால் சேரமுடியவில்லை. நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவராகவிருந்த கி.ஆ.பெ.வி இந்த பிரச்னையை அன்றைய முதல்வர் பனகல் அரசரிடம் கொண்டுசென்றார். அதன் பிறகே 'சமஸ்கிருதம் தேவை' என்ற விதி நீதிக்கட்சியால் நீக்கப்பட்டது. எளிய மக்கள் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய காரணமான கி.ஆ.பெ.வி பெயர் திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு வைக்கப்பட்டது நியாயமல்லவா!

அவர் தோற்றம் கம்பீரமானது. ஆறடிக்கும் அதிகமான உயரம். பொன்னிற உடல். நேர்த்தியான கிராப்பு தலைமுடி. அழகை அதிகமாக்கி மின்னும் மூக்கு கண்ணாடி மெல்லிய மஸ்லீன் கீழ்பாச்சி அமையக் கட்டிய வேட்டி. முழுக்கை ஜிப்பா. அதன்மேல் நீண்ட துண்டு. கூர்மையான பார்வை. நடந்துவரும்போது நண்பகல் சூரியன் வெப்பம் தவிர்த்து தரைக்கு வந்ததுபோல் இருக்கும்.

கி.ஆ.பெ.வி அவர்களின் இளைய மகன் கதிரேசன்
கி.ஆ.பெ.வி அவர்களின் இளைய மகன் கதிரேசன்

16 பிள்ளைகள் பிறந்த வீட்டில் 16வது பிள்ளையாகப் பிறந்தவர் விசுவநாதம். தந்தை பெரியண்ணப்பிள்ளை. தாய் சுப்பம்மாள். 11-11-1899-ல் (11ம் மாதம் 11ம் தேதி 11 மணி 11 நிமிடத்தில் பிறந்ததாக அய்யாவின் இளைய மகன் கதிரேசன் மகிழ்ச்சி பொங்க நம்மிடம் சொன்னார்) நகரின் மையமான மணியக்காரத் தெருவில் 100 ஆண்டுகள் பழைமையான மணிவாசகர் இல்லத்தில் விசுவநாதம் பிறந்தார். தந்தைவழி புகையிலை தொழிலும் சுருட்டு வணிகமும் செய்தார். 100க்கும் அதிகமான பிள்ளைகள் பேரன் பேத்திகளோடு 95 ஆண்டுகள் நிறைவான வாழக்கை வாழ்ந்தார்.

மருதமுத்துக்கோனாரிடம் 1904-ல் திண்ணைப் பள்ளியில் தமிழும் கணிதமும் படித்தார். குடும்ப வறுமை கல்வியிலிருந்து கடைக்கு அனுப்பியது. ஆனால் தமிழார்வம் அவரை நெய் வணிகர் உண்ணியூர் சபாபதி முதலியாரிடம் அனுப்பியது. நெய் காய்ச்ச உதவிக்கொண்டே விசுவநாதம் முதலியாரிடம் தமிழ்வாசம் பிடித்தார். அரசன் சண்முகனாரின் கல்வி குறித்த உரை இவரின் கல்விக் கண்ணைத் திறந்தது. தந்தை காட்டிய ஒழுங்கும் சைவமும் பல அறிஞர்களை விசுவநாதம் அறிய காரணமானது. ந.மு. வேங்கடசாமி நாட்டாரிடம் முறைப்படி 'தமிழ் கேட்டார்'. சைவ அறிஞரான வாலையானந்த சுவாமிகளிடம் சைவ சித்தாந்தம் கற்றார். அவரோடு இணைந்து சைவ சமயச் சொற்பொழிவாற்றினார்.

தமிழும் சைவமும் விசுவநாதத்தை மறைமலையடிகளிடமும் திரு.வி.க விடமும் அனுப்பியது. இதன் நீட்சியே பின்னாட்களில் நீதிக்கட்சியில் அவரைச் செயல்படவைத்தது.

கி.ஆ.பெ.விசுவநாதம்
கி.ஆ.பெ.விசுவநாதம்

ஒரு முழுமையான மனிதராக கி.ஆ.பெ.வி நமக்கு காட்சி தந்தது வணிகத்தில்தான். அவரின் அடிப்படை கோட்பாடு நாணயம். லாபம் + சொல் சுத்தம் + இனிய பேச்சு = நாணயம் என்பது அவரின் சூத்திரம். வணிகர்தான் உண்மையான திறமைசாலி என்பதும், எல்லா தரப்பு மக்களையும் அவர்கள் கையாள்வதால் உலக அறிவு அவர்களுக்கு அனுபவத்தாலேயே கிடைத்துவிடுகிறது என்பதும் அவரின் புரிதல். வணிகர் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதாலேயே நீதிதேவதையின் கையிலுள்ள தராசு அவர்களிடம் தரப்பட்டுள்ளது என்று எடைபோட்ட வார்த்தைகளால் சொல்வார்.

தந்தையின் மரணத்துக்குப் பிறகே அவர் வணிகரானார். ஆனால் கதிகலங்கிப்போனார். அப்போது வயது 30. குடியிருக்க எளிய வீடும் சாப்பாட்டுக்கு ஒரு ஏக்கர் நிலமுமே இருந்தன. கடன் அடைக்க, பணம் சம்பாதிக்க மலேசியா, சிங்கப்பூர் போனார். “உயர்ந்த சரக்கு – அதிக விலை” என்ற தத்துவத்தை அங்கு ஒரு சீனரிடம் கற்றார். விற்பனை வரி வருமான வரி கணக்கில் அவர் நிபுணர். பணத்தை சேமிக்கவும் வழிகாட்டினார். “வங்கியில் சேமிக்கணும். அதிகமானதும் பங்குச் சந்தையில் போடணும். லாபத்தில் நிலம் வாங்கணும். இப்படிச் சேர்ந்த பணத்தால் அறச்செயல்கள் செய்யணும்.” இப்படி முத்தமிழ் காவலரின் முழுமையை தரிசிக்க அவரின் வணிக வாழ்வு பயன்படும்.

“தமிழ்க் காவல்” என்பதை அவர் இலக்கியங்களின் பழமை, செழுமை தூய்மைகளைக் காப்பாற்றுவது என்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. விரிந்துகிடக்கும் தமிழர்களின் வாழ்வியலை, அனுபவச்சாறை வரும் தலைமுறைக்கு எளிமையாக்கித் தருவதையும் காவல்பணியாகவே கருதிச் செயல்பட்டார். அதனால்தான் எழுத்துக்கு நிகராகவும் அதைவிடவும் அதிகமாக எளியமக்களை நோக்கி பேசினார் என்று அய்யாவின் தமிழ்ப்பணியை ஆய்வு செய்த மகள் வயிற்றுப் பேரன் பேரா.கோ.வீரமணி நம்மிடம் கூறினார்.

கி.ஆ.பெ.வி அவர்களின் பேரன் 
பேரா.வீரமணி
கி.ஆ.பெ.வி அவர்களின் பேரன் பேரா.வீரமணி

சின்ன சின்ன இழைகளால் பின்னிவரும் சித்திரச்சேலைபோல், சொல்லோடு சொல் சேர்ந்து அய்யாவின் உரை விரியும். அச்சொல்லை வெல்ல பிறிதொரு சொல்லால் இயலாது. வ.உ.சி பிறந்த ஒட்டப்பிடாரத்தில் 5-2-1921 காவலரின் முதல் பேச்சு மேடை அமைந்தது. 'அன்பு' என்ற தலைப்பில் பேசினார். அன்றுமுதல் பேச்சின் திசை திருச்சியானது. நம் காவலரோடு மேடையில் வ.உ.சி யும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இலக்கியம், இசை, நாடகம், அரசியல், சமூகம், சீர்திருத்தம், கல்வி, வாணிகம், தொழிலாளர், ஆராய்ச்சி, மேடை, வானொலி என்று 12 துறைகளில் பலநூறு பேச்சுக்களை முத்தமிழ்க் காவலர் பேசியுள்ளதாக ந.சுப்புரெட்டியார் கூறுகிறார். பண்டிதத் தமிழுக்கும் பாமரத் தமிழுக்கும் இடையே உயிர்ப்புள்ள தமிழை மேடைகளில் அவர் உலவவிட்டார். பெரியாரின் இடதுகைபோல் மேடைகளில் பேசியதாக மா.சு.சம்பந்தன் கூறுகிறார்.

சாதி வேற்றுமையை அவர் செய்யும் நையாண்டி தனி அழகானது. “தீண்டாமை, கொள்ளாமை, கொடுக்காமை, உண்ணாமை, தின்னாமை, எண்ணாமை, இரங்காமை, பொறாமை முதலிய ஆமைகள் சாதி முறைச் சேற்றில் வாழ்கின்றன. இந்த ஆமைகள் யாவும் உணராமைக் கிணற்றிலுள்ள அறியாமையின் குட்டிகள் ஆகும்” என்று கருத்தை சுமக்கும் வாகனமாக மொழியின் அழகை மாற்றும் வித்தையை அய்யாவிடம் நாம் கற்கலாம்.

குடும்ப வாழ்க்கையின் தொடக்கவிழாவான திருமணங்களை அவர் நடத்திவைக்கும் அழகே தனி. 2500 க்கும் அதிகமான திருமணங்களை தமிழ் வழியில் நடத்திவைத்துள்ளார். (என் தம்பியின் திருமணத்தையும் அவர்தான் செய்துவைத்தார்) திரு.வி.க. போன்றே சின்ன சின்ன வார்த்தைகளால் வாழ்வியலை புரியவைப்பார். “அடக்கிப்பார்... முடியலையா அடங்கிப்போ” என்பார். “அடங்கிப்போவது அடிமைத்தனமல்ல. குடும்பச்சண்டை குத்துச்சண்டையல்ல. அதற்கு இரண்டே மருந்துதான் உண்டு. ஒன்று விட்டுக்கொடுப்பது மற்றொன்று சகித்துக்கொள்வது. இதுதான் நாளடைவில் புரிதலை அதிகமாக்கி குடும்பத்தை மகிழ்வோடு வாழவைக்கும்.” அவர் இப்படி அனுபவத்தைக் கொட்ட கொட்ட கல்யாணத்துக்கு வந்த கூட்டம் தாங்கள் செய்த தவற்றை உணர்ந்து கைதட்டும். திருக்குறளை அவர் கையாளும் பாணியே அலாதியானது. “ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல்லை வாங்கி ஊற்றுங்கள். வாழ்க்கை வழுக்காது” என்பார். இதில் “ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்” என்பது குறள்.

ஒரு அறிவியல் சூத்திரம்போல் வாழ்க்கையை சாறாக்கித் தருவார். “தேவைக்குமேல் செலவுசெய்தால் அது பகட்டு. தேவைக்கு ஏற்ப செலவு செய்வது சிக்கனம். தேவைக்கும் செலவு செய்யாதது கருமித்தனம்” இதுதான் கி.ஆ.பெ.வி. யின் தனி பாணி. மணமக்களுக்கு சொல்வார், “நேற்றுவரை உங்களுக்கு இரண்டிரண்டு கண்கள், காதுகள்; இனி நான்கு கண்களாகி பாருங்கள். நான்கு செவியாகி கேளுங்கள். வாய் மட்டும் இரண்டாகாமல் ஒன்றாகட்டும்.” எத்தனை எளிமை. ஆனால் எவ்வளவு பெரிய உண்மை.
கி.ஆ.பெ.விசுவநாதம்
கி.ஆ.பெ.விசுவநாதம்

வாழ்க்கையோடு அவர் தமிழை கலந்ததால், 'தமிழைக் காப்பது' உபதேசமாக இல்லாமல் மக்கள் உயிரோடு கலந்துவிட்டது. அதனால்தான் அவரை முத்தமிழ் காவலர் என்றது உலகம்.

தமிழ் மருத்துவம் எப்போது தோன்றியது என்று யாராவது கேட்டால், செடி கொடிகள் மண்ணில் முளைத்தபோதே தோன்றிவிட்டது என்பார் கி.ஆ.பெ.வி. ஒரு மனிதனுக்கு வரும் நோய்கள், அங்குள்ள இயற்கை சூழல் மாறுபடுவதால் வருகின்றன. அதற்கு மருந்தும் அதே மண்ணிலிருந்து கிடைப்பதுதான் இயல்பானது என்பது அவரது கோட்பாடு. அதைத்தான் நாம் சித்த மருத்துவம் என்கிறோம். “உணவே மருந்து--மருந்தே உணவு” என்பது அவரின் புகழ்மிக்க வாக்கியம். இதற்கும் அவர் திருக்குறளையே வழிகாட்டியாக முன்வைக்கிறார். 'மருந்து' என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் மருந்தைப்பற்றி பேசாமல் உணவைப்பற்றியே பேசுவதை நுட்பமாக நமக்கு புரியவைக்கிறார். மிளகு, பூண்டு, சீரகம், மஞ்சள் இப்படி இலகுவாக கைக்குக் கிடைக்கும் பொருள்களைக்கொண்டே நடக்கும் மருத்துவத்தை 'கை வைத்தியம்' என்ற நம் கிராமத்து பெருசுகளையும் அவர்களின் மருந்தையும், வேரை மறந்த தமிழர்களுக்கு அவர்தான் நினைவூட்டினார். இப்படி தமிழ் மருத்துவத்தைக் காப்பாற்றிய காவலரும் அவர்தான்.

நீண்டநாள் வாழ்ந்தார். விழிப்போடும் வாழ்ந்தார். அதனால் அவரின் அனுபவங்கள் நமக்கு பாடமாகின்றன. பொறியியலின் தந்தை விஸ்வேசுர அய்யாவை சந்திப்பதை ஒரு கனவாக வைத்திருந்த கி.ஆ.பெ.வி, அவரைச் சந்தித்தபோது அவரிடம் “பொதுத்தொண்டு என்றால் என்ன?" எனக்கேட்டார். “அதா, அது இரண்டு பேனா விஷயம். ரொம்ப கஷ்டமாச்சே. என்னிடம் எப்போதும் இரண்டு பேனா வைத்திருப்பேன். ஒன்று அலுவலக வேலை செய்ய. மற்றது தனிப்பட்ட கடிதங்கள் எழுத. அலுவலகப் பேனாவால் சொந்தவேலை செய்யவேக்கூடாது. அப்படி இருப்பதுதான் பொதுத்தொண்டு” என்றார். இப்போது புரிகிறதா விஸ்வேசுரய்யா கட்டிய KRS DAM ஏன் தீர்காயிசோடு வாழ்கிறதென்று!

தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானித்ததில் 'மொழி உரிமைப் போருக்கு' முக்கிய பங்குண்டு. இந்திக்கு எதிரான தொடக்கப் புள்ளிகளில் ஒன்று திருச்சியில் கூடிய 'சென்னை மாநிலத் தமிழர் மாநாடு'. இன்றுள்ள தேவர் ஹாலில் 26-12-1937-ல் கூடியது. இதன் தலைவராக நாவலர் சோமசுந்தர பாரதியாரும் செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாதமும் இதை நடத்தினர். மொழிப்போருக்கு கால்கோல்விழா நடத்திய மூத்தோரில் ஒருவராக கி.ஆ.பெ.வி வரலாற்றில் நிலைத்தார் திருச்சியும் நிலைத்தது.
கி.ஆ.பெ.விசுவநாதம் உருவச்சிலை
கி.ஆ.பெ.விசுவநாதம் உருவச்சிலை

1938 பிப்ரவரியில் காஞ்சியில் கூடிய தமிழர் மாநாடு தந்த இறுதி எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி, தாய்மொழியாகிய தமிழே தெரியாத மக்களைப்பார்த்து, “கட்டாயம் இந்தி படியுங்கள்” என்றது ராஜாஜியின் அரசு. அதற்கான அரசாணை 21-4-1938-ல் வெளிவரவும் செய்தது. இதை கண்டித்து 1-5-38 ல் ஸ்டாலின் ஜெகதீசன் காலவரை இல்லாத பட்டினி போராட்டத்தை தொடங்கினார். இப்படித் தமிழகமெங்கும் உணர்ச்சி வெள்ளமாய் ஓடியது. இதன் விளைவாக 1938 ஆம் ஆண்டு “சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியம் (THE ANTI HINDI HIGH COMMAND) உருவானது. இதன் செயலாளராக இருந்து போர்முனையை வடிவமைத்தவர்களுள் கி.ஆ.பெ.வி முக்கியமானவர்.

போர் என வந்தபின் கொடியில்லாமலா? வில் - புலி - கயல் தாங்கிய தமிழக்கொடி நாடெங்கும் பறந்தது. ஜனநாயகப் போராட்டத்தின் வடிவமாக 100 பேர் கொண்ட இந்தி எதிர்ப்புப் படை 1-8-1938 ல் திருச்சியிலிருந்துதான் புறப்பட்டது. 42 நாள்கள் கடந்து 577 மைல்கள் நடந்து சென்னையில் கூடியது இந்த போராட்டத்தில் மட்டும் கி.ஆ.பெ.வி 617 சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். திருநெல்வேலியில் ரத்தம் வழிய வழிய ஒரு கூட்டத்தில் தாக்கப்பட்டார். “நான் வீட்டிலிருந்து புறப்படும்போது திரும்பிவருவதாக சொல்லி புறப்பட்டு வரவில்லை. நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதைவிட என் புதைகுழி அதிகமாக வளர்க்கும்” என்றார். இந்தப் போராட்டத்தின் போதுதான் அவரது மகன் இராசரத்தினம் காலமானார். அதையும் தாங்கிக்கொண்டே அன்றைய தினமும் அவர் போராடினார். இதனால்தான் இவரை முத்தமிழ் காவலர் என்றது உலகம்.

பெரியார்
பெரியார்
Periyar
பெரியாரின் தலைமையில் நீதிக்கட்சி இருந்த 1944-ல் அண்ணா கொண்டுவந்த தீர்மானத்தால் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறியது. தமிழ் தேசியத்தின்மீது நம்பிக்கைகொண்ட விசுவநாதம் பெரியாரிடமிருந்து விலகினார். தமிழர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதன் கொள்கை ஏடுதான் தமிழர்நாடு. 17-8-1947-ல் இது தொடங்கப்பட்டது. தமிழின் சிறப்பு, தமிழ் இசை, திருக்குறள் ஆய்வு, தமிழ் மருத்துவம், கல்வி என்று தமிழர்நாடு பல துறைகளில் பங்களித்தது.

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு 1948, 1952, 1965 ஆண்டுகளிலும் தொடரவே செய்தது. அரசியல் வேறுபாடால் பெரியாரோடு விலகியிருந்த கி.ஆ.பெ.வி தமிழர் நலனுக்காக இந்தியை எதிர்த்து பெரியாரோடு இணக்கமாகவே செயல்பட்டார்.

தமிழக அரசியலில் ஒரு புதிய அணி உருவாகக் காவலரே காரணமானார். இந்தித் திணிப்புக்குக் காரணமான ராஜாஜி உட்பட 9 கட்சிகளை ஒன்றாக்கி 'தமிழக இந்தி எதிர்ப்பு மாநாடு' ஒன்றை 17-1-1965 திருச்சி தேவர் மன்றத்தில் கூட்டினார். இதுவே தமிழ்நாட்டு அரசியலில் பின்னாட்களில் ஒரு வானவில் கூட்டணி அமையக் காரணமானது.

எதைப்பற்றியும் கவலைப்படாத ஒன்றிய அரசு 26-1-65 முதல் இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்றது. போராட்டம் வெடித்தது. பக்தவசலம் அரசு, காவலரை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்தது. 6 மாதம் சிறையும் 1000 ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்தது. மொழிக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைந்து ஒவ்வொரு மாதமும் 26ம் நாள் அவர் உண்பதும் இல்லை. உரைப்பதும் இல்லை.

முத்தமிழ்க் காவலரின் நூல்கள் மொத்தம் 25. அவற்றில் பல அவரது சிந்தனை உரைகளின் வரிவடிவமே. காவலரின் நூல்கள் அளவில் சிறியதாகவும் நடையில் எளிமையாகவும் விலையில் மலிவாகவும் இருந்தன. காரணம் அவர் சாதாரண மக்களுக்காக எழுதினார்.

செய்திகளை தந்த வானொலியே செய்தியானதும் நம் கி.ஆ.பெ.வி யால்தான். 'வானொலி நிலையம்' என்று தன்னை அழைத்துக்கொண்ட வானொலி திடீரென 'ஆகாஷவாணி' என தன்னை சொல்லத்தொடங்கியது. தமிழ்நாட்டில் தமிழ் நிகழ்ச்சிகள் வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கையோடு, ஆகாஷவாணி வேண்டாம் வானொலிதான் வேண்டும் என 10-6-59 ல் தொடங்கி 21-6-59-ல் தார்கொண்டு அழித்தார். 2 வாரம் சிறையில் வைத்தனர். பிறகுதான் வானொலி வந்தது. இப்போதும் வானொலி, பண்பலையில் நீங்கள் விரும்பிக் கேட்கவேண்டிய பாடல் 'விசுவநாதம் வீரம் வேண்டும்' என்பதுதான்.

இசைத்தமிழுக்கு வந்த சோதனையை திருவிளையாடல் படத்தில் டி.ஆர். மகாலிங்கம் சந்தித்தார். ஒருகாலத்தில் தமிழிசையும் பல சோதனைகளை சந்திக்கவேண்டிவந்தது. தமிழில் இசையே இல்லை என்றனர். பிறகு ஏது தமிழில் இசைக் கருவி என்றனர். முத்தமிழில் ஒரு தமிழாம் இசைத்தமிழ் பட்டபாடு பெரும்பாடு. தமிழிசையைக் காப்பாற்ற வந்த அண்ணாமலைச் செட்டியாரோடு திருச்சி விசுவநாதம் இணைந்தார். 2-9-1941-ல் காவலர் எழுதிய “தமிழ்ப் பாட்டுக்கும் முட்டுக்கட்டையா” என்ற சிறு நூல் எல்லா முட்டுக்கட்டைகளையும் உடைத்தது. அண்ணாமலை செட்டியார் ஒரு லட்சம் பிரதிகள் அச்சிட்டு ஊரெங்கும் வழங்கினார். குழலையும் யாழையும் தொட்டு காவலர் கும்பகோணத்தில் செய்த உரை ஆலாபனை எழுத்தாளர் கல்கியை கவர்ந்து 10-5-53 கல்கியில் இப்படி எழுதினார், ”விசுவநாதம் ஒவ்வொரு எதிர்ப்பையும் எதிரே நிறுத்தி கன்னத்தில் அறை கொடுத்து அனுப்பினார்” என்று.

1937 முதலாகவே தமிழுக்கு தனி பல்கலைக்கழகம் வேண்டுமென்பது காவலரின் நீண்டநாள் கருத்து. ராஜராஜ சோழனுடைய சதயவிழாவுக்கு வந்திருந்த எம்.ஜி.ஆர் இருந்த மேடையிலும் இதே கருத்தை அழுத்தமாகச் சொல்ல, எம்.ஜி.ஆர் மேடையிலேயே 'தமிழ்ப் பல்கலைக்கழகம்' அறிவிப்பை வெளியிட்டார். இப்பல்கலைக்கழகத்தை வடிவமைத்ததில் இவரின் பங்கு முக்கியமானது. அதைப்போலவே வில், புலி, கயலை இலட்சினையாகவும் 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்பதை குறிக்கோள் வாக்கியமாகவும் ஆக்கியது முத்தமிழ்க் காவலர்தான்.

இன்று நாம் திருச்சியில் பயன்படுத்தும் கலை அரங்க திருமண மண்டபம் (அன்றைய தியேட்டர்) அமைவதற்கும் முத்தமிழ் காவலரே காரணம். திருச்சியில் அவர் முன்னின்று நடத்திய கால்நடைக் கண்காட்சியில் மிச்சமான 641 ரூபாயில் தொடங்கப்பட்டதுதான் 'திருச்சி மாவட்ட பொதுநல பணிக்குழு'. திரை நட்சத்திரமாக ஜொலித்த ஜெயலலிதாவின் நடன நிகழ்ச்சியில் கிடைத்த பணத்தையும் சேர்த்து கலையரங்கத்தை உருவாக்கியது அய்யாவின் தலைமையில் செயல்பட்ட நலக்குழுவே.

பிரச்னைகளை பேசுவதோடு நிறுத்தாமல் தீர்ப்பதற்கும் முயன்றவர் கி.ஆ.பெ.வி. புலவர்களுக்கும் மக்களுக்குமிருந்த தொடர்பு அறுந்து போனதன் விளைவே தமிழின் வீழ்ச்சியும் தமிழர்களின் தாழ்ச்சியும் என்று உணர்ந்த காவலர் அதை சரிசெய்ய 'தமிழகப் புலவர் குழு' என்ற அமைப்பை தனது 60-ம் வயதுக் கொண்டாட்டத்தில் 11-11-1958 அன்று திருச்சி தேவர் மன்றத்தில் உருவாக்கினார். தமிழ் கடைச் சங்கத்தில் இருந்த 49 புலவர்களை போல புலவர் குழு எண்ணிக்கையையும் 49 என்றாக்கினார். அதில் டாக்டர்கள் 7, பல்கலைஞர் 7, தமிழ் எம்.ஏ 7, வித்துவான் 7, மரபுவழிப் புலவர் 7, பண்டிதர் 7, கல்லூரி சார்பாளர் 7 இருப்பதையும் உறுதிசெய்தார். இதன் அமைப்பாளரான இவரின் பணி சொல்ல விரியும்.

அய்யாவின் 96 ஆவது பிறந்தநாள் (27-11-1994) மேடைதான் அவரது இறுதி மேடையாக அமைந்தது. பெரிய அடிகளார் கலந்துகொண்ட மேடையது. தமிழைப் பயிற்று மொழியாக ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று மேல் மூச்சு கீழ் மூச்சுவாங்கப் பேசினார். அன்றே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ”என்னால் முடிந்ததை செய்துவிட்டேன். இனி செய்ய ஏதுமில்லை” என்ற வார்த்தைகளோடு 19-12-1994 காலை 7.30 க்கு உயிர் பிரிந்தது.

அடுத்தநாள் உடல் திருச்சிக்கு வந்தது. அவர் உயிரோடு இருந்தபோதே தனக்கும் தன் மனைவிக்கும் அவரே கட்டிவைத்த சமாதியில் அடக்கம் நடந்தது. ஓயாமரிக்கு பின்னால் லயன் டேட்ஸ்க்கு எதிரேயுள்ள நந்தவனம்தான் அவர் சமாதியுள்ள இடம். சமாதியின் முன்பு நின்றுகொண்டு வேடிக்கையாகச் சொல்வாராம் “நான் இருக்கும்வரை இந்த சமாதிக்கு உயிர் வராது” என்று. அவரின் சமாதிதான் நம் தமிழ் மூச்சின் சுவாசக்குழி.

(இன்னும் ஊறும்)