Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 9: மக்கள் கலெக்டர் மலையப்பனின் மகத்தான வாழ்வும், சாதனைகளும்!

மக்கள் கலெக்டர் மலையப்பன்
News
மக்கள் கலெக்டர் மலையப்பன்

நோட்டின் பின் அட்டையில் மட்டுமல்ல வீட்டின் உள் அறையிலும் தீண்டாமையை நிராகரித்தார். அதனால்தான் ஆந்திராவின் அதிசய மனிதர் கோரா அய்யா மலையப்பனை 'COMMON MAN’S COLLECTOR' என்று வியந்தார்.

Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 9: மக்கள் கலெக்டர் மலையப்பனின் மகத்தான வாழ்வும், சாதனைகளும்!

நோட்டின் பின் அட்டையில் மட்டுமல்ல வீட்டின் உள் அறையிலும் தீண்டாமையை நிராகரித்தார். அதனால்தான் ஆந்திராவின் அதிசய மனிதர் கோரா அய்யா மலையப்பனை 'COMMON MAN’S COLLECTOR' என்று வியந்தார்.

மக்கள் கலெக்டர் மலையப்பன்
News
மக்கள் கலெக்டர் மலையப்பன்

வழக்கறிஞர் சதீஷ் பிரபு எழுதி விகடனில் வந்த கவிதை இப்படிக் கேட்டது...

கல்வியாண்டின்

இறுதியில் நடக்கும்

ஆண்டு விழாவின்

மாறுவேடப் போட்டிவரை

காத்திருக்க வேண்டியிருக்கிறது

ஒரு குறவனின் மகனோ

குறத்தியின் மகளோ

மழலையர் பள்ளியில்

நுழைவதற்கு.

இப்படி கசிந்துருகும் மனத்தையே கவிமனம் என்கிறோம். இந்த கவிமனமே ஒரு கலெக்டருக்கு இருந்தால் என்ன நடக்கும்? நாடோடி மக்களுக்கு நிரந்தர வீடு கிடைக்கும். அதனால் முகவரி வரும். அதன்பின் ஆண்டுவிழாவரை காத்திருக்காமல் அந்தப் பிள்ளைகள் பள்ளிக்கு போகமுடியும். இப்படி நிரந்தர குடியிருப்பை அந்த மக்களுக்கு செய்துகொடுத்தவர் கலெக்டர் ஆர்.எஸ்.மலையப்பன்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக, ஏன் இந்தியாவிலேயே முதல் முறையாக நாடோடி மக்களுக்கு நிரந்தரக் குடியிருப்பை, இவர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோதுதான் கட்டிக்கொடுத்தார். சுதந்திரம் பெற்ற இந்தியாவின் 8வது திருச்சி மாவட்ட கலெக்டராக பணியமர்ந்தபோது, திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் முக்கிய சாலையில் 20 கி.மீ தொலைவில் திருவறும்பூருக்கு அருகில் உள்ள ‘தேவராயன் ஏரி’ பகுதியில்தான் அவர்களுக்கான நிரந்தரக் குடியிருப்பை கலெக்டர் மலையப்பன் கட்டிக்கொடுத்தார். ஏரிப்பாசனம் உள்ள பகுதியிது.

கண்ணந்தங்குடி மேலையூர்
கண்ணந்தங்குடி மேலையூர்

1955ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக ஆர்.எஸ் மலையப்பன் பணியேற்று செயல்பட்ட காலம் திருச்சி மக்களால் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது.

எத்தனையோ கவிஞர்கள் திரைப்படத்திற்குச் சிறப்பாக பாட்டெழுதியுள்ள போதும், பட்டுக்கோட்டையாரைத்தான் ‘மக்கள் கவிஞர்’ என்று உலகம் அழைக்கிறது. அதைப்போலத்தான் எத்தனையோ மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சிறப்பாக பணி செய்திருந்த போதும், ஏனோ அய்யா மலையப்பனைத்தான் வரலாறு 'மக்கள் கலெக்டர்’ என்று பதிவுசெய்துள்ளது.

உரத்தநாடுக்கு அருகிலுள்ள கண்ணந்தங்குடி மேலையூரில், தந்தை ராமசாமிக்கும் தாய் கமலாயிக்கும் 1902 செப்டம்பர் 7-ம் தேதி மலையப்பன் பிறந்தார். எளிமையான ஆனால் வளமையான விவசாயக் குடும்பமது.

கண்ணந்தங்குடி மேலையூர்
கண்ணந்தங்குடி மேலையூர்

தொடக்கக் கல்வியை சொந்த ஊரின் பாதிரிப் பள்ளியிலும், பள்ளிப் படிப்பை உரத்தநாட்டில் உள்ள சரபோஜி மன்னனின் காதலி பெயரில் அமைந்த முத்தம்மாள் சத்திரம் பள்ளியிலும் அதைத் தொடர்ந்து திருச்சி தேசியப் பள்ளியிலும் முடித்தார். திருச்சியில் உள்ள எஸ்.பி.ஜி கல்லூரியில் (பிஷப் கல்லூரி) பி.ஏ. பட்டம் பெற்றார். அந்தச் சுற்று வட்டாரத்தில் முதல் பட்டதாரி என்ற பெருமையை 100 ஆண்டுகளுக்கு முன்பே மலையப்பன் பெற அவரது பெரியப்பா கிருஷ்ணசாமிதான் காரணம்.

சிறிதுகாலம் அவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியப்பணி செய்த மலையப்பன், தன் முயற்சியால் சென்னை தலைமைச் செயலகத்தில் 1927-ல் மேல்நிலை எழுத்தராக பணியமர்ந்தார். தன் கல்விக்கேற்ற வேலை தேடிய மலையப்பன், பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் தேர்வாகி 1935-ல் 'துணை கலெக்டர்' ஆனார். அடுத்து வந்த 20 ஆண்டுகளில் அவர் செய்த பணியும் அர்பணிப்பும் மக்கள்மீது கொண்ட மாளாக்காதலும்தான் அவரை மக்கள் கலெக்டராக உயர்த்தியது.

முத்தம்மாள் சத்திரம் பள்ளி
முத்தம்மாள் சத்திரம் பள்ளி

தமிழ்நாடு ஆந்திரா எல்லாம் ஒன்றாக இருந்த 'மெட்ராஸ் பிரசிடென்ஸி'தான் அப்போதைய மாநிலம். அதில் ஆந்திராவின் குண்டூருக்கு டெபுடி கலெக்டராக பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். பயிற்சி முடித்து, முதன்முதலாக 'கோட்ட வருவாய் அதிகாரி'யாக (RDO) மார்க்காபூரில் பொறுப்பேற்றார் மலையப்பன். அப்போது ஒரு பெரும் புயல் அப்பகுதியை தாக்கியது. அதில் ஓங்கோல் மக்கள் சிக்கித் தவித்தனர். மீட்புப்பணியை பார்வையிடவிடாமல் கிருஷ்ணாநதியில் பெருக்கெடுத்த வெள்ளம் தடுத்தது.

துணிந்த மலையப்பன் முதுகில் பனைமட்டைகளை கட்டிக்கொண்டு கிருஷ்ணாவின் வெள்ளத்தை நீந்திக் கடந்தார். ஒரு வகையில் இது அவரது பணிக்காலம் முழுமைக்குமான குறியீடாகவே அமைந்துவிட்டது. 34 வயதில் தொடங்கிய இதே துணிச்சல் அவர் கண் மூடும்வரை அவரது சொத்தாகவே இருந்தது.

விரைந்து முடிவெடுக்கும் அறிவும், ஊழியர்களைக் கையாளும் திறனும் அவரை மாவட்ட ஆட்சித்தலைவராக உயர்த்தியது. கிருஷ்ணா மாவட்ட கலெக்டராக 1947 நவம்பரில் பணியமர்ந்தார். ஒரு சவால் காத்திருந்தது. இந்தியாவோடு இணைவதில் சில சமஸ்தானங்கள் முரண்டுபிடித்தன. அதில் ஐதராபாத்தும் ஒன்று. நிஜாமும் ரசாக்கர் இயக்கமும் இணைப்பை எதிர்த்தனர். பட்டேல் தன் புகழ்பெற்ற POLICE ACTION-க்கு ஆணையிட்டார். ஐதராபாத்தை ஒட்டிய மாவட்டம் கிருஷ்ணா. அதன் ஆட்சித் தலைவர் மலையப்பன். கிருஷ்ணாவின் வழியாகவே உள்நுழையவேண்டும். சாலையில புதைக்கப்பட்ட கண்ணிவெடி அகற்றுவது தொடங்கி, உணவு, வாகனம், கருவிகள் என்று எல்லா பணிகளையும இளைஞர் மலையப்பன் ஒருங்கிணைத்த பாங்கும் பங்கும் நிஜாமை பணியவைத்தது. அரசும் கலெக்டரை மெச்சியது.

நேர்மையும் துணிச்சலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். இந்த உண்மையை கலெக்டர் மலையப்பனின் வாழ்க்கை நெடுகிலும் நாம் பார்க்கலாம். 1956-ல் நடந்த 'அரியலூர் ரயில் விபத்து’ நினைவில் வாழும் ஒரு கொடூரம். அப்போது திருச்சியின் கலெக்டர் மலையப்பன்தான். மீட்புப்பணிக்குப் போனவருக்கு ஓர் அதிர்ச்சி தகவல் சொல்லப்பட்டது. பணிக்கு வந்த ஒரு டாக்டர், இறந்த பயணியின் செயினை களவாடிவிட்டதாக.

“மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு, ஈவு இரக்கம் இல்லையா மேன் உனக்கு” என்ற மலையப்பன் அந்த டாக்டரை அறைந்துவிட்டார்.

இந்த அறச்சீற்றம் மற்றவர்மீது மட்டுமல்ல; அவரது சொந்த வாழ்விலும் காணக்கிடைக்கிறது. ஒரு மாம்பழக்கூடை பரிசாக வீட்டுக்கு வந்தது. இது என்ன புதுவகை லஞ்சம் என்று மலையப்பர் கோபப்பட்டார். பொதுவாக எட்டா பழத்தையே 'புளிப்பதாக' நரி சொன்ன கதை நமக்கு தெரியும். ஆனால் மலையப்பருக்கோ கைக்கு கிட்டே வந்த பழமும் கசந்தது. பழத்தைத் திரும்ப அனுப்பியது மட்டுமல்ல வாங்கி வைத்த பணியாளரை பணிமாற்றம் செய்துவிட்டார்.

அதுபோலவே, திருச்சியில் பணிசெய்தபோது நிர்ணயிக்கப்பட்ட விலை வரம்பைத் தாண்டி விற்பனை செய்த வணிகர்களையும் பதுக்கலில் ஈடுபட்ட வியாபாரிகளையும் கடுமையாக தண்டித்தார். ஏழை நடுத்தர மக்கள் மனசார அவரை வாழ்த்தினர்.
நெல்லூரில் ஒரு அமைச்சரின் மாமனாரே அரிசி கடத்தினார். அதிகாரிகள் அஞ்சினர். கலெக்டர் மலையப்பன் கடத்தல் லாரியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். ஆந்திரா அதிர்ந்தது. அரசியல் அழுத்தம் வராமலா? வந்தது. பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் மலை குனியுமா என்ன!

அளப்பரிய பணிகள் பல செய்த கலெக்டர் மலையப்பன் சேரிகளுக்கும் தொடர்ந்து சென்று வந்தார். அரசின் நலத்திட்ட உதவிகளை செய்துதரும் அரசு அதிகாரியாக அவர் இயங்கவில்லை. மாறாக, பட்டியலின தலீத் மக்கள்மீது அவருக்கு ஓர் உணர்ச்சி ததும்பும் அன்பும் பரிவும் இருந்தது. அதனால்தான் அவரை ராஜாஜி ஆதிதிராவிட நலத்துறை இயக்குநராக நியமித்தார். பட்டியலினத்தில் பிறக்காத ஒருவரை நியமிக்கலாமா என்ற விமர்சனம் வந்தது.

ராஜாஜி சொன்னார், “ஆதிதிராவிட மக்களுக்கு நான் செய்த பெரிய நன்மையே மலையப்பனை அப்பதவிக்கு நியமித்ததுதான்” என்று. 'சாதிகளைக் கடந்த மானிடன்' என்ற இந்த இடத்தை அடைவது எளிதல்ல. அடைந்தவர் அய்யா மலையப்பன்.

ஒரு நிகழ்ச்சியில் அவரை தாரை தப்பட்டை முழங்க வரவேற்றார்கள். அவரோ, ஒரு ஜாதியோடு இணைத்து தப்பாட்டத்தை பார்க்கும்வரை நீங்கள் அதை அடிக்காதீர்கள் என்று தலித் மக்களிடம் உரையாடினார். அவர்தான் பட்டியலின மக்கள் தங்கி படிப்பதற்கான விடுதிகளின் எண்ணிக்கையையும் இடங்களையும் அதிகப்படுத்தினார். உணவுக்கான மானியத்தை அதிகப்படுத்தி அவர்களை நன்கு சாப்பிடவைத்தார். கல்விக் கட்டணங்களிலிருந்து விலக்கு கொடுத்து படிக்க வழிவகுத்தார். அதுமட்டுமல்ல தன் வீட்டில் உணவு சமைக்க தலித் மக்களை நியமித்தார்.

நோட்டின் பின் அட்டையில் மட்டுமல்ல வீட்டின் உள் அறையிலும் தீண்டாமையை நிராகரித்தார். அதனால்தான் ஆந்திராவின் அதிசய மனிதர் கோரா அய்யா மலையப்பனை 'COMMON MAN’S COLLECTOR' என்று வியந்தார்.

மலைவாழ் மக்கள்மீதும் அவர் காட்டிய பரிவு மகத்தானது. அவர்களின் வாழ்வை ஆய்வு செய்து அவர்களின் துன்பங்கள் தீர வழி சொன்ன நீண்ட அறிக்கை ஒன்றை தயாரித்து அரசுக்கு கொடுத்தார். அதன் பெருமையாலேயே அது அவரின் பெயராலேயே 'மலையப்பன் அறிக்கை' என்று சொல்லப்படுகிறது.

இவர் திருச்சியில் பணிசெய்த காலம் திருச்சியின் பொற்காலம். LOCAL DEVELOPMENT WORKS, NATIONAL EXTENSION SERVICES CHEME, BLOCK DEVELOPMENT SCHEME என்று எல்லா திட்டங்களாலும் கிராம மக்கள் சாலை வசதி முதல் குடிநீர் வசதி வரை எல்லா முன்னேற்றங்களையும் கண்டனர். அதனால்தான் அடித்தட்டு மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளுக்கு 'மலையப்பன் நகர்', 'மலையப்பபுரம்' என்று பெயர்வைத்து அவரை பெருமைப்படுத்தினர். இன்றும் புள்ளம்பாடி குளமாணிக்கம் பகுதியில் பாய்ந்து அப்பகுதியை செழிப்பாக்கும் நந்தியாறு பாசன வாய்க்கால் 'மலையப்பன் வாய்க்கால்' என்று அவர் பெயரால் பாய்கிறது.

மலை மக்களான இருளர் வாழ்விலும் இவர் ஒளி ஏற்றினார். குன்னூரில பள்ளி அமைத்து இராமசாமி அடிகளை அப்பள்ளியை நடத்தவைத்தார்.

1955-ம் ஆண்டு திருச்சி மாவட்டஆட்சித்தலைவராக மலையப்பன் அமர்ந்தார். நாடோடிகளாக வெயிலில் காய்ந்து மழையில் நனைந்த நாடோடி இனத்தவர் மேல் அவர் பார்வை நிலைத்தது. அவர்களைப்பற்றி சினிமா வந்தது. ஏன் பாடல்கூட வந்தது. ஆனால் குந்த குடிசை மட்டும் வரவில்லை.

பள்ளியில் கலெக்டர் மலையப்பனுக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை
பள்ளியில் கலெக்டர் மலையப்பனுக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை

மலையப்பனின் இரக்க அருவிகள் நாடோடிகள் மேல் கொட்டிய அழகை எழுத்தாளர் அ.மறைமலையான் 'மக்கள் கலெக்டர் மலையப்பன்' நூலில் விவரிக்கிறார். அந்த நூலை தேடிப்பிடித்து எனக்கு அனுப்பியது நண்பர் ஒரத்தநாடு த.ஜெகநாதன்தான்.

தேவராயன் ஏரி உள்வாயில் 120 ஏக்கர் நிலத்தை கலெக்டர் மலையப்பன் நாடோடியின மக்களுக்காகத் தேர்வுசெய்தார். அது திருச்சி - தஞ்சை முக்கிய சாலையில் உள்ளது. சில ஏக்கரில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் கட்டிக்கொடுத்தார். ஒரே இடத்தில் தங்கி பிழைப்பதற்கு மிச்ச இடங்களில் விவசாயம் செய்ய வைத்தார். விவசாயம் செய்வதற்குத் தேவையான உழவு மாடு முதல் ஏர்கலப்பை வரை கிடைக்கச்செய்தார். நாடோடிகளுக்கு நிரந்தர முகவரியும் அதைப் படிப்பதற்கு கல்வியும் கொடுத்தார். அம்மக்களின் குழந்தைகள் தங்கிப்படிக்க காந்திஜி குடில் ஒன்றை திருவெறும்பூரிலும் பிறகு மன்னார்புரத்திலும் ஏற்படுத்தினார். பணி ஓய்வுக்குப்பின்னும் அவர்களுக்கு அவர் தொண்டு தொடரவே செய்த்து.

திருச்சி மாவட்டம் பச்சை மலை அழகான மலைப்பகுதி. அங்கு பள்ளி இல்லை. அந்த மலை மக்கள் படிப்பதற்கு உண்டு உரைவிடப்பள்ளி ஒன்றை அரசிடம் பெற்றுத்தந்தார். இவர்மீது பாசம்கொண்ட மலை மனிதர்கள் 'தோளி' என்னும் தொட்டில்கட்டி இவரை சுமந்து சென்று பள்ளியை இவரையே திறக்கவைத்தனர்.

ஓய்வுபெற்ற பிறகும் ஓயாத பணி அய்யா மலையப்பருக்கு. மனைவி அம்மாக்கண்ணு அம்மையார் காலமான பிறகு திருச்சியை துறந்து தஞ்சை ஏகினார். தஞ்சை கணபதி நகரில் உறவுகளின் துணையோடு தன் வீட்டிலேயே பட்டியலின பிள்ளைகளுக்கும் செல்லங்களுக்கும் தங்கும் விடுதி தந்து பராமரித்தார். அவர்கள் படிக்க இராமகிருஷ்ணா வித்யாலயா மற்றும் வி.பி செல்வராஜ் உயர்நிலைப்பள்ளியையும் உருவாக்கினார். நாடோடியின குழந்தைகள் ஓரிடத்தில் தங்கி பழகாதவர்கள். ஓடிப்போகும் அவர்களைத் தேடிப்பிடித்து உணவளித்து எண்ணெய் தேய்த்து பராமரித்த அவர்தான் அவர்களுக்கு வேண்டியபோது பெய்த மழை.

இவ்வளவு ஈரமான அய்யா மலையப்பனுக்குள் இருந்த இரும்பு மனிதனை எதற்கும் அஞ்சா நெருப்பு நெஞ்சை அவர் திறந்து காட்டியதும் திருச்சியில்தான். இது சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணி கொண்டது.

தமிழின் நவீன கவிஞரும் தீவிர சிந்தனையாளருமான பிரமிள், பெரியார் பற்றி சொன்ன ஒரு கருத்து முக்கியமானது. “சரித்திரத்தின் திருப்புமுனைகள்தோறும், பழைய சுவடுகள்யாவும் கேள்விக்குள்ளாகும். இவ்வித கேள்விகளை இந்தியாவில் எழுப்பியவருள், மிகவும் அதிசயமான ஒருவர் ஈ.வெ.ரா. ஏனெனில், அவரது ஒரே ஆதாரம் மனிதார்த்த மதிப்பீடுகள் சார்ந்த அபாரதீர்க்கமும் உச்சகட்டத் தயக்கமின்மையம் ஆகும்” (லயம் 1995) பிரமிளின் மதிப்பீட்டின்படி பெரியாரின் தனித்த இடம் அவரது 'தாட்சண்யமற்ற தயக்கமின்மை'தான்.

பெரியார்
பெரியார்
இப்படி தீர்க்கமும் தயக்கமின்மையும் கொண்ட பெரியார் ஒருவரைப்பற்றி சொல்கிற கருத்து முக்கியமானதாக மாறும். கலெக்டர் மலையப்பனைப்பற்றி பெரியார் நீதிமன்றத்தில் சொன்னது நமக்கு முக்கியமானது.

1955-ல் பண்ணையார்களுக்கும் குத்தகைதார்களான குடியானவர்களுக்கும் கூலிபிரச்சினை திருச்சி மாவட்டத்தின் லாலாபேட்டை நங்கவரம் பகுதிகளில் பற்றி எரிந்தது. சமரசம் செய்து, வேளாண்மையை தடையின்றி தொடர மாவட்ட கலெக்டர் மலையப்பன் முயன்றார். ஆனால் பண்ணையார்கள் அவரது சமரசத்தை ஏற்கவில்லை. வயலில் இறங்கி உழுத விவசாயிகளுக்கு கலெக்டர் உத்தரவுப்படி காவல்துறை பாதுகாப்பு கொடுத்தது. அதற்கான அரசாணையை கலெக்டர் வெளியிட்டார். அந்த அரசாணையை எதிர்த்து பண்ணையார்கள் நீதிமன்றம் சென்றனர். கலெக்டர் உத்தரவை செல்லாது என்றது நீதிமன்றம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், 'பண்ணையாள் குத்தகை பாதுகாப்பு சட்டம் 1955' என்ன சொன்னதோ அதைத்தான் மலையப்பன் உத்தரவும் சொன்னது—சற்று முன்னரே. தீர்ப்பளித்த நீதிபதிகள் வழக்கைத்தாண்டி கலெக்டர் மலையப்பன் இப்பதவிக்கே தகுதியற்றவர் என்று சொன்ன கருத்து பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. பெரியார் தயக்கமில்லாமல் நீதிபதிகளை விமர்சித்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெரியார்மேல் பாய்ந்தது. தமிழ்நாடு சந்தித்த முதல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அதுதான். அவ்வழக்கில் பெரியாரின் ஸ்டேட்மென்ட் முக்கியமான ஆவணம். அந்த ஸ்டேட்மென்டில் கலெக்டர் மலையப்பன் குறித்து பெரியார் சொன்னதுதான், நமக்கு அய்யா மலையப்பனை புரிந்துகொள்ள உதவும்.

பெரியார் சொன்னார்... “நீதிபதி அவர்களே, கலெக்டருக்கும் எனக்கும் அறிமுகம் இல்லை. சந்திப்பு ஏற்பட்டதும் இல்லை. ஆனால் வெளியே சொல்வார்கள் கலெக்டரைப்பற்றி, நேர்மையும் நாணயமும் உள்ளவறென்று....” அந்த அறிவிக்கைத் தொடர்கிறது.

தாட்சண்யம் பார்க்காத தயக்கமின்றி பேசும் பெரியாரே, தனக்கு பழக்கமே இல்லாத கலெக்டர் மலையப்பனை உயர்வாக மதிக்கிறார் என்றால் அவரின் உள்ளத்தூய்மை எப்படிப்பட்டது?! பண்ணையார்களுக்கும் வயலை உழும் குடியானவர்களுக்கும் பிரச்னை வந்தபோது கலெக்டர், சாதியின் பக்கம் நிற்காமல் நீதியின் பக்கம் நின்று உழவர்களைக் காத்தார். இதுதான் கலெக்டரை பதவி இறக்கம் செய்ய நினைத்ததன் நோக்கம். அவர் எப்போதும் அதிகாரமற்றவர் பக்கம் நின்றவர்.

அய்யா மலையப்பன் மனதை பறிகொடுத்த இடம் திருப்பராய்துறை இராமகிருஷ்ண குடில். அங்கு எல்லோருக்கும் அவர் “கலெக்டர் அய்யாதான்”... தேர்தலில் நிற்க காமராஜர் அழைத்தும் மறுத்துவிட்டார். அவர் அப்போதும் ஆதரவற்றவர்களோடே இருந்தார்.

அவரது நினைவைச் சுமந்து பல சாலைகளும் குடிநீர் தொட்டிகளும் நூலகங்களும் திருச்சியில் உள்ளன.

மக்களுக்காக செயல்படுவதை அவர் நிறுத்திக்கொண்ட நாள் - 1971 பிப்ரவரி 10

அவர் பிறந்த ஊரில் அவரின் சிலையை எளிய மக்களே நிறுவியுள்ளனர். அவர் தொடங்கிய பள்ளி இன்றும் இயங்கிவருகிறது.

“வாழ்ந்தவர்கோடி மறைந்தவர்கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்...” என்ற கண்ணதாசன் கேள்விக்கு அய்யா மலையப்பனின் வாழ்வுதான் பதில்.
(இன்னும் ஊறும்)