Published:Updated:

திருச்சி – ஊறும் வரலாறு 16: `தாகம் தீர்த்த தலைவர்' பி.ரத்தினவேல்!

பி.ரத்தினவேல்
News
பி.ரத்தினவேல்

நீண்ட காலத்திற்குப்பிறகு தினமலர் ஆர்.கோபால்ஜி, வி.சுவாமிநாதன், சு.முருகானந்தம் உள்ளிட்ட நண்பர்கள் முயற்சியால் பி.ஆர்.தேவரின் முழு உருவச்சிலையை அன்றைய முதல்வர் கருணாநிதி 28-1-2007-ல் திறந்துவைத்தார்.

Published:Updated:

திருச்சி – ஊறும் வரலாறு 16: `தாகம் தீர்த்த தலைவர்' பி.ரத்தினவேல்!

நீண்ட காலத்திற்குப்பிறகு தினமலர் ஆர்.கோபால்ஜி, வி.சுவாமிநாதன், சு.முருகானந்தம் உள்ளிட்ட நண்பர்கள் முயற்சியால் பி.ஆர்.தேவரின் முழு உருவச்சிலையை அன்றைய முதல்வர் கருணாநிதி 28-1-2007-ல் திறந்துவைத்தார்.

பி.ரத்தினவேல்
News
பி.ரத்தினவேல்
சொல்முறையில் அன்றைய மக்களால் “தேவர்” என்றும் “பி.ஆர்.தேவர்” என்றும் அழைக்கப்பட்டவர் பி.ரத்தினவேல். இன்று அவரின் வாழ்வை எழுதும்போது அந்தச் சொல்முறை, புரிதலை எளிமையாக்கும்.

திருச்சியின் வரலாற்றை யார் எழுதினாலும் பி.ஆர்.தேவரைச் சொல்லாமல் எழுதினால் அந்த வரலாறு முழுமையடையாது. தன் குடும்பத்தின் திரண்ட சொத்தினைத் திருச்சி மக்களுக்கும் விடுதலைப்போருக்கும் வாரியிறைத்தவர் பி.ரத்தினவேல்.

இவ்வளவு ஏன்? இந்தத் திருச்சி நகரம் நகராட்சியானது 1866-ல்தான். நூற்றாண்டு விழாவை 1966-ல் A.S.G.லூர்துசாமி பிள்ளை தலைவராக இருந்தபோது கொண்டாடியது. 1994-ல்தான் மாநகராட்சியாக உயர்ந்தது. இந்த1866 முதல் 2021 வரை திருச்சி நகராட்சியின் வரலாற்றில் 5 முறை தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் 6 மாதங்கள் நகராட்சி நிர்வாகத்தை நடத்திய ஒரே தலைவர் பி.ஆர்.தேவர்தான். அதனால்தான் திருச்சி உறையூர் வண்டிக்காரத் தெருவிலுள்ள 175 ஆண்டுகள் பழைமையான அந்த 'வெள்ளை மாளிகையை' இன்றும் அந்தக் காலத்து ஆட்கள் 'சேர்மன் வீடு' என்கிறார்கள்.

அந்த வீட்டில் வேலைப்பாடுகளால் ஜொலிக்கும் மேசை நாற்காலிகளில் உட்காரக்கூட நமக்குத் தயக்கமாக இருந்தது. அவ்வளவு அழகு. பி.ஆர்.தேவரின் ரசனையை 100 ஆண்டுகளாக நிற்காமல் ஓடும் விஸ்வரூப கடிகாரத்தின் பிரமாண்ட பெண்டுலம் ஆடிஆடிச் சொல்கிறது. வீட்டுச்சுவர் முழுதும் விடுதலை இயக்க வரலாற்றால் லேமினேட் செய்யப்பட்டுள்ளது. அவற்றை நமக்குச் சொல்லும்போது அவர் பேரன் T.ரத்தினவேலின் முகம் கனிந்து பிரகாசமாகிறது. இவர் சிறந்த கிரிக்கெட் மற்றும் ரக்பி (RUGBY) ஆட்டக்காரரான தியாகராஜனின் மகனாவார். தாத்தாவின் அளவற்ற கொடையால் குடும்பம் கொஞ்சம் இழந்திருந்தாலும் திருச்சி மக்கள் பலனடைந்ததில் அந்தக் குடும்பமே பெருமையோடு வாழ்கிறது.

பழனிவேல் தேவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறையில் பிறந்த வள்ளியம்மாளுக்கும் ரத்தினவேல் ஒரே மகனாக 13-6-1888-ல் பிறந்தார். ரத்தினவேல் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தார். தாய் வள்ளியம்மாள்தான் இவரை பி.ஆர்.தேவராக உருவாக்கினார். குடும்ப நிர்வாகம், கால் நீட்டி உட்கார்ந்திருந்த இவர் கையில்தானாம். கணக்குவழக்கு பார்ப்பதில் இவர் படிக்காத கம்ப்யூட்டராம். எப்போதும் கடுமைகாட்டும் அவர் முகம் மகனைக் கண்டால் பூக்குமாம். இவற்றை பி.ஆர்.தேவரின் உறவினர் ஆர்.பெருமாள் வழியாய் அறிகிறோம்.

பி.ஆர்.தேவர் திருச்சியில் உள்ள ஜோசப், எஸ்.பி.ஜி பள்ளிகளில் படித்து சென்னை கிறித்துவக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். காந்தியடிகளின் வாழ்க்கை நெறியான 'உண்மை' இவரின் உடன் பிறந்தது என்பதை அவரது கல்லூரிக்கால நிகழ்வு ஒன்று சொல்கிறது.

கிறித்துவக் கல்லூரிக்கும் மாநிலக் கல்லூரிக்கும் சேப்பாக்க மைதானத்தில் கிரிக்கெட் போட்டி. முதல்வர் பொது விடுமுறை தர மறுத்துவிட்டார். பலர் உடல் நலமில்லை எனப் பொய்சொல்லிக் கிளம்பிவிட்டனர். பி.ஆர்.தேவரோ, “மனம் வகுப்பில் இல்லை, மேட்ச் பார்க்கப் போகணும், எனவே அனுமதி தாருங்கள்” என உண்மையைச் சொல்லி விடுப்பு கேட்டார். ஆசிரியர் ஆப்சென்ட் போட்டு அபராதம் விதித்தார். அவர் கட்ட மறுத்தார். பெனால்டி போட்டு அபராதம் அதிகமாகிக்கொண்டே போனது. முதல்வரைச் சந்தித்தவர், "பொய் சொன்னவர்களுக்கு விடுப்பு தந்துவிட்டு உண்மையைச் சொன்ன எனக்கு அபராதம் நியாயமா? நான் ஊருக்குப் போகிறேன்" என்று தழுதழுத்தார். பி.ஆர்.தேவரின் உள்ளத் தூய்மையைப் பாராட்டிய முதல்வர் அபராதத்தை ரத்துசெய்தார். இந்த உண்மையின் மீதான பற்றே பி.ஆர்.தேவரை காந்தியிடம் கொண்டு சேர்த்தது.

நீதிக்கட்சியில் செல்வாக்கோடு இருந்த பி.ஆர்.தேவர், வெள்ளையரின் சுரண்டலை ஒழிக்க காந்தியே மருந்து என்று உணர்ந்த அடுத்தநொடி காந்தியின் வருகைக்காகக் காத்திருக்காமல், அடிகளின் சபர்மதி ஆசிரமத்திற்கே சென்றார். காந்தியின் சொல்கேட்டு, கோட் சூட் போட்டிருந்த ஒல்லியும் உயரமுமான அந்த இளைஞர் அவற்றை நீக்கி, கதர் அணிந்து 1924-ல் காங்கிரஸில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து முதன்முதலாக 3-11-24-ல் திருச்சி நகரசபைத் தலைவரானார்.
பாப்பம்மாக்கு மகாத்மா காந்தி எழுதிய கடிதம்
பாப்பம்மாக்கு மகாத்மா காந்தி எழுதிய கடிதம்

பி.ஆர்.தேவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. தான் உயிராய் நேசித்த மகள் பாப்பம்மாவின் மரணம், அவரை வீட்டுப் பூஜை அறையைப் பூட்டவைத்ததாக இவரைப்பற்றி எழுதியுள்ள ஆர்.பெருமாள் குறிப்பிடுகிறார். கடவுளின் இடத்தை அவர் தந்தது அண்ணல் காந்திக்குத்தான். அதனால் அவர் எந்த மதத்தையும் சாராதவராகவே நிர்வாகத்தை நடத்தினார். தீபாவளியின்போதுகூட கொண்டாட்டங்களைத் தவிர்த்து தஞ்சையிலிருந்த ஆபிரஹாம் பண்டிதர் தோட்ட வீட்டுக்குக் குடும்பத்தோடு போய்விடுவாராம்.

பி.ஆர்.தேவர் திருச்சி மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கை அளக்க, அவர் ஏற்ற பதவிகளே சான்றாகும். 1933 முதல் 1945 வரை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். வாழ்நாள் முழுதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். ஜில்லா போர்டு தலைவர், டவுன் ஹால் கமிட்டி தலைவர், அர்பன் கூட்டுறவு சங்கத் தலைவர், தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியேஷன் துணைத்தலைவர், திருச்சி யுனைடெட் கிரிக்கெட் கிளப், யூனியன் கிளப் தலைவர், அண்ணாமலை-சென்னைப் பல்கலைக்கழகங்களின் செனட் உறுப்பினர். இப்படி அவர் வகித்த 15 பதவிகளைப் பத்திரிகையாளர் ஏ.ஆர்.சீனிவாசன் பட்டியலிடுகிறார்.

திருச்சியின் இயல்-இசை-நாடக உலகோடு பின்னிப்பிணைந்தது 'தேவர் ஹால்'. தேவர் ஹாலை மிதிக்காத கலை இலக்கிய ஆளுமைகளே தமிழ்நாட்டில் இல்லை. திருச்சி நகரத்தின் கலை தாகத்தை உணர்ந்தவர், நகராட்சியின் இடத்தில் பல தடைகளை மீறி கேலரி உள்ள பெரிய ஹாலைக் கட்டினார். அவர் பெயரை அதற்குச் சூட்டியபோது, மறுத்து 'முனிசிபல் பப்ளிக் ஹால்' என்ற பெயரால் 7-12-25-ல் முதல்வர் பனகல் அரசரைத் திறக்கவைத்தார். அவர் மறைந்தபிறகே அவர் நினைவாக அது 'தேவர் ஹால்' ஆனது. அந்தப் பழைய தேவர் ஹாலில்தான் நாங்கள் கோமல் சாமிநாதனின் நாடகமெல்லாம் போட்டோம். நீண்ட காலத்திற்குப்பிறகு தினமலர் ஆர்.கோபால்ஜி, வி.சுவாமிநாதன், சு.முருகானந்தம் உள்ளிட்ட நண்பர்கள் முயற்சியால் பி.ரத்தினவேலின் முழு உருவச்சிலையை முதல்வர் கருணாநிதி 28-1-2007-ல் அந்த அரங்கின் முகப்பில் திறந்துவைத்தார்.

சிலை திறப்பு
சிலை திறப்பு
ஒரு ஊர் வாழத்தகுதியானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் அந்த ஊரின் 'குடிநீர்' வசதி முக்கியமானது. திருச்சி மக்கள் குடிக்கும் தண்ணீரில் காவிரியின் கருணை மட்டுமல்ல பி.ஆர்.தேவரின் பெரியமனசும் தலைமைப்பண்பும் கலந்தே இன்றும் நம் வீடுகளுக்கு வருகிறது. உண்மையாக “நம் தாகம் தீர்த்த தலைவர்” அவர்தான். திருச்சி வரலாறு அவரை WATER MAN என்று குறிப்பிட்டால்கூடப் பிழையில்லை.

1932-ம் ஆண்டு பெய்த பெருமழை வெள்ளத்தால் கம்பரசம்பேட்டையில் உள்ள திருச்சி நகரத்துக்குத் தண்ணீர்தரும் பம்பிங் ஸ்டேஷன் பழுதடைந்தது. தண்ணீர் தரும் எல்லாக் கிணறுகளையும் வெள்ளம் குடித்துவிட்டது. மக்கள் திண்டாடினார்கள். பி.ஆர்.தேவர்தான் சேர்மன். அதிகாரிகளிடம் ஆலோசித்தார். அதிகாரிகளின் சிகப்புநாடா யோசனையைக் கேட்டால் குழாய்களில் அடுத்த ஆண்டுதான் தண்ணீர் வரும். பி.ஆர்.தேவர் தலைவரல்லவா? நாற்பதாயிரம் செலவு செய்தால் உடனடியாக வேலையைத் தொடங்கலாம் என்பது புரிந்தது. சொந்தப்பணம் அப்போது அவ்வளவு இல்லை. தன் நண்பர் ராமசாமி அய்யரிடம் நாற்பதாயிரம் கடன்வாங்கி வேலையை முடித்தார். மக்களுக்குத் தண்ணீர் வந்தது. பி.ஆர்.தேவருக்கோ வழக்கு வந்தது. அனுமதியில்லாமல் அரசுப்பணியைச் செய்ததால் நகரசபையை நீதிக்கட்சி ஆட்சி கலைத்தது. பி.ஆர்.தேவருக்கு நாற்பதாயிரம் அபராதம் விதித்தது. அவர் பிரிவி கவுன்சிலுக்குப் போனார். அபராதத்தை மட்டும் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் மக்களுக்குத் தண்ணீர்தர தான் வாங்கிய 40,000 ரூபாய் கடனை சொந்த சவுக்குத்தோப்பை விற்றே அடைத்தார். இந்தச் செய்தியை அறிந்தபோது அவர் சொந்தப்பணத்தில் வெட்டிய 'கிணறுகளில்' மட்டுமல்ல, நம் கண்களிலும் நீர் ஊறவே செய்கிறது. இந்தத் தன்னலமற்ற மக்கள்பணி அவரை இந்தியா முழுக்கப் பேசவைத்தது.

நேருவுடன் பி.ஆர்.தேவர்
நேருவுடன் பி.ஆர்.தேவர்

குறிப்பாக, ஜவஹர்லால் நேரு பி.ஆர்.தேவரைச் சந்திக்க இரண்டுமுறை அவர் வீட்டுக்கே வந்தார். 1936-ல் 'தேவர் விலாஸ்' வீட்டில்தான் நேரு தலைவாழை விருந்தைத் தரையில் அமர்ந்து சாப்பிட்டார். நேரு தரையில் உட்கார்ந்தது பி.ஆர்.தேவருக்குத் தந்த மரியாதையாகப் பார்க்கப்பட்டது. உலகின் தலைசிறந்த புத்தகங்களில் இரண்டை எழுதிய நேருவே பாராட்டும் அளவுக்கு அவரிடம் மிகப்பெரிய நூலகம் இருந்தது. அவற்றில் சில நூல்களை மட்டுமே நம்மால் பார்க்க முடிந்தது. ஆங்கில இலக்கியத்தின் மீது அவருக்கு ஈடுபாடு அதிகம். அதைவிட விளையாட்டென்றால் அவருக்கு உயிர். விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒழுங்கை விளையாட்டுதான் கற்றுத்தரும் என்பது அவர் கட்சி. ஏராளமான விளையாட்டுப் புத்தகங்களைத் தன் சேகரிப்பில் வைத்திருந்தார். குறிப்பாக கிரிக்கெட் புத்தகங்கள் அவரிடம் அதிகம். புதிதாக வரும் புத்தகங்களை உடனே தனக்கு அனுப்புவதற்கு ஹிக்கின் பாதம்ஸோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டவர் பி.ஆர்.தேவர். தான் படித்து முடித்த புத்தகங்களில் தேதியைக் குறித்துவைக்கும் பழக்கமும் அவரிடமிருந்தது.

இப்போது டவுன்ஹால் என்று அழைக்கப்படும் ராணி மங்கம்மாள் தர்பார் ஹாலில்தான் நேருவுக்கு வரவேற்பு விழா நடந்தது. நேரு பி.ஆர்.தேவரைப் பாராட்டிப்பேசியதைத் தீரர் சத்தியமூர்த்தி மொழிபெயர்த்தார்.

1937-ல் பி.ஆர்.தேவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ராஜாஜி அமைச்சரவை அமைத்தார். ராஜாஜி அமைச்சர் பதவிக்கு அழைத்தும், சுதந்திரமாய் வேலைசெய்ய முடியாது என்பதால் மறுத்துவிட்டார். அதன்பிறகே TSS ராஐன் அமைச்சரானார். நகரசபைத் தலைவருக்குத் தரப்பட்டுவந்த வாகன அலவன்ஸ் 125 ரூபாயைக்கூட வேண்டாம் என்றவர் அவர்.

முதுகுளத்தூர் கலவரம் தமிழ்நாட்டு அரசியலில் மாறாத வடு. நட்போடு இருந்த காமராஜரையும் முத்துராமலிங்கத் தேவரையும் அந்தக் கலவரம் அரசியலில் பிரித்துவிட்டது. பி.ஆர்.தேவர் காமராஜரின் தலைமையை ஏற்றவர். இந்தச் சூழ்நிலையில் முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்தார். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது தங்கியது பி.ஆர்.தேவரின் வீட்டில்தான். அதுவும் ஓய்வுக்காகவும் சிகிச்சைக்காகவும் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். பி.ஆர்.தேவர் மறைவுக்குப் பிறகும் நட்பைப் பேணும் குடும்பமாக அவரது குடும்பம் இருந்ததை பார்க்கமுடிகிறது.

காந்தியடிகளுக்கு திருச்சி நகரமன்றத்தின் சார்பில் புத்தாரில் பிரமாண்ட வரவேற்பை பி.ஆர்.தேவர் கொடுத்தார். அந்தக் காலத்தில் இது ஒரு புரட்சியாகப் பார்க்கப்பட்டது. தான் அணிந்திருந்த விலை உயர்ந்த மூன்று கற்கள் பதித்த மோதிரத்தை காந்தி திரட்டிய ஹரிஜன சேவை நிதிக்கு பி.ஆர்.தேவர் வழங்கினார். அவரின் உடல்நலமில்லாத ஒரே மகள் பாப்பம்மாவுக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு அவர்மீது காந்தி மதிப்பும் அன்பும் கொண்டிருந்தார்.

காந்தியடிகளின் கட்டளையை ஏற்று 1940-ல் 'தனிநபர் சத்தியாகிரகத்தில்' பங்கேற்ற பி.ஆர்.தேவர் ஒரு ஆண்டு திருச்சி சிறையில் இருந்தார். அப்போது அவர் எம்.எல்.ஏ ஆகவும் ஜில்லா போர்டு தலைவராகவும் இருந்தார் என்பது முக்கியமானது. சிறைக்குக் கிளம்பும் போதும் தன் தாய் வள்ளியம்மாளின் காலில் விழுந்து வணங்கி விடைபெற்றார். அந்த வீரத் தாயும் தன் மகனைச் சிறைக்கு மகிழ்வோடே அனுப்பிவைத்தார்.

ஒரு தலைவர் மக்களோடு நெருக்கமாக இருந்து நம்பிக்கையைப் பெற்றிருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு 1942-ல் நடந்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் சான்றாக அமைந்தது. காந்தியடிகள் “செய் அல்லது செத்துமடி” என்று ஆணையிட்டார். நாடே கொந்தளித்தது. போலீஸ் ஸ்டேஷன் எரிந்தது. பார்த்த இடமெல்லாம் துப்பாக்கிச்சூடு. துப்பாக்கிச் சூடு நடக்காத ஒரே நகரம் திருச்சிதான். காரணம் பி.ஆர்.தேவரும் அவரின் நண்பராக இருந்த கலெக்டர் சங்கரகிருஷ்ண செட்டூரும்தான். பி.ஆர்.தேவர் கைதாவதற்குமுன் கலெக்டருக்குச் சொன்ன யோசனையின்படி மாணவர் தலைவர் சீத்தாராமனோடு ஆலோசித்து ஜோசப் கல்லூரியின் காம்பவுண்ட் சுவர் ஏறி இருவரும் பேசினார்கள். கலவரம் தவிர்க்கப்பட்டது.

ராஜாஜியைக் கத்தியால் ஒருவன் தாக்கியபோது அந்தத் தாக்குதலைத்தான் ஏற்று ராஜாஜியை பி.ஆர்.தேவர் காப்பாற்றினார். இப்படி வீரமும் விவேகமும் நிறைந்த வாழ்க்கை அவருடையது. அரசியலைப்போலவே விளையாட்டையும் மற்றுமொரு கண்போல் கருதினார் பி.ஆர்.தேவர்.
கிரிக்கெட் டீமில்
கிரிக்கெட் டீமில்
டெஸ்ட் மாட்ச், ஒன் டே மாட்ச், 20-20, IPL என்று பல அவதாரங்களால் கொண்டாடப்படும் கிரிக்கெட்டை தமிழ்நாட்டில் குறிப்பாகத் திருச்சியில் பரவலாக்கியவர் பி.ஆர்.தேவர்தான் என்பது இன்றைய தலைமுறைக்கு ஆச்சர்யமாயிருக்கும். அரசியல் தலைவர்களில் விளையாட்டை ரசிப்பவர்கள் உண்டு. ஆனால் அவர் அரசியலில் தலைவராக இருந்தபோதே டீம் கேப்டனாகவும் ஆடினார். இப்படி அரசியல்-கிரிக்கெட் இரண்டிலும் ஒரே சமயத்தில் அடித்து ஆடியது பி.ஆர்.தேவர்மட்டும்தான்.

திருச்சியில் முதல்முறையாக யுனைடெட் கிரிக்கெட் கிளப் என்ற விளையாட்டுக்கான அமைப்பை 1914-ம் ஆண்டே பி.ஆர்.தேவர் தொடங்கினார். இப்போது பெரிய ஆஸ்பத்திரி என்று அழைக்கப்படும் மாவட்ட மருத்துவமனை இருக்கும் இடம் பெரிய விளையாட்டுத்திடலாக இருந்தது. அந்த இடத்துக்கு எதிரேதான் கிரிக்கெட்டிற்கான பெவிலியனை பி.ஆர்.தேவர் கட்டினார். இது இப்போதுள்ள சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டிற்குப் பின்புறம் உள்ளது. அதுதான் மாநகராட்சி ஊழியர்களின் பொழுதுபோக்கு மன்றமாக இன்று இயங்குகிறது.

அரசியலில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்த பி.ஆர்.தேவர் இரண்டிலும் ஜெயித்தகதை சுவையானது. 5 ஆங்கிலேயர்கள் இடம்பெற்ற தஞ்சாவூர் கிரிக்கெட் அணிக்கும் திருச்சி யுனைடெட் கிளப் அணிக்கும் (TUCC) 1934-ல் ஒரு மேட்ச். TUCC-க்கு இவர்தான் கேப்டன். உணவு நேரத்தில் இந்தியர்களோடு சாப்பிடுவதைத் தகுதிக் குறைவாக நினைத்த ஆங்கிலேயர்கள் தனிமேசையில் அமர்ந்து சாப்பிட்டனர். அடிமைகளோடு எஜமானர்கள் சமமாக உட்காருவார்களா? பி.ஆர்.தேவர் விடவில்லை. விளையாட்டின் விதிப்படி எல்லோரும் சமம். ஒரே மேசையில்தான் உணவு சாப்பிடவேண்டுமென்றார். பி.ஆர்.தேவரே வென்றார். இப்படி அநீதி கண்டால் பொங்கி எழுவதுதான் அவர் குணம்.

சுயமரியாதைக்குப் பிரச்னை என்றால் பி.ஆர்.தேவர் பொங்கி எழுவார் என்பதற்கு புதுக்கோட்டையில் நடந்த மேட்ச்சே சாட்சி. புதுக்கோட்டை மன்னரின் ஆசிரியர் ஹார்வி. அதிகாரத்தின் உச்சியில் இருந்தார். மேட்ச்சில் அம்பயர் LBW கொடுத்தார். ஆனால் ஹார்விக்கு தங்கள் ஆட்டக்காரரை அவுட்டாக்கியது பிடிக்கவில்லை. அம்பயரை காச்மூச்சென்று திட்டினார். வெள்ளையுடை ஒல்லி உருவம் எழுந்தது. ஹார்வியின் முகத்துக்கு நேராய் கைநீட்டி “கிரிக்கெட்டில் அம்பயர் சொல்வதுதான் முடிவு. நீ கடவுளாக இருந்தாலும் கவலையில்லை” என்றாரே பார்க்கலாம். ஹார்வி இடத்தைக் காலி செய்தார். அரசியலோ விளையாட்டோ எதுவானாலும் அதிகாரத்தை பி.ஆர்.தேவர் தட்டிக்கேட்காமல் இருந்ததில்லை.

இந்திய ஐரோப்பிய ஒருநாள் மேட்ச்
இந்திய ஐரோப்பிய ஒருநாள் மேட்ச்

அந்தக் காலத்தில் 'இந்திய ஐரோப்பிய ஒருநாள் மேட்ச்' பி.ஆர்.தேவரால் அமர்க்களமாக நடத்தப்படும். கவர்னர் லார்டு எஸ்கிம் பிரபுதான் தலைமை. காலையில் நகரசபையில் கவர்னருக்கு வரவேற்பு நிகழ்வு. நகரசபைத் தலைவரான பி.ஆர்.தேவர் கதர் வேட்டி, கல்லி ஜிப்பா, கதர் அங்கவஸ்திரம் உடையோடு மாலை சூட்டி கவர்னரை வரவேற்றார். கவர்னர் பார்வையில் சின்ன இளக்காரம். மாலை மைதானத்தில் கவர்னருக்குத் தேநீர் விருந்து. அப்போது பி.ஆர்.தேவர் டிப்டாப்பாக ஐரோப்பிய உடையில் போனார். கவர்னர் ஆச்சர்யத்தோடு ஏனிந்த ஆடை மாற்றம் என்றார். பி.ஆர்.தேவர் மேதமையோடு சொன்னார், “காலையில் நாங்கள் உங்களை வரவேற்றோம். அதனால் எங்கள் மரபான உடை. மாலையில் நடப்பதோ உங்கள் விளையாட்டு, அதனால் உங்கள் உடை” கவர்னரின் கைகுலுக்கல் நிற்க நீண்டநேரமானது.

ரக்பி டீமில்
ரக்பி டீமில்

கிரிக்கெட் மைதானத்தில் மாவட்ட மருத்துவமனை அமைக்க விரும்பிய TSS ராஜன், முதல்வர் ராஜாஜியை அழைத்துக்கொண்டு தேவர் விலாஸ் போனார். பி.ஆர்.தேவரும் பெரியமனதோடு சம்மதித்தார். பதிலாக இப்போதுள்ள மாநகராட்சி இடம் கிரிக்கெட் விளையாடத் தரப்பட்டு, பல போட்டிகளும் நடந்து வந்தன. லூர்துசாமி பிள்ளை தலைவராக வந்தபோது நகராட்சிக் கட்டடம் கட்ட இப்போதுள்ள சப் ஜெயில் மைதானம் தேர்வானது. அந்த இடம் போதாது என்று நினைத்த லூர்துசாமி பிள்ளை கிரிக்கெட் கிளப்போடு பேசி (பி.ஆர்.தேவர் காலமாகிவிட்டார்) காம்பியன் பள்ளிக்கு எதிரேயிருந்த கிரிக்கெட் மைதானத்தில் நகராட்சி அலுவலகத்தை மிகப்பெரியதாக உருவாக்கினார். இதைத் தொடர்ந்தே கிரிக்கெட் பெவிலியன் அண்ணா ஸ்டேடியத்திற்கு இடம்பெயர்ந்தது. அதைக் கட்ட வடேக்கர் (அன்றைய தோனி) தலைமையில் விளையாடி 4 லட்சம் நிதி திரட்டி பெவிலியன் கட்டப்பட்டது. அதை அன்றைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் திறந்துவைத்தார். திருச்சி கிரிக்கெட்டின் தந்தையான பி.ஆர்.தேவரின் நினைவோடு அது 'பி.ரத்தினவேல் தேவர் கிரிக்கெட் பெவிலியன்' என்று பெயரோடு ஆட்டம் தொடர்கிறது.

சிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு ஒரு திட்டத்தை உருவாக்கினார் பி.ஆர்.தேவர். எல்லா ஆண்டும் சென்னைக்கும் பிற மாவட்டங்களுக்கும் இடையில் ஒரு போட்டி நடத்தும் யோசனையைத் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனுக்குத் தந்தது இவர்தான். 1937 முதல் இது நடந்துவருகிறது.

பி.ஆர்.தேவரின் லட்சியம் நிறைவடைந்தது. 1947 ஆகஸ்டு 15 இந்தியா விடுதலை அடைந்தது. ஆனால் பி.ஆர்.தேவர் குடற்புண் வலியால் துடித்துக்கொண்டிருந்தார். இலங்கையில் உள்ள 'தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் அத்தலடிக் கிளப்' அழைப்பை ஏற்று திருச்சி வீரர்களை அழைத்துக்கொண்டு 1948-ல் பி.ஆர்.தேவர் இலங்கை போனார். விளையாட்டின் இடையே சிலோன் கிரிக்கெட் கிளப்பிற்கு நிதி திரட்டித் தருவதாகவும் வாக்களித்தார். ஆனால் விளையாட்டின் நடுவே திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார். பி.டி.ராஜன், ஆர்.கே.சண்முகம் செட்டியார் முயற்சியால் விமானம் மூலம் அழைத்துவரப்பட்டு சென்னைப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்தச் சுயநலமற்ற வீரர் 1948-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் நாள் தன் வாழ்வை நிறுத்திக்கொண்டார். ஆனாலும் அவர் கொடை வாழ்வு தொடரவே செய்தது. அவர் கொடுத்த உறுதியை அவர் நண்பர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நிறைவு செய்தார். சிலோன் கிரிக்கெட் கிளப்பிற்கு 28,805 ரூபாய் திரட்டித் தந்து பி.ஆர்.தேவரின் வார்த்தையைக் காப்பற்றியதோடு அவரின் படத்தையும் இலங்கையில் திறந்துவைத்தார்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் படத்தைத் திறந்து வைத்தபோது...
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் படத்தைத் திறந்து வைத்தபோது...

பி.ஆர்.தேவரின் உடல் சென்னையிலிருந்து திருச்சி தேவர் விலாஸுக்குக் கொண்டுவரப்பட்டது. திருச்சி மக்கள் தேம்பி அழுதனர். அவர் தானமாகத் தந்த இடத்தில் அமைந்துள்ள உறையூர் இடுகாட்டில் உடல் எரியூட்டப்பட்டது.

வரலாற்றின் தேவைதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது என்பது உண்மை. அப்படி உருவாகிற மனிதன்தான் வரலாற்றையும் உருவாக்குகிறான் என்பது அதைவிட உண்மை. அதிலும் சில மனிதர்கள் மட்டுமே எதிர்பார்ப்பையும் கடந்து சாதிக்கிறார்கள். அந்தச் சாதனைகளின் வழியாகவே அவர்கள் நம்மோடு இன்றும் வாழ்கிறார்கள். அப்படி திருச்சி மக்களோடு இன்றும் தன் தியாகத்தால் வாழ்பவர் பி.ரத்தினவேல்!

(இன்னும் ஊறும்)