Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு 28: திருச்சியின் முதலாவது அமைச்சர் - டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்!

டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்
News
டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்

காந்தியடிகளின் தண்டி யாத்திரை ராஜனின் தேசிய உணர்ச்சியைத் தட்டி எழுப்பியது. ராஜாஜி திருச்சி வந்துசேர்ந்தார். சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் யோசனைப்படி வேதாரண்யத்தில் உப்பு எடுக்க முடிவு செய்தார்கள்.

Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு 28: திருச்சியின் முதலாவது அமைச்சர் - டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்!

காந்தியடிகளின் தண்டி யாத்திரை ராஜனின் தேசிய உணர்ச்சியைத் தட்டி எழுப்பியது. ராஜாஜி திருச்சி வந்துசேர்ந்தார். சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் யோசனைப்படி வேதாரண்யத்தில் உப்பு எடுக்க முடிவு செய்தார்கள்.

டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்
News
டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்

“ராஜன் உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. குழந்தைகளும் இருக்கிறார்கள். எனக்கும் மணமுடிந்து அன்பான கணவர் உள்ளார். இந்த இரண்டும் நடந்திராவிட்டால் நான் உங்கள் பின்னாலேயே வந்துவிடுவேன்.” இப்படிச் சொன்னது ஒரு ஆங்கிலேயப் பெண். லண்டனில் உள்ள ’மிடில்ஸெக்ஸ்’ கல்லூரியில் மருத்துவம் மேல்படிப்பு முடித்து, அதில் கல்லூரியில் முதல் மாணவனாகத் தேறிய டி.எஸ்.எஸ் ராஜன் இந்தியா புறப்படுவதற்காக ஸௌதாம்டன் துறைமுகத்தில் கப்பல் ஏறும்போது கண்களில் நீர் வடிய ராஜனின் காதில், காதலில் சொன்ன வார்த்தைகள்தான் மேலே சொன்னவை. கறுப்பு நிறமும், அம்மைத் தழும்புகள் நிறைந்த அந்த முகத்தையும் தாண்டி ராஜனின் மருத்துவ அறிவுதான் அவளை ஈர்த்தது. அந்தக் கல்லூரியில் முதன்மையான இரண்டு பரிசுகளையும் பெற்ற முதல் இந்தியர், டாக்டர் ராஜன்தான்.

டி.எஸ்.எஸ் ராஜன் என்ற பெயர் சுதந்திரப்போர் வரலாற்றில் முக்கியமான பெயர். ஒரு முறை காந்தியைப் பார்த்ததையே தன் வாழ்நாளெல்லாம் எங்கள் தாத்தா சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படிப்பட்ட காந்தி, திருச்சிக்கு வந்தபோதெல்லாம் தங்கியது ராஜனின் பங்களாவில்தான். (அந்த பங்களா இப்போதும் ஆம்னி பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் தபால் துறையிடம் உள்ளது) 1927-ல் டாக்டர் ராஜனின் ’எக்ஸ்-ரே’ நிலையத்தை காந்தியடிகள்தான் திறந்துவைத்தார். 1937-ம் ஆண்டு ராஜாஜி அமைத்த அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
நினைவு அலைகள்
நினைவு அலைகள்

டாக்டர் ராஜன் எழுதிய ’நினைவு அலைகள்’ நூலை, தமிழில் எழுதப்பட்ட நான்கு சிறந்த தன் வரலாற்று நூல்களில் ஒன்று என்று ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். இந்தப் புத்தகத்திற்கு நாடகம் போன்ற முன்னுரையைக் கல்கி எழுதியுள்ளார். டாக்டர் ராஜனின் உரைநடை தடையற்றது. ஒரு சர்ஜனின் கை லாகவம் எழுத்திலும் உள்ளது. கவலையேபடாமல் உண்மையைப் பேசுகிறார். அதுதான் 1947-ல் வந்துள்ள இந்தப் புத்தகத்தை இன்றும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 1880-1900 களில் திருச்சி, குறிப்பாக ஶ்ரீரங்கம் எப்படி இருந்தது என்பதை ராஜன் சொல்லச் சொல்ல “இப்ப கொஞ்சம் பரவாயில்லை போல இருக்கே” என்று நமக்குத் தோன்றினாலும் தோன்றும். அவ்வளவு சாஸ்திர சம்பிரதாயங்கள்.

’தமிழ்நாட்டில் காந்தி’ என்ற டாக்டர் ராஜனின் புத்தகம்தான் காந்திக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவைச் சொன்ன அடிப்படைப் புத்தகம். இது 1944-ல் ஆனந்த விகடனில் தொடராக வந்துள்ளது. பொது மருத்துவம் குறித்து புத்தகங்கள் அதிகமில்லாத 1945-ல் டாக்டர் ராஜன் ’வீட்டு வைத்தியர்’ என்ற மருத்துவ நூலைத் தமிழில் எழுதியது முக்கியமானது. அதைப்போலவே ’வ.வே.சு. ஐயர்’ வரலாற்றைச் சுருக்கமாக எழுதியுள்ளார். லண்டனில் படித்ததால் வந்த பரந்த பார்வையும், காந்தி தந்த சுய உள்முக சிந்தனையும், இயல்பாகவே இருந்த பிறவித் துணிச்சலும் டாக்டர் ராஜனை வழி நடத்தியதை அவர் வாழ்க்கை நெடுகப் பார்க்கிறோம்.

“தில்லைஸ்தானம் சேஷையங்கார் சௌந்தரராஜன்” (தி.சே.சௌ.ராஜன்) என்பதை காலப்போக்கில் மக்களும் தலைவர்களும் டி.எஸ்.எஸ்.ராஜன் என்றனர். இவர் தந்தை சேஷையங்கார், தென்னிந்திய ரயில்வேயில் குமாஸ்தா. வீடு ஶ்ரீரங்கத்தில். ரயில்வே வேலைபோக மிச்ச நேரத்தில் அகோபில மடத்தின் காரியஸ்தர் வேலையை ராஜன் தந்தை செய்துவந்தார். இதனால் புளியோதரைப் பிரசாதம் தவறாமல் வீட்டுக்கு வந்துவிடும். பழைய புளியோதரைக்கு ருசி அதிகம் என்கிறார் ராஜன். வடகலை ஐயங்கார்களின் குருபீடம் அது. 1880-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ம் தேதி ராஜன் பிறந்தார். தாய் நோயாளி. ராஜன்மீது பாசத்தைக் கொட்டியது அவனின் பெரியம்மாதான். சிறுவயதிலேயே கணவனை இழந்த இளம் விதவை அவள். கோயிலுக்கு அழைத்துப்போவது முதல் கதைகேட்க அழைத்துப்போவது வரை ராஜனுக்கு எல்லாமே பெரியம்மாதான். வாடகை கொடுக்க முடியாமல் இருந்த ராஜன் குடும்பம் மடத்திலேயே சிலகாலம் வசித்தார்கள். தன் தமிழ் அறிவுக்கு அங்கு கேட்ட பாசுரங்களே காரணம் என்கிறார் ராஜன்.

ராஜனின் பள்ளி வாழ்க்கை ஶ்ரீரங்கம் தேர்முட்டிகளோடு சம்பந்தப்பட்டது. முதல் பள்ளி சித்திரைத் தேர்முட்டியிலும், பெரிய பள்ளி தைத் தேர்முட்டியிலும் நடந்தது. ஆசிரியர் அன்றும் ‘ஸார்’ தான். ஆனால் ஸாருக்கு ராஜன் மனசிலிருந்த அர்த்தம் “பிரம்பால் அடிக்க வேண்டியவர்”. “கோதண்டம்” “குறிச்சி போடுகிறது” இதெல்லாம் அந்தக்கால “பள்ளி லாக்கப்” தண்டனைகள். ஸார் உட்பட யாரும் சொக்காய் போடுவதில்லை. மற்றொரு ஸார் பகல் நேரம் முழுக்க தேவையான மூக்குப்பொடியை ஒரு குன்றுபோல் மேஜையில் குவித்து வைத்து நிஷ்டையில் இருப்பவர்போல் இழுத்துக்கொண்டே இருப்பாராம். மாதம் ஒரு அணா கட்டணமும் உண்டு. “நெடுமால் திருமருகா, நித்த நித்தம் இந்த இழவா? வாத்தியார் போகானா? வயிற்றெரிச்சல் தீராதா?” இதுதான் பிள்ளைகள் மனசில் ஓடிய அன்றைய ரைம்ஸ். இப்படி ராஜனைப் படிக்கும்போது நம் கண்கள் இன்றைய நம் பிள்ளைகளைப் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை.

ஆரம்பக் கல்வி முடித்த ராஜன் மேற்படிப்புக்குப் புனித சூசையப்பர் கல்லூரிப் பள்ளியில் சேர்ந்தார். படிப்பு சுமார்தான். மெட்ரிகுலேஷன் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். திருவிழா நாள்களில் பெரிய பெருமாள் காட்சி கொடுக்கும் மண்டபத்திற்கு ஆழ்வார்களைத் தூக்கிவருவது கைங்கர்யம் எனப்பட்டது. இதற்குக் கூலியாக ஒரு தோசையும் வடையும் பிரசாதமாகக் கிடைக்கும். ராஜன் தோசைக்காகக் கைங்கர்யம் செய்தார். பெரியம்மாவுக்கு சந்தோஷம். உனக்குப் பெரிய புண்ணியம் என்றாள். “அந்தப் புண்ணியந்தான் வெகு நாளைக்குப் பிறகு காங்கிரஸ் மந்திரி சபையில் தேவஸ்தான நிர்வாகத்தை எனக்குக் கொடுத்ததோ. பெரியம்மாவைக் கேட்டால்தான் தெரியும்” என்கிறார் ராஜன்.

வயசு 16 ராஜனுக்கு. கல்யாணம் நிச்சயமானது. பெண்ணை தாயார்தான் பார்த்தார். ஆசைப்பட்டும் இவரால் பார்க்கமுடியவில்லை. மணவறையில் பார்த்தபோதுதான், அவள் அழகால் எல்லா ஏமாற்றங்களும் தீர்ந்ததாம் அவருக்கு. சின்ன அனுபவங்கள்தான் சமயத்தில் நம்மை பெரிய நோக்கங்களுக்கு அழைத்துப்போகிறது. ஶ்ரீரங்கம் முனிசிபல் ஆஸ்பத்திரியில் வேலை செய்த திருமலைசாமி நாயுடுவும் வேணுகோபால் நாயுடுவும் காட்டிய தோரணையும் அதிகாரமும்தான் சௌந்தரராஜனை டாக்டர் ராஜனாக மாறத் தூண்டியது. மருத்துவம் படிக்க விரும்பி அப்பாவிடம் போனார். அப்பாவோ ’இது நம் போன்ற பிராமணர்கள் செய்யக்கூடிய தொழில் அல்ல. பிணத்தை அறுக்க வேண்டும். எல்லாரையும் தொட வேண்டும். இது வேண்டாம், வேறு படிப்பு படி’ என்றார். ஒரு நண்பரின் ஆலோசனைப்படி உபகாரச் சம்பளம் பெறுவதற்கான போட்டித் தேர்வு எழுதி பர்மா அரசாங்கத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டார். படிப்புச் செலவை பர்மா பார்த்துக்கொள்ளும். படிப்பை முடித்ததும் 5 வருடங்கள் பர்மாவில் உழைக்க வேண்டுமென்பது ஒப்பந்தம். ஒரு வகையில் அடிமை ஒப்பந்தம்.

டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்
டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்
மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு ரங்கூன் போய்ச் சேர்ந்தார் டாக்டர் ராஜன். அங்கே அவரை மருத்துவராகவே நடத்தவில்லை. கல்லூரியில் முதல் இடத்தில் வந்தவருக்கு கிளார்க் வேலை கொடுத்தார்கள். சம்பளமோ பிடித்தம்போக 27 1/2 ரூபாய். ஒருநாள் பிரச்னை உச்சத்தைத் தொட்டது. தலைமை மருத்துவர் ஆங்கிலேயர். ஒரு நோயாளிக்கு அவர் சொன்னதைச் செய்யாமல் சரியான சிகிச்சையளித்த ராஜனை முட்டாள் எனத் திட்டி, நீ ஒரு ஹாஸ்பிடல் அஸிஸ்டென்ட்தானே என கன்னத்தில் குத்திவிட்டார். வந்த கோபத்தில் கையிலிருந்த கண்ணாடி டம்ளரை அவர்மீது விட்டெறிந்துவிட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டார் ராஜன்.

டாக்டர் ராஜனின் வலியைத் தீர்க்க வந்த மருந்தாக வந்தார் பசுபதி ஐயர். ராஜனின் கடனையெல்லாம் அடைத்து, தொழில் தொடங்கவும் உதவிசெய்தார். கமர்ஷியல் வங்கியின் காசாளரான இவர் வ.வே.சு.ஐயரின் மைத்துனர் ஆவார். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அதிகமுள்ள பகுதியில் மருத்துவமனை தொடங்கிய ராஜனுக்கு நல்ல பெயர். வருமானமும் அதிகமானது. ஒரு வழக்கில் செட்டியாருக்கு ஆதரவாக சாட்சி சொன்ன ராஜனை, நீதிபதி இவர் ஒரு ’ஸப் அஸிஸ்டெண்டு சர்ஜன்’தான், டாக்டர் அல்ல என்று தீர்ப்பில் எழுதிவிட்டார். இந்தப் பழியைத் துடைக்க முடிவு செய்த ராஜன் மேற்படிப்புக்காக பசுபதி ஐயரின் உதவியோடு லண்டன் கிளம்பினார்.

கடல் கடந்து சென்றதற்காக ராஜனையும், அவரைக் காண பர்மா வந்த தந்தையையும் ஜாதிப் பிரஷ்டம் செய்தார்கள் வைதிகர்கள். ராஜனின் தாத்தா இறந்தபோது, அந்தச் சடங்குகளில் கலந்துகொள்ள வைதிகர்கள் மறுத்துவிட்டனர். ஜாதிப் பிரஷ்ட விவகாரத்தில் அகோபில மடம் ஜீயர் மிகவும் தீவிரமாக இருந்தார். ஆனால் அதே ஜீயர் டாக்டர் ராஜன் மந்திரி பதவி ஏற்றதும், சில பரிகாரங்களைச் செய்துவிட்டு மீண்டும் ஜாதியில் சேர அழைப்புவிடுத்தார். ராஜன் அதை உறுதியாக மறுத்துவிட்டார்.

பிரெஞ்ச் மெயில் கப்பல் ’மெஸரஜரி மாரிடையம்ஸ்’ல் லண்டனுக்குப் பயணப்பட்டார் டாக்டர் ராஜன். “என்ன சௌந்தரம், இளைத்து கறுத்து அடையாளமே தெரியாமல் போய்விட்டாயே” என்று சிரித்துக்கொண்டே லண்டனில் வரவேற்றார் வ.வே.சு.ஐயர். ஐயரின் யோசனைப்படி லண்டனுக்குத் தோதான மாமிச உணவுப் பழக்கத்திற்கு மாறினார் ராஜன். “நமது நாட்டுக்குத்தேவை இப்போது பாரிஸ்டரும் டாக்டருமல்ல. நாடு சுதந்திரம் அடைய நாம் அடிமை உணர்ச்சியை வீசி எறிய வேண்டும். சாவர்க்கர் என்ற பெரியவர் தங்கியுள்ள ’இந்தியா ஹவுஸ்’க்கு நான் போகிறேன். நீ விரும்பினால் வரலாம்” என்றார் வ.வே.சு. “தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் எல்லோரும் என்னையே நம்பி ஶ்ரீரங்கத்தில் காத்திருப்பார்கள். நான் பரம ஏழை. ஆனால் உங்கள் உபதேசத்தால் சர்க்கார் வேலை செய்யும் எண்ணம் ஒழிந்தது. என் படிப்பைக் குறைவில்லாமல் முடிப்பேன். மிச்ச நேரத்தில் உங்களோடு சேர்ந்து சுதந்திரத்துக்காக உழைப்பேன். எனவே நானும் இந்தியா ஹவுஸ் வருகிறேன்” என்றார் ராஜன். இந்தப் புள்ளியிலிருந்துதான் ராஜனின் பொதுவாழ்க்கை தொடங்கியது.

லண்டன் ராஜனுக்குப் பல விஷயங்களைப் புரிய வைத்தது. தனிப்பட்ட ஒரு ஆங்கிலேயனுக்கு ஒரு இந்தியன் எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை. ஆனால் சமூக ஒழுங்கு, அரசியல் உணர்ச்சி, தேசபக்தி இவற்றில் நாம் ஆங்கிலேயர் முன் நிற்க முடியாது என்கிறார் ராஜன். ஜாதிச் சண்டை-மதபேதம்-சுயநலம் இவற்றோடு, காண முடியாத மறு உலகத்தை நாடி, உயிர் வாழும் இந்த உலகத்தைத் துறக்க எத்தனிக்கும் மனப்பான்மையும் சேர்ந்து நம்மை அடிமையாக வைத்திருக்கிறது என்பதை ராஜன் உணர்ந்துகொண்டார். ராஜன் அங்கிருந்தபோதுதான் மதன்லால் திங்க்ரா கர்ஸன் வைலியைச் சுட்டது. அவருக்காக வக்கீல் வைத்து வாதாட ராஜன் விரும்பியும் திங்க்ரா மறுத்துவிட்டார். திங்க்ராவின் வாக்குமூலம் ஒரு புரட்சிக் காவியமாகும். இந்தியா ஹவுஸில்தான் முதல்முதலாக காந்தியை ராஜன் சந்தித்தார். அது ஒரு வினோதமான சந்திப்பு. இந்திய மாணவர்களிடையே ஒரு கலந்துரையாடலுக்காக தீபாவளி விருந்தொன்றை இந்தியா ஹவுஸ் ஏற்பாடு செய்தது. தலைமை விருந்தினர் காந்தி. விருந்து தயாரிக்கும் பொறுப்பு ராஜனுக்கு. ஒல்லியாக எளிய உடையோடு வந்தவரை பணியாளர் என நினைத்து கடுமையான வேலைகளை ஏவினார் ராஜன். அவரும் பதவிசாக எல்லா வேலைகளையும் செய்தார். வ.வே.சு வந்தபின்தான் அவர்தான் மோகன்தாஸ் காந்தி என எல்லோருக்கும் தெரிந்தது. லண்டனில் படித்தபோதே ஜான்சிராணியின் வரலாற்றை ராஜன் எழுதினார். அது பாரதியின் இந்தியாவில் வந்தது.

டாக்டர் படிப்பு முடிந்து, ஶ்ரீரங்கம் வந்து, பெண்ணின் கல்யாணம் முடித்து அதனால் ஏற்பட்ட கடன் அடைக்க மீண்டும் ரங்கூன் போனார் ராஜன். அங்கே மனைவியின் ஆசைப்படி ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் மனைவி காலமானார். கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார் தந்த உறுதியை நம்பி மருத்துவத் தொழிலை 1914-ல் ஶ்ரீரங்கத்தில் ராஜன் தொடங்கினார்.
காந்தி
காந்தி

1914-ல் காந்தி சென்னை வந்தார். தன் நண்பர் ஜி.ஏ.நடேசன் வீட்டில் தங்கினார். அங்கு சென்று ராஜன் காந்தியைச் சந்தித்தார். தான் அமைக்க உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு ராஜனை அழைத்தார். தாங்கள் தலைமை ஏற்றுப் பணி செய்யும் காலத்தில் எல்லா தியாகத்துக்கும் முன்வருவேன் என்றார் டாக்டர் ராஜன். 1915-16 களிலேயே பொதுமேடைகளில் தமிழில் பேசியவர் ராஜன். அதனால் கூட்டம் அதிகமானது. டவுன்ஹால் போதாமல் மேடை மைதானத்துக்குப் போனது. பேச்சில் வன்மையும் சொல்லில் உண்மையும் இருந்தால் நமது மொழியை உலகமே கவனிக்கும் என்றார் ராஜன். லக்னோவில் 1916-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குப் போன ராஜன் அயோத்தி யாத்திரை போனார். அயோத்தி அனுபவம் கசந்தது. அதன்பிறகு “ஸ்தல யாத்திரை மோகம்” குறைந்துவிட்டதாக ராஜன் எழுதினார்.

சத்தியாக்கிரகம் தொடங்கப்பட்ட ஏப்ரல் 6-ம் தேதியை சுபதினம் என்னும் ராஜன், நாட்டின் விடுதலைக்கு தியாகம் அவசியம் என்ற முடிவுக்கு அவர் வந்தார். 1921-ல் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது அதை எதிர்த்த போராட்டக் கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். அப்போது ராஜன் தமிழ் மாகாண காங்கிரஸ் செயலாளராக இருந்தார். கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடந்தபோது, சூழ்ச்சியால் ஒரு கடைக்கு முதலாளிகளே தீ வைத்தனர். இதைக் காரணம் சொல்லி கும்பகோணத்தில் பேசிவிட்டுத் திரும்பிய ராஜனைக் கைது செய்து ஒரு வருடம் தண்டனை தந்து திருச்சிச் சிறையில் அடைத்தனர். பிறகு கோயம்புத்தூர்ச் சிறைக்கும் பாளையங்கோட்டைச் சிறைக்கும் மாற்றினர். கோவைச் சிறையிலிருந்தபோது ராஜனின் தந்தை மரணமடைந்தார். பலர் சொல்லியும் ராஜன் பரோல் கேட்கவில்லை. தந்தையின் ஈமச்சடங்கிலும் கலந்து கொள்ளவில்லை. பாளையங்கோட்டைச் சிறையில் கையில் உண்டான ரத்தக் கட்டியும் வீக்கமும் காய்ச்சலும் தந்த வேதனை, ராஜனை கையை எடுத்தாலும் பரவாயில்லை எனச் சொல்ல வைத்தது. டாக்டர் ராஜனின் திறமையை திருச்சியில் நேரில் கண்ட டாக்டர் ஈவர்ஸும் ராஜனோடு லண்டனில் படித்த டாக்டர் கோபிநாத் பண்டாலேவும் “உன் கை உழைக்கும் ஆயுதம். அதை அவசரப்பட்டு எடுப்பதா, முயல்வோம்” என அறுவை சிகிச்சை செய்து ராஜனைக் காப்பாற்றினார்கள். கையில் காலணாக்கூட இல்லாமல் வேலைக்கு உதவாத விறைத்த விரல்களோடு 1923-ல் மீண்டும் மருத்துவத் தொழிலை கன்டோன்மென்டில் தொடங்கினார் ராஜன். 1930 வரையிலும் தொழிலை முறையாக கவனித்தார். பெரிய மருத்துவமனை கட்டினார். எக்ஸ்-ரே யூனிட் அமைத்தார். காந்தியின் பயணங்களின்போது மட்டும் உடன் சென்றார். அவரின் பேச்சை மொழிபெயர்த்தார்.

காந்தியின் இரண்டாவது தமிழ்நாட்டுப் பயணம் 1921, செப்டம்பர் 15-ல் ஆரம்பித்தது. ராஜன்தான் மொழிபெயர்ப்பாளர். காந்தி குற்றாலம் போனார். அருவியில் குளிக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை என்றது கோயில் நிர்வாகம். “அருவி முதலில் வந்ததா; கோயில் முதலில் வந்ததா?” என்று வேதனையோடு கேட்டார் ராஜன். “தீண்டாமை ஒழிந்தால் ஹிந்து மதம் பிழைக்கும். இல்லையேல் அழிந்துவிடும்” என்றார் காந்தி. “ஹரிஜன மக்கள் அனுமதிக்கப்படும்வரை தானும் அருவியில் குளிக்கப்போவதில்லை” என்று காந்தி அறிவித்தார்.

காந்தியடிகளின் தண்டி யாத்திரை ராஜனின் தேசிய உணர்ச்சியைத் தட்டி எழுப்பியது. ராஜாஜி திருச்சி வந்துசேர்ந்தார். சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் யோசனைப்படி வேதாரண்யத்தில் உப்பு எடுக்க முடிவு செய்தார்கள். ராஜாஜி தலைமையில் 98 பேர் ஊர்வலமாகப் புறப்பட்ட இடம் திருச்சி ராஜனின் பங்களாதான். ராஜனின் மகள்தான் ராஜாஜிக்குத் திலகமிட்டு அனுப்பிவைத்தார். ஊர்வலம் திருச்சியிலிருந்து திருவையாறு, தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி வழியாக 150 மைல் நடந்து வேதாரண்யம் அடைந்தது. இந்த யாத்திரையின் செயலாளராக ராஜன்தான் எல்லா ஏற்பாடுகளும் செய்தார். ராஜாஜி கைதான பிறகு ராஜனும் கைதானார். திருக்காட்டுப்பள்ளியில் ஆற்று மணலில் தயிர்க் குடங்களைப் புதைத்து வைத்து போலீஸ் கண்களில் மண்ணைத் தூவினார்கள் மக்கள். இப்படி பல சுவையான அனுபவங்களாக அமைந்தது இந்தப் போராட்டம்.

“தமிழுநாட்டு ஹரிஜன சேவா சங்கத்துக்கு நீ தலைமை ஏற்று நடத்த வேண்டும்” என்ற காந்தியடிகளின் வார்த்தையை டாக்டர் ராஜன் ஒப்புக்கொண்டார். நந்தனாரை ஏற்கும் சைவர்களும் திருப்பாணாழ்வாரைக் கும்பிடும் வைணவர்களும் அவர்கள் இருக்கும் கோயிலுக்குள் அவர்களின் பிள்ளைகளைத் தடுப்பது நியாயமா எனக் கேட்டார் ராஜன். மத்திய சட்டசபைக்கு (நாடாளுமன்றம்) 1934-ல் நடந்த தேர்தலில் திருச்சி-தஞ்சை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரானார் ராஜன். ஹரிஜன சேவையில் ஈடுபட்ட இவரை சனாதனிகள் எதிர்த்தார்கள். ஆனால் எதிர்த்துப் போட்டியிட்ட கிருஷ்ணமாச்சாரியையும் வேணுகோபால் செட்டியாரையும் ராஜன் தோற்கடித்தார். இந்தப் பதவியால் அரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை என்றார். பிரசங்கங்கள், கேள்விகள், தீர்மானங்கள் எல்லாம் பேசுபவர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்ததாகவே ராஜன் மத்திய சட்டசபையை மதிப்பிடுகிறார். இன்றும் நிலைமை பெரிதாக மாறவில்லை என்பதுதான் வேதனை.

திருச்சி நகரசபைத் தேர்தலில், தலைவருக்கு காங்கிரஸ் ரத்தினவேல் தேவரை நிறுத்தியது. இதை ராஜன் ஏற்கவில்லை. பி.ஆர்.தேவரை எதிர்த்து தான் நிற்காமல் பொன்னையா பிள்ளையை ராஜன் நிறுத்தினார். பொன்னையா பிள்ளை வென்றார். இச்செயலை காங்கிரஸ் ஏற்கவில்லை. எனவே ராஜன் எல்லாப் பதவிகளையும் ராஜினாமா செய்தார். மீண்டும் தன் மருத்துவமனையை கவனிக்கத் தொடங்கினார்.

ராஜாஜியின் மகன் நரசிம்மன் ஒரு கடிதத்தோடு வந்தார். 1937-ல் ராஜாஜி மந்திரிசபை அமைக்கும் முயற்சியில் இருந்தார். அந்த மந்திரிசபையில் ராஜனைச் சேரச்சொல்லியே கடிதம். மாதம் 500 ரூபாய் சம்பளம். ஆறுமாதமே பதவி நீடிக்கக்கூடும் என்று எழுதிய ராஜாஜி, உடனே ராஜனைக் கிளம்பி வரச்சொன்னார். 1937, ஜூலை 14-ம் தேதி டாக்டர் ராஜன் மேல் சபைக்கு உறுப்பினராக கவர்னரால் நியமிக்கப்பட்டார். அன்றே ராஜன் சுகாதார மந்திரியாகப் பதவியும் ஏற்றார். அப்போது குண்டூரில் காலரா பரவிய செய்தியை பேப்பரில் படித்த ராஜன் அதிகாரிகளோடு பேசினார். எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. நேரடியாக குண்டூர் போன அவர் கலெக்டருடன் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தின் கக்கூஸைப் பார்த்தார். அதுபோலவே குடி தண்ணீர்க் குளத்தையும் பார்த்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த சேரிகளில் பலர் செத்துக்கொண்டிருந்தனர். அந்த ஊர் டாக்டர்களையும் இணைத்துக்கொண்டு மேல் நடவடிக்கையில் இறங்கினார். இரண்டு வாரத்தில் குண்டூர் குணமானது. கிராமங்களில் நல்ல குடிநீர் கிடைக்கும் திட்டத்தையும் ராஜாஜியின் வழிகாட்டலில் முன்னெடுத்தார். ஆனால், உலகப்போரின் காரணமாய் பிரிட்டிஷ் அரசோடு முரண்பட்ட காங்கிரஸ் தங்கள் அரசுகளை விலக்கிக்கொண்டது. ராஜன் மீண்டும் திருச்சிக்கே வந்தார்.

டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் வீடு
டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் வீடு

மீண்டும் உயிர் காக்கும் தொழிலுக்குப் போகாமல், ராஜன் பயிர் காக்கும் விவசாயி ஆனார். ஒருவருக்குக் கொடுத்த கடனுக்கு ஈடாக அவரது நிலத்தை வாங்கிக்கொண்டார். 200 ஏக்கர் நிலம் திருஈங்கோய்மலை கிராமத்தில் மலை அடிவாரத்தில் இருந்தது. தன் வீட்டை அக்கிரஹாரத்தில் கட்டாமல் தாழ்த்தப்பட்டவர்களும் வந்துபோவதற்கு ஏற்றமாதிரி சன்னதித்தெருவில் கட்டினார். வயதான காலத்தில்கூட தளராமல் களர் நிலத்தைத் திருத்தி, பாசன முறையை நவீனமாக்கி, டிராக்டரை உபயோகித்து விவசாயத்தில் சாதனை செய்தார்.

டாக்டர் ராஜனின் வாழ்வில் ஶ்ரீரங்கம் கோயில் ஆலயப் பிரவேசம் முக்கியமானது. அப்போது தாக்குதலுக்கும் ஆளானார். இவர் அமைச்சராக இருந்தபோது அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்வதைத் தடை செய்தார். அரசு மருத்துவ மனைகளுக்குத் திறமையுள்ள மருத்துவர்களை கௌரவ டாக்டர்களாக நியமித்தார். திருச்சி, புத்தூரில் உள்ள தலைமை மருத்துவமனை அமைய இவரே காரணம். அதைப்போலவே 1946-51 பிரகாசம் மற்றும் ஓமந்தூரார் அமைச்சரவையில் பொது நலத்துறை மற்றும் சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் இருந்தார். 1951-ல் உடல்நலக்குறைவால் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். 1953 அக்டோபர் 27-ம் தேதி காலமானார். திருச்சி தன் ’வீட்டு வைத்தியரை’ இழந்தது.

- இன்னும் ஊறும்