“இதுவரை அறிஞர்கள் பலவழிகளில் உலகை வியாக்கியானம் செய்துதான் வந்துள்ளனர். எனினும் விஷயம் உலகை மாற்றுவதில்தான் உள்ளது” இது காரல் மார்க்ஸின் புகழ் பெற்ற சிந்தனை. 1917 ல் லெனின் தலைமையில் நடந்த புரட்சி இந்த மாற்றத்தை ரஷ்யாவில் செய்தது. உலகம் முழுதும் ரஷ்யப் புரட்சியின் செல்வாக்கு பரவியது.
ரஷ்யப் புரட்சி வெற்றிபெற்ற ஒரே மாதத்திற்குள் எழுதிய முதல் இந்தியர் பாரதிதான். “ருஷ்யாவில் சோசலிஸ்ட் கட்சியார் ஏறக்குறைய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிவிடக்கூடுமென்று தோன்றுகிறது” என்றார். முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1920 ஆம் ஆண்டு அக்டோபர்- 17 ல் தாஷ்கண்ட் நகரில் உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவில், பாரதி ஆசிரியராக இருந்த இந்தியா பத்திரிகையின் உரிமையாளரான எம.பி.டி ஆச்சார்யாவும் ஒருவர். இவர் 1919 ல் லெனினைச் சந்தித்து உரையாடினார்.
பொதுவாக அன்றைய காங்கிரஸ் மாநாடுகளில் பேசுபவர்கள், “கனதனவான்களே” என்றுதான் பேச்சைத் தொடங்குவது வழக்கம். ஆனால் பீகாரின் கயா காங்கிரஸ் மாநாட்டில் ஒருவர் “கூடியுள்ள தோழர்களே, தொழிலாளர்களே, விவசாயிகளே” என்று தொடங்கினார். தேசிய விவாதங்களில் பங்கெடுத்த முதல் இந்திய கம்யூனிஸ்ட்டாக இவரை எம்.என்.ராய் புகழ்கிறார். அவர்தான் தமிழரான ம.சிங்காரவேலர்.

தமிழ் நாட்டில் மூன்று கல்யாணசுந்தரங்களிடம் இந்த வீச்சை காணமுடியும். ஒருவர் திரு.வி.கல்யாணசுந்தரம் மற்றவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அடுத்தவர் இந்திய பொதுவுடமை இயக்கத்தின் முக்கிய தலைவரான தோழர் எம்.கல்யாணசுந்தரம். இவரை “தோழர் எம்.கே” என்றே மக்கள் அழைத்தனர்.
திரு.வி.க எழுதினார், பொதுமையை உலகில் பரப்பி நிலை பெருக்க வல்லது காரல் மார்க்ஸ் கொள்கையே என்ற எண்ணம் என் உள்ளத்தில் இடம்பெற்றது” என்று.
அடுத்து கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடினார் “மாடாய் உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்’ என்ற காதலியின் கேள்விக்கு பதிலாக ‘அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே சேர்வதனால் வரும் தொல்லையடி’ என்றார் கவிஞர். இந்த தொல்லையைத்தான் மார்க்ஸ் சுரண்டல் என்றார்.
திருச்சியில் பிறந்து, தமிழ்நாடு முழுதும் பரவி இந்தியாவால் கவனிக்கப்பட்ட ஒரு ஆளுமை தோழர் எம்.கல்யாணசுந்தரம். சமூகத்தின் தேவையும் வரலாறும்தான் ஒரு மனிதனை உருவாக்குகிறது என்பதன் சரியான எடுத்துக்காட்டு அவரின் வாழ்க்கை. எளிய குடும்பத்தில் பிறந்த எம்.கல்யாணசுந்தரம் “தோழர் எம்.கே” ஆன வாழ்க்கைக் கதை தியாகத்தால் ஆனது, வலிகள் நிறைந்தது.
1952, 1957, 1962 மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றிபெற்று திருச்சியிலிருந்து சட்டமன்றம் சென்றவர் தோழர் எம்.கே. அதுபோலவே 1971, 1977 நாடாளுமன்றத் தேர்தலிலும் திருச்சி வேட்பாளராக வென்றவர் தோழர் எம்.கே. 1980 ல் தமிழ்நாடு சட்டமன்றத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெள்ளை கதர் வேட்டி, முழுக்கை கதர் சட்டை, கதர் துண்டு இதுதான் அவர் உடை. மூன்று இட்லிதான் அவர் உணவு. அவரை “திருச்சி காந்தி” என்றே மக்கள் அழைத்தனர். “கல்யாணசுந்தரம் வந்தா உடனே பாக்குறீங்க. நாங்க உங்க கட்சிக்காரங்க, எங்களை காக்கவைக்கிறீங்களே” என்ற தன் கட்சிக்காரரிடம் முதல்வர் காமராஜர் சொன்னாராம், “ அவர் ஒருநாளும் தனக்காகவோ சொந்த வேலையாகவோ வந்ததேயில்லை. நீ எப்ப வந்தாலும் ரெக்கமெண்டேஷன்தான். யாரைப் பார்க்கலாம் சொல்லு” இதுதான் தோழர் எம்.கே வைப்பற்றிய சமூக மதிப்பீடு.
கக்கனும் எம்.கேயும் தேர்தல் பிரசாரப் பயணத்தில் சந்திக்கிறார்கள். “ஏன் வெயில்ல கஷ்டப்படுறீங்க. நீங்கதான் ஜெயிக்கப் போறீங்க. மக்கள் உங்க பக்கந்தான்” என்றாராம் கக்கன். எதிர்த்து நிற்பவர் மனதையும் வெல்வது எளிதல்ல. இந்த இடத்துக்கு தோழர் எம்.கே வந்த வரலாறை தெரிந்துகொள்வது இன்றைய தலைமுறைக்கு நல்லது.

“தொண்டால் பொழுதளந்த தூயவன்” என்று அழைக்கப்படும் கல்யாணசுந்தரம் பிறந்தது 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 20-ம் நாள். திருச்சி மாவட்டம் குளித்தலை நகரின் ஒரு பகுதியான கடம்பர்கோயிலில் தந்தை மீனாட்சிசுந்தர முதலியாருக்கும் தாய் ராசம்மாளுக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். உறையூர் சுருட்டு கிடங்கில் கணக்கெழுதிக்கொண்டே மலைக்கோட்டை தரும்புர ஆதீன மௌனமடத்தில் பணி செய்தார் மீனாட்சிசுந்தர முதலியார். இவர்களின் வீடு உறையூர் முதலியார் தெருவில் உள்ளது. வறுமையான வாழ்வு. தெய்வ பக்திக்கு மடத்துக்கும் தேச பக்திக்கு காங்கிரஸ் கூட்டத்துக்கும் போவது முதலியார் வழக்கம்.
1914 ல் உறையூர் திண்ணைப் பள்ளியில் படித்தார். பிறகு திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியில் சேர்ந்து, 1928ல் பள்ளியிறுதி வகுப்பில் மிக நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். திருச்சி ரயில்வேயில் ஸ்டோர் கிளார்க்காக 1930 ல் மாதம் 28 ரூபாய் சம்பளத்தில் கல்யாணசுந்தரம் வேலையில் சேர்ந்தார். அடுத்த ஆண்டே இவருக்கும் லோகாம்பாளுக்கும் திருமணம் நடக்கிறது. இவர்களுக்கு ஒரே பெண் குழந்தை வீரபூஷணம் பிறந்தார்.
திருச்சி ரயில் நிலையத்திலிருந்து ஈரோட்டுக்கு மாற்றலாகிறார் எம்.கே. அங்கு பணியாற்றிய கே.டி.ராஜூ, பி.எம்.சுப்பிரமணியம், ஜே.பி.புருஷோத்தமன் ஆகியோருடன் சேர்ந்து “ஜனநாயக வாலிபர் சங்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார். பொன்விழாவை காங்கிரஸ் கொண்டாடிய 1935ல் இதன் உறுப்பினர்கள் எல்லோரும் காங்கிரசில் சேர்ந்தனர்.
ஈரோட்டில் எம்.கே தொழிற்சங்கம் அமைத்தார். அதைப்போலவே விழுப்புரம், மதுரை, கொல்லம், பொன்மலை என்று 2500 மைல் நீளமுள்ள ரயில்பாதை நெடுகிலும் தொழிற்சங்கம் புறப்பட்டது. எல்லா சங்கங்களையும் இணைத்து 1937 ல் SOUTH INDIAN RAILWAY LABOUR UNION – SIRLU உருவாக்கப்பட்டது. இதன் தொடக்க மாநாடு 19-11-1937 ல் பொன்மலையில் நடந்தது. இம்மாநாட்டில் துணைத்தலைவராக எம்.கே தேர்வு செய்யப்பட்டார். இதை உருவாக்குவதில் ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, கே.ஏ.சாரி ஆகியோர் அயராமல் உழைத்தனர். திருச்சிக்கு மாற்றலாகி வந்த எம்.கே 1937 முதல் 9 ஆண்டுகாலம் திருச்சி தாலுகா காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதனால் ராஜாஜி, வி.வி.கிரி, டி.எஸ்.எஸ்.ராஜன் போன்றோரிடம் நெருங்கிய நட்பிருந்தது.
தொழிற்சங்கம் மலர்ந்தபோதே கல்யாணசுந்தரம் கம்யூனிஸ்ட்டாக மாறினார். தொழிலாளர்களைத் திரட்ட, பிரச்னைகளைப் பேச “தொழிலரசு” என்ற இதழை ஆரம்பித்து ஆசிரியரானார். ரயில்வே நிர்வாகம் சம்பளம், மரியாதை எல்லாவற்றிலும் இந்தியர்களை கேவலப்படுத்தியது. வேலையில்கூட பாசஞ்சர் ரயிலை மட்டுமே இந்தியர்கள் ஓட்டலாம். எக்ஸ்பிரஸ் ரயிலை வெள்ளையரோ ஆங்கிலோ இந்தியரோ மட்டுமே ஓட்டலாம் என்று வைத்திருந்தனர். தோழர் எம்.கே யின் போராட்டத்தால் இந்தியர்களும் எக்ஸ்பிரஸ் ரயிலை ஓட்டினார்கள்.
சங்கத்தை அங்கீகரிக்கச் சொல்லி தோழர் எம்.கே தலைமையில் போராட்டம் வெடித்தது. சங்கத்தின் 5 பிரதிநிதிகளைக்கூட சந்திக்க ரயில்வே நிர்வாகம் மறுத்தது. 5 பேர் கூடாது என்றால் 5000 பேர் முற்றுகையிடுவோம் என்று எம.கே முழங்கினார். ராஜாஜியும் தலையிட நிர்வாகம் பணிந்து 12-12-38 ல் அங்கீகாரம் வழங்கியது.

மரத்தில் கொடி படரும். பறக்குமா? பொன்மலையில் பறந்தது. பூரண சுதந்திர நாளாக 1940 ஜனவரி 26 சங்கத்தால் கொண்டாடப்பட்டது. ரயில்வே தொழிற்சாலையின் நுழைவாயிலான ஆர்மரிகேட்டில் கொடி ஏற்றுவதை நிர்வாகம் தடுத்தபோது பொன்மலையின் எல்லா மரங்களிலும் தோழர் எம்.கே தேசக் கொடியை பறக்கவிட்டார்.
இரண்டாம் உலகப்போர் நடந்த நேரம். விலைவாசியால் மக்கள் துவண்டனர். போதாக்குறைக்கு பணிமனையில் தொழிலாளர்களை வெடிகுண்டுக்கு தேவையான “செல்” செய்யச் சொன்னது நிர்வாகம். போர்க்கால அலவன்ஸ் கேட்டு பெரிய ஊர்வலம் டவுன் ஹால் நோக்கி நடந்தது. பொதுக்கூட்டத்தில் எம்.கே மற்றும் மோகன் குமாரமங்கலம் பேசினார்கள். தொழிலாளிகளுக்கு பட்டணம்படி 4 படி அரசி ஒரு ரூபாய்க்கு கிடைக்க எம்.கே வழி செய்தார். மலிவு விலை கடைகளையும் வரவைத்தார்.
தொழிலாளர் ஒற்றுமையும் மக்கள் ஆதரவையும் கண்ட ரயில்வே ஜெனரல் மேனஜர் மூர்ஹெட் கவர்னருக்கு எழுதிய கடித்த்தில் தோழர் எம்.கே ஒரு தீவிரவாதி என்றும் காங்கிரசுக்குள் புகுந்துவிட்ட கம்யூனிஸ்ட் என்றும் உடனே கைது செய்தால் மட்டுமே போர்க் கருவிகள் செய்ய முடியும் என்றார். அவர் சொன்னபடியே பாதுகாப்புச் சட்டப்படி 1940 ஏப்ரலில் தோழர் எம்.கே கைது செய்யப்பட்டு பணி நீக்கமும் செய்யப்பட்டார். ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்று அலிபுரம் சிறையில் அடைத்தார்கள்.
சிறைச்சாலை விதிகளின்படி கைதிகளுக்கு செய்ய வேண்டிய வசதிகளை சிறை நிர்வாகம் செய்யவில்லை. எம்.கே யின் திட்டப்படி கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர். எம்.கே தான் மூளை என்பதைப் புரிந்துகொண்ட சிறை நிர்வாகம் தனி கொட்டடியில் அவரை அடைத்தது. அளவுக்கு அதிகமான வேலை தந்து சித்ரவதை செய்தது. கீழே தள்ளி மிதி மிதி என மிதித்தனர். ரத்தக் காய்ச்சலால் அவதிப்பட்டார். செத்துவிடுவார் என்றே நினைத்தனர். குலையாத மன உறுதியோடு வெளியே வந்தார். இந்த உறுதியே அவரை 80 வயதுவரை வாழவைத்தது.
போரின் போக்கு மாறியது. ஹிட்லரின் படை ரஷ்யாவில் நுழைந்தது. புதிதாய் பிறந்த சோசலிசக் குழந்தையை காப்பாற்ற உலகம் முழுதும் கம்யூனிஸ்ட்கள் ரஷ்யாவை ஆதரித்தனர். பொன்மலையில் பிர்மாண்ட பொதுக்கூட்டம். “செஞ்சேனை வெற்றி நம் வெற்றி... உலகப்போர் முடிவதற்குள் இந்தியர் கைக்கு இந்தியா வரவேண்டும்” என்று தோழர் கல்யாணசுந்தரம் முழங்கினார். தோழர் எம்.கே மீண்டும் கைதானார். போராட்டம் பெரிதானது. அவரை விடுதலை செய்தால்மட்டுமே தொழிலாளிகளிடையே அமைதி வரும் என்ற நிலை இருந்ததால் 6 மாதங்களில் தோழர் எம்.கே விடுதலையானார்.

1945 ஜூனில் SIRLU வின் 9வது மாநாடு மூன்று நாள் நடந்தது. காரணமின்றி வேலை நீக்கம் செய்ய தடை, 8 மணி நேரமே வேலை, உத்திரவாத பதவி உயர்வு போன்ற சாதனைகளோடு கூடிய மாநாடு இது. 26,000 பேர் உறுப்பினர்கள். ம.பொ.சி, நாமக்கல் கவிஞர், வி.வி.கிரி, ஆசிரியர் கல்கி, கே.பி.சுந்தராம்பாள், மலையாளக் கவி வள்ளத்தோள் என்று பெரும் கலைப்படையே மேடைக்கு வந்தது. கல்கி எழுதினார் “ரயில் சக்கரங்கள் அனைத்தும் “கல்யாணசுந்தரம்-நம்பியார், கல்யாணசுந்தரம்-நம்பியார் என்றே திரும்பத் திரும்ப ஓசை எழுப்பின” என்று.
சோவியத் செஞ்சேனை ஹிட்லரை வீழ்த்தியது. இது உலகம் முழுதுமுள்ள காலனி நாடுகளின் விடுதலை இயக்கங்களுக்கு புது தெம்பைத் தந்தது. 1946 ல் இந்தியாவும் “வெள்ளையனே வெளியேறு” என்று முழங்கியது. கராச்சி பம்பாய் துறைமுகங்களில் கப்பல்கள் மூன்று கொடிகளோடு ஆடின -- மூவர்ணக்கொடி, பிறைபோட்ட பச்சைக்கொடி, அரிவாள் சுத்தியல் போட்ட சிகப்புக்கொடி. யாரெல்லாம் சேர்ந்து பெற்றது “இந்திய விடுதலை” என்பதை மௌனமாக சொல்ல அசைந்தாடிய அவை கொடிகள் அல்ல, இந்தியத்தாயின் நாக்கு. இதை கப்பல் புரட்சி என்றது வரலாறு.
``வெள்ளையனே ரயில் எங்கள் மக்களுக்குச் சொந்தம். கொடுத்துவிட்டு வெளியேறு!" என்றார்கள் தொழிலாளர்கள். ஆனால் ரயில்வே நிர்வாகமோ போரின் தேவைக்காக எடுத்த 1.5 லட்சம் தொழிலாளர்களை “தற்காலிகமானவர்கள்” என்று சொல்லி வேலை நீக்கம் செய்தது. எம்.கே எழுதினார்,” நாங்கள் போருக்கு உதவினோம். நீ வாழ்வுக்கு உதவு” என்று. அதோடு விடவில்லை அவர், “யார் தற்காலிகம், நாங்களா? நாங்கள் நிரந்தரமானவர்கள். நீதான் தற்காலிகம். வெளியேறு” என்றார் மெதுவாக ஆனால் உறுதியாக. அகில இந்திய தலைவராக உயர்ந்திருந்த எம்.கே தோழர்கள் ஜோதிபாசு குருஸ்வாமியோடு இணைந்து ரயில்வேயோடு நடத்திய பேச்சுவார்த்தையில் அமைந்ததுதான் முதல் ரயில்வே சம்பள கமிஷன். அடிப்படை சம்பளம் 30/- என்பதை கமிஷன் ஏற்றது. இது பெரும் வெற்றியாக கொண்டாடப்பட்டது.
மத்தியில் இந்தியர்களின் இடைக்கால அரசு வந்தும் ரயில்வே நிர்வாகமும் போலீசும் வெள்ளையரிடமே இருந்தன. SIRLU வை பழிவாங்க நிர்வாகம் துடித்தது. ஒழுங்கு நடவடிக்கையின்பேரால் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. தொழிலாளர்களை திறமையாக எம்.கே வழிநடத்தினார். தென்னிந்தியா முழுதும் ஒரு ரயில்கூட ஓடவில்லை.
சென்னையில் போராட்ட வேலையில் இருந்தார் தோழர் எம்.கே. ஆனால் திருச்சியில் நடந்தே இருக்கக்கூடாத ஒன்று நடந்தது. அவரின் 8 வயதேயான ஒரே மகள் வீரபூஷணம் பாம்பு கடித்து இறந்துவிடுகிறார். செய்தியை மிகுந்த தயக்கத்தோடு எம்.கே இடம் சொன்னார்கள். தடுமாறிப்போகிறார் அவர்.

திருச்சிக்கு விரைந்த அவர் காலையில் தன் உயிரான மகளை மண்ணில் புதைத்துவிட்டு மாலை பொன்மலையில் நடந்த தொழிலாளர் கூட்டத்தில் அமர்கிறார். பேச எழுகிறார் எம்.கே. கூட்டம் விம்மி விம்மி அழுகிறது. மேடையில் இருந்த தலைவர்கள் கண்ணெல்லாம் ஆறு. அந்தக் கூட்டத்தில் அழாமல் மலைபோல் நின்ற ஒருவர் தோழர் எம்.கே மட்டும்தான்.
போராட்டத்தை ஒடுக்கும் முடிவோடு ஹாரிசன் என்கிற போலிஸ் அதிகாரி செப்டம்பர் 5 ம் தேதி சங்கத்திடல் வந்தான். மலபார் போலிஸ் அவன் கையில். சங்கத்திடலில் தொழிலாளிகள் ரேடியோவில் செய்தி கேட்டுக்கொண்டிருந்தனர். பாவம், சிறிது நேரத்தில் தாங்களே செய்தியாகப்போவதை அவர்கள் அறியமாட்டார்கள். சரமாரியாக சுட்டான் ஹாரிசன். 30 வயதுகூட ஆகாத 5 பேர் அங்கேயே செத்தனர். அனந்தன் நம்பியாரை கடுமையாக தாக்கினார்கள். செத்துப்போனதாக நினைத்து போய்விட்டார்கள். கல்யாணசுந்தரத்தை சுட்டே தீருவேன் என்று பேயாக அலைந்த ஹாரிசனிடமிருந்து எம்.கே யை தோழர்கள் அதிகம் முயன்று காப்பாற்றினார்கள். இன்றுகூட துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த சுவடுகளை பார்க்கமுடியும். இதை தென்னிந்தியாவின் ஜாலியன்வாலாபாக் என்று வரலாறு குறித்துக்கொண்டது. இந்த போராட்டமும் வெற்றியோடே செப்டம்பர் 24 ல் முடிவுக்கு வந்தது.
தற்காலிக அரசும், சென்னை ராஜதானியின் முதல்வரும் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் கம்யூனிஸட் தலைவர்களை 1947 ஜனவரியில் மீண்டும் கைதுசெய்தனர். சுதந்திரம் வந்தபிறகே எல்லோரும் விடுதலையானார்கள்.
நாட்டின் வடக்கே மதக்கலவரத்தால் ரத்தம் ஓடியது, ஆனால் ரயில்கள் ஓடவில்லை. ஓடியிருந்தால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடம்பெயர விரும்பியவர்கள் துரிதமாக மாறியிருப்பேர்கள். பயத்தால் வட இந்திய டிரைவர்கள் ஓட்டவில்லை. பிரதமர் நேரு இந்த பேராபத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வாருங்கள் என்று தொழிலாளிகளை வானொலி மூலம் வேண்டினார். ஆபத்தைப் புரிந்து கொண்டே SIRLU வேண்டுகோளை ஏற்றது. “மக்களைக் காப்பாற்ற வாருங்கள் போவோமென்றார்” எம்.கே. இரண்டு குழுக்களாகப் போனார்கள். 5 மாதங்கள் ரயிலை ஓட்டி லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றினார்கள். தேசபக்தி என்பது வெறும் முழக்கமல்ல அது தியாகம் என்பதை புரியவைத்தார் தோழர் எம்.கே.
விடுதலை அடைந்த இந்தியாவில் மக்கள் குரலை சிந்தாமல் சிதறாமல் மக்கள் மன்றங்களான சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் சேர்ப்பதும் அந்த மன்றங்களையும் போராட்டக் களமாக மாற்றுவதே ஜனநாயகம் என்ற புரிதலோடு கம்யூனிஸ்ட்கள் 1952 ல் முதல் பொதுத்தேர்தலை சந்தித்தனர். தோழர் எம்.கே திருச்சி தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
தோழர் எம்.கே யின் சாதனைகளில் ஒன்று பரவிக்கிடந்த குடிசை மக்களுக்கு ஆதரவாக அவர்களின் வாழ்விடங்களை காப்பாற்றியது. மதுரை ரோடு, குப்பாங்குளம் (கல்யாணசுந்தரபுரம்) தேவஸ்தானம் தோப்பு, இனாம்தாரர் தோப்பு, கண்ணன் தோப்பு, தாராநல்லூர் கல்மந்தை, உறையூர் கல்மந்தை, வரகனேரி, வள்ளுவர் தெரு, அண்டகொண்டான், நத்தர்ஷா தர்கா பகுதி மக்களை வெளியேற்ற ஆதிக்க சக்திகள் முயன்றன. “போலீஸ் லாரியோ புல்டோசரோ, என்மீது ஏறிதான் நீ குடிசையை தொடமுடியும்” என்றார் தலைவர் எம்.கே. ஆதிக்கம் பணிய குடிசைகள் சிரித்தன.

சட்டமன்றத்தில் அவரின் முதல் பணியே CITY TENANTS PROTECTION ACT கொண்டுவரவைத்து திருச்சி கோவை மதுரை சேலம் சென்னை போன்ற நகரங்களில் வாழ்ந்த ஏழை குடிசை மக்களின் வாழ்விடத்தை காப்பாற்றியதுதான்.
அவர் காலத்தில்தான் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க 4 பெரிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் வந்தன. மத்திய பேருந்து நிலையம் வந்தது. திருச்சியை விரிவாக்க புறநகர்கள் உருவாக்கப்பட்டன. சிதறிக்கிடந்த பீடி சுருட்டு தொழிலாளர்களுக்காக தனி சட்டம் உருவாக தோழர் ஏ.கே.கோபாலனும் தோழர் எம்.கே-யுமே காரணமாவார்கள்.
விவசாயிகளின் உரிமைப் போரில் ஏர் கலப்பையோடு வயலில் இறங்கி உழுதவர் தோழர் எம்.கே. அவர் உழுததால்தான் குத்தகைப் பயிர் பிழைத்தது. இந்த போராட்டத்தில்தான் குளித்தலையின் அன்றைய சட்டமன்ற உறுப்பினரான கலைஞர் கருணாநிதி எம்.கே யுடன் இணைந்து போராடினார். நாடு பாதி நங்கவரம் பாதி என்று சொல்லும் அளவுக்கு பெரும் நிலவுடமையாளரையும், ஐயம்பாளையம் பண்ணையையும் எதிர்த்து தோழர் எம்.கே நடத்திய போராட்டம் முக்கியமானது. நங்கவரம் பொய்யாமணி கிராமத்தில் 150 ஏக்கரில் விவசாயம் செய்த விவசாயிகளை வெளியேற்ற பண்ணையார் முயற்சி செய்தார். எம்.கே போராட்டத்தை முன்னெடுத்தார். 5000 விவசாயிகள் திரண்டு பொய்யாமணிக்கு உண்மையாக வந்தார்கள். தோழரும் ஏர் பிடித்தார். போலிஸ் பின்வாங்கியது. சாகுபடி செய்த விவசாயிகளே உழும் உரிமையை எம.கே பெற்றுத்தந்தார்.
சட்டமன்றத்தில் அவர் உரை தனித்துவமானது. கூர்மையானது. 1954 கல்வி மானியக் கோரிக்கையின் மீது பேசும்போது, ”ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக புத்தகங்கள் சிலேட்டுகள் மற்ற பொருட்களையும் அரசு தர வேண்டும்" என்றார். இதுதான் இப்போது நடக்கிறது.
1958 ஏப்ரல் 2 அன்று நீதி நிர்வாக அறிக்கையின்மீது பேசும்போது “ஹைகோர்ட்டின் ஒரு பகுதி திருச்சி போன்ற தமிழ் நாட்டின் மத்திய பகுதியில் இருந்தால், பல ஜில்லாக்களுக்கு அது பயன்படும்” என்றார். மதுரையில் இன்று உயர்நீதிமன்ற கிளை வந்துவிட்டது. 1960 லேயே சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் ஏன் தேவை என்பதைப் பேசினார். 1961 ல் தமிழக நகரங்களில் வீட்டுவசதியை அதிகரித்து நகரங்களை விரிவாக்க வேண்டுமென்றார். யாருடைய உரிமையும் பாதிக்காமல் தென்னக நதிகளை பயன்படுத்த ஒரு மாஸ்டர் பிளான் தேவை என்றார். தமிழுக்காக வாதிட்டார்.
விவசாயிகளின் பிரச்னைகளில் அவருக்கிருந்த ஞானம் அபாரமானது. அது அவரின் சட்டமன்ற உரைகளில் எதிரொலிக்கிறது. குத்தகை விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்ற என்னமாதிரியெல்லாம் சட்டம் வளைக்கப்படுகிறது என்பதை 1958-ல் சட்டசபையில் விளக்கினார்.
தோழர் எம்.கே, ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்குமான அதிகாரப் பகிர்வுக்கான புரிதலை முன்வைத்தார். அவர் வார்த்தைகளாலேயே சொல்லலாம் “வளமான தமிழகம். வலிமையான பாரதம்”. இது இன்றைய காலத்தின் தேவையல்லவா.

சிறைக் கொடுமைகளால் விலா எலும்பே முறிந்தது. மோசமான கார் விபத்தால் உடல் சிதைந்தது. “ஓய்வெடுங்கள் தோழர்” என்ற சிலரிடம் அவர் சொன்னார் “வேலை செய்யாமல் ஓய்ந்து இருப்பது சாவதற்குச் சமம். முடிந்தவரை முடிந்த காரியங்களை முடியும் மட்டும் செய்துகொண்டே இருப்போம். இதுதான் தோழர் எம்.கே யின் செய்தி. அது மட்டுமல்ல, தொழிலாளிகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறபோதுதான் எனது உயிர் பிரியவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். அதுவே நடந்தது.
1988 ஜூன் 16 பம்பாய் துறைமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு 19-ம்தேதி டெல்லி பயணமானார். 20-ம் தேதியும் பேச்சுவார்த்தை இருந்த நிலையில் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கேயே இரவு 8 மணிக்கு மரணமடைந்தார். சென்னைக்கு உடல் எடுத்துவரப்பட்டு மிகப்பெரிய மக்கள் ஊர்வலமாக இறுதி நிகழ்வு நடந்தது.
வேலை செய்துகொண்டும் தொழிலாளிகளோடு இருந்தபோதுமே அவர் விரும்பியபடியே தோழர் எம்.கே மரணமடைந்தார். அதனால்தான் தோழர் தா.பாண்டியன் சொன்னார் “YES THE GREAT MAN HAS KEPT HIS WORDS” என்று.