
மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் தலைமையில் பெண் குழந்தைகளுக்கு கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறேன்.
காதல் விவகாரம் காரணமாக அடுத்தடுத்து இரண்டு சிறுமிகள் இறந்துபோன சம்பவங்களால் அதிர்ச்சியிலிருக் கிறது திருச்சி மாவட்டம்.
சம்பவம் - 1
திருச்சி மாநகரை ஒட்டியுள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் அந்த 14 வயது சிறுமி. ஜூலை 6-ம் தேதி, மதியம் 2 மணிக்கு குப்பை கொட்டு வதற்காக வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. ஊருக்கு வெளியேயுள்ள முள் காட்டில், பாதி எரிந்த நிலையில் சடலமாகத்தான் மீட்கப்பட்டது சிறுமியின் உடல்.
சிறுமியின் தாய் நம்மிடம், ‘‘ஸ்கூல் திறந்தா எம் பொண்ணு பத்தாவது போகணும். அவ அடிக்கடி எங்க உறவுக்காரப் பையன் ஒருத்தனோட பேசிக்கிட்டே இருந்தா. அது தெரிஞ்சதும், என் வீட்டுக்காரர் அவளைக் கண்டிச்சார். இவ்வளவுதான் நடந்தது.
இந்த நிலையில, குப்பை கொட்டப் போனவ வீடு திரும்பலை. நாங்க ஊருக்குள்ள தேட ஆரம்பிச்சப்போ, ‘எரிஞ்ச நிலையில பிணமா கிடக்கிறா’னு ஊர்க்காரங்க தகவல் சொன்னாங்க. பதறியடிச்சுக்கிட்டு ஓடினோம். முகத்துல இருந்து வயிறு வரைக்கும் எரிஞ்சு கருகியிருந்துச்சு. பக்கத்திலேயே மண்ணெண்ணெய் கேனும் தீப்பெட்டியும் கிடந்துச்சு. இதை, `தற்கொலை’னு சொல்றாங்க. ஆனா, அவ உடம்பு கிடந்த இடத்துல ஒரு புல்கூடக் கருகலை. அதுதான் எங்களுக்குச் சந்தேகமா இருக்கு. யாரோ கொலை செஞ்சுதான் உடலைக் கொண்டுவந்து போட்டிருக் காங்க. போலீஸ்தான் உண்மையைக் கண்டுபிடிக்கணும்’’ என்றார்.
சம்பவம் -2
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 17 வயது சிறுமி. அவர், தன் உறவினரான ராம்கி என்பவரைக் காதலித்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்கி. இருவரும் நெருக்கமாகப் பழகியிருக்கின்றனர். அதன் விளைவாக, கர்ப்பமடைந்த அந்தச் சிறுமி, வீட்டில் தகவலைச் சொல்லியிருக்கிறார். சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தாலும் வேறு வழியின்றி, ராம்கியின் பெற்றோரிடம் திருமணம் தொடர்பாகப் பேசியிருக்கிறார்கள். அப்போது, ‘கர்ப்பமான பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது’ என்று சொல்லி, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அனுப்பிவிட்டார்களாம் ராம்கியின் பெற்றோர்.

அதையடுத்து, அந்தச் சிறுமியின் சார்பில் மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் ராம்கிமீது புகார் அளிக்கப்பட்டது. ராம்கிமீது போக்சோ உள்ளிட்ட ஏழு பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், வழக்கு பதிவு செய்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் ராம்கி கைது செய்யப்படவில்லை. அதனால், ஜூலை 6-ம் தேதி காவல் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார் பாதிக்கப்பட்ட சிறுமி. போலீஸார் அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பினர். இதற்கிடையில், ராம்கி முன்ஜாமீனும் பெற்றுவிட்டார். இதனால், மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவங்கள்குறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி-யான ஆனி விஜயாவிடம் பேசினோம். “மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் தலைமையில் பெண் குழந்தைகளுக்கு கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறேன். எரிந்த நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அது காதல் விவகாரமாக இருக்கலாம். அந்தச் சிறுமி அவரின் அண்ணன் உறவு முறையான வாலிபருடன் நீண்ட நாள்களாகப் பழகி வந்துள்ளார். சிறுமி தனது பெயரின் முதல் எழுத்தையும், அந்த வாலிபரின் முதல் எழுத்தையும் சேர்த்து உடலில் பச்சை குத்தியிருந்தார். அந்த வாலிபரும் அதேபோலப் பச்சை குத்தியிருக்கிறார். விசாரணை நடத்திவருகிறோம். விரைவில் உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம்.
மணப்பாறை சம்பவத்தில் ராம்கிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இந்த வழக்கில் மெத்தனமாக இருந்த போலீஸார்மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
பெண் குழந்தைகளைப் பெற்றோர் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலமிது!