
துருக்கியின் கஹ்ராமன்மராஸ் (Kahramanmaras) நகர மீட்புக்குழுவினர், டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒரு சிறுவன் இடிபாடுகளில் சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
துருக்கியையும், அதன் அண்டைநாடான சிரியாவையும் ஒருசேர உலுக்கிக்போட்டுவிட்டது நிலநடுக்கப் பேரழிவு. இதுவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னமும் பலி எண்ணிக்கை கூடும் என்கிறார்கள் மீட்புப் பணியினர். ஒரு வாரத்தைக் கடந்துவிட்ட இந்தக் கோர நிகழ்வின் துயர் துடைக்க, உலக நாடுகளெல்லாம் பகை மறந்து, கரம் கோத்திருக்கின்றன. ஒரு மாபெரும் பேரிடருக்கு நடுவே, சீட்டுக்கட்டுகளாகச் சரிந்து விழுந்த கட்டடங்களுக்கு இடையே, அழுகுரல்களுடன் உயிர்களை ஏந்தி நிற்கிறது துருக்கி. இருந்தும் அரவணைக்கும் கைகளால்... தப்பிப் பிழைத்த சில உயிர்களால்... புதிதாகப் பிறந்த சில தளிர்களால் மீண்டும் அங்கே நம்பிக்கை துளிக்கிறது.
துருக்கி எல்லைக்கு அருகேயுள்ள இட்லிப் மாகாணத்தின், ஜிண்டாய்ரிஸ் நகரமும் நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவத்தில் தரைமட்டமானது. மீட்புப்பணிகளில் இறங்கிய குழுவினர் சரிந்து விழுந்திருந்த ஒரு கட்டட இடிபாட்டில் கிரேன்கள் மூலம் தேடியபோது, அதற்குக் கீழே சிக்கி நான்கு பேர்கொண்ட குடும்பமே இறந்து போயிருந்தது. கனத்த இதயத்தோடு அவர்களின் உடல்களை அப்புறப்படுத்திய போது, திடீரென ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. நிலநடுக்கத்தின் அதிர்வில் ஏற்பட்ட வலியில், அந்தக் குழந்தையை இடிபாடுகளுக்குள்ளேயே பிரசவித்துவிட்டு அந்தத் தாய் இறந்துபோயிருக்கிறாள். தொப்புள்கொடி அறுபடாத, அந்தக் குடும்பத்தின் ஒரே எஞ்சிய உயிரைப் பத்திரமாக மீட்ட காணொளி காண்போரை நெகிழச்செய்தது. தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் அந்தக் குழந்தை நலமோடு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

துருக்கியின் கஹ்ராமன்மராஸ் (Kahramanmaras) நகர மீட்புக்குழுவினர், டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒரு சிறுவன் இடிபாடுகளில் சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர். அவனை வாரியணைத்து மேலே தூக்கிக் காப்பாற்றியபோது, தனக்கு என்ன நேர்ந்தது என்றே அறியாத, மூன்று வயதேயான கரண் என்ற அந்தச் சிறுவன் சுற்றியிருப்பவர்களைப் பார்த்து மகிழ்ச்சிப் புன்னகையை அள்ளி வீசுகிறான். தன்னைக் காப்பாற்றிய மீட்புப்பணியாளரை அணைத்து, செல்லமாகத் தலையில் தட்டித் தன் அன்பைப் பகிர்கிறான். அந்தச் சிறுவனின் வீடியோ, பெருந்துயரிலும் ஆனந்தக் கண்ணீரை அனைவர் கன்னங்களிலும் வழியச் செய்திருக்கிறது.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 7 வயது சிறுமி, தன் தம்பியை அணைத்தபடி உயிருக்குப் போராடியிருக்கிறாள். இடிபாடுகள் ஏதும் தன் தம்பிமீது படாதபடி, கான்கிரீட் சுவரைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டு, தாய்க்கு நிகராக அவனை அர வணைத்தி ருக்கிறாள்.
மீட்கப்பட்ட நிலையில், தன் தம்பியின் முகத்தில் படிந்திருக்கும் தூசிகளைத் துடைத்து, அவன் தலையை அன்புடன் அவள் தன்மேல் சாய்த்துக்கொண்ட காட்சி, கனத்த இதயத்தோடு இருந்த உலக மக்களின் நெஞ்சில் நம்பிக்கை ஒளி பாய்ச்சியிருக்கிறது.
இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கும் ஐ.நா பிரதிநிதி முகம்மது சஃபா, அந்த இரு குழந்தைகளும் சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக இடிபாடுகளில் சிக்கியிருந்ததாகவும், `Brave Soul’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இது போன்ற தொடர்ச்சியான நெகிழ்ச்சிச் சம்பவங்கள், பேரழிவில் உயிரிழந்த பல்லாயிரக்\கணக்கானோரின் மரணத்தின் வலியையும் மீறி, நம்பிக்கையின் வெளிச்சத்தை துருக்கி, சிரிய மக்களிடையே துளிர்க்கச் செய்திருக்கிறது.
மேலும், இந்த நாடுகளின் எல்லைகளில் வரிசைகட்டி நிற்கும் உலக நாடுகளின் உணவுப்பொருள், மீட்புக்குழுவினர் வாகனங்கள் மனிதநேயத்தின் மகத்துவத்தைப் பறைசாற்றுகின்றன.