கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

உருக்குலைந்த நிலத்தில் சிதையாத நம்பிக்கை!

துருக்கி நிலநடுக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
துருக்கி நிலநடுக்கம்

‘என்ன நடந்தாலும் குழந்தைக்காக வாழ வேண்டும்' என்று தனக்குள் தைரியம் சொல்லிக்கொண்டார். சிக்கியிருந்த அந்த நிலையிலும் தன் குழந்தைக்குப் பால் கொடுக்க முடிந்தது அவருக்கு நம்பிக்கை தந்தது.

மிகப்பெரும் பேரழிவிலும் சில அதிசயங்கள் நடக்கும். சுமார் 33,000-க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்ட துருக்கி, சிரியா பூகம்பத்தில் நெக்லா கேமஸ் அப்படித்தான் தன் குழந்தையுடன் பிழைத்தார். நெக்லாவுக்கு 10 நாள்களுக்கு முன்பு மகன் பிறந்தான். துருக்கியின் சமன்டாக் நகரில் இருக்கும் ஒரு ஐந்து மாடிக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தது அவர்களின் வீடு.

நெக்லா தன் பத்து நாள் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்த போது நிலம் நடுங்கியது. புதிய, வலிமையான இந்த வீடு பாதுகாப்பானது என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தபோதே அந்தக் கட்டடம் அப்படியே நொறுங்கிச் சரிந்தது. கணவனும் மூத்த பையனும் இன்னொரு அறையில் இருக்க, அவர்களின் பெயரைச் சொல்லிக் கதறிக்கொண்டே நெக்லா நினைவிழந்தார்.

அவருக்கு நினைவு திரும்பிக் கண்விழித்தபோது, அவருக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் இருட்டு. கத்திப் பார்த்தார், அழுது பார்த்தார், எந்த திசையிலிருந்தும் எந்த பதிலும் இல்லை. தான் இருக்கும் சூழலை ஆராய்ந்தார். சுவர்கள் நொறுங்கிக் கிடக்க, அவர் அறையிலிருந்த அலமாரி ஒன்று குறுக்கே சாய்ந்து விழுந்திருந்தது. அதன் அடியில்தான் அவர் தன் குழந்தையுடன் சிக்கியிருந்தார். சுவர்களுக்கு அடியில் நசுங்கிச் சாகாதபடி அந்த அலமாரி அவரைக் காப்பாற்றியிருந்தது.

உருக்குலைந்த நிலத்தில் சிதையாத நம்பிக்கை!

சட்டென குழந்தையை அவர் கரங்கள் ஆறுதலுடன் பற்றின. அவர் மார்பில் பால் குடித்தபடி உறங்கியிருந்தது குழந்தை. தன் குழந்தையின் சீரான சுவாசத்தை உணர்ந்து அவர் நிம்மதியானார். இடிபாடுகளால் எழுந்த தூசுகள் அவரை சுவாசிக்க விடாமல் செய்தாலும், கொஞ்ச நேரத்தில் அவை அடங்கி நிலைமை சீரானது. அங்கிருந்து நகர முயன்றால், இடிபாடுகளுக்குள் நசுங்கிவிடுவோமோ என்று பயந்து அப்படியே இருந்தார். அலமாரியில் மட்டும் தட்டி சத்தம் எழுப்பிப் பார்த்தார். 'நம்மை மீட்க யாருமே வர மாட்டார்களா?' என்ற பயம் அவரை நிலைகுலைய வைத்தது. கணவருக்கு என்ன ஆனது, மகன் என்ன ஆனான் என்ற கேள்விகள் அவரை வாட்டின.

‘என்ன நடந்தாலும் குழந்தைக்காக வாழ வேண்டும்' என்று தனக்குள் தைரியம் சொல்லிக்கொண்டார். சிக்கியிருந்த அந்த நிலையிலும் தன் குழந்தைக்குப் பால் கொடுக்க முடிந்தது அவருக்கு நம்பிக்கை தந்தது. குழந்தை அழுதபோதெல்லாம் பால் கொடுத்து ஆற்றுப்படுத்தினார். ஆனால், தன் பசிக்கு என்ன செய்வது? சாப்பிடவோ, குடிக்கவோ எதுவும் இல்லை. தன் மார்பில் சுரக்கும் பாலையே தான் குடிக்க முயன்று தோற்று அழுதார்.

உருக்குலைந்த நிலத்தில் சிதையாத நம்பிக்கை!

எங்கும் சூழ்ந்த இருளில் தான் இருப்பது பகலா, இரவா தெரியவில்லை. எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்பதும் புரியவில்லை. திடீரென இடிபாடுகளை அப்புறப்படுத்தும் சத்தமும், மனிதர்களின் குரலும் சன்னமாகக் கேட்கும். அப்போது தன் சக்தியையெல்லாம் திரட்டி கத்திப் பார்ப்பார் நெக்லா. ஆனால், அந்த சத்தங்கள் கொஞ்ச நேரத்தில் விலகிப் போய்விடும்.

90 மணி நேரம் கடந்து, தொண்டை உலர்ந்து, அடிவயிறு சுருண்டு, தான் இனிப் பிழைப்பது கடினம் என்று அவர் நம்பிக்கையிழந்த ஒரு தருணத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இது கனவா என்று அவர் திகைத்தார். ஆனால், நிஜம். மோப்ப நாய்கள் அவர் புதைந்திருப்பதை உணர்ந்து குரைத்தன. கூடவே வந்த தீயணைப்பு வீரர்கள் டார்ச் அடித்து அவர் சிக்கியிருக்கும் சூழலைக் கண்டுகொண்டனர். 90 மணி நேரம் கழித்து நெக்லா பார்த்த முதல் வெளிச்சம் அதுதான்.

உருக்குலைந்த நிலத்தில் சிதையாத நம்பிக்கை!

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டனர். கணவரும் தன் மூன்று வயது மகனும் காயங்களுடன் பிழைத்துவிட்டனர் என்ற நிம்மதிச் செய்தி அவருக்கு மருத்துவமனையில் கிடைத்தது. வீட்டையும் உடமைகளையும் இழந்து இப்போது தற்காலிக நிவாரண முகாம் ஒன்றில் நெக்லாவின் குடும்பம் இருக்கிறது. எல்லாவற்றையும் இழந்தாலும், பிழைத்திருக்கிறோம் என்ற நிம்மதி அவர்களுக்கு ஆறுதல். நிறைய பேருக்கு அதுவும் இல்லையே!

இப்படி துருக்கி எங்கும் பல அதிசயக் கதைகள். ஐந்து நாள்கள் கழித்து இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீண்ட ஐந்து பேர் கொண்ட குடும்பம், 132 மணி நேரம் சிக்குண்டு கிடந்து மீண்ட ஏழு வயதுச் சிறுமி... அர்த்தமுள்ள பணி செய்கிறோம் என்று மீட்பர்களுக்கு நம்பிக்கையளிக்கும் சாகசக் கதைகள் துருக்கியிலிருந்து வந்துகொண்டே இருக்கின்றன.

பூமியின் இரண்டு கண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளும் ஆபத்தான பூகம்பப் பகுதியில் அமர்ந்திருக்கிறது துருக்கி தேசம். கடந்த நூறாண்டுகளில் இப்படி ஒரு பேரழிவை இந்தப் பிரதேசம் சந்தித்ததில்லை. துருக்கியும் சிரியாவும் சந்திக்கும் எல்லையை ஒட்டிய இருநாட்டுப் பகுதிகளையும் குலைத்துப் போட்டிருக்கிறது பூகம்பம்.

உருக்குலைந்த நிலத்தில் சிதையாத நம்பிக்கை!

அழிவு பெரிதாக இருந்தாலும், உதவிக்கரங்களும் அதிகம் நீண்டுள்ளன. இந்தியா உட்பட கிட்டத்தட்ட 100 நாடுகள் மீட்புப் பணிக்காக குழுக்களையும் நிவாரண உதவிகளையும் அனுப்பியுள்ளன. ஆர்மீனியாவுக்கும் துருக்கிக்கும் 35 ஆண்டுகளாக மோதல். இரு நாடுகளின் எல்லை மூடப்பட்டுக் கிடந்தது. பூகம்ப நிவாரணப் பணிகள் விரைந்து நடப்பதற்காக, அந்த எல்லையைத் திறந்துவிட்டிருக்கிறது ஆர்மீனியா.

சிரியா அரசப் படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் அங்கு ஓயாமல் யுத்தம் நடக்கிறது. இந்த யுத்தத்தால் உருக்குலைந்த பகுதியை பூகம்பம் தன் பங்கிற்கு மேலும் சிதைத்திருக்கிறது. கிளர்ச்சிக் குழுக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப்பகுதிக்கு ஐ.நா உதவிகள் செல்ல அனுமதித்திருக்கிறது சிரியா அரசு.

இப்படி கான்க்ரீட் குப்பைகளுக்கு மத்தியில் மனிதம் பூத்தாலும், மனதைப் பிசையும் அவலங்களும் தொடர்கதையாக இருக்கின்றன. இரு நாடுகளிலும் இறப்பு தொடர்கதையாக இருக்க, மொத்த உயிரிழப்பு 50,000-த்தைத் தாண்டலாம் என்கிறார்கள். இரு நாடுகளிலும் இரண்டரைக் கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருக்க, சிரியாவில் மட்டுமே 53 லட்சம் பேர் வீடுகளை இழந்து வீதியில் நிற்கிறார்கள். பூஜ்ஜியம் டிகிரிக்கும் கீழே செல்லும் உறைபனி காலக் குளிர் வெளியில் வாட்ட, பசி எனும் அரக்கன் உள்ளே வாட்ட, என்ன செய்வது என்று புரியாமல் அவர்கள் தவிக்கிறார்கள்.

உருக்குலைந்த நிலத்தில் சிதையாத நம்பிக்கை!

தங்களை மீட்க யாரேனும் வருவார்கள் என்ற நம்பிக்கையில் துளியாக ஒட்டியிருக்கும் உயிரைப் பற்றிக்கொண்டு இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்க வேண்டியது அவசரப் பணி. மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வேண்டும், வீடிழந்து நிற்பவர்களுக்கு கூடாரங்கள் வேண்டும், எல்லோருக்கும் பசி தீர்க்க உணவு தர வேண்டும். இதையெல்லாம் செய்வதற்குப் பல நாடுகளின் குழுக்கள் வந்து இறங்கியிருக்கின்றன.

ஆனால், பூகம்பம் பாதித்த தெற்கு துருக்கியில் குர்து இன தீவிரவாதக் குழுக்களும், சிரியா நாட்டுப் போராளிக் குழுக்கள் சிலவும் செயல்படுகின்றன. இவர்கள் அடிக்கடி அரசுப் படைகளோடு மோதி துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருக்க, மீட்புப் பணிகளே இதனால் தாமதமாகின்றன.

போரில் சீரழிந்த சிரியாவிலோ, நிலைமை இன்னும் துயரம். அரசுக்கு எதிரான குழுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பிரதேசத்தில் ஏற்கெனவே 40 லட்சம் பேர் முகாம்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்து உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்க, மிச்சம் இருந்தவர்களின் வீடுகளையும் நொறுக்கி அகதிகள் முகாமுக்கு அனுப்பிவிட்டது பூகம்பம். அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலிருந்து மக்கள் நிவாரணப் பொருள்களையும் உணவுகளையும் அனுப்பினர். ஆனால் இந்தப் பகுதிகளை நிர்வாகம் செய்யும் ஹயாத் தாஹிர் அல்-ஷாம் என்ற கலகக் குழு, அவற்றை ஏற்காமல் திருப்பி அனுப்பிவிட்டது.

குடும்பத்துடன் நெக்லா கேமஸ்
குடும்பத்துடன் நெக்லா கேமஸ்

அந்த மக்களுக்கு இப்போது உதவிகள் செல்வதற்கு துருக்கியிலிருந்து ஒரே ஒரு பாதை மட்டுமே இருக்கிறது. ‘இந்த வழியாக நிவாரணப் பொருள்கள் வரலாம்' என்கிறது அந்தக் குழு. ஆனால், துருக்கிக்கே நிறைய உதவிகள் தேவை என்கிறபோது, எல்லை தாண்டி சிரியாவுக்கு எதுவுமே வரவில்லை. இடிபாடுகளில் சிக்கியிருந்த ஏராளம் மக்கள், மீட்பர்கள் வராததால் உயிரிழந்தார்கள். இன்னும் பலர் குளிரில் நடுங்கியும், பட்டினியில் வதங்கியும் சாகிறார்கள். ‘‘சிரியா மக்கள் அனுபவிக்கும் இந்த வலியை விவரிப்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை'' என்று சொல்கிறார் ஐ.நா அதிகாரி மார்ட்டின் கிரிஃபித்.

சிரியா மக்கள் அகதிகளாக கடல் கடந்தபோதும் இந்த உலகம் அவர்களைக் கைவிட்டது. இப்போது பூகம்பத்தில் வீதிக்கு வந்தபோதும் உலகம் அவர்களைக் கைவிட்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் துருக்கியில் அரசு மீதான மக்கள் கோபம் அதிகரித்துள்ளது. கடந்த 99-ம் ஆண்டு துருக்கியில் இதேபோல பூகம்பம் வந்து 17,000 பேர் இறந்தார்கள். அப்போது பூகம்பத்தைத் தாங்குவது போன்ற கட்டுமானங்கள் இனி கட்டாயம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. பூகம்ப வரி என்ற புதிய வரியும் வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்படி வசூலிக்கப்பட்ட வரியை வைத்து மருத்துவமனை போன்ற அரசுக் கட்டடங்கள் பாதுகாப்பாகக் கட்டப்படவும் இல்லை; விதிகளின் படி தனியார் கட்டடங்கள் கட்டப்படுவதை யாரும் உறுதி செய்யவும் இல்லை. இதனால்தான் பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இப்போது தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதையாக கான்டிராக்டர்கள், கட்டட அனுமதி தந்த அதிகாரிகளைக் கைது செய்து வருகிறது துருக்கி அரசு.

விதிகளை மீறி எந்த ஒரு பிரதேசம் கான்க்ரீட் காடாக வளர்ச்சி அடைந்தாலும், ஒரு பேரழிவில் அந்த மக்கள் கையறு நிலைக்கு ஆளாவார்கள் என்பது துருக்கி எல்லோருக்கும் தந்திருக்கும் பாடம்.