ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

மஞ்சளும் இஞ்சியும் இன்றி அமையாது பொங்கல்! - அவசியம் அறிய வேண்டிய ‘பொங்கல்’ மகத்துவங்கள்

மஞ்சள்
பிரீமியம் ஸ்டோரி
News
மஞ்சள்

நாகரிக மாற்றத்தால், அந்த விஷயங்களை நாம் மறந்து வருவதுடன், நலவாழ்விலிருந்தும் விலகி வருகிறோம்

ஆடி மாதம் விதைத்த நெற்பயிரை அறுவடை செய்து பயன்பெறுவதுடன், வேளாண் தொழிலுக்கு வந்தனை செய்து கொண்டாடி மகிழ்வதுதான் பொங்கல் திருநாள். தமிழர்களின் பாரம்பர்யம் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாகத் திகழும் இந்தப் பண்டிகையில், நெற்பயிர் மற்றும் கரும்புக்கு இணையான முக்கியத்துவம் கொண்டிருக்கும் மஞ்சளும் இஞ்சியும், நமக்கு நல்வாழ்வு தரும் அற்புத மூலிகைகள். நலக்குறியீடாகவும் இவை பொங்கல் பண்டிகையில் பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் நம்மில் பலருக்கும் தெரியாது. இதுகுறித்து அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சிறப்பம்சங்களை நினைவூட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த, சித்த மருத்துவர் வேலாயுதம்.

வேலாயுதம்
வேலாயுதம்

“தமிழர் மரபில் மஞ்சளை வணங்கிவிட்டுத் தான் பெரும்பாலான நிகழ்வுகளும் நடத்தப் படுகின்றன. குறிப்பாக, எந்தப் பயிர் விளைச்ச லாக இருந்தாலும், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வணங்கிவிட்டு நடவு பணியைத் தொடங்குவதுதான் நம் முன்னோர் மரபு. மங்களகரத்தின் குறியீடான மஞ்சள், மிகச் சிறந்த கிருமிநாசினி. எனவேதான், புதிதாகத் தொடங்கும் எந்த ஒரு காரியத்திலும் மஞ்சள் முன்னிலை வகிக்கும். முந்தைய காலத்தில், புத்தாடையை மஞ்சள் கலந்த நீரில் நனைத்துக் காயவைத்து தைத்திருநாளில் மக்கள் உடுத்து வது வழக்கம். காலப்போக்கில் அந்தப் பழக்கம் மருவி, புத்தாடைகளில் சிறிதளவேனும் மஞ்சள்வைத்து உடுத்துவதைப் பலரும் கடைப் பிடிக்கின்றனர்.

மஞ்சள் நீர் தெளிக்கப்பட்ட களத்தில்தான் சூரிய பொங்கல் வழிபாடு நடக்கும். மஞ்சள் பூசிய புதுப்பானையில்தான் பொங்கல் வைப்பார்கள். ஆண்டு முழுக்கவே செழுமை நீடிக்க வேண்டும் என்பதற்காக, கிழங்குடன் கூடிய மஞ்சள் செடியை மடித்து, பொங்கல் வைக்கும் முன்னரே பானையின் கழுத்துப் பகுதியில் கட்டிவிடுவார்கள். தவிர, பச்சரிசி, வெல்லம், நெய் போன்ற உணவுப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் சிறந்த உணவான பொங்கலில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் ஏதாவது இருந்தாலும், அதை முறிப்பதற்காகவே அரிசி சேர்க்கும்போதே சிறிதளவு மஞ்சள் துண்டும் அதனுடன் சேர்க்கப்படும் அல்லது ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்க்கப்படும்.

மஞ்சளும் இஞ்சியும் இன்றி அமையாது பொங்கல்! - அவசியம் அறிய வேண்டிய ‘பொங்கல்’ மகத்துவங்கள்

மாட்டுப் பொங்கல் நிகழ்வில், மாடு களைக் குளிப்பாட்டி, அவற்றின் உடல் முழுக்க மஞ்சள் பூசி, கொம்பில் கிழங்குடன் கூடிய மஞ்சள் செடியைக் கட்டிவிடுவார்கள். வழிபாடு முடிந்ததும், படையலில் வைக்கப்பட்ட மஞ்சள் கிழங்கில் சிறு பகுதியை மாட்டுக்கும் உண்பதற்குக் கொடுப்பார்கள். உறவுகளைக் கண்டுகளித்து அன்பு பாராட்டும் மூன்றாம் நாள் நிகழ்வான காணும் பொங்கலில், உறவுகளுக்குக் கொடுக்கும் சீர்வரிசைப் பொருள்களிலும் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு.

பொங்கல் நன்னாளில், கோயில், ஜல்லிக்கட்டு போன்ற அதிக கூட்டம் மிகுந்த இடங்களுக்கும் மக்கள் குடும்ப மாகச் செல்வார்கள். எனவே, கிருமித் தொற்று ஏற்படுவதைத் தடுக்க, பொங்கல் பண்டிகையின் கடைசி நாளில், ‘மஞ்சள் நீர் விளையாட்டு’ கடைப்பிடிக்கப் படுகிறது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மஞ்சள்நீரை வைத்து, வழியில் செல்வோர்மீது தெளிப்பார்கள். ஒருவர் மீது மற்றொருவர் மஞ்சள் நீர் தெளித்து மகிழ்வதுடன், ஊர் முழுக்கவும் மஞ்சள் நீரைத் தெளிப்பார்கள். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த பண்டிகையைப் போல, உலகில் வேறொரு கலாசாரப் பண்டிகையைக் காண்பது அரிது” என்று பொங்கல் திருநாள் பெருமிதத்தை அடுக்கும் வேலாயுதம், பொங்கலில் இஞ்சி சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை யும் பகிர்ந்தார்.

“மஞ்சள் வகையைச் சேர்ந்த இஞ்சி, அமிர்தத்துக்கு இணையான மருத்துவ உணவு. புதிதாக அறுவடை செய்த நெற்கதிரில் கிடைத்த பச்சரிசியில் பொங்கல் வைக்கும்போது, வாயுத் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது. அதையும், பொங்கல் சாப்பிட்டதும் மந்தத் தன்மை ஏற்படுவதைத் தவிர்க்கவும், வெல்லம் சேர்க்கும் போது சிறிதளவு இஞ்சியும் சேர்க்கப்படும். வழிபாட்டின்போது பொங்கல் படையலில் கிழங்குடன் கூடிய இஞ்சி செடியும் இடம் பெற்றிருக்கும். பின்னர், அந்த இஞ்சியை வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவதே சுக்கு. ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை’ எனப் புகழப்படுகிற இதனை, பெரும்பாலான உணவுகளிலும் பயன்படுத்தலாம்.

மஞ்சளும் இஞ்சியும் இன்றி அமையாது பொங்கல்! - அவசியம் அறிய வேண்டிய ‘பொங்கல்’ மகத்துவங்கள்

தை மாதத்தில், சூரியன் தென் திசையிலிருந்து வட திசைக்குத் திரும்புவதால், முன்பனி முடிந்து பின்பனி தொடங்கும். இந்தப் பருவ மாற்றத்தால், சளி, ஜலதோஷம் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கவும், புதிய கிருமிகள் உருவாவதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளவும் மஞ்சளும் இஞ்சியும் பெருமளவில் உதவுகின்றன. பண்டிகை முதற்கொண்டு எல்லா நிகழ்வுகளிலும் காரண காரியத்துடனேயே நம் முன்னோர்கள் பல்வேறு விஷயங்களையும் கடைப்பிடித்துள்ளனர். நாகரிக மாற்றத்தால், அந்த விஷயங்களை நாம் மறந்து வருவதுடன், நலவாழ்விலிருந்தும் விலகி வருகிறோம். எனவே, கிராமம் நோக்கிச் சென்று, மண் சார்ந்த பாரம்பர்ய அடையாளங்களுடன், உறவுகளுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வதுடன், வழக்கொழிந்துவரும் மரபு மற்றும் உணவுக் கலாசாரங்களை அழிந்து விடாமல் காப்போம்” என்ற வேண்டுகோளுடன் முடித்தார் வேலாயுதம்.