
காலேஜ் வாழ்க்கைதான் எங்களை முதன்முதல்ல பிரிச்சது. அபி, ஒடிசாவுக்கு NIT Rourkela-க்கு படிக்கப் போனார். நான் ராஜஸ்தான் BITS pilani-க்குப் படிக்கப் போனேன்
`வாவ்... செம போட்டோகிராபி. டைம் கம்போசைட் போட்டோஷாப்ல ஒருவர் கெத்தா நடந்து வர்றப்போ வெவ்வேறு பிரேமிங்ல பதிவு செய்யப்பட்டதா இருக்கணும். அல்லது ஒருத்தரோட வெவ்வேற ரெண்டு போட்டோக்களைச் சேர்த்து போட்டோஷாப்ல அழகா எடிட் பண்ணியிருக்கணும்!'

- ட்விட்டர் டைம்லைனில் அந்த போட்டோவைப் பார்த்த எல்லோரும் ஒருவருடையதுதான் என சூடம் ஏற்றிச் சத்தியமே செய்திருப்பார்கள். அவ்வளவு ஏன், நானும்கூட ட்வீட்டில் அந்த போட்டோவை ஷேர் செய்திருந்த அரவிந்தன் ஐ.பி.எஸ் எழுதியிருந்த கேப்ஷனைப் படிக்கும்வரை அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆம். அதில் படிகளில் மேலே நிற்பவர் அரவிந்தன் அல்ல... அபிநந்தன் டி.ஏ.என்.ஐ.பி.எஸ் (DANIPS-டெல்லி, அந்தமான் நிகோபார் போலீஸ் சர்வீஸ்) தற்போது தெற்கு டெல்லி போலீஸில் அசிஸ்டென்ட் கமிஷனராகப் பணிபுரிகிறார். கீழே இருப்பவர்தான் மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல இயக்குநராக இருக்கும் அரவிந்தன் ஐ.பி.எஸ். நேர்மையானவர், துடிப்பானவர் எனத் தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்ட இளம் அதிகாரி.
ஆச்சர்யத்தில் அரவிந்தன் ஐ.பி.எஸ்ஸிடம் பேசினேன்.
``வாழ்த்துகள்... டைரக்டர் ஹரி கண்ணுல பட்டிருந்திருந்துச்சுன்னா இந்நேரம் உங்க போட்டோவை வெச்சே ஸ்கிரிப்ட் யோசிச்சிருப்பார்! உக்ரைன் பாக்ஸர்ஸ் க்ளிட்ச்கோ பிரதர்ஸ் போல ஒரே மாதிரி இருக்கீங்க!’’ என்றதும், சிரித்தார்.

``ஹாஹா... எல்லோரும் அப்படித்தான் ஆரம்பத்துல இது என்னோட போட்டோ மட்டும்னு நினைச்சாங்க. ஆமாம் நாங்கள் இரட்டையர்கள். நெய்வேலிலதான் பிறந்து வளர்ந்தோம். அப்பா நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் இன்ஜினீயராகப் பணிபுரிந்து 2016-லதான் ரிட்டையர் ஆனார். அம்மா ஹோம் மேக்கர். நாங்க இரட்டைக் குழந்தைகளா பிறந்ததும் பெற்றோர் ராம்- லெட்சுமண் எனப் பெயர் வைக்கலாம்னு ஐடியா வெச்சிருந்தாங்களாம். அப்புறம் சாமி பெயரை வெச்சுட்டா கூப்பிட்டுத் திட்ட முடியாது, அடிக்க முடியாதுன்னு அரவிந்தன்-அபிநந்தன்னு வெச்சுட்டாங்க. சில மணித்துளிகள் முன்னாடி பிறந்ததால என்னை அண்ணன்னு கூப்பிடச் சொல்லுவாங்க. ஆனால், நாங்க ஃப்ரெண்ட்ஸ் மாதிரிதான் வளர்ந்தோம். எல்.கே.ஜில இருந்து ப்ளஸ் டூ வரை நெய்வேலி ஜவஹர் ஸ்கூல்ல ஒரே க்ளாஸ்லதான் படிச்சோம். எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்புல மட்டும் வேறவேற க்ளாஸ்ல இருந்தோம். படிப்புலயும் ஸ்போர்ட்ஸ்லயும் ரெண்டு பேருக்கும் ஒரே அளவுல ஆர்வம். ரொம்ப ஆச்சர்யம் என்னன்னா ரெண்டு பேருக்குமே எல்லா விஷயத்துலயும் ஒரே டேஸ்ட். பேட்மின்டன், ஸ்விம்மிங், செஸ்னு லிஸ்ட் நீளம்... அத்லெட்டா ரெண்டு பேருமே ஸ்கூல் டேஸ்ல ஃபிட்டா இருப்போம். அதேபோல சாப்பாட்டு விஷயத்துலயும் ஒரே மாதிரி சாப்பிடுவோம். படிப்புலயும் நாங்க ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே மார்க்தான் எடுப்போம். கொஞ்ச முன்னப்பின்ன இருந்தாலும் ரேங்க் கார்டுல எங்க ரெண்டு பேருக்கும் பெரிய வித்தியாசமே இருக்காது. புதுசா பார்க்குற யாருமே குழம்பிப் போயிடுவாங்க. பொதுவா இரட்டையர்கள்ல ஒருத்தர்கிட்டயாவது சின்னதா கேரக்டர் மாற்றம் இருக்கும்னு சொல்வாங்க. ஆனா, எங்க விஷயத்துல அப்படியே ஒண்ணா இருந்துச்சு. எனக்குப் பிடிச்ச நடிகர்கள் மாதவன், சூர்யா... அபிக்கும் அவங்களைத்தான் பிடிக்கும். எனக்கு சௌத் இந்தியன் ஃபுட் புடிக்கும்னா அபிக்கும் அதான். தமிழில் யதார்த்தமா வரும் போலீஸ் படங்களை ரசிச்சுப் பார்ப்போம். `வேலூர் மாவட்டம்' என்ற படத்துல ஆரம்பிச்சு `டாணாக்காரன்'வரை எனக்குப் பிடிச்ச போலீஸ் சினிமாக்கள் அபிக்கும் பிடிக்கும். இப்படி சொல்லிட்டே போகலாம்.

காலேஜ் வாழ்க்கைதான் எங்களை முதன்முதல்ல பிரிச்சது. அபி, ஒடிசாவுக்கு NIT Rourkela-க்கு படிக்கப் போனார். நான் ராஜஸ்தான் BITS pilani-க்குப் படிக்கப் போனேன். வெவ்வேற காலேஜ்னாலும் படிக்கிறப்பவே போலீஸ் சர்வீஸ் மேல ரெண்டு பேருக்குமே காதல். ஆனா, நான் பி.இ கம்யூட்டர் சயின்ஸ் முடிச்சு பெங்களூரு `ஐபிஎம்'ல பார்த்திட்டு இருந்த வேலையை ராஜினாமா பண்ணிட்டு, 2009-ல யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதினேன். முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ் கிடைச்சு ஹோம் கேடர் தமிழ்நாட்டுலயே போஸ்ட்டிங்கும் கிடைச்சது. அபிநந்தன் வேலையில பிஸியா இருந்ததால அப்போ தேர்வு எழுதல. ஆனா, 2012-ல முதன்முறை தேர்வு எழுத வந்தப்போ, யூ.பி.எஸ்.சி ட்ரெண்ட் மாறிப்போயிருந்துச்சு. நான் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ந்தெடுத்துப் படிச்ச சோஷியாலஜி மற்றும் ஜியாகிரபி பாடங்களையும் மெட்டீரியலையும் வெச்சு அபியும் அதே விருப்பப் பாடத்தை எடுத்துப் படிச்சதை மறக்க முடியாது. என்.டி.பி.சி-யில இன்ஜினீயர், இன்கம்டாக்ஸ் இன்ஸ்பெக்டர், ஐ.எஃப்.எஸ்.சி.ஏ ஆபீசர்னு ஒரு பெரிய வட்டம் போட்டு 2019-ல அபியும் காக்கி யூனிஃபார்ம் கனவை நிறைவேத்தின மொமன்ட் எனக்கு அவ்வளவு சந்தோஷம். என்னைப்போலவே அபியும் போலீஸ் மட்டும்தான் விருப்பத் தேர்வா செலக்ட் பண்ணியிருந்தார். தம்பியோட வெற்றி தாமதமானாலும் தரமான வெற்றியா இருந்தது மகிழ்ச்சி.
ஒண்ணாவே பிறந்து ஒண்ணாவே படிச்சு ஒரே யூனிஃபார்ம் மாட்டுறதெல்லாம் ரொம்பப் பெருமையா நினைக்குறேன்.
சில நாள்களுக்கு முன் அபியோட போலீஸ் டிரெய்னிங்கில் `பாரத் தர்ஷன்'னு ஒரு புரொகிராமுக்காக இந்தியா முழுக்கப் பயணம் செஞ்சார். அப்போ மகாபலிபுரம் வந்திருந்தார். நான் அப்போ செங்கல்பட்டு எஸ்.பியா இருந்தேன். அதனால அபியைப் பார்க்கப் போயிருந்தேன். நாங்க எங்களுக்குப் பிடிச்ச காக்கி யூனிஃபார்ம்ல ஒரு போட்டோ எடுத்துக்கிட்டோம். `டெல்லி போலீஸும் தமிழ்நாடு போலீஸும் சந்தித்தபோது'ன்னு கேப்ஷன் போட்டிருந்ததால இதை டெல்லில எடுத்ததா எல்லோரும் நினைக்கிறாங்க. வாழ்த்துமழைல நனைய வெச்சுட்டாங்க. ஒரு பதிவா எடுத்துக்கலாம்னு நினைச்ச ஒரு சின்ன க்ளிக் இந்த அளவுக்கு வைரல் ஆகும்னு சத்தியமா நினைக்கலை.
ஒரே ட்வீட்தான். ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் ஷேரிங்குகளோடு பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்திடுச்சு. நெய்வேலில முதன்முதல்ல நான் சிவில் சர்வீஸ் தேர்வானப்போ ஊரே என்னைக் கொண்டாடுச்சு. அப்புறம் நிறைய நண்பர்கள் சர்வீஸுக்கு வந்தாங்க. இதோ என் சகோதரன் அபியும் அதில் ஒருவன் என்பதில் அத்தனை பெருமை எனக்கு!’’ என்று நெகிழ்ந்தார் அரவிந்தன் ஐ.பி.எஸ்.

டெல்லி போலீஸில் அசிஸ்டென்ட் கமிஷனராக கரியரைத் தொடக்கிக் கலக்கிக் கொண்டிருக்கும் அபிநந்தனிடம் வாழ்த்துகள் சொல்லிப் பேசினேன். ``எதனால போலீஸ் மட்டும்தான் ஆகணும்னு ரெண்டு பேரும் உறுதியா இருந்தீங்க?’’ என அரவிந்தனிடம் கேட்ட அதே கேள்வியை அபிநந்தனிடமும் கேட்டேன். அரவிந்தன் சொன்ன அதே பதிலை இவரும் சொன்னதுதான் மில்லியன் டாலர் ஆச்சர்யம்.
``முதல் காரணம் காக்கி மேல எங்களுக்கிருந்த காதல். அப்புறம் எங்களைப் பொறுத்தவரை மக்களுடன் நேரடித் தொடர்புல இருக்குற சர்வீஸா போலீஸைப் பார்க்குறோம். ஐ.ஏ.எஸ்லகூட மக்களுடன் நேரடித் தொடர்புங்குறது கலெக்டர் பதவிக்கு அப்புறம் டைரக்டர், செக்ரட்டரின்னு பாலிஸி மேக்கிங்கா மாறிடும். ஆனா, போலீஸ்ல கடைசிவரை மக்களுக்குப் பக்கத்துல நிற்க வேண்டியிருக்கும். சர்வீஸ்னு வந்துட்டா போலீஸ் சர்வீஸ்ல இன்னும் மக்களுக்கு நெருக்கமா உதவ முடியும்ல...அதான்!’’ என்றனர்.
சல்யூட் சூப்பர் காப்ஸ்!