சினிமா
Published:Updated:

போர்... ஆமாம் போர்!

#TwitterBan, #InstagramBan, #WhatsappBan
பிரீமியம் ஸ்டோரி
News
#TwitterBan, #InstagramBan, #WhatsappBan

‘பயனாளர்களின் பிரைவசி பாதிக்கப்படும்’ என வாட்ஸ்அப் முன்வைக்கும் வாதத்தில் உண்மை இருக்கவே செய்கிறது

மே 25. ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லி, பழைய நினைவுகளைப் பகிர்ந்து ட்விட்டருக்குப் பிரியாவிடை கொடுக்கத் தயாராகினர் நெட்டிசன்கள். ‘அடுத்த நாள் ட்விட்டரை இழுத்து மூடப்போகிறது இந்திய அரசு’ என்று வந்த தகவல்கள்தான் காரணம். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் மே 26-ல் அமலுக்கு வரவிருந்தன. அவற்றைப் பின்பற்றாத நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதிக்கப்படாது என அரசுத் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இருந்தும் ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சேவைகள் புதிய விதிகளைப் பின்பற்ற முரண்டுபிடித்தன. அதனால் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் #TwitterBan, #InstagramBan, #WhatsappBan போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகின.

ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ் இந்தப் புதிய விதிகளை பிப்ரவரி மாதம் சேர்த்தது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம். ‘Intermediary Guidelines and Digital Media Ethics Code’ என இதை அழைக்கிறது. அதன்படி இந்தியாவில் 50 லட்சம் பயனாளர்களுக்கு மேல் கொண்டிருக்கும் சமூக வலைதளங்கள் அரசின் புதிய விதிகளை ஏற்று அதன்படி நடக்க வேண்டும். இல்லையென்றால் அவை ‘Intermediary’ சேவைகளாக ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த ‘Intermediary’ என்ற ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்களுக்கு மிக முக்கிய அரண். அப்படி இருக்கும்போது அதன் சேவையைப் பயன்படுத்தும் பயனாளர்களின் கருத்துகளுக்குப் பழி ஏற்க வேண்டியதில்லை.

இந்தப் புதிய விதிகளில் பல அம்சங்கள் இருந்தாலும் சர்ச்சைக்குள்ளாகியிருப்பது இரண்டு அம்சங்கள்தான். அதில் முக்கியமானது, முதன்முதல் அனுப்புநரை ட்ராக் செய்யக் கோரும் விதி. இதன்படி வாட்ஸ்அப், சிக்னல் போன்ற சேவைகள் ஒரு மெசேஜ்/வீடியோ/போட்டோவை முதலில் பகிர்ந்தவர் யார் என்பதை அரசு கேட்டால் அடையாளம் காட்டவேண்டும். இதன்மூலம் போலிச் செய்திகள், அவதூறுகள், குழந்தை வதை உட்பட குற்றங்கள் புரிவோரைக் கண்டறியலாம் என்கிறது அரசு. பல வருடங்களாகவே இந்த விஷயத்தில் வாட்ஸ்அப்பும் மத்திய அரசும் மோதிக்கொண்டுதான் இருக்கின்றன. வாட்ஸ்அப் ஹிட்டடிக்க முக்கிய காரணம், எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷன். ஒருவர் அனுப்பும் மெசேஜை இடையில் இருக்கும் யாரும் இடைமறித்துப் பார்க்கமுடியாது என்பதுதான் அதன் சிறப்பம்சம். வாட்ஸ்அப் நினைத்தாலும்கூட நீங்கள் என்ன மெசேஜ் அனுப்புகிறீர்கள் எனப் பார்க்க முடியாது என்பதுதான் தற்போதைய நிலை. புதிய விதிகள் இதை அனுமதிக்காது.

சண்முகவேல் சங்கரன்
சண்முகவேல் சங்கரன்

ஆனால், உலகமெங்கும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படி என்கிரிப்ஷனை உடைப்பதன் மூலம் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணமுடியாது என்கின்றனர். இப்படி என்கிரிப்ஷன் இல்லாமல் ட்ரேஸ் செய்யும் விதத்தில் சேவைகள் இயங்கினாலும் தப்பிக்க குறுக்கு வழிகள் எக்கச்சக்கமாக உள்ளன. தப்பு செய்பவர்கள் அதன் பக்கம் ஒதுங்கிவிடுவார்கள் என்கிறார்கள்.

என்கிரிப்ஷனைக் கைவிடுவதாக இருந்தால், இந்தியாவுக்கு மட்டும் தனியாகச் செயல்படுத்த முடியாது. மொத்தமாகத்தான் அவற்றின் சேவையை மாற்றியமைக்க வேண்டும் வாட்ஸ்அப், சிக்னல் போன்ற சேவைகள். தங்கள் தளங்களில் சாட் செய்தால் யாரும் ஒட்டுக்கேட்கமாட்டார்கள் என்ற மற்ற நாட்டுப் பயனாளர்களின் நம்பிக்கையை இழக்க விரும்பாது இந்த சேவைகள்.

‘பயனாளர்களின் பிரைவசி பாதிக்கப்படும்’ என வாட்ஸ்அப் முன்வைக்கும் வாதத்தில் உண்மை இருக்கவே செய்கிறது. இப்படி என்க்ரிப்ஷன் என்ற அரணைத் தகர்த்தால் மொத்தமாக தகவல்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலை அது உருவாகும். ஏற்கெனவே எந்த விதமான தகவல் பாதுகாப்புச் சட்டங்களும் இல்லாத இந்தியாவில் பயனாளர்களுக்கு தங்கள் பிரைவசிமீது இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமையும் பறிபோகும். ஒரு சிலரைக் கண்காணிக்க ஒட்டுமொத்த இந்தியர்களும் அதன் தனியுரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமா என்பதுதான் அனைவரது கேள்வியாக இருக்கிறது. இதனால்தான் இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது வாட்ஸ்அப்.

அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் அம்சம். குறைகள் தீர்க்க அரசு நிர்ணயித்திருக்கும் கால அவகாசம். 21-ம் நூற்றாண்டில், அரசுகளுக்கு எதிரான எத்தனையோ புரட்சிகள் ட்விட்டர் மூலமே உலகின் செவிகளை எட்டியது. ஒரு சமூக வலைதளம் என்பதைக் கடந்து ட்விட்டர் ஒரு செய்தி ஊடகமாக மாறி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரபலங்களின் சினிமா அறிவிப்பிலிருந்து அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் வரை ட்விட்டரில்தான் முதலில் வெளியாகின்றன. அப்படியிருக்கும் ஒரு நிறுவனம், தங்களுக்கான பாதுகாப்பை எதிர்பார்க்கத்தான் செய்யும். ட்விட்டருக்கும் இந்திய அரசுக்குமான பிரச்னை சில ஆண்டுகளாக இருக்கிறது என்றாலும், சமீபத்திய சர்ச்சை கங்கனா ரணாவத்தும், காங்கிரஸ் டூல் கிட்டும்தான். கங்கனா ரணாவத்தின் வரம்பு மீறிய ட்விட்டுகள் ரிப்போர்ட் செய்யப்பட அவர் அக்கவுன்டைத் தடை செய்தது ட்விட்டர். காங்கிரஸ் டூல் கிட் எனச் செய்தி பரப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் ட்வீட்டுகளை manipulated tweet என முத்திரை குத்தியது. யாருக்கும் பதில் அளிக்காத பா.ஜ.க அரசுக்குப் புதிய தலைவலியாக ட்விட்டர் உருவானது இப்படித்தான்.

ஃபிக்ஸ்நிக்ஸ் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்புத் தலைமை அதிகாரி சண்முகவேல் சங்கரன், ‘‘அதிகமான போலிச் செய்திகளை உருவாக்குவது அரசியல் கட்சிகள்தான். அரசியல் கட்சிகள் தங்கள் பக்கம் தவறுகளை வைத்துக்கொண்டு, அதற்கு வாட்ஸப்பின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குட்படுத்துவது எந்த வகையில் சரி எனத் தெரியவில்லை. வாட்ஸ் அப்பின் முக்கியமான சிறப்பம்சமே, நாம் பகிரும் செய்திகளை வேறு யாரும் படிக்க முடியாது என்பதுதான். அதிலேயே சிக்கலை உண்டாக்குகிறது இந்தச் சட்டம்.

போர்... ஆமாம் போர்!

சீனா மாதிரியான சர்வாதிகார நாடுகளில் இது ஏற்கெனவே உண்டு. data localization என்கிற பெயரில், ‘என் நாட்டு மக்களின் டேட்டாவை நான் பார்ப்பதற்கு முழு அதிகாரம் உண்டு’ என்பதைத்தான் சீனா வலியுறுத்துகிறது. கூ மாதிரியான செயலிகள் வெளிப்படையான பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டுடன் வெளியாகின்றன. இந்தியாவின் எதிர்க்கட்சியினரும், நம்மைப் போன்ற சாதாரண மக்களும் என்ன நம்பிக்கையில் அந்தச் செயலிகளைப் பயன்படுத்த முடியும்? அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்பின் மீதே நடவடிக்கை எடுத்தது ட்விட்டர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதில்தான் தற்போது மண் அள்ளிக்கொட்ட முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. சீனாவைப் போன்று மாறி, எல்லா நாடுகளுடனும் முறுக்கிக்கொள்ளும் சூழலில் இந்தியா தற்போது இல்லை. இந்தியாவில் இன்றளவிலும் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை நாம் பணம் செலுத்தாமல்தான் பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவின் பெரும் மக்கள் தொகையை அவர்கள் ஒரு முதலீடாகத்தான் பார்க்கிறார்கள். வரும்காலத்தில் பணம் செலுத்தி இவற்றைப் பயன்படுத்தும் சூழல்கூட உருவாகலாம். ஆனால், அதற்கு முன்பாகவே இந்தியா சீனாவைப் போல நடந்துகொள்ளும் என்றால், அவர்கள் வெளியேறுவதற்கான வாய்ப்புகளை நாமே உருவாக்கித் தருகிறோம் என்பது பொருள்” என்கிறார் அவர்.

‘‘சமூக வலைதளங்களுக்கான இத்தகைய சீர்திருத்தங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டவை அல்ல” என்கிறார், உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், ‘சைபர் சாதி’ அமைப்பின் நிறுவனருமான NS நப்பிணை. ‘‘இத்தகைய Intermediary guidelines 2011 ஆண்டே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இதில் இன்னும் அத்தியாவசியமான முடிவுகள் தற்போது வரையறுக்கப்பட்டிருக்கின்றன. சமூக வலைதளங்களிடம் நம் அரசு கேட்பது ஒரு நோடல் அலுவலர், இந்தியாவைச் சேர்ந்த குற்றங்களைச் சரி செய்யும் அலுவலர் போன்ற எளிமையான விஷயங்கள். பெண்கள் , குழந்தைகள் குறித்த அவதூறு பதிவுகளை 24 மணி நேரத்துக்குள் நீக்கச் சொல்கிறோம். அதே போல், பெண்கள் குழந்தைகள் குறித்த பாலியல் பதிவுகள தாமாக கண்டறிந்து உடனடியாக நீக்க வலியுறுத்துகிறோம். உச்சநீதிமன்றம் முன்பு 2015ம் ஆண்டு தொடர்ந்த பிரஜ்வாலா வழக்கின் அடிப்படையில் 2017ம் ஆண்டே இத்தகைய மாற்றங்கள் தேவை என்பதை உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

NS நப்பிணை
NS நப்பிணை

அரசின் சட்டங்கள் சரியா தவறா என நிர்ணயம் செய்ய வேண்டியது இந்திய நீதிமன்றங்கள்தானே தவிர ட்விட்டரோ, ஃபேஸ்புக்கோ அல்ல. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற பெரு நிறுவனங்களுக்கு இந்தியா மிகப்பெரிய மார்க்கெட். அதனால், நாளையே இவர்கள் இந்தியாவை விட்டு ஓட்டம்பிடித்துவிடுவார்கள் என்பதெல்லாம் சாத்தியமில்லாத கற்பனைகள். தற்போதைய சூழலில் கூகுளும், ஃபேஸ்புக்கும் இந்தப் புதிய சட்டங்களுக்கு கண்டிப்பாக ஒப்புக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இதை அவர்கள் முன்னரே செய்திருக்க வேண்டும். இன்னொன்று தற்போது அறிவித்திருக்கும் ஆலோசனைகளில் எனக்கும் சில மாற்றுக் கருத்துகள் உண்டு.ஆனால், அதற்காக சிலவற்றை மட்டுமே நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும், சிலவற்றை ஏற்றுக்கொள்ளாது என்பது நடைமுறை சாத்தியம் இல்லை. அவர்களுக்கான பிரச்னைகளின் தீர்வு நீதிமன்றங்களில் தான் இருக்கின்றது’’ என்கிறார் அவர்.

ட்விட்டரில் 7 கோடி, ஃபேஸ்புக்கில் 5 கோடி, இன்ஸ்டாவில் 6 கோடி என ஃபாலோயர்கள் வைத்திருக்கிறார் மோடி. மீண்டும் இவ்வளவு பெரிய கோட்டையை எழுப்புவது சற்றுக் கடினம். இந்தியாவின் செயலிகளுக்கு மாறிவிட்டாலும், மற்ற நாட்டு அதிபர்களையும், பிரதமர்களையும் டேக் செய்ய மோடி இத்தகைய செயலிகளைப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும். சமூக வலைதளங்களின் மூலம்தான் பா.ஜ.க ஆட்சிக்கே வந்தது. தற்போது அதன் சூட்சுமங்களை அனைத்துக் கட்சிகளும் அறிந்துவிட்டாதாலேயே, பதறுகிறது மத்திய அரசு. சமூக வலைதளங்கள் என்னும் சர்க்கஸ் துப்பாக்கிகள் பின்னோக்கியும் சுடும்.