ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டத்தில் மருத்துவமனையுடன் கூடிய நர்சிங் ஹோம் பகுதி இருக்கிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அந்த வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த தீ விபத்தில் இரண்டு மருத்துவர்கள் உட்பட ஐந்து பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. மருத்துவர் விகாஸ் ஹஸ்ரா, அவரின் மனைவி டாக்டர் பிரேமா ஹஸ்ரா, அவர்களின் மருமகன் சோஹன் கமாரி, வீட்டுப் பணிப்பெண் தாரா தேவி உட்பட ஐந்து பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
மேலும், அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். உயிரிழந்த நான்கு பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்னும் ஒருவர் அடையாளம் காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி, "இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
தகவலறிந்து உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மருத்துவமனையில் இருந்தவர்களை மீட்டு வேறொரு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுசென்றனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.