நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த இரண்டு முதியவர்கள் இன்று தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களுடைய கோரிக்கைகள் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத அதிருப்தியில், இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனர் எனக் கூறப்படுகிறது.

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த மரியசிங்கம் என்பவருக்கு ரோஜா என்ற மகள் இருக்கிறார். அவரின் மனைவி சாரதா சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். மகள் ரோஜா மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால், மரியசிங்கம் அவரைப் பராமரித்துவருகிறார். 72 வயதான அவர், குடும்பத்தை நடத்துவதற்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவரிடம் ரேஷன் கார்டு இல்லை எனக் கூறப்படுகிறது. அதனால் ரேஷன் அட்டை கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்திருக்கிறார்.
கடந்த 13 வருடங்களாக மரியசிங்கம் ரேஷன் அட்டைக்காக மனு கொடுத்தும், இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதிகாரிகள் பல்வேறு காரணங்களைக் கூறி, அவருக்கு ரேஷன் அட்டை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்திருக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது. இதனால், விரக்த்தியடைந்த அவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்திருக்கிறார். இதையடுத்து, அதிகாரிகளால் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டதால் மரியசிங்கம் அதிருப்தியடைந்திருக்கிறார். அதனால் இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதைப் பார்த்த போலீஸார் அவரை மீட்டு பத்திரமாக அனுப்பிவைத்தனர். அவரின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பத்தின் பரபரப்பு ஓய்வதற்குள்ளாக... அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றிருக்கிறார்.
அவரைத் தடுத்து நிறுத்திய போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த 1992-ம் ஆண்டு தன்னுடைய நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்ததாகவும், அது பற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை மீட்டுக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், வேறு வழியின்றி தீக்குளிக்க முயன்றதாகத் தெரிவித்திருக்கிறார். ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து நடந்த தீக்குளிப்பு முயற்சிகளால் பரபரப்பு நிலவியது.