சினிமா
தொடர்கள்
Published:Updated:

“நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ்!”

பழனியம்மா
பிரீமியம் ஸ்டோரி
News
பழனியம்மா

“ரோட்டில் பிச்சையெடுக்கும் எத்தனையோ பேரை நாம் தினமும் கடந்து செல்கிறோம்.

சிலரைப் பார்த்தும் பார்க்காததுபோலப் போயிருவோம்... சிலரைப் பார்த்ததும், ஐயோ பாவமென்று, அஞ்சோ பத்தோ கொடுப்போம். ‘சில்லறை இல்லே போ’ன்னு சிலரை விரட்டிவிடுவோம். அந்த நிமிஷத்தைத் தாண்டி அவங்களைப்பத்திப் பெருசா யோசிக்க மாட்டோம்! நானும் அப்படிப் பலபேரைக் கடந்து வந்தவதான். ஆனால், பழனியம்மாவை அப்படிக் கடக்க என்னால் முடியல’’ எனத் தழுதழுத்த முத்தமிழ்ச்செல்வி, “ ‘ப்ரூக் ஃபீல்ட்ஸ்’ சிக்னலுக்குப் பக்கத்தில் உள்ள பிளாட்பாரத்தில்தான் பழனியம்மா இருப்பா... அஞ்சு மணிக்கெல்லாம் அங்க வந்துருங்க, பழனியம்மாவோடு பேசுவோம்...’’ என்று படபடத்தபடி போனை கட் செய்தார்.

மாலை 5 மணி... ‘ப்ரூக் ஃபீல்ட்ஸ்’ சாலை டிராஃபிக்கால் திணறிக்கொண்டிருந்தது. சிக்னலுக்கு அருகே உள்ள நடைபாதையில் பழைய துணியால் வேயப்பட்ட கூரைக்குக் கீழே... விற்பனைக்காக சுமார் பத்துப் பதினைந்து கர்ச்சீப்களும், பத்து ஜோடி சாக்ஸ்களும் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. அதனருகே அமர்ந்திருந்த பழனியம்மா ஒரு நாயைத் தன் மடியில் கிடத்திக் கொஞ்சிக்கொண்டிருந்தார். உயரம் இரண்டு அடிக்கும் மேல் இருக்காது. சுத்தமாக நடக்க இயலாது. உடலில் ஆங்காங்கே தீக்காயத்தின் தழும்புகள் என, பழனியம்மாளின் உருவம் ஒரு பரிதாபச் சித்திரம். இதே இடத்தில் சில வருடங்களுக்கு முன்புவரை பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பழனியம்மா சில மாதங்களுக்கு முன்பு, பூ விற்றுக்கொண்டிருந்திருக்கிறார். இப்போது கைக்குட்டைகளும், சாக்ஸும் விற்கத் தொடங்கியிருக்கிறார்.

முத்தமிழ்ச்செல்வி, பழனியம்மா
முத்தமிழ்ச்செல்வி, பழனியம்மா

அந்தச் சாலை வழியாகச் செல்பவர்கள் பழனியம்மாவைப் பார்க்காமல் செல்வது அரிது. இத்தனை வருடங்களில் எத்தனையோ பேர் பழனியம்மாவைப் பார்த்துப் பரிதாபப்பட்டுச் சென்றிருக்கக்கூடும். ஆனால், முத்தமிழ்ச் செல்விக்குத்தான் பழனியம்மாவின் உலகம் குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பழனியம்மாளுக்கு மதியச் சாப்பாடு கொடுத்துக்கொண்டிருக்கும் முத்தமிழ்ச்செல்வி, போராடி அவருக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல, சொந்தமாக ஒரு கடை வைக்க வேண்டும் என்ற பழனியம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் இப்போது முனைப்பாக இருக்கிறார்.

சொன்ன நேரத்திற்கு வந்தார் முத்தமிழ்ச்செல்வி... அவரைக் கண்டதும், பழனியம்மாவின் முகத்தில் இனம்புரியாத மகிழ்ச்சி. பழனியுடனான தன் உறவை விவரிக்க ஆரம்பித்தார் முத்தமிழ்ச்செல்வி,

“கவுண்டம்பாளையத்தை அடுத்து உள்ள கவுண்டர் மில் பகுதியில்தான் என்னுடைய வீடு. ரேஸ் கோர்ஸ்ல உள்ள ஏ.பி.டி லிமிட்டெட்லதான் ஒர்க் பண்றேன். தினமும் இந்த வழியாகத்தான் ஆபீஸ் போவேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு மழைநாளில், இதே இடத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பழனியை முதன்முதலாகப் பார்த்தேன்... பழனி உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றிலும் சேறும் சகதியுமாக இருந்தது. லேசாகத் தூறல் போட்டுக் கொண்டிருந்தது...

 “நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ்!”

சிக்னலில் நின்ற காரிலிருந்து ஒருவர், பத்து ரூபாய் நோட்டை உள்ளிருந்தபடியே இவளை நோக்கி நீட்டினார். சேற்றையும் சகதியையும் பொருட்படுத்தாமல் ஊர்ந்து சென்று இவள் அதை வாங்கிய காட்சி என்னை வெகுவாக பாதித்துவிட்டது. ‘காரிலிருந்து இறங்கிக் கொடுத்தால்தான் என்ன?’ என்று என் மனம் வெதும்பியது. ஆபீஸ் போனபிறகும் அந்தக் காட்சியின் நினைவுகள் என்னை விடவில்லை. அவள் ஏன் இப்படி ஆனாள்..? அவளுக்கென யாராவது இருக்கிறார்களா இல்லையா? இயற்கை உபாதைகளைக் கழிக்க அவள் என்ன செய்வாள்? இப்படி இவளைப்பற்றி எனக்குள் ஏராளமான கேள்விகள்.

அடுத்தடுத்த சில நாள் இவளைத் தொடர்ச்சியாகக் கவனிக்க ஆரம்பித்தேன். நாம் இவளுக்கு ஏதாவது செய்யணும். ஆனால், எல்லோரையும் போல ஒருநாளைக்கு அஞ்சோ பத்தோ கொடுத்துவிட்டுப் போய்விடக்கூடாது’ன்னு தோணுச்சு. அடுத்த நாள் எனக்குச் சாப்பாடு பேக் செய்யும்போது இன்னொரு பாக்ஸில் கூடுதலாக பேக் செய்தேன். என் கணவர் இது யாருக்கு எனக் கேட்டார், கொஞ்சமும் யோசிக்கவில்லை, என் ஃபிரெண்டுக்கென்று சொன்னேன். அதைக் கொண்டுவந்து நீட்டியதும் இவள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

அடுத்தடுத்த நாள்களும் தொடர்ச்சியாக நான் சாப்பாடு கொடுக்க, ‘தினமும் சாப்பாடு தர்றீயே நீ யார்’னு? கேட்டாள், நான் உன் ஃபிரெண்டுன்னு சொன்னேன். கண்ணீரோடு என்னைக் கட்டிக்கொண்டாள். எங்கள் வீட்டில் என்ன செய்தாலும் அதில் பழனிக்கென்று ஒரு பங்கு ஒதுக்கிவிடுவேன். ஒருமுறை என்னோடு வந்த என் கணவர், ‘பழனிக்குச் சாப்பாடு கொடுக்கிறதைப் பார்த்துவிட்டார்! இதுதான் உன் ஃபிரெண்டா’ன்னு முதலில் கலாய்ச்சார். அப்புறம் அவரும் இவளுடைய கஷ்டத்தைப் புரிஞ்சுகிட்டார். தீபாவளி, பொங்கலுக்குப் புதுத்துணி எடுக்கும்போது பழனிக்கும் ஒண்ணு எடு’ன்னு சொல்லுற அளவுக்கு அவருக்கும் இவள் மேல ஒரு அக்கறை. திடீர்னு ஒருநாள் நீ எங்க வேலை செய்யுறன்னு கேட்டாள். நான் கலெக்டர் ஆபீஸுக்குப் பக்கத்தில் வேலை பார்க்குறேன்னு சொன்னேன். சரியா காது கேக்காததால நான் கலெக்டர் ஆபீஸ்ல வேலை பார்க்குறேன்னு நினைச்சுக்கிட்டு, `என்னை கலெக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போறீயா... உதவித்தொகைக்கு எழுதிப்போடணும்’னு சொன்னாள். என்னால் மறுக்க முடியலை. நடக்க முடியாத இவளை எப்படி அழைச்சுட்டுப் போறது’ன்னு கொஞ்சம் யோச்சிச்சேன். அப்புறம் ஆகறதைப் பார்த்துக்கலாம்’னு என் வண்டியில் பின்னால தூக்கி வெச்சுக்கிட்டு கலெக்டர் ஆபீஸுக்குப் போயிட்டேன்.

கலெக்டர் ஆபீஸுக்குள்ள தூக்கிக்கிட்டுப் போறதுக்கு வீல் சேர் இல்லை. இடுப்பில் தூக்கிக்கிட்டு ஆபீஸுக்குள்ள போயிட்டேன். என்ன விஷயம்’னு ஒரு அதிகாரி கேட்டார். விஷயத்தைச் சொன்னதும், அவர் நெகிழ்ந்துட்டார். ஒரு அறையைக் காட்டி, இதுலதான் கலெக்டர் இருக்கார் போய்ப் பாருங்க’ன்னு சொல்லி அனுப்பினாங்க. அப்போ ஹரிஹரன்தான் கலெக்டர். அவர் சீட்டுக்குப் பக்கத்து சீட்லயே இவளை உட்கார வெச்சுட்டு, இவளுடைய நிலைமையைப் பற்றிச் சொன்னேன். அவர் உடனே உதவித்தொகைக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுத்துட்டார். இப்போ இவளுக்கு மாசாமாசம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வருது. பிச்சையெடுக்கறதை இவ ஒருபோதும் விரும்பல. இவளுக்குள்ள அவ்வளவு தன்னம்பிக்கை இருக்கு.

இப்போ யாரோ கொஞ்சம் கர்ச்சீப்பும், சாக்ஸும் வாங்கிக்கொடுத்து விற்கச் சொல்லியிருக்காங்க. 250 ரூபாய்க்கு வித்துக் கொடுத்தால் 50 ரூபா கொடுக்குறாங்களாம். ‘நான் நல்லா பூக் கட்டுவேன். இந்த இடத்துல உட்கார்ந்திருக்கதால என்கிட்ட யாரும் பூ வாங்குறதில்லை. எனக்கு’ன்னு ஒருகடை வெச்சுக்கொடுத்தால் அதில் பூக் கட்டி விற்பேன். கூடவே இந்த கர்ச்சீப், சாக்ஸும் விற்பேன்’னு சொல்றா... பஸ் ஸ்டாப் பக்கம் இவளுக்கொரு பெட்டிக்கடை வைக்க உதவி செய்யுங்க’ன்னு கார்ப்பரேஷன் ஆபீஸில் கேட்டிருக்கேன். அது நடந்ததுன்னா அதுதான் என் வாழ்நாளில் மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும்” என்று புன்னகைக்கிறார் முத்தமிழ்ச்செல்வி.

நாயோடு கொஞ்சிக்கொண்டிருந்த பழனியம்மா, “பொள்ளாச்சிக்குப் பக்கத்துல உள்ள நெகமம்தான் எனக்கு சொந்த ஊரு. அப்பா பேரு பத்ரசாமி, அம்மா பேரு கருப்பம்மா. எங்க வீட்டுல என்னோடு சேர்த்து அஞ்சு பொம்பளைப் பிள்ளைகள். நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போதே ஏதோ பிரச்னையில அம்மாவையும் எங்களையும் துரத்திவிட்டுட்டார் அப்பா.

அதனால கோயம்புத்தூர் வந்துட்டோம். எனக்கும் என் தங்கச்சிக்கும் போலியோ அட்டாக். அம்மா கொஞ்ச நாள் மில் வேலைக்குப் போய் குடும்பம் நடத்துச்சு. ஒருகட்டத்துக்கும்மேல் வேலைக்குப் போய்க்கிட்டே எங்களை வளர்க்க அம்மாவால முடியலை. ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஹோட்டல் வாசலில் என்னைக் கொண்டுபோய்விட்டு பிச்சையெடுக்க வெச்சிருச்சு. எனக்கு விவரம் தெரியாத வயசிலேயே பிச்சையெடுக்க ஆரம்பிச்சுட்டதால ஒண்ணும் தெரியலை. ஒரு நாளைக்கு இருபதோ முப்பதோ கிடைக்கும். அந்தக் காசை வெச்சுத்தான் என் அக்காக்களுக்கு அம்மா கல்யாணம் பண்ணி வெச்சுச்சு. கிட்டதட்ட 25 வருஷமா அங்க பிச்சையெடுத்தேன்.

 “நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ்!”

அந்த ஹோட்டலில் காய்கறி வேலை பார்த்த சுந்தரத்துக்கு என் மேல ஒரு இது. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். எனக்கு ஒரு ஆதரவு கிடைச்சுட்டுதுன்னு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒரு குழந்தை பிறந்து சில மாசத்துலேயே செத்துப்போச்சு. ஒரு வருஷம்கூட அவர் என்கூட ஒழுங்கா வாழல. குடிச்சுட்டு சுத்த ஆரம்பிச்சுட்டார். எப்பவாவதுதான் வீட்டுக்கு வருவார். கொஞ்ச நாளில் அம்மாவும் செத்துப்போச்சு. பிச்சையெடுக்க என்னைத் தூக்கிட்டுப்போய் விட்டுத் தூக்கிட்டுவரக்கூட ஆள் இல்லை.

பூ விக்கிறவங்களுக்கு நானும், என் தங்கச்சியும் வீட்டில் பூக்கட்டிக் கொடுத்தோம். அரைக் கிலோ கட்டிக்கொடுத்தா 40 ரூபா. ஒருநாள் பூக் கட்டிட்டிருக்கும்போது செவுத்துமேல இருந்த விளக்கை எடுக்க முயற்சி பண்ணி அது என் மேல விழுந்து தீப்புடிச்சிருச்சு. அதிலிருந்து உயிர் பிழைச்சதே பெருசு. அப்புறம் என் வீட்டுக்குப் பக்கத்தில உள்ள இந்த பிளாட்பாரத்திலேயே பிச்சையெடுக்க ஆரம்பிச்சிட்டேன். ஒருகட்டத்தில் ‘வாழ்க்கை முழுக்க நாம பிச்சைதான் எடுக்கணுமா’ன்னு கவலை வந்துருச்சு. அதன் பிறகுதான், இந்த இடத்திலேயே பூக் கட்டி வித்தால் என்னன்னு பூக் கட்டி விற்க ஆரம்பிச்சேன். பேருக்கு இருந்த புருஷனும் செத்துப்போய்ட்டார். மறுபடியும் கையேந்த வேண்டிய நிலைமை.

திடீர்னு ஒருநாள் வந்து சாப்பாடு கொடுத்த செல்வி, தினமும் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பிச்சுச்சு. அதுமட்டுமில்லை, ஒருநாள் அவங்க வீட்டுக்கு என்னை அழைச்சுட்டுப் போச்சு. (குழந்தைபோலச் சொல்கிறார்) உதவித்தொகை வாங்க கலெக்டர் ஆபீஸுக்குக் கூட்டிட்டுப் போறயான்னு கேட்டதும் அழைச்சுட்டுப் போய் வாங்கிக்கொடுத்திருக்கு. எனக்கு யாரும் இப்படி தினமும் சாப்பாடு கொடுத்தில்லை, பிறந்ததிலிருந்து இதுபோல நான் யார் வீட்டுக்கும் போனதில்லை. என் கிட்டக்கூட யாரும் நெருங்க மாட்டாங்க. என் அம்மாவைப் போல இவ்வளவும் செஞ்ச செல்விக்கு நான் திருப்பி என்ன செய்ய முடியும்?’’ என்று கலங்கிய பழனியம்மாவை ``ச்சீ அழாதடி, நாம ரெண்டுபேரும் ஃபிரெண்ட்ஸ்!” என்று தேற்றும் முத்தமிழ்ச்செல்வியின் கால்களை நன்றியுடன் சுற்றிவருகிறது ஜிம்மி!

அவர்களைச் சுற்றிலும் மனிதம் ஒளிர்கிறது.