நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆறு நாள்களாகவே மழை பெய்துவருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழை காரணமாக கோடைக்காலத்திலும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியிருக்கிறது.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் கோடையில் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப்பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். மணிமுத்தாறு அருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழக் கூட்டம் அலைமோதுகிறது.
தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்யும் மழையால் வீடு இடிந்த சோகம் ஏற்பட்டுள்ளது. கடையம் அருகேயுள்ள வாகைக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்ற 60 வயது விவசாயி, தன் மனைவி வேலம்மாள் மற்றும் இளைய மகள் ரேவதி (வயது 26) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். கடையம் பகுதியில் இரவு நேரத்தில் இடியுடன்கூடிய கனமழை கொட்டியது.

நள்ளிரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது கல்யாணசுந்தரத்தின் வீடு இடிந்து விழுந்துள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், தென்காசி மற்றும் ஆலங்குளத்திலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
வீடு இடிந்து விழுந்த இடிபாட்டில் சிக்கிய கல்யாணசுந்தரம், அவர் மனைவி வேலம்மாள், மகள் ரேவதி ஆகியோர் உடனடியாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் கல்யாணசுந்தரமும் ரேவதியும் உயிரிழந்தனர். வேலம்மாள் மட்டும் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மழை பெய்ததில் வீடு இடிந்து விழுந்து இருவர் பலியான சோகச் சம்பவம் பற்றி அறிந்ததும் தென்காசி மாவட்ட தி.மு.க செயலாளரான சிவ பத்மநாபன் தலைமையில், கடையம் ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார், மகேஷ் மாயவன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சம்பவம் நடந்த வீட்டைப் பார்வையிட்டனர். அத்துடன், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், கட்சி சார்பாக நிதி உதவியும் அளித்தனர்.