இந்தச் சமூகத்தில் திருநர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எண்ணற்றவை. அரசு, ஊடகங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரின் முன்னெடுப்பால், முன்பைவிட இப்போது அவர்களின் மீதான பார்வை சற்று மேம்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, பல திருநங்கைகளும் திருநம்பிகளும் இன்று பல்வேறு துறைகளிலும் காலடி எடுத்து வைத்துள்ளனர். அவ்வகையில், நாட்டில் முதன்முறையாக தெலங்கானாவில் இரு திருநங்கைகள் மருத்துவர்களாகி இருக்கின்றனர்.
டாக்டர் பிராச்சி ரத்தோட், அடிலாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 2015-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் முடித்தார். அவரும், ரூத் ஜான்பாலும் மாநிலத்தில் அரசுப் பணியில் சேர்ந்த முதல் திருநங்கை மருத்துவர்கள் என்ற வரலாற்றை படைத்திருக்கிறார்கள். பிராச்சி ரத்தோட் மற்றும் ரூத் ஜான் பால் ஆகியோர், அரசு நடத்தும் உஸ்மானியா பொது மருத்துவமனையில் (OGH) சமீபத்தில் மருத்துவ அதிகாரிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாக்டர் ரூத் ஜான் பால், தனது துன்பங்கள் மற்றும் சமூகத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசுகையில், ``என் பாலினம் காரணமாக, எனது குழந்தை பருவத்தில் இருந்தே நான் மிகவும் போராடினேன். டாக்டராக வேண்டும் என்ற கனவு என்னை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டியது. நான் சமூகம், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து பல இழிவுகளை சந்தித்தேன். பல இடர்பாடுகளுக்கு மத்தியில் எனது படிப்பை முடித்தேன். இதற்காக கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆதரவால் நான் இங்கு இருக்கிறேன்.
நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அரசு மருத்துவமனையில் திருநங்கை ஒருவர் பணியாற்றுவது இதுவே முதல்முறை. பாலின வேறுபாடு இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் எல்லா வதந்திகளையும் விட்டுவிட்டு எனது குறிக்கோளில் கவனம் செலுத்தினேன். என் சமூகத்தைச் சேர்ந்த பலர் என்னை ஊக்கப்படுத்தினர். உஸ்மானியாவுக்குள் செல்வதற்கும் அவர்கள் உதவினார்கள். எனது சிறுவயதிலேயே என் தந்தை காலமான நிலையில், எனது கல்விக்கு சகோதரர் ஆதரவாக இருந்தார். நான் முன்பு பகுதி நேர மருத்துவராக திருநங்கைகளுக்கான என்.ஜி.ஓ கிளினிக்கில் பணிபுரிந்தேன். பின்னர், உஸ்மானியாவில் தேர்வானேன்" என்றார்.
மக்கள் எப்படி தங்களை வரவேற்றார்கள், நோயாளிகள் பாரபட்சம் காட்டாமல் நடந்து கொள்கிறார்களா என்பது குறித்தும் டாக்டர் ரூத் ஜான் பால் விவரித்தார்.
``வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ள எல்லா திருநங்கையைப் போலவே எனது பயணமும் உள்ளது. சிறுவயதில் இருந்தும், கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்தபோதும் நிறைய பாகுபாடுகளை எதிர்கொண்டேன். ஆனால், எனது தன்னம்பிக்கையால் அனைவருக்கும் முன் இப்போது சமூகத்திற்கு சேவை செய்து வருகிறேன்" என்றார்.

தெலங்கானாவில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ், சமூக நலத்துறை அமைச்சர் கோபுலா ஈஸ்வர் ஆகியோர் தலைமையிலான அரசின் நடவடிக்கையால் இது நடந்தது. மூன்று மருத்துவ அலுவலர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், 336 டாக்டர்கள் அப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். திருநங்கைகள் மற்றும் ஹெச்.ஐ.வி பாதித்த மருத்துவ நிபுணர்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்பியது அரசு. அதன்படி, இதில் இரண்டு திருநங்கைகள் மற்றும் ஒரு ஹெச்.ஐ.வி பாதித்த மருத்துவ அதிகாரி உட்பட மூன்று மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகின்றனர். திருநங்கைகளை மருத்துவராக்கியதன் மூலம் வரலாறு படைத்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தெலங்கானா அரசு உள்ளது.