தி.மு.க-விலிருந்து பிரிந்து அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் உருவாக்கி, தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்து அசைக்க முடியாத சக்தியாக உருமாறிக் கொண்டிருந்த 1980-களில் தி.மு.க தலைவர் கருணாநிதி தனது வாரிசுகளை, துணிவுடன் களமிறக்கிய காலகட்டம். தலைநகர் சென்னைக்கு ஸ்டாலின் என முடிவானது. தென்மாவட்டத்தின் தலைநகரமாகக் கருதப்படும் மதுரையில் என்ட்ரி ஆனார் மு.க.அழகிரி. அதே நேரத்தில் தலைவரின் மகன் பின்னால் நின்றால், எப்படியும் கட்சியில் நல்ல போஸ்ட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், அழகிரி, ஸ்டாலினுக்குப் பின்னால் உடன்பிறப்புகள் அணிவகுக்கத் தொடங்கினர்.

தீவிர ஜெயலலிதா எதிர்ப்பு, யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையான பேச்சு என 1990-களில் கட்சிக்குள் ஆதிக்கமிகுந்த நபராக வளர்ந்து, தனக்கென ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வைத்திருந்தார் அழகிரி. ஒரு கட்டத்தில் அழகிரியின் ஆதரவாளர்களின் அட்ராசிட்டி மதுரை தாண்டி விரிவடையத் தொடங்கியது. இதனால், தி.மு.க தலைமைக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் சுற்றிவளைத்தது. இதன் காரணமாக, அழகிரியின் வேகத்தைக் குறைக்க நினைத்த தலைமை, அவருக்குப் பல கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது. இதன் விளைவு, அழகிரியா, ஸ்டாலினா எனப் பனிப்போர் முனையில் தி.மு.க-வை நிறுத்தியது.
குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம், மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தி.மு.க தலைமையை ஆட்டம் காணவைத்தது. 'தமி(க)ழகம் வளம் பெற இனியொரு விதி செய்வோம்!', 2014-ம் ஆண்டு, ஜனவரி 30-ம் தேதி சென்னை அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் பொதுக்குழு கூடவுள்ளதாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்தான் இதற்குக் காரணம். இதைத்தொடர்ந்து, அழகிரியின் ஆதரவாளர்கள் என்று அறியப்பட்ட நிர்வாகிகள் தொடர்ச்சியாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
குறிப்பாக, மதுரை தி.மு.க அமைப்புகள் அனைத்தையும் கலைப்பதாக அக்கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார். இதன்காரணமாக, 2014-ம் ஆண்டு ஏப்ரலில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தே.மு.தி.க-வுடன் தி.மு.க மேற்கொண்ட கூட்டணி பேச்சுவார்த்தையை மிகக் கடுமையாக விமர்சித்தார் அழகிரி. இதற்குத் தந்தையும், தலைவருமான கருணாநிதியிடமிருந்து கண்டனம் வந்தது. ஆனாலும், அழகிரியின் சர்ச்சை கருத்துகள் குறைந்தபாடில்லை.
இதைத்தொடர்ந்து 2014, ஜனவரி 24-ம் தேதி அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கட்சியின் தலைவர் கருணாநிதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதே இதற்குக் காரணம் என்று அப்போது கூறப்பட்டது. இதற்கிடையே, அழகிரி ஆதரவாளர்கள் என அறியப்பட்ட பி.மூர்த்தி (தற்போதைய அமைச்சர்), கோ.தளபதி, தமிழரசி உள்ளிட்டவர்கள் ஸ்டாலின் பக்கம் தாவத்தொடங்கினர். ஆனாலும், பி.எம்.மன்னன், இசக்கிமுத்து, ராஜூ உள்ளிட்டவர்கள் அழகிரியின் பக்கமே நின்றனர். இதன்பின்னர், தி.மு.க-வையும், தன் தம்பியுமான ஸ்டாலினையும் மிகக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியவர், 'இனி தி.மு.க-வை யாராலும் காப்பாற்ற முடியாது' எனவும் கொட்டித் தீர்க்கத் தொடங்கினார்.
`சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த வாழ்த்து’
கருணாநிதி மறைந்த பின்னர், அழகிரி கட்சியைக் கைப்பற்றப் போவதாக தகவல்கள் வெளியாயின. அதற்காக அவரின் மகன் தயாநிதி அழகிரியும் கோதாவில் குதித்தார். சென்னையில் அமைதிப் பேரணி, தொடர் ஆலோசனைக் கூட்டம் என பிஸியாக செயல்பட்டாலும், எதுவும் எடுபடவில்லை. பேசிப் பேசி ஓய்ந்துபோன அழகிரி, ஒரு கட்டத்தில் ரொம்ப சைலன்ட் ஆகிவிட்டார். பின்னர், இருதரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் குடும்பத்தார்கள் இறங்கினர்.

இந்த நிலையில்தான், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று, ஸ்டாலின் முதல்வராக ஆனதும், 'முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள தம்பி ஸ்டாலினைப் பார்த்து பெருமைப்படுகிறேன். என் தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்' என்றுகூறி, குடும்பத்தாரின் சமாதான முயற்சிக்குப் பச்சை சிக்னல் கொடுத்தார் அழகிரி.
இதைத்தொடர்ந்து, ஸ்டாலினின் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு தயாநிதி அழகிரி பங்கேற்றார். அப்போதே எல்லாப் பிரச்னையும் ஓரளவுக்கு முடிந்ததாகக் கூறப்பட்டது. இதன்பின்னர், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியிலும், உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட நிகழ்ச்சியிலும் தயாநிதி அழகிரி பங்கேற்றிருந்தார். இதன்மூலம், அழகிரி - ஸ்டாலினுக்கு இடையே நடக்கும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கிவைக்க மதுரை சென்ற அமைச்சர் உதயநிதி அழகிரியை அவரது இல்லத்தில் ஜனவரி 16-ம் தேதி இரவு சந்தித்திருக்கிறார். 'அமைச்சர் ஆன பின்னர் முதல் முறையாக மதுரைக்கு செல்கிறாய். அப்படியே பெரியப்பா (அழகிரி) வீட்டுக்குப் போய் ஆசீர்வாதம் வாங்கிக்கோ' என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லிதான் உதயநிதி அங்கு சென்றதாக குடும்பத்துக்கு நெருக்கமான சிலர் சொல்கிறார்கள்.

நம்பிக்கையுடன் இருக்கும் ஆதரவாளர்கள்...
அழகிரியைச் சந்திக்க உதயநிதி வருகிறார் என்ற செய்தி 16-ம் தேதி மாலையில் மதுரையில் பரவத்தொடங்கியது. இதனால், அழகிரியின் பழைய ஆதரவாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அழகிரியின் வீட்டின் முன்பு கூடத்தொடங்கினர். இதனால், பல ஆண்டுகளாக வெறிச்சோடிக் கிடந்த அழகிரியின் வீடு இருக்கும் ஏரியாவே களைகட்டியது. இதுகுறித்து அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.
``அண்ணன் ஏரியா இப்படி களைகட்டி கிட்டத்தட்ட 10 வருஷம் ஆகுது. தலைமையுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தையெல்லாம் அண்ணன் மறந்துவிட்டார். கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ-ன்னு சில நேரம் எங்களுக்காகவே பேசுவதுண்டு. அதெல்லாம் இப்ப பேசி ஒண்ணும் ஆகப்போறது இல்லைதான். ஆனாலும், 10 வருஷம் வீணா போச்சேன்னு வருத்தம்தான். இது எங்களின் வனவாச காலம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று, ஸ்டாலின் முதல்வர் ஆனதும்தான் எங்களுக்கு மீண்டும் நம்பிக்கை வந்தது.

அண்ணனும், ஸ்டாலினும் ஒண்ணா இணைவாங்கன்னு நினைச்சோம். அதேமாதிரி, தயாநிதி, உதயநிதி தம்பிங்க மூலம் நடக்கிறது. ரொம்ப நாளைக்குப் பிறகு, உதயநிதி வரும்போதுதான் அண்ணனின் அந்த நக்கல், நையாண்டிப் பேச்சு வெளிப்பட்டது. உதயநிதியும் அண்ணனும், குடும்ப விவகாரங்களை மனம்விட்டுப் பேசி இருக்கிறார்கள். எல்லாப் பிரச்னையும் முடிவுக்கு வந்துவிட்டது. முதல்வரும், அண்ணனும் விரைவில் சந்திக்கலாம். இனி நாங்கள் தைரியமாகக் கட்சிப் பணியைச் செய்வோம்" என்று நெகிழ்ந்துகொண்டனர்.
அதற்கு ஏற்றாற்போல, ``நான் தி.மு.க-வில் மீண்டும் செயல்படுவது குறித்து அவர்கள்தான் சொல்ல வேண்டும்" என்று உதயநிதியைக் காட்டிப் பேசியிருந்தார் அழகிரி. ஸ்டாலின், அழகிரி இடையிலான யுத்தம் அவர்கள் மகன்கள் மூலமாக தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அரசியலுக்கு அழகிரி ரீஎன்ட்ரி கொடுப்பார் என்றே அவரது ஆதரவாளர்கள் எண்ணுகிறார்கள். என்ன நடக்கிறது என்று அவர்களைப்போல நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்...