இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த விஜய் மல்லையா, பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் கிட்டதட்ட 14,000 கோடி மோசடி செய்த நிரவ் மோடி ஆகிய இருவருமே இங்கிலாந்து தப்பி சென்றனர். இந்தியா பல்வேறு நாடுகளுடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இருப்பினும், நாடு கடத்துவது என்பது சட்ட நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு, சர்வதேச சட்டம் முதலியவற்றை உள்ளடக்கிய சிக்கலான நடைமுறையாகவே உள்ளது. இதனைப் பயன்படுத்தி மல்லையா போன்றோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி வருகின்றனர்.

இந்நிலையில், நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான கேள்விக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், விசாரணைக்காக அவர்களை இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பவே இங்கிலாந்து அரசு விரும்புவதாகவும், பிரிட்டிஷ் சட்ட முறையைப் பயன்படுத்தி தப்பிக்க விரும்புபவர்களை அது வரவேற்கவில்லை என்றும் கூறினார்.

``குறிப்பிட்ட இரண்டு பேரையும் இந்தியாவுக்கு நாடு கடத்துவது சட்டப்பூர்வமாக சாத்தியமானதே. ஆனால் சுலபம் அல்ல. சிக்கலான சட்ட நெறிமுறைகள் உள்ளன. ஆனாலும் அவர்களை நாடு கடத்த இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது” என்று போரிஸ் ஜான்சன் கூறினார்.
"எங்களைப் பொறுத்தவரையில் அவர்களை விசாரணைக்காக இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
திறமையான இந்தியர்கள் பலர் இங்கு வருகின்றனர்; அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்; அவர்கள் மீது மதிப்பு கொண்டுள்ளோம். அதே நேரம், இங்குள்ள சட்டங்களைப் பயன்படுத்தி தப்பிக்க விரும்பும் குற்றவாளிகளை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்றார்.

முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் வருகை குறித்த சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா, ``பிரிட்டிஷ் பிரதமருடனான பேச்சுவார்த்தையில் இங்கிருந்து தப்பித்த பண மோசடி குற்றவாளிகளை இங்குத் திரும்ப வரவழைத்து தண்டிப்பது முக்கியமாகப் பேசப்பட்டது" என்றார்.