Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 14

UNLOCK அறிவியல் 2.O
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல் 2.O

- அண்டன் பிரகாஷ்

இந்த வார டாப்பிக்கிற்குள் போகும் முன், இரண்டு முக்கியச் செய்திகள்:

1. கோவிட்-19 நோய்த் தாக்கம் இருக்கும்போது காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்றவற்றுடன் மணம் உணரும் மற்றும் சுவைக்கும் திறன் போய்விடுகிறது என்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். மணம் என்பது மூளையில் உணரப்படுவது என்பதால், கொரானா வைரஸ் மூளையை பாதிக்கிறதோ என்ற சந்தேகம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தது. இந்த சந்தேகம் சென்ற வாரத்தில் தீர்ந்துள்ளது. மூக்கில் இருக்கும் Olfactory mucosa என அழைக்கப்படும் திசுக்கள், நாம் முகரும் மணத்தை மூளையில் இருக்கும் முகர்வுக்கான நியூரான்களுக்குத் தகவலாகக் கடத்துகிறது. இந்தத் திசுக்களில் இருக்கும் செல்களை கொரோனா வைரஸ் கொன்றுவிடுவதால்தான் முகரும் உணர்வை இழக்கிறோம். வைரஸ் உடலை விட்டு நீங்கியபின் செல்கள் வளர ஆரம்பிக்கும்போது, மேற்படி செல்களும் புதிதாக உருவாகி முகரும் திறன் மீண்டும் வந்துவிடும். கொரோனா வைரஸ் மூளை செல்களை பாதிப்பதில்லை என்பது நிம்மதி கலந்த பெருமூச்சை என்னைப் போலவே உங்களுக்கும் அளிக்கலாம்.

UNLOCK அறிவியல் 2.O - 14

2. ஏழு வருடங்களுக்கு முன்னால் லூன் என்ற பெயரில் ஒரு பிரமாண்டத் திட்டத்தைத் தொடங்கியது கூகுள். மிதக்கவிடும் பலூன்கள் மூலம் இணைய இணைப்புகளை மூன்றாம் உலக நாட்டு மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் வானளாவிய நோக்கம். கூகுள், ஃபேஸ்புக் என்ற இரண்டு நிறுவனங்களும், ‘உலகின் மக்கள்தொகை அனைத்தையும் இணைப்பதன் மூலமாக தங்களது வணிக இருப்பை பலப்படுத்த முடியும்’ என்பதால் இதற்காகப் பல முயற்சிகள் எடுத்தன. ப‘லூன்’ என்ற காரணப்பெயர் கொண்ட இந்தத் திட்டத்தை குண்டூசியால் குத்தி முடித்து வைத்திருக்கிறது கூகுள். இந்தியா உட்பட பல வளரும் நாடுகள் தங்களது அலைபேசிக் கட்டமைப்பை வலுவாக்கி மலிவான விலையில் இணையத்தை மக்களுக்குக் கொண்டு சென்றுவிட்டது, லூனின் தோல்விக்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன். இது ஒருபுறமிருக்க, வேவ், கூகுள்+, கிளாஸ் எனப் பல திட்டங்களை உற்சாகத்துடன் தொடங்கினாலும், தெளிவான நீண்டகாலப் பார்வை கூகுளுக்கு இருப்பதில்லை என்ற முணுமுணுப்புகளையும் இணைய வெளியில் கேட்க முடிகிறது.

நிற்க!

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோசப் ராபினெட் பைடன் பொறுப்பேற்றுக்கொண்ட நிமிடத்தில் இருந்து கிடுகிடுவெனப் பல மாற்றங்கள். அவர் அமைத்துக்கொண்டிருக்கும் கேபினட் என்ற நிர்வாக அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெற்றுவருகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்துவருகிறேன். இந்த கேபினெட்டில், வெளியுறவு, பாதுகாப்பு, கல்வி, வணிகம் எனப் பல பொதுவான துறைகள் தொன்றுதொட்டு இருந்துவருகின்றன. காலத்தின் அவசியம் கருதி சில புதிய துறைகள் இணைக்கப்பட்டதுண்டு. உதாரணத்திற்கு, செப்டம்பர் 11, 2001-ல் தீவிரவாதத் தாக்குதல் நடந்தபின் Homeland Security என்ற துறை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு, அது கேபினெட் லெவலுக்கு உயர்த்தப்பட்டது. பைடன் கேபினெட்டில் புதிதாக இடம்பிடித்திருக்கும் துறை - அறிவியல். கொரானாப் பெருந்தொற்று அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு இது.

கொரானா வைரஸுக்கு அடுத்த குறிக்கோளாக அறிவியல் துறை எடுத்துக் கொண்டிருப்பது - பருவநிலை மாற்றம். பதவி ஏற்ற அந்த நாளிலேயே பைடன் ‘பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்து கொள்ளும்’ என்ற உத்தரவிலும் கையெழுத்திட்டார்.

வெயிட், ‘பாரிஸ் ஒப்பந்தம் என்றால் என்ன’ என்ற கேள்வி எழுகிறதா? சொல்கிறேன்.

UNLOCK அறிவியல் 2.O - 14

பூமியின் நிலம் மற்றும் தண்ணீர்ப் பரப்பின் சராசரி வெப்பநிலையின் அடிப்படையாக 19-ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியை, அதாவது 1850-1900 காலகட்டத்தை எடுத்துக்கொள்கிறார்கள் சூழல் ஆராய்ச்சியாளர்கள். ‘உலக சமூகங்கள் இயந்திரமயமாக்கலுக்குச் செல்வதற்கு முற்பட்ட காலம்’ எனத் தோராயமாகக் குறிக்கப்படும் இந்தக் காலகட்டத்தில் மேற்கண்ட வெப்ப அளவிற்கு அதிகமாக இருக்கும் அளவைத்தான் தொடர்ந்து இந்த ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

சாலையில் ஓடும் வாகனங்களும், வானில் பறக்கும் விமானங்களும் தொழிற்சாலைகளும் இயங்க ஆரம்பித்ததும் வெப்பமும் அதிகரிக்க ஆரம்பித்தது. முதல் இரண்டு உலகப்போர்கள் நடந்த வருடங்களில் சற்று அதிகமாக இருந்த சராசரி வெப்பம், அவ்வப்போது குறைவதும், அதிகரிப்பதுமாக 80கள் வரை இருந்தது. அதன்பின் தறிகெட்ட வேகத்தில் எகிற ஆரம்பித்தது. 81க்குப் பிறகு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதிய வெப்ப அளவு பதிவாகியபடி இருக்கிறது. இதுவரை அதிக வெப்பம் அளவெடுக்கப்பட்ட ஆண்டு 2016. அப்படியானால், ‘அதற்குப் பின்னர் வெப்பம் குறைந்துவிட்டதோ’ என விரைவாக மகிழ்ந்திட வேண்டாம். தொடர்ந்து படியுங்கள்.

சூழல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் எண் - 1.5 செல்சியஸ். ‘இயந்திரமயமாக்கலுக்கு முந்தைய அடிப்படை வெப்பத்தைவிட முடிந்த வரை 1.5 செல்சியஸுக்குள், அதிகபட்சம் 2 செல்சியஸுக்கு மிகாமல், புவியின் வெப்பத்தை வைத்துக்கொள்ள வேண்டும்’ என 189 நாடுகள் ஒன்றாகத் தங்களுக்குள் 2015-ல் தயாரித்ததே பாரிஸ் ஒப்பந்தம். (இடைக்குறிப்பு: நாற்பது நாடுகளைச் சேர்ந்த தொண்ணூறுக்கும் மேற்பட்ட நிபுணர்கள் தொகுத்துத் தயாரித்த இந்த ஒப்பந்தத்தின் வரைவு நகல் உள்ளிட்ட பல ஆதாரங்களும் குறிப்புகளும் கட்டுரையின் கீழ் இருக்கும் வலைப்பக்கத்தில் இருக்கின்றன.)

புவி வெப்பம் எப்படி அதிகரிக்கிறது என்பதன் அடிப்படை அறிவியலை வேகமாகப் பார்த்துவிடுவோம்.

வெப்பத்தை வெளியேறாமல் அடக்கி வைக்கும் வாயுக்களுக்கு பச்சையக வாயுக்கள் (Green house gases) என்று பெயர். இந்த வாயுக்களில் மகா பெரிய கயவன், கார்பன் டை ஆக்சைடு - ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு நம் நுரையீரல் வெளியேற்றும் வாயு. (உணவு ஜீரணிப்பிற்குப் பின்னர் தயாராகி மற்ற வழியாக வெளியேறுவதில் நைட்ரஜனே அதிகம்; அதுபோக, சற்று கார்பன் டை ஆக்சைடும், மீத்தேனும் இருக்கும்.)

பூமிக்கு மேலிருக்கும் வளிமண்டலத்தில் (Atmosphere) இருக்கும் நைட்ரஸ் ஆக்சைட், மீத்தேன் இன்னபிற வாயுக்களும் பச்சையகத்தைச் சார்ந்தவை என்றாலும், எண்பது சதவிகிதத்திற்கும் மேல் வியாபித்திருப்பது CO2 என்ற வேதியியல் குறியீடு கொண்ட கார்பன் டை ஆக்சைடு. நீட்டி எழுதுவதைத் தவிர்க்க இதைச் சுருக்கமாக ‘கார்பன்’ என அழைக்கலாம்.

எப்படி இந்த வாயுக்கள் பூமியின் வெப்பத்தை அதிகரிக்கும் அட்ட காசத்தைச் செய்கின்றன?

சூரிய ஒளி பூமியில் படும்போது நிலப்பரப்பும், நீர்ப்பரப்பும் தாங்கள் சூடாகத் தேவையான அளவு ஒளியை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியைக் கண்ணாடி போல திரும்பி அனுப்பிவிடும். இப்படி வான் நோக்கி வரும் சூரியக் கதிர்களை தனக்குள் அடக்கிக் கொண்டு வெப்பம் பொதிந்த பார்சல்களைத் தயாரிக்கும் செயலுக்குப் பச்சையக விளைவு என்று பெயர். தாவரங்களுக்கும், நாம் உட்பட அனைத்து விலங்குகளுக்கும் வெப்பம் என்பது பல்வேறு பணிகளுக்குத் தேவை என்றாலும், அளவுக்கு மீறினால் நஞ்சாகும் இந்த வெப்ப அமிர்தம்தான் பருவநிலை மாற்றத்திற்குப் பின்னிருக்கும் மாபெரும் அச்சுறுத்தல்.

ஆண்டுக்கு 40 பில்லியன் டன் அளவிலான கார்பனை நாம் நமது பணிகளின் மூலம் உருவாக்கி வளிமண்டலத்திற்கு அனுப்புகிறோம். மிகப் பிரமாண்டமான வளிமண்டலத்தில் வருடத்திற்கு 40 பில்லியன் என்பது பெரிய எண்ணாக இல்லாமலிருக்கலாம். ஆனால், வளிமண்டலத்தில் ஏற்கெனவே செலவிடப்படாமல் சேகரமாகி இருக்கும் கார்பனுடன் இதுவும் சேர்வதன் விளைவுதான் பூமி தொடர்ந்து வெப்பமாவது.

சரி, கொரோனா லாக்டௌன் மாதங்களால் புவியின் வெப்பம் குறைந்திருக்க வேண்டுமே என்று உங்களைப் போலவே எனக்கும் தோன்றியதால் ஆய்வறிக்கைகளைத் துழாவிப் பார்த்தேன். ஆம், ‘கார்பன் உமிழ்வு முந்தைய வருடங்களைவிட ஏழு சதவிகிதம் 2020-ம் வருடத்தில் குறைந்திருக்கிறது’ என்பது உண்மைதான். இருப்பினும் வளிமண்டலத்தில் தங்கியிருக்கும் கார்பன் காரணமாக புவியின் வெப்பம் அதே அளவிற்குக் குறையவில்லை. அது மட்டுமல்ல, இதுவரை அதிகமான வெப்பம் பதிவான 2016 அளவிற்கு நிகரான வெப்பம் சென்ற ஆண்டில் பதிவாகியிருப்பது அச்சமூட்டும் செய்தி. இயல்புநிலை மீண்டும் வரும்போது கார்பனை மீண்டும் ஆகாயத்தில் செலுத்த ஆரம்பித்து இன்னும் வெப்பத்தை அதிகரிக்கத் தயாராகிவருகிறோம்.

இந்தச் சிக்கலை எப்படித்தான் சரி செய்வது?

மூன்று வழிகளை அறிவியல் உலகம் முன் வைக்கிறது.

இயற்கையான வழிமுறைகள்: மரங்கள் ஒளிச்சேர்க்கை (Photosyntheis) மூலமாக, கார்பனை உள்வாங்கி ஆக்சிஜனை வெளியிடுவதால், நமக்கு அதிக அளவில் மரங்கள் தேவை. இருக்கும் காடுகளை அழிப்பதைத் தடுப்பதிலிருந்து புதிய காடுகளை வளர்க்கும் திட்டங்கள் வரை பல நாடுகள் பல திட்டங்களை முயற்சி செய்கின்றன. ஆனால், யானைப் பசிக்குச் சோளப் பொறியாகத்தான் பலன் கிடைக்கிறது.

UNLOCK அறிவியல் 2.O - 14

‘கார்பன் உமிழும் பொருள்களைத் தங்கள் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் நிறுவனங்கள், அதை சமன் செய்யும் விதத்தில் குறிப்பிட்ட முயற்சிகளை எடுக்க வேண்டும்’ என்ற சட்டங்கள் சில நாடுகளில் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. பை தி வே, இப்படி இருக்கும் சட்டம் ஒன்றின் உதவியால்தான் உலகின் பெரும் பணக்காரராக மாறியிருக்கிறார் எலான் மஸ்க். கார்கள் கார்பனை உமிழ்பவை என்பதால், கலிபோர்னியா உள்ளிட்ட பல அமெரிக்க மாநிலங்கள் பூஜ்ய உமிழ்வு வாகனம் (Zero Emission Vehicle), சுருக்கமாக ZEV என்ற திட்டத்தை வைத்தி ருக்கின்றன. பெட்ரோல், டீசல் போன்றவற்றில் இயங்கும் கார்பன் உமிழும் கார்களை விற்கும் நிறுவனங்கள், அதற்கு சமமான ZEV கிரெடிட்களை வைத்திருக்க வேண்டும் என்பது சட்டம். அதே நிறுவனம் கார்பன் உமிழாத கார்களை விற்றால், அதற்கு சமமான ZEV கிரெடிட்கள் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டுவிடும். எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் கார்களைத் தயாரிப்பதால், தாங்கள் தயாரிக்கும் அனைத்து கார்களுக்குமான ZEV கிரெடிட்களைப் பெற்றுவிடுகிறது. கார்பன் உமிழும் கார்களைத் தயாரிப்பதே இல்லை என்பதால் இந்த கிரெடிட்கள் டெஸ்லாவிற்குத் தேவையில்லை. எனவே, கார்பன் உமிழும் கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த கிரெடிட்களை விற்று நூறு சதவிகித லாபம் ஈட்டிவிடுகிறது டெஸ்லா.

ஒளியை விலக்கும் வருமுன் காப்போம் பாணி: சூரிய ஒளி பூமியில் படுவதற்கு முன்னரே அதைத் திருப்பி அனுப்பிவிடும் பரிசோதனை ஆராய்ச்சி முயற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, செயற்கை மேகங்களை உருவாக்குவது, ரோடுகள், பாலைவனப் பரப்பு போன்றவற்றைப் பளபளக்கும் தகடுகளால் மூடுவது போன்ற முயற்சிகள்.

அட்வான்ஸ்ட் உத்திகள்: வளிமண்டலத்திலிருந்து கார்பனை நேரடியாக உறிஞ்சி எடுக்கலாமே! ‘அறிவியல் தொழில்நுட்பத்தின்படி இது சாத்தியம்’ என்பது நிறுவப்பட்டுவிட்டது. சிக்கல் - இதைச் செய்வதற்கான மின்சாரத் தேவை. ஆயிரம் டன் கார்பனைக் காற்றிலிருந்து உறிஞ்சி எடுக்க உலக மின்சார நுகர்வில் பத்து சதவிகிதம் தேவைப்படுகிறது. குறிக்கோளின் நோக்கத்திற்கே எதிராக இதுச் செயல்படுகிறது என்பதால், எப்படி குறைவான ஆற்றலைச் செலவழித்து கார்பனைக் குறைக்கலாம் என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

இந்த வாரக் கட்டுரைக்கான ஆதாரங்கள், இணைப்புகள் https://unlock.digital/14 என்ற வலைப்பக்கத்தில் இருக்கின்றன. உங்கள் கருத்துகளை +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலம் அனுப்புங்கள்.

- Logging in...