
- அண்டன் பிரகாஷ்
ஒவ்வொரு நாளும் ஐம்பதாயிரம் கப்பல்கள் புவிப்பந்தின் கடல் நீர்ப் பரப்பில் நகர்ந்தபடி இருக்கின்றன என்பதைத் தொடரின் முந்தைய கட்டுரை ஒன்றில் பார்த்தோம். அமெரிக்காவில் ஒருவர் ஐபோன் ஆர்டர் செய்தால், அது சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்டு சில நாள்களில் வந்து சேர்கிறது. அதற்குப் பின்னிருக்கும் விநியோகச் சங்கிலி (Supply Chain), ஆப்பிரிக்காவில் அள்ளப்படும் சிலிக்கான் நிறைந்த க்வார்ட்ஸ் மணலில் தொடங்குகிறது. மணலிலிருந்து சிலிக்கான் சிப்புகள் தயாரிக்கப்பட, அலைபேசியின் முகமாக இருக்கும் கண்ணாடி வேறொரு இடத்தில் தயாராகிறது. அலைபேசியை இயக்கும் மென்பொருள் இந்தியா உட்பட பல நாடுகளில் எழுதப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்த்து உருவாகும் அலைபேசிச் சாதனம், கூரியர் மூலம் கண்டங்களைக் கடந்து பயனீட்டாளர் கைக்கு வந்து சேருகிறது. பொதுவாக நாம் பொருள் வாங்கும்போது, அது எங்கே, எப்படி உற்பத்தியாகி, எந்த மொத்த விற்பனைக் கிடங்கில் வைக்கப்பட்டு, யார் மூலம் நமக்கு வந்து சேர்கிறது என்ற விநியோகச் சங்கிலி இணைப்புகளைப் பற்றி அதிகம் நினைப்பதில்லை. இந்தச் சங்கிலியில் மிக முக்கியமான இடம் கப்பல்களுக்கு உண்டு.
சூயஸ் கால்வாயில் நுழைந்து சிக்கிக்கொண்ட கப்பல் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். ‘எவர் கிவன்’ (Ever Given) எனப் பெயரிடப்பட்ட அந்தப் பெரிய சைஸ் கப்பலை பிரம்ம பிரயத்தனம் செய்து ஒருவழியாக நகர்த்தி விட, வர்த்தக உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறது. எகிப்து நாட்டின் மேற்பார்வையில் இருக்கும் சூயஸ் கால்வாயைத் தினமும் சுமார் ஐம்பது கப்பல்கள் கடக்கின்றன. உலக வர்த்தகத்தில் 12 சதவிகிதம் சூயஸ் கால்வாய் வழியாக ஆண்டுதோறும் கடக்கிறது. இது அறிவியல் தொடர் என்பதால் அந்தக் கோணத்தில் சூயஸ் கால்வாய்த் தகராறைப் பார்த்துவிடலாம்.

எவர் கிவன், உலகின் மிகப் பெரிய சரக்குப் பெட்டகக் கப்பல்களில் ஒன்று. சூயஸ் கால்வாயின் அகலம் இருநூறு மீட்டர். அந்த அகலத்தைவிட இரண்டு மடங்கு நீளமான எவர் கிவன் இந்தக் கால்வாயில் செல்கையில் படு கவனம் தேவை. காரணம், ‘கரை விளைவு’ (Bank Effect). நதி அல்லது அகலம் குறைந்த நீர்ப்பாதைகளில் கப்பல் செல்லும்போது கரை தன்னை நோக்கி இழுக்கும் போக்கைத்தான் கரை விளைவு என்கிறார்கள். எகிப்தில் மண் புழுதிப் புயல் காலம் இது. அடித்த காற்று மற்றும் கரை விளைவின் காரணமாக மேற்குக் கரையை நோக்கிக் கப்பலின் முன்பகுதி செல்ல, கிழக்குக் கரையில் மாட்டிக்கொண்டது கப்பல்.
சிக்கிக்கொண்ட இடத்தில் இருந்த மண் பகுதியை வெட்டி மாற்றினார்கள். கப்பல்களைத் துறைமுகத்திற்கு இழுத்து வரவும், திறந்த கடலுக்கு அழைத்துச் செல்லவும் பயன்படும் Tugboat என்ற இழுப்புப் படகுகள் இழுத்து, தள்ளி, பல நாள்கள் பாடுபட்டன. அடி மேல் அடி வைக்க நகரும் அம்மியாக நகர்ந்துவிட்டது எவர் கிவன். பௌர்ணமி நாளின் விளைவாக உயர் அலை (High tide) வந்ததும், காற்று திசைமாறி வீசியதும், இயற்கை அன்னை செய்த இரு உதவிகள்.
கப்பல்களை மிதக்க விட்டு வர்த்தகம் பெருக்குகிறோம். செவ்வாய்க் கிரகத்தை அறிந்துகொள்ள ரோவர் ஊர்தியை அனுப்புகிறோம். சீறிப்பாய்ந்து வந்த கொரோனா புரத வைரஸைத் தடுப்பூசி கொண்டு அடக்கத் தொடங்கிவிட்டோம். ‘நான் இங்கே உன் காலடியில் இருக்கிறேன். எனக்குள் இருப்பதைக் கண்டுகொள்ள மாட்டாயா?’ என்ற ஆற்றாமையுடன் சென்ற வாரம் சீறிப் பாய்ந்திருக்கிறது பூமி.
நடந்த இடம்: ஐஸ்லாந்து. ஃபாஹ்ராடல்ஜக் (Fagradalffjall) என நம் கசடதபற உச்சரிப்பிற்கு ஒத்து வராத பெயரில் இருக்கும் மலை ஒன்று கொந்தளித்தது.
நாம் தினமும் நடக்கும் / ஓடும், கட்சிக் கொடிக்கம்பம் நட்டுக்கொள்ளும், வீடு கட்டிக்கொள்ளும், விவசாயம் செய்து உணவு தயாரிக்கும், குழி வெட்டித் தண்ணீர் ஊற்றி நீச்சல் அடிக்கும், சொத்துத் தகராறுகளில் சண்டை போட்டுக்கொள்ளும் நிலம் என்பது, புவி அறிவியல் அறிஞர்கள் மொழியில் மேலோடு (Crust) எனப்படுகிறது. புவியியல் (Geography) என்பது நிலப்பரப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது; புவி அறிவியல் பூமிக்குள் இருப்பவற்றை அறிந்துகொள்வது. பூமியின் பரப்பளவு, உருவம் போன்றவற்றைக் கணக்கிடும் கணித முறைக்கு ஜியோடேசி (Geodesy) என்று பெயர். பூமியைத் துளையிட்டு ஒரு விசிட் அடித்துவிட்டு, ஐஸ்லாந்திற்குத் திரும்ப வரலாம்.
வெங்காயத்தை வெட்டினால் இருப்பதுபோல், பூமியும் அடுக்குகளால் அமைந்திருக்கிறது. நிலப்பரப்போ, நீர்ப்பரப்போ, நாம் துளையிடப்போவது பூமியின் மேலோட்டில். பூமியின் அடுக்குகளிலேயே மிகவும் மெல்லியது எனக் கருதப்படும் மேலோடு ஐந்து முதல் 10 கிலோமீட்டர் வரை இருக்கிறது. திடமான பாறைகளும், தாதுக்களும் கொண்ட இந்த மேலோட்டிற்குள் ஆழமாகச் செல்லச் செல்ல, வெப்பம் அதிகரிக்கும். மேலோட்டிற்குக் கீழிருக்கும் அடுக்கு ‘மேண்டில்’ (Mantle) என அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 3,000 கிலோமீட்டர் வரை நீளும் இந்த அடுக்கில் உலைபோல பாறைகள் உருகி, நெகிழி போன்ற பிசுபிசுப்புடன் மேலோட்டைத் தாங்கிப் பிடிக்கின்றன. நாம் மேலோட்டில் பார்க்கும் எரிமலை உள்ளிட்ட பூமியின் நிகழ்வுகளுக்கு அடிப்படையாக இருக்கும் மேண்டில், பூமியின் 84 சத இடத்தை ஆக்கிர மிக்கிறது. இதைத்தாண்டி இருக்கும் வெளிப்புற மையம் (Outer Core) கிட்டத்தட்ட 3,400 கிலோமீட்டர் வரை ஆக்கிரமிக்கிறது. இதுவரை யாரும் பார்த்திருக்காத இந்தப் பகுதியில் வெப்பம் கிட்டத்தட்ட ஆறாயிரம் டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. பெரும்பாலும் உருகிய இரும்புத் தாதுவைக் கொண்டு அமைந்த வெளிப்புற மையம்தான் பூமியின் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. இதையடுத்து இருக்கும் பூமியின் உள் மையமும் (Inner Core) இரும்பால் ஆனது என்றாலும், முக்கிய வித்தியாசம் - வெளி மையம் போலல்லாது, உள் மையம் திட வடிவில் இருக்கிறது. இரும்பு மட்டுமல்லாமல், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், பல்லேடியம் மற்றும் டங்ஸ்டன் போன்றவையும் இருக்கின்றன. இந்த வருடம் மே மாதத்தில் வரும் அட்சய திருதியைக்குத் தங்கம் வாங்கத் தேவையில்லை; பூமியில் துளை போட்டு 5,000 கிலோமீட்டர் போனால் போதுமா எனக் கணக்கிடும் விபரீதம் வேண்டாம். அத்தகைய பயணம் கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

சரி, துளையிட்டு பூமியைப் பார்த்த கற்பனைப் பயணத்தில் இருந்து திரும்பி ஐஸ்லாந்தின் நிலப்பரப்பிற்கு மீண்டும் வந்துவிடலாம். 800 ஆண்டுகளாக அமைதியாக இருந்த மலைப்பகுதி சென்ற வாரத்தில் மேண்டில் அடுக்கிலிருந்து வரும் லாவா தீக்குழம்புகளால் ஜொலிக்கிறது. ஊர்க்காரர்கள் அந்த அதிசயத்தைப் பார்க்க பிக்னிக் செல்கிறார்கள். கொதித்து அடங்கும் லாவா பிழம்பில் சமைக்கிறார்கள். டெக் ஆசாமிகள் தங்களது சிறிய ட்ரோன் விமானங்களை எரிமலைக்கு மேல் பறக்க வைத்து ‘எரிமலை எப்படித் தகிக்கிறது’ என்பதை வீடியோவாகப் பதிவிடு கிறார்கள். இதையெல்லாம் தாண்டி, இந்த நிகழ்வைக் கொண்டாடுபவர்கள், புவி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.
பல எரிமலைகள் உயிர்ப்புடன் இருக்கும் ஐஸ்லாந்துத் தீவு, பூமி எப்படி உருவாகியிருக்கும் என்பதையும், பூமியின் அடியில் இருக்கும் அடுக்குகளில் கிடைக்கும் தாதுக்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள உதவுகிறது. முன்னொரு காலத்தில் கண்டங்கள், குறிப்பாக ஐரோப்பாவும் அமெரிக் காவும் ஒன்றாக இணைந்திருந்தன. மிகப்பெரிய புவி நிகழ்வு அவற்றைப் பிளந்து போட, அந்தப் பரப்பில் நிரம்பிய கடல் நீர்தான் இப்போது அட்லாண்டிக் பெருங்கடல் என அழைக்கப்படுகிறது. அந்தக்கடலில் வடக்கு முனையில் இருக்கும் ஐஸ்லாந்து, பூமியின் இளைய தீவு. ஐஸ்லாந்தின் நடுவில் இருக்கும் திங்க்வெல்லீர் பள்ளத்தாக்கு (Thingvellir Valley) என்ற இடம் வருடத்திற்கு ஐந்து சென்டிமீட்டர் அளவில் பிளவுபட்டுக்கொண்டே போவது தெரியவந்தது. இந்தப் புதிருக்கான உறுதியான விடை, நாற்பதுகளில் கிடைக்கத் தொடங்கியது. ஒலி மூலம் ஆழங்களை அளக்க முடிகிற சோனார் கருவி மூலம் அட்லாண்டிக் கடலின் தரையை முழுக்க அளந்து முடித்தது அமெரிக்க ராணுவம். அப்போது, இரண்டு கண்டங்களுக்கும் இடையில் பிளவுபட்ட மலை ஒன்று இருப்பது கண்டறியப்பட, நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை அனுப்பி இந்த மலைப் பிளவுகளில் என்ன நடக்கிறது என்பதைத் தீர்க்கமாக ஆராய்ந்தனர். அது எரிமலைகளின் தொடர்ச்சியாக இருப்பது தெரியவந்தது. இந்த நடு அட்லாண்டிக் மலை (Mid-Atlantic Ridge) ஐஸ்லாந்து நடுவில் செல்வதும் தெளிவானது. ஆக, பெரும் எரிமலை ஒன்றுதான் ஐஸ்லாந்துத் தீவை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது உறுதியானது. அறுபதுகளின் இறுதியில் இந்த ஆராய்ச்சிக்கு முத்தாய்ப்பாக, ஐஸ்லாந்துக் கடலில் 20 கிலோமீட்டர் தொலைவில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நெருப்புப் பிழம்பாக வெடித்து லாவா வெளிவந்து அடங்கி, சர்ட்ஸி என்ற புதிய தீவு உருவானது. இதை ‘நவீன உலகில் உருவான முதல் தீவு’ என்கிறார்கள்.
சரி, புதிய எரிமலை வெந்து தணிய இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டால், “இன்னும் சில நாள்களுக்குள் லாவா கட்டியாகி எரிமலை நின்றுவிடலாம்; அல்லது, இன்னும் சில நூறு வருடங்களுக்குத் தொடர்ந்து செயலில் இருக்கலாம்” என்கிறார்கள். 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் உருவான பிரபஞ்ச நேரக் கணக்குப்படி பார்த்தால் சில நாள்களுக்கும், சில நூறு வருடங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லைதானே?
இந்த வாரக்கட்டுரை தொடர்பான விவரங்களின் வலைப்பக்கம்: https://unlock.digital/23. கட்டுரைக்கான பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்: +1 628 240 4194
- Logging in...