Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 15

UNLOCK அறிவியல் 2.O
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல் 2.O

- அண்டன் பிரகாஷ்

திபர் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வாரத்தில் அமெரிக்காவின் முன்னணி இதழ்களில் தவறாமல் செய்தி ஒன்று இடம்பெறும். புதிய அதிபரின் நிர்வாகம், பொருளாதாரக் குறிக்கோள்கள், வெளியுறவுக் கொள்கைகள் போன்ற சீரியஸ் விவகாரங்கள் ஒருபுறம் இருக்க, இந்த லொள் செய்தியும் முக்கிய இடம் பிடிக்கும்.

ஆம்... நீங்கள் கணித்ததுபோல் நாய்களைப் பற்றிய செய்திதான் அது. பைடன் குடும்பத்தினர் வெள்ளை மாளிகைக்குக் கொண்டுவரப்போகும் நாய்களைப் பற்றிய விரிவான அலசலாக அமைந்த இந்தக் கட்டுரைகள், சென்ற வாரம் பல இதழ்களில் இடம்பெற்றிருந்தன. அமெரிக்க அதிபர்களின் நாய்ப் பிரியங்களைத் தொடர்ந்து துப்பறியும் பத்திரிகையாளர் களுக்கு, நாய்களை அதிபர் வைத்திருக்கா விட்டாலும் செய்திதான். 100+ வருட வெள்ளை மாளிகை வரலாற்றில், நாயற்ற அதிபராக இருந்த ஒரே அதிபர் ட்ரம்ப். பை தி வே, பைடன் குடும்பத்தினரின் சேம்ப், மேஜர் எனப் பெயர் வைக்கப்பட்ட இரண்டு நாய்களுக்கும் அலுவலக ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு (@TheOvalPawffice), அதில் ஒன்றரை லட்சம் பேர் இதுவரை இணைந்திருப்பது என்பது கொஞ்சம் டூ மச்.

UNLOCK அறிவியல் 2.O - 15

நாய்களுக்குப் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல; மொத்தச் சமூகமும் முக்கியத்துவம் கொடுப்பதை சமூக ஊடகங் களில் பார்க்கலாம். இன்ஸ்டகிராமிற்குச் சென்றால், மக்கள் தங்கள் நாய்களின் படங்களை அதிக அளவில் பகிர்வதைப் பார்க்க முடிகிறது. மனித இனத்தின் நாய்க் காதல் - அல்லது நாய் இனத்தின் மனிதக் காதல் - சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்னரே தொடங்கிவிட்டது. ‘குத்துமதிப்பாக, 35,000 ஆண்டுகளுக்கு முன்னால்’ என்கிறார்கள் தொல்லியல் மற்றும் விலங்கியல் ஆய்வாளர்கள். அப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் இல்லை என்பதால், நாய்த் துணையுடன் நாள் முழுக்க வேட்டையாடிக் களைத்து குகை திரும்பிய கற்கால மனிதன், தனக்கு அருகில் நாய் நிற்பதாக வரைந்த ஓவியங்கள், அந்தக் கால செல்ஃபிகள்.

UNLOCK அறிவியல் 2.O - 15

கற்கால ப்ளாஷ்பேக்கில் இருந்து தற்காலத்திற்கு வரலாம். 750 கோடி மனிதர்களைக்கொண்டிருக்கும் பூமியில் 90 கோடி நாய்களும் கூடவே வசிக்கின்றன. பாதிக்கும் மேலானவை வளர்ப்புப் பிராணிகள். மற்றவை சுதந்திரவாசிகளாகச் சுற்றித் திரிகின்றன.

பல நூற்றாண்டுகளாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் மனிதர்களின் உடல் மற்றும் மனநோய்கள் அடையாளம் காணப்பட்டு, சிகிச்சை முறைகளும் தொடர்ந்து கண்டறியப்படுகின்றன. அந்த அளவிற்கு இல்லை என்றாலும், நாய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன. நாய்களைப் பற்றிய அறிவியல் பிரிவை ‘Canine Science’ என்கிறார்கள். அதைத்தான் இந்த வாரம் அன்லாக் செய்யப்போகிறோம்.

UNLOCK அறிவியல் 2.O - 15

‘‘பரிணாம வளர்ச்சியில் மனிதர்களிடம் பழகத் துணிந்த ஒரு வகை ஓநாயே, நாய் இனமாக நாளடைவில் மாறியது’’ என்கிறார்கள் பரிணாம வல்லுநர்கள். இன்றிருக்கும் சாம்பல் நிற ஓநாய்களுக்கும், நாய்களுக்கும் 99 சதவிகித மரபணுத் தொடர்பு இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, இருவருக்குமே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரே மூதாதையர் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ‘மனிதர்களும் நாய்களும் எப்படி ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொண்டனர்’ என்பது முதல் கேள்வி. அறிவு வளர்ச்சியில் வேகமாக முன்னேறிவந்த மனிதனுக்கு, தனது வேலைகளில் உதவி செய்கிற விலங்காக இருந்ததாலும், உணவுக்காக மட்டும் தன்னை நாடியதாலும், பிரிய விலங்காக நாய் மாறியது வியப்பில்லை.

UNLOCK அறிவியல் 2.O - 15

‘மனிதனை அண்டி வாழ வேண்டும் என்ற பரிணாம உந்துதல் நாய்க்கு எப்படி வந்தது’ என்ற நீண்ட காலக் கேள்விக்கு சமீபத்தில்தான் விடை கிடைத்திருக்கிறது. விடையைக் கண்டறிந்தவர், அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரகெரி பெர்ன்ஸ். நரம்பியல் மருத்துவரான கிரகெரிக்கு, மனித மூளையின் சூட்சுமங்களை நன்கு கற்றறிந்த பின்னர் நாய்களின் மூளை ரகசியங்களை அறிய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அதற்கான ஆராய்ச்சிகளில் பல வருடங்கள் ஈடுபட்டார். மனித மூளையின் செயல்பாடுகளை அறிவது எளிது. காந்த அதிர்வலைப் படங்களை (Magnetic Resonance Imaging, சுருக்கமாக MRI) எடுக்கும் ஸ்கேன் கருவிகள் மனிதர்களின் மூளை மற்றும் மற்ற உடல் பாகங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப் பட்டவை. பல வருட உழைப்பில், நாய்களின் மூளைகளை MRI ஸ்கேன் செய்து தான் கண்டறிந்தவற்றைக் கொண்டு கிரகெரி எழுதிய நூல், ‘நாய்கள் நம்மை எப்படி நேசிக்கின்றன?’ (How dogs love us?). புத்தகத் தலைப்பை மீண்டும் படியுங்கள். ‘நாய்கள் நம்மை ஏன் நேசிக்கின்றன’ என்பதல்ல தலைப்பு; மாறாக, ‘எப்படி’ என்பதுதான் ஆராய்ச்சி.

UNLOCK அறிவியல் 2.O - 15

எப்படிச் செய்யப்பட்டது இந்த ஆராய்ச்சி?

நாய்களை MRI கருவிகளில் ரிலாக்ஸ்டாக, தலையை அசைக்காமல் இருக்கும் வண்ணம் தயார்படுத்தி, அவற்றின் பார்வையில் பல உணவு வகைகள், விளையாட்டு பொம்மைகள், படங்கள், மற்ற நாய்கள், மனிதர்கள் எனப் பலதரப்பட்ட வகையானவை காட்டப்பட்டன. அவற்றைப் பார்க்கும்போதும், முகரும்போதும் நாய்களின் மூளைகளில் நடக்கும் நியூரான் செயல்பாடுகள் ஸ்கேன் வடிவில் எடுக்கப்பட்டு தகவல் தொகுக்கப்பட்டது.

‘ஆராய்ச்சியின் முடிவு என்னதான் அண்டன்’ என்ற கேள்விக்கு பதில் சொல்கிறேன். அதற்கு முன்னால், உங்களுக்கு ஒரு கேள்வி: ‘நம் புன்னகை என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றிக்கொள்ளக் கூடியது’ என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? உங்கள் முன்னால் நிற்கும் ஒருவர் புன்னகைத்தால், அது உங்களது மூளையின் இடது பக்கத்தில் இருக்கும் cingulate cortex பகுதியைத் தீண்டி, உங்கள் கட்டுப்பாடுகளையும் தாண்டி, உங்கள் முகத்தில் இருக்கும் தசைகளை இயக்கிப் புன்னகைக்க வைக்கும். நம்ப முடியவில்லையா? இந்த வரியில் நிறுத்திவிட்டு, பக்கத்தில் இருப்பவரைப் பார்த்துப் புன்னகைத்துப் பாருங்கள்.

‘நாய் மூளையின் பல செயல்பாடுகள் மனித மூளையை ஒத்ததாக உள்ளது’ என்கின்றன கிரகெரியின் ஆய்வு முடிவுகள். மனிதர்களை, குறிப்பாக, தன் வீட்டில் இருப்பவர்களைப் பார்க்கும்போதோ, அல்லது, அவர்களது வியர்வை கொண்ட உடைகளை முகரும்போதோ, நாய்களின் மூளைகளில் நிகழும் நியூரான் செயல்பாடு மனித மூளைக்கு நிகராக இருக்கிறது. இதை இப்படிச் சொல்லலாம். நாம் நாய் ஒன்றைப் பார்க்கும்போது, ‘இது நாய்’ என்பதுடன் நமது கிரகிப்பு முடிந்துவிடுகிறது. நாய் நம்மைப் பார்க்கும்போது ‘அட, இவன் நம்மாளுய்யா!’ என அதன் நியூரான்கள் சிலிர்க்கின்றன. ஆக, ‘நம் இனத்தைச் சார்ந்தவன்’ என மனிதனைக் கருதுவதுதான், நாய்கள் நம்மை அண்டியிருப்பதன் காரணம். நாய்களே நினைத்தாலும் இந்த மரபணு சார்ந்த ஒட்டுதலை மாற்றிக்கொள்ள முடியாது.

மூளை வடிவத்தில் சில ஒற்றுமைகள் இருந்தாலும், மற்றவற்றில் நம்முடன் வெகுவாக மாறுபடுகின்றன நாய்களின் புலன் திறன்கள்.

UNLOCK அறிவியல் 2.O - 15

பார்வை: மனிதர்கள் அளவிற்கு நாய்களால் தூரத்தில் உள்ளதைப் பார்க்க இயலாது. நாம் 75 அடி தூரத்தில் பார்ப்பதை 20 அடிகளுக்குள்தான் நாய்களால் பார்க்க முடியும். ஆனால், அசைவுகளை நம்மைவிடத் துரிதமாகக் கண்டறிய முடியும். நம்மைப்போல வண்ணங்களைப் பார்ப்பதிலும் திறன் குறைவே. குறிப்பாக, சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் பொத்தாம் பொதுவான மஞ்சளாகத்தான் நாய்களுக்குத் தெரியும்.

பார்வையற்றவர்களுக்கு உதவும் ‘Seeing eye dogs’ என அழைக்கப்படும் நாய்கள் ட்ராபிக் சிக்னல் விளக்குகளில் நிறங்கள் மாறுவதைக் கண்டுபிடிப்பதை நேரடியாகவோ, திரைப்படங்களிலோ நீங்கள் பார்த்திருக்கலாம். நிறத்தைச் சார்ந்திராமல், ஒளிரும் தன்மையை வைத்து அது சிவப்பா, பச்சையா என்பதைப் புரிந்துகொள்கின்றன இந்த நாய்கள்.

கேட்டல்: மனிதர்களின் கேட்கும் திறனின் உச்ச அதிர்வெண் இருபதாயிரம் ஹெர்ட்ஸ். அதற்கு மேல் இருக்கும் அதிர்வுகளை நம் காதுகளால் கேட்க முடியாது. நாய்களுக்கு ஐம்பதாயிரம் ஹெர்ட்ஸ் வரை சத்தம் கேட்கும். இதனால், மெல்லிய சப்தங்களையும், சப்தங்களின் வித்தியாசங்களையும் வித்தியாசப்படுத்திப் புரிந்து கொள்ள முடியும். (கட்டுரையின் இணைப்பு வலைப்பக்கத்தில் எவ்வளவு அதிக அதிர்வெண்கள் கொண்ட சத்தத்தை உங்களால் கேட்க முடிகிறது என சோதிக்கும் வீடியோ இருக்கிறது. ஹெட்போன் மாட்டியபடி கேளுங்கள்.)

வாசனை உணர்வு: மனிதர்களைப் போலவே, நாய்களுக்கும் வாசனையை முகர்ந்து பார்க்க உதவுவது மூக்கில் இருக்கும் olfactory receptors எனப்படும் செல்கள். முகரப்படும் வாசனையை மூளைக்கு எடுத்துச்செல்லும் இந்தச் செல்கள் நமக்கு 60 லட்சம் இருக்கின்றன. நாய்களுக்கோ 30 கோடி செல்கள். உங்கள் வீட்டில் இருக்கும் உணவுகளின் வாசனை மட்டுமல்ல; பக்கத்து வீட்டில் வெங்காய பஜ்ஜி செய்தாலும் உங்கள் நாய்க்கு அது தெரிந்துவிடும். அது மட்டுமல்ல, நீங்கள் மகிழ்ச்சியாக/கோபமாக/வருத்தமாக எனப் பல உணர்வுகளில் இருக்கும்போது, வரும் வியர்வையை முகர்ந்து உங்களது மனநிலையைப் புரிந்துகொள்ளும் திறனும் இருக்கிறது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் சிலருக்கு நாய்கள் என்றால் பிடிக்கலாம்; சிலருக்கு பயம் இருக்கலாம்.

முதல் வகையறாக்களுக்கு - உங்கள் நாயின் வாழ்நாள் 10 முதல் 13 வருடங்களே. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் உயரமான நாய் சென்ற வாரத்தில் இறந்து போனது. ப்ரெடி எனப் பெயரிடப்பட்டிருந்த Great Dane வகையைச் சார்ந்த அந்த நாய் 8 வருடங்களே உயிருடன் இருந்தது. நாய்க் காதலரான உங்களுக்கு அறிவியல் வளர்ச்சி ஒன்று, சிறிய நிம்மதிப் பெருமூச்சைக் கொடுக்கலாம். உயிருடன் இருக்கும்போதே உங்கள் நாயின் செல்களை எடுத்து மரபணு சேமிப்பு (Genetic Preservation) முறைப்படி சேமித்துக்கொண்டால், நாய் இறந்த பின்னர் அதன் செல்களிலிருந்து மற்றொன்றை க்ளோனிங் முறையில் கருத்தரிக்க வைத்துப் பெற முடியும். இதைச் செய்யாமல் இருந்துவிட்டு, எதிர்பாராத முறையில் நாய் இறந்துவிட்டால், அதைக் குளிர்பதனப்படுத்தி அதன் காதிலிருந்து செல்களை எடுத்துப் பயன்படுத்தும் வழியும் இருக்கிறது. க்ளோனிங் செய்ய 35 லட்ச ரூபாய் ஆகிறது.

இரண்டாம் வகையறாக்களுக்கு, நாய்கள் குரைப்பதையோ, உறுமுவதையோ கண்ட பயம் ஒருபுறம் இருக்க, நாய்களை பாதிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பற்றிய பயம் மறுபுறம். எல்லா விலங்குகளைப் போலவே, நாய்களின் உடலுக்குள் நுண்ணுயிரிகள் உண்டு. அவற்றில் பல மனிதர்களுக்குத் தொற்றாது. ஆனால், ரேபிஸ் போன்ற வைரஸ்கள் தொற்றும். நாய்களுக்குத் தடுப்பூசி போடுவதன் மூலம் ரேபிஸ் பரவவிடாமல் செய்ய முடியும். சரி, வௌவாலில் இருந்து உருவானதாகச் சொல்லப்படும் கொரானா வைரஸ் நாய்கள் மூலம் பரவுமா என்ற கேள்வி மனதில் எழுகிறதா? பதில்: மனிதர்களிடமிருந்து நாய்களுக்கு கொரானா வைரஸ் தொற்றலாம். ஆனால், நாய்களிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றாது.

இந்த வாரக் கட்டுரையை சமர்ப்பிக்க சற்றுத் தாமதமாகிவிட்டதால், நடைக்கு அழைத்துச் செல்லாமல், எழுத்தில் மும்முரமாக இருக்கும் என்னை ஒரு கண் வைத்தபடி பொறுமையாகப் பார்த்து என் மேசையின் கீழ் அமர்ந்திருக்கிறது Bud. எனவே, இந்த வரியுடன் முடிக்கிறேன்.

இந்தக் கட்டுரைக்கான ஆதாரங்களும், சம்பந்தப்பட்ட வலைதளங்களும் https://unlock.digital/15 என்ற வலைப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பின்னூட்டங்களை +1 628 240 4194 என்ற எண்ணுக்கு அனுப்பும்போது, உங்கள் வீட்டில் அல்லது தெருவில் இருக்கும் உங்களது பிரிய நாயின் படத்தைப் பெயருடன் அனுப்புங்கள்.

- Logging in...

UNLOCK அறிவியல் 2.O - 15

வில்லும் அம்பும் தரித்த அந்த மன்மதச் சிலையிலிருந்து உயிர்பெற்று வா நீ

வெற்றிலைச் சிவப்பு வெளித்தெரியாதகல் இதழ்களை நெகிழ்த்துகிறேன் நான்

சிலையாய் சமைந்திருந்தரதியும் மன்மதனும்உயிர்த்தெழுகிறார்கள்நம் முத்தத்தின் ஈரத்தில்.