
- அண்டன் பிரகாஷ்
இந்த வார தலைப்பிற்குள் செல்லும் முன்னால், சென்ற வாரத்தில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள்:
செவ்வாய் கிரகத்திற்கு சக்கரத்தில் ஓடும் ரோவர் வாகனங்கள் இதுவரை நான்கு முறை அனுப்பப்பட்டுள்ளன. ‘விடாமுயற்சி’ (Perseverance) எனப் பெயரிடப்பட்ட ஐந்தாவது ரோவர் சென்ற வாரத்தில் தரையிறங்கிவிட்டது. ‘Percy’ எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த ரோவர் வாகனத்தை தோஷமில்லாமல் செவ்வாய் கிரகத்தில் இறக்கி, இயக்கிக்காட்டிய குழுவின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் சுவாதி மோகனின் நெற்றிப் பொட்டு சமூக வலைதளங்களில் சிலாகிக்கப்படுகிறது. இந்த ரோவர் தான் செய்யும் பணிகளை ட்வீட்டுகளாகக் கீச்சிடுகிறது. இவற்றைப் படிக்க @NASAPersevere என்ற ட்விட்டர் கணக்கைத் தொடருங்கள். அதோடு, டெக்னிக்கல் சமாசாரங்களில் ஆர்வம் இருந்தால், ரோவர் வாகனத்தைச் செலுத்தி, இறக்குவதை நீங்களே உருவகப்படுத்தி, செயல்படுத்திக்கொள்ளும் வழிமுறையை இந்த வாரக் கட்டுரைக்கான வலைப்பக்கத்தில் பாருங்கள்.

கறுப்பு நிறக் கால்கள் கொண்ட மரநாய் (Black foot ferret) இனம், அழிந்துவரும் விலங்குகள் பட்டியலில் உள்ளது. சென்ற வருடக் கணக்கெடுப்பின் படி சில நூறு மட்டுமே எஞ்சியிருக்கும் இந்தக் காட்டு விலங்கினம், இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும் என்றிருந்த அபாயத்தை, அறிவியல் ஆபத்பாந்தவனாகத் தடுத்திருக்கிறது.

நடந்த நிகழ்வின் கதைச் சுருக்கம்: இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட அமெரிக்கக் கண்டம் முழுக்கப் பரவலாகக் காணப்பட்ட கருங்கால் மரநாய்கள் மறையத்தொடங்கின. 80களில் இந்த இனம் அழிந்தேவிட்டது என்று கருதப்பட்ட நிலையில், வயோமிங் மாநிலத்தில் இறந்து கிடந்தது ஒரு கருங்கால் மரநாய். உடல் சிதைவதற்கு முன்னால் அதிலிருந்து எடுக்கப்பட்ட திசு, சாண்டியாகோ உயிரியல் பூங்காவின் ஆராய்ச்சி அமைப்பாக இருக்கும் Frozen Zooவில் உறைநிலையில் வைக்கப்பட்டது. எண்பதுகளின் கடைசியில் மற்றொரு பெண் மரநாயின் திசுவும் கிடைத்தது. உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம் ஒன்று, இந்தத் திசுக்களிலிருந்து மரபணுக்களை எடுத்து மற்றொரு வகை மரநாயின் கருமுட்டைக்குள் செலுத்தி கருக்களை உருவாக்கியது. வளர்ப்பு மரநாய் ஒன்றை வாடகைத்தாயாகத் தேர்வு செய்து, அதன் கருப்பைக்குள் வைத்த 14 நாள்களில் இதயத்துடிப்பு கேட்க ஆரம்பித்தது. 42 நாள்களில் பிறந்த மரநாய்க் குட்டிக்கு ‘எலிசபெத் ஆன்’ என அழகிய பெயர் சூட்டப்பட்டது. ‘மற்றொரு வகை வளர்ப்பு மரநாயின் கருமுட்டை பயன்படுத்தப்பட்டதால், எலிசபெத்தின் மரபணுக்களில் அதன் தாக்கம் இருக்குமே’ என்று உங்கள் மனதில் எழுந்த கேள்வி ஆய்வாளர்களுக்கும் இருந்தது. எலிசபெத்தின் மரபணுக்களை சோதித்து, ‘அவள் சாட்சாத் கருங்கால் மரநாய் இனமே’ என்பதை உறுதிப்படுத்திவிட்டார்கள். மரபணு அறிவியலின் மகத்துவத்தில் ஆராய்ச்சிக் கூடத்தில் வளர்ப்பு மரநாய்க்கு நகலியாகப் (Clone) பிறந்திருந்தாலும், இது காட்டு விலங்கு. எனவே, காட்டுக்கோ அல்லது விலங்கியல் பூங்காவிற்கோ விரைவில் அனுப்பப்படும்.

‘எதிர்காலத்தின் சுருக்கமான வரலாறு’ நூலின் ஆடியோ வடிவத்தை நடைப்பயிற்சியின்போது கேட்டுக் கொண்டிருந்தேன். ‘Homo Deus’ எனப் தலைப்பிடப்பட்ட அந்த நூல், சம கால வரலாற்று ஆய்வாளராகப் போற்றப்படும் யுவால் நோவா ஹராரி எழுதியது. அவர் கொடுத்த புள்ளிவிவரம் ஒன்று திடுக்கிட வைத்தது. 2012-ம் ஆண்டின் இறப்புத் தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட புள்ளிவிவரம் அது. அந்த ஆண்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை ஐந்தரை கோடிக்கு சற்றும் மேலாக. போர்களால் ஒரு லட்சத்திற்கு அதிகமாகவும், குற்றவியல் சம்பவங்களால் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேரும் இறந்துபோயிருக்க, ஒன்றரைக் கோடிப் பேர் சர்க்கரை நோயினால் இறந்திருக்கிறார்கள். இதைச் சொல்லிவிட்டு, ‘துப்பாக்கிக் குண்டுகளில் ஏற்றப்படும் வெடி மருந்தைவிட ஆபத்தானது சர்க்கரை’ என்கிறார் ஹராரி.

இது மிகைப்படுத்தப்பட்ட கருத்தா? இதற்குப் பின்னிருக்கும் அறிவியல் ஆதாரங்கள் என்ன? என்ன தொழில்நுட்பத் தீர்வுகள் இருக்கின்றன? இந்த வாரத்தில் அன்லாக் செய்யலாம்.
முதலில் சில அடிப்படைகள்:
சர்க்கரை பல வடிவங்களில் இருக்கிறது. உடல் தனக்குத் தேவையான ஆற்றலாக மாற்றிக் கொள்ளும் சர்க்கரைக்கு குளுக்கோஸ் என்று பெயர்.
சர்க்கரையின் மற்ற வடிவங்கள்:
ஃப்ரடக்டோஸ் - பழங்கள், தேன், சில வகைக் காய்கறிகளில் இருக்கும் சர்க்கரை.
சுக்ரோஸ் - கரும்பு, சோளம் போன்றவற்றில் இருந்து நாம் தயாரித்து உணவுகளில் சேர்க்கும் சர்க்கரை. வேதியியல் வரையறைப்படி குளுக்கோஸும், ஃப்ரடக்டோஸும் கலந்ததுதான் சுக்ரோஸ்.

லாக்டோஸ் - பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் பொருள்களில் இருக்கும் சர்க்கரை.
இப்படிப் பல்வேறு வகையான சர்க்கரை வடிவங்கள், பலவகை உணவுகளில் உள்ளன. உதாரணத்திற்கு, பாலுடன் வெள்ளைச்சர்க்கரை சேர்த்து அதனுடன் முந்திரிப்பழங்களைச் சேர்த்து கேசரி செய்தால், மேலிருக்கும் அனைத்து வடிவ சர்க்கரைகளும் அதில் இருக்கும். இந்தக் கேசரியில் ஒரு ஸ்பூன் எடுத்துச் சாப்பிட்டதும் நடக்கும் செயல்பாடுகள், மிகப்பெரிய தொழிற்சாலையின் இயக்கத்திற்குச் சமமானது.
வாயின் சுவை அரும்புகளில் கேசரி பட்டதும் அந்தச் செய்தி நியூரான்களால் மூளைக்கு வந்து, மூளை பரபரப்பாகிறது. “உணவு வருதுப்பா!” என்ற கூக்குரலுடன் விரைவாக வயிற்றிற்குச் செய்தி போகிறது. வரப்போகும் உணவைச் செரிமானம் செய்ய அமிலங்கள் (Acids) மற்றும் நொதிகளுடன் (Enzymes) குடல் தயாராகி, “ஓகே, நான் ரெடி. உணவை அனுப்புங்க!” என்கிறது. உணவு சில நொடிகளில் வந்து சேர்ந்ததும், தயாராக இருக்கும் அமில, நொதிக் கலவையில் கலந்து, இருக்கும் ஊட்டச்சத்துகளைப் பிரித்து எடுக்கிறது. அதில் முக்கியமானது, குளுக்கோஸ். இதை உடலின் பல இடங்களுக்கும் கொண்டு செல்ல வசதியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.

அடுத்த ஸ்டெப், ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் நம் உடலின் செல்களில் ஆற்றலாக சேகரமாக வேண்டும். செல்கள் குளுக்கோஸிற்கு தங்கள் கதவைத் திறந்துவிட, இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. ரத்தத்தில் குளுக்கோஸ் வந்ததுமே, மூளையின் நியூரான்கள் கணையத்தை “இன்சுலின் சுரப்பாயாக!” எனக் கட்டளையிட, அது தன்னிடம் இருக்கும் ஸ்பெஷல் பேட்டா செல்களில் இருந்து இன்சுலினைச் சுரந்து, அதை ரத்த ஓட்டத்தில் சேர்க்கிறது. குளுக்கோஸை இன்சுலின் ஆற்றலாக மாற்றி நம் உடலின் செல்களில் சேமிக்கிறது. இந்த ஆற்றலைத்தான் நாம் இயங்குவதற்குப் பயன்படுத்துகிறோம்.
ஒருவேளை இந்தச் சேமிப்பிற்கும் அதிகமான அளவில் குளுக்கோஸ் ரத்தத்தில் இருந்ததென்றால், இன்சுலின் தடுமாறத் தொடங்கும். அதைச் சுரக்கும் கணையம் விரக்தியாகி “நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இன்சுலின் கொடுத்தாலும் அதில் உனக்குத் திருப்தியில்லை; எனவே, இன்சுலின் அளவைக் குறைத்துக்கொள்கிறேன்” என்று முரண்டு பிடித்து வேலைநிறுத்தம் செய்ய ஆரம்பிக்கும். இதனால், ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாகும். அடுத்த முறை மருத்துவரைச் சந்திக்கும்போது, ‘உங்களுக்கு சர்க்கரை நோய் வரப்போகிறது’ அல்லது ‘வந்துவிட்டது’ என்பார்.
பை தி வே, ஒரு ஸ்பூன் கேசரி நாக்கில் பட்டதும் இயங்கத் தொடங்கிய உடலின் வளர்சிதை மாற்ற (Metabolism) தொழிற்சாலை, 2-3 மணி நேர பரபரப்பிற்குப் பின்னர் அமைதியாகும். தான் கொடுத்த எச்சரிக்கையைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து சர்க்கரை வந்தபடி இருந்தால், இன்சுலின் எதிர்ப்பு என்பதைக் கணையம் கொள்கை முடிவாக ஏற்றுக்கொண்டுவிடும். இதனால், ரத்தத்தில் சேகரமாகும் அதிக சர்க்கரை, குறிக்கோள் இல்லாத கும்பல்போல உடலின் பல இடங்களுக்கும் சென்று வம்பு வளர்க்கும். இந்தக் கும்பல் வன்முறையில் நேரடியாக பாதிக்கப்படுபவை - இதயம், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம்.
அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அளவிற்கு அதிகமான சர்க்கரை, நேரடி உயிர்க்கொல்லி!
கோவிட்-19 பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் பெரும்பான்மையோர் சர்க்கரை நோயாளிகள் என்று பல நாடுகளில் இருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ‘சர்க்கரை சார்ந்த நோய்களின் காரணமாக, உலகளவில் வருடத்திற்கு ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான அளவில் மருத்துவச் செலவாகிறது’ என்கிறது இன்னொரு புள்ளிவிவரம். இப்படிக் கொடூரமான சர்க்கரையைக் கையாள ஏன் இன்னும் நம்மால் முடியவில்லை என்ற விரக்தி பொங்கும் கேள்வி உங்களைப் போலவே எனக்குள்ளும் எழுந்தது.
இதற்கு முக்கிய காரணம்: சர்க்கரை நம்மை அடிமையாக்கியிருக்கும் மனநிலை. மகிழ்ச்சி, நன்மை, கொண்டாட்டம் போன்ற எல்லாவற்றிற்கும் இனிப்பு என்பதை இணைத்து வைத்திருக்கிறோம். அன்பிக்கினியவர்களை sweet heart, honey என அழைப்பதிலிருந்து சர்க்கரை நம் வாழ்வில் ஊடுருவி நிற்கிறது. இதையெல்லாம் தாண்டி இன்னொரு காரணம், நம் மூளையில் இருக்கும் ‘வெகுமதி மையம்.’ சில குறிப்பிட்ட பழக்கங்கள் டோபமின் என்ற ஹார்மோனைச் சுரக்க வைக்கின்றன. இதனால் அவற்றுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்து, அவற்றுக்குப் பழகிப்போகும் நிலைக்கு உடல் தள்ளப்படுகிறது. சிகரெட்டில் இருக்கும் நிக்கோடின், ஆல்கஹால், கொக்கயின் போன்ற போதைப்பொருள்களுக்கு அடிமையாவதற்குக் காரணம் இதுவே. ‘சர்க்கரையும் இதே வெகுமதி மைய இயக்கத்திற்கு உடலை இட்டுச் செல்கிறது’ என்பது ஆராய்ச்சிகளில் தெரியவந்திருக்கிறது. ஆல்கஹால் அல்லது போதைப்பொருள்களை உட்கொள்வதால் உடனடியாக நடக்கும் விளைவுகள் சர்க்கரையால் நிகழ்வதில்லை... ஆனால், மெதுவாக அடிமைப்படுத்திக் கொல்லும் நஞ்சாக சர்க்கரை இருக்கிறது.
சர்க்கரையை அதிகம் உட்கொள்ளும் நாடுகளில் முதலில் இருக்கும் அமெரிக்கா, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகக் கொண்டிருப்பதில் வியப்பில்லை. அமெரிக்கா தலைமை தாங்கி உலகம் முழுதும் எடுத்துச் செல்லும் மேலை நாட்டு உணவுப் பழக்கங்கள் சர்க்கரை நுகர்வை அதிகப்படுத்துவது கவலையளிக்கும் விஷயம்.
இறுதியாக, சர்க்கரை சார்ந்த தொழில்நுட்பம் ஒன்றைப் பார்த்துவிடலாம்.
பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரையின் பாதிப்பு அது நோயாக முற்றிய பின்னர்தான் தெரியவருகிறது. வேறு எதற்காகவோ மருத்துவரிடம் செல்லும்போதுதான், சர்க்கரை தங்கள் உடலை பாதித்திருப்பதைப் பலரும் தெரிந்துகொள்கிறார்கள். சமீபத்தில் பிரபலமாகி வரும் ‘தொடர் சர்க்கரை கண்காணிப்பு’ (Continuous Glucose Monitoring) இதற்கான தீர்வைக் கொடுக்கிறது. தோலில் ஒட்டிக்கொண்டிருக்கும் சென்சார் தொடர்ந்து ரத்த குளுக்கோஸ் அளவை அலைபேசிக்கு அனுப்பிவிட, நீங்கள் உண்பதற்கு முன்னால், அலைபேசியில் இருக்கும் மென்பொருள் மூலம் படம் எடுத்துப் பதிவு செய்துவிட்டால், ‘எந்த உணவில் இருக்கும் சர்க்கரை உங்கள் உடலால் ரசிக்கப்படாமல் இருக்கிறது’ என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிடுகிறது இந்தத் தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தை வடிவமைத்து வரும் https://www.nutrisense.io/ ஒரு உதாரணம்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சிலிக்கான் சிப்ஸ் பற்றிய கட்டுரையில் சிலிக்கான் கொண்ட மணலைச் சூடு செய்யும்போது தண்ணீர் வரும் என்றிருந்தது தவறு எனச் சுட்டிக்காட்டிய நவீன நக்கீரர்களான விஜய் பாலு, மல்லிகா, ஆதிமூலம் ஆகியோருக்கு நன்றி. கரியமில வாயு என்பதே சரி. அதோடு, தூய நிலையில் இருக்கும் சிலிக்கான் மின்னணுக்களைக் கடத்தாத காரணத்தால்தான், அதனுடன் மற்றவற்றைச் சேர்த்து குறைக்கடத்தியாக மாற்றுகிறார்கள் என்ற சபாபதியின் சுட்டிக்காட்டலுக்கும் நன்றி. இந்த வாரக் கட்டுரைக்கு சம்பந்தமான விவரங்களின் வலைப்பக்கம் - https://unlock.digital/18 . எப்போதும் போல, பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்: +1 628 240 4194
- Logging in...