Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 20

UNLOCK அறிவியல்
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல்

அண்டன் பிரகாஷ்

வேர்க்கடலை, பாரதி, ஐபோன், மோதிரம், பெல்ட், கிரெடிட் கார்டு, பென்சில், ஜூலியஸ் சீசர், மாஸ்க், மீன்தொட்டி...

மனதிற்கு வந்த பத்து வார்த்தைகளை எழுதியிருக்கிறேன். ஏன் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். அதற்கு முன்னால், சென்ற வாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வு:

மிகவும் பழைய நூல்களை வீட்டில் வைத்திருப்பவர்களுக்கு நான் சொல்லப்போவது பரிச்சயமாக இருக்கலாம். வெளிச்சம், நீர்ப்பதம் போன்றவற்றின் காரணமாக நூல்களின் பக்கங்கள் விறைப்பாகி, புரட்டினால் உடைந்து விடும் நிலையில் இருக்கும். கையால் காகிதத்தில் எழுதப்பட்ட வற்றின் நிலை இன்னும் மோசம். இதனால்தான், அரிதானவற்றை வைத்திருக்கும் தொல்பொருள் அருங்காட்சியங்களில் புராதன ஆவணங்களை வைத்திருக்கும் அறைகளை, பளீர் வெளிச்சம் இல்லாமல் வைத்திருப்பார்கள். இந்த இடங்களில் ஃப்ளாஷ் கொண்டு இயங்கும் கேமராக்களைத் தடை செய்வதும் இதன் காரணமாகவே. அப்படியானால், புதிதாகக் கிடைக்கும் தொன்மையான ஆவணங்களை என்ன செய்வது? ‘பிரித்துப் படிக்கச் செய்யும் முயற்சியே அவற்றை அழித்துவிடும்’ என்பது தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு முன்னிருந்த மிகப்பெரும் பிரச்னை. அந்தத் துறைக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தொழில்நுட்பம் அதைத் தீர்த்திருக்கிறது.

UNLOCK அறிவியல் 2.O - 20

நடந்தது இதுதான்: பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கடிதங்களைக் கவரில் அடைத்து, ஒட்டி, சீல் செய்து அனுப்பும் வழக்கம் வந்தது. அதற்கு முன்பு, கடிதத்தை எழுதி, அதைப் பல கோணங்களில் மடக்கி அனுப்புவது வழக்கம். 17-ம் நூற்றாண்டில் அப்படி அனுப்பப்பட்டு, ஆனால் டெலிவரி செய்யப்படாத பலநூறு கடிதங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் நெதர்லாந்து நாட்டில் கண்டறியப்பட்டன. இவற்றில் ஒன்றை மடிப்புகள் கலையாமல் படிக்க உதவிய தொழில் நுட்பத் திற்குப் பெயர், மைக்ரோ டோமோகிராபி (microtomography). அந்தக் காலத்தில் எழுதப் பயன் பட்ட இங்க், காப்பர் சல்ஃபேட் போன்ற உலோகக் கலவைகளால் ஆனது என்பதால், அவற்றை மடிப்பு கலையாமல் படிப்பது சாத்தியமானது. பை தி வே, மைக்ரோடோமோகிராபி தொழில்நுட்பம், பற்களில் இருக்கும் பிரச்னைகளை பல் மருத்துவர்கள் எக்ஸ்ரே போலத் தெளிவாகத் தெரிந்துகொள்வதற்காகவே வந்தது. அது தொல்லியல் துறையில் இருந்த வலியை நிவர்த்தி செய்ய உதவிக்கு வந்திருக்கிறது. “அதிருக்கட்டும், அண்டன். அந்தக் காலக் கடிதங்களில் சுவாரசியமாக ஏதேனும் செய்திகள் இருந்தனவா?” என்ற கேள்வி வருகிறதா! உப்பு சப்பில்லாத குடும்ப மேட்டர் பற்றி ஒன்றுவிட்ட சகோதரருக்கு ஒருவர் எழுதிய கடிதம் அது. ஆனால், அந்தக் கால வார்த்தைகளின் தன்மை, அமைப்பு போன்றவை வெளியாகியிருப்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு மகிழ்ச்சி. கடிதத்தைச் சிதைக்காமல் படிக்க முடிந்தது தொல்லியல் நிபுணர்களுக்குக் கொண்டாட்டம்.

நிற்க.

UNLOCK அறிவியல் 2.O - 20

கட்டுரையின் தொடக்கத்தில் பத்து வார்த்தைகளைக் கொடுத்திருந்தேன் அல்லவா? அவற்றை மீண்டும் பார்க்காமல் சொல்ல முடியுமா? சொல்லிவிட்டீர்கள் என்றால் உங்களது நினைவாற்றல் அபூர்வமானது. முடியவில்லை என்றாலும் கவலை தேவையில்லை. இந்தக் கட்டுரையைப் படிக்கும் 99.9 சதவிகிதமானவர்களுக்கு அது சாத்தியமில்லை.

சரி, கீழ்க்கண்ட வரிகளைப் படியுங்கள். படிக்கும்போது அதை மனச்சித்திரமாகப் பாருங்கள்.

உங்கள் வீட்டு வாசல் கண்முன்னால் தெரிகிறது. கதவு என்ன நிறம் என்பதைக் கூர்ந்து மனக்கண்களில் கொண்டு வாருங்கள். உங்களைத் தாண்டி மூச்சிரைக்க ஓடியபடி சர்க்கஸ் கோமாளி வேடமணிந்த ஒருவர் கதவைத் திறக்கிறார். சற்றே திகைப்புடன் நீங்களும் உள்ளே நுழைகிறீர்கள். முன்னறையில், முண்டாசு கட்டிய பாரதி நிற்கிறார். வேட்டிக்கு பதிலாக பெரிய பெல்ட் சகிதம் பேன்ட் அணிந்திருக்கும் அவர், வேர்க்கடலைக் கொத்து ஒன்றைக் கையில் பிடித்தபடி “வாங்க” என்கிறார். நீங்கள் தலையைத் திருப்பி அறையில் என்ன இருக்கிறது என்று பார்க்கிறீர்கள். வலது பக்கத்தில் மீன் தொட்டி ஒன்று இருக்கிறது. அதில், மீன்களுக்குப் பதிலாக சுருட்டை முடி கொண்ட ஜூலியஸ் சீசரின் கிரேக்க முகம் இடுப்பு வரை தெரிகிறது. அவரிடம் உங்கள் கிரெடிட் கார்டைக் கொடுக்கிறீர்கள். அதை வாங்கும் அவரது வலது கையில் வைர மோதிரம் டாலடிக்கிறது; இடது கையில் இருக்கும் லேட்டஸ்ட் ஐபோன் 12-ல் பென்சில் வைத்து எழுத முயல்கிறார். நீங்கள் அருகில் சென்றதும், “சாரி, அதை வாங்கும் முன்னால் மாஸ்க் போடணுமே!” என்று சொல்லி மீன் தொட்டியின் நடுவில் இருக்கும் மாஸ்க்கை எடுத்து அணிந்துகொள்கிறார்.

UNLOCK அறிவியல் 2.O - 20

இதைமனதில் ஏற்றிக்கொண்டு விட்டீர்களா? நல்லது. கட்டுரையைத் தொடரலாம்.

பல பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்பில் இல்லாத ஆரம்பப்பள்ளிக் கால நண்பர்களை லாக்டௌன் நேரத்தில் வாட்ஸப் துணையுடன் கண்டறிந்து இணைந்துகொண்டதை நான் குறிப்பிட்டிருந்தது நினைவில் இருக்கலாம்; இல்லாமலும் போயிருக்கலாம். எதுவானாலும் ஓகே. காரணம், நினைவு என்பதைத்தான் இந்த வாரத்தில் அன்லாக் செய்யப்போகிறோம். இந்தக் கட்டுரையின் சில பகுதிகள் உங்களுக்கு நீண்ட நாள்களுக்கு நிச்சயம் நினைவில் இருக்கும்.

மேலே சொன்ன நண்பர்களின் வாட்ஸப் குழுவில் அவ்வப்போது நடக்கும் விவாதம், பள்ளி நாள்களில் நடந்த நிகழ்வு ஏதோ ஒன்றைப் பற்றியதாக இருக்கும். ஒருவருக்குத் தெளிவாக இருக்கும் நினைவு மற்றவர்களுக்கு இருப்பதில்லை. “இதை நீ மறந்துட்டியா?” என்று நிகழ்வை நினைவுபடுத்தியவர் ஆச்சரியத்துடன் செல்லமாகக் கோபித்துக்கொள்வார். சில தருணங்களில், தொடர்பான பலவற்றை இணைத்துச் சொல்லும்போது மறந்திருந்தவை நினைவிற்கு வருவதும் உண்டு. ‘முப்பது ப்ளஸ் வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகள் சில நினைவிற்கு வந்துவிடுகின்றன; மூன்று நாள்களுக்கு முன்னால் உண்ட மதிய உணவு என்ன என்ற நினைவு ஏன் வருவதில்லை’ போன்ற பல கேள்விகள் எனக்குள்ளும் எழுந்தது. நினைவின் அறிவியல் மற்றும் சம்பந்தமான தொழில்நுட்பங்களை அலசத்தொடங்கினேன்.

UNLOCK அறிவியல் 2.O - 20

முதலில் சில அடிப்படைகள்:

மூன்று வகை நினைவுகள் நமது மூளைக்குள் சேமிக்கப்படுகின்றன. ஒன்று, வெளிப்படையான நினைவுகள் (explicit memories). அடுத்து, மறைமுக நினைவுகள் (implicit memories). கடைசியாக, பணிக்கான நினைவுகள் (working memory). நமக்கு நடக்கும் அனுபவ நிகழ்வுகள் episodic, தகவல்கள் semantic என்று இருவித வெளிப்படையான நினைவுகள் உண்டு. உதாரணத்திற்கு நேற்று காலையில் சாப்பிட்ட இட்லியுடன் இருந்த சட்னி படுகாரம் என்பது நிகழ்வு நினைவு. இட்லி என்பது அரிசியால் ஆனது; வெள்ளை நிறத்தில் நீராவியில் அவிக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் அது, காலை டிபன் போன்ற தகவல் துளிகள் semantic வகையறா. மிதிவண்டி ஓட்ட ஒரு முறை கற்றுக்கொண்ட பின்னர் அதை மறக்காமல் வைத்திருந்து மீண்டும் ஓட்டுவதற்குப் பயன்படும் நினைவாற்றல் மறைமுக நினைவிற்கு நல்ல உதாரணம். செய்துகொண்டிருக்கும் பணியை நிறுத்தாமல், குறுகிய காலத்திற்கு சேமித்து வைத்துக்கொள்வது பணிக்கான நினைவு. நண்பருடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர் ஒரு வலைதளத்தைப் பார்க்கச் சொல்கிறார். அந்த வலைதள முகவரியைக் கேட்டுக்கொண்டாலும், அதை எழுதி வைக்காவிட்டால் விரைவில் மறந்துபோகும் அல்லவா? அதுபோன்ற குறுகிய கால நினைவுகள் பணி நினைவிற்கு உதாரணம். முன்தலைப் பகுதியில் இருக்கும் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் மேற்கண்ட நினைவுகள் சேமிக்கப்படுகின்றன.

அடிப்படைகளைத் தாண்டிப் போவதற்கு முன்னால், ஒரு கேள்வி: உங்கள் வீட்டுற்குள் நடப்பதாக நீங்கள் மனதில் வரைந்துகொண்ட விநோத சித்திரத்தை மீண்டும் நினைவுகூருங்கள். இப்போது அந்தப் பத்துப் பொருள்களையும் தடையில்லாமல் நினைவுகூர முடிகிறதல்லவா? அதைச் சாத்தியப்படுத்திய சூட்சுமம்தான் நினைவு மற்றும் மறதி என்பவற்றிற்குப் பின்னிருக்கும் அறிவியல்.

பரிணாம வளர்ச்சிக்கு முன்பு மனிதர்களுக்கு ‘உணவு எங்கே, எப்படிக் கிடைக்கும்? வரும் தீங்கிலிருந்து எப்படிக் காத்துக்கொள்ள வேண்டும்’ என்பதையெல்லாம் தீர்க்கமாக அறிந்துகொள்ளும் நுண்ணறிவு தேவைப்பட்டது. நாமிருக்கும் சூழலையும், அதன் மாற்றங்களையும் ஆழமாகப் பதிவுசெய்துகொண்டு, அதிலிருந்து முடிவுகளை எடுக்க வேண்டும். இதனால், சித்திரங்களாக தகவல்களைச் சேமித்துக் கொள்வது பழகியது. அதன்பின்னர் வந்த எண்களும் எழுத்துகளும் நமக்கு இயல்பானவை அல்ல என்பதால்தான், முறையான பள்ளிக்கூடக் கல்வி முறை என்ற ஒன்றை அமைத்துக் கற்றுக் கொடுக்கும் அவசியம் வந்தது.

ஓகே, நம் பரிணாமக் குறியீட்டில் எழுதப்பட்டி ருப்பதை நவீன உலகில் வாழும் நாம் பயன் படுத்திக் கொள்ள முடியுமா?

முடியும்.

நம் மூளை விரிவான குறியாக்கங்கள் (elaborative encoding) மூலமாகத் தகவல்களைச் சிறப்பாகச் சேமிக்கிறது என்கிறார்கள் இந்தத் துறையின் ஆராய்ச்சியாளர்கள். இந்தக் கருத்திற்கு ‘பேக்கர் பேக்கர் முரண்பாடு’ (Baker Baker Paradox) என்ற பதத்தையும் பயன்படுத்துகிறார்கள். உங்களிடம் இரண்டு பேரின் முகங்கள் படங்களாகக் காட்டப்படுகின்றன. ஒருவர் பெயர் பேக்கர். அவர் என்ன தொழில் செய்கிறார் என்பது தெரியாது. இரண்டாமவரின் பெயர் தெரியாது; ஆனால், அவர் பேக்கரியில் பணிபுரிபவர். சில நாள்கள் கழித்து இவர்களின் படங்களைத் தனித்தனியாகப் பார்த்தால், பேக்கரிக்காரரை அடையாளம் கண்டு கொள்வீர்கள். பேக்கர் என்ற பெயர் கொண்டவரை மறந்திருப்பீர்கள். காரணம், பேக்கரியில் பணிபுரிகிறார் என்றதும், ரொட்டி, கேக், மாவு, அதன் மணம் எனப் பல தொடர்பான தகவல்களுடன் தொழில்முறை பேக்கரின் முகம் உங்கள் மூளையில் பதிவாவதே.

நம்மூர் உதாரணம் ஒன்றைப் பார்க்கலாம். மதுரையில் நண்பர் வீட்டு வைபவத்தில் புதிதாக ஒருவரைச் சந்திக்கிறீர்கள். “என் பெயர் இருதயராஜ்” என்று மட்டும் அவர் அறிமுகம் செய்துகொண்டால், சில மணிநேரத்தில் அவர் பெயரை மறந்துவிடும் சாத்தியம் அதிகம். பெயரைச் சொன்னதோடு, விரல்களை இதயம்போல வளைத்துக் காட்டிவிட்டு, தலைமீது கை வைத்து அரசர் அணியும் கிரீடம் போல இருப்பதாகக் கைகளை தலை மேல் உயர்த்தியபடி, “இந்த ஊர் கோலா உருண்டைக்கு ஃபேமஸ். நான் இருப்பது கோலாலம்பூர்” என்று தன்னை விநோத அறிமுகம் செய்து கொண்டால், அவர் பெயரையும் ஊரையும் வாழ்நாள் முழுதும் மறக்கவே மாட்டீர்கள்.

வருடத்திற்கு ஒரு முறை அமெரிக்காவில் நினைவாற்றல் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும் இந்த நிகழ்வில் எண்கள், எழுத்துகள், படங்களை நினைவுகூர்வது, அதுவரை பதிப்பிக்கப்படாத கவிதை, கலைக்கப்பட்ட சீட்டுக்கட்டுகள் எனக் கலவையான நினைவாற்றல் போட்டிகள் இருக்கும். இதில் பங்குகொண்டு வெற்றி பெறுபவர்கள் மேதைகளாக இருக்க வேண்டும் என்ற முன்னெண்ணத்துடன் இந்த நிகழ்வைச் சில வருடங்களாக பத்திரிகையாளராக கவரேஜ் செய்தவர் ஜாஷுவா ஃபோயர். அவர் வெற்றியாளர்களை சந்தித்து ‘அவர்களது சூட்சுமங்கள் என்னென்ன’ என்பதைக் கற்றுக்கொண்டார். இதைப் பயன்படுத்திப் பார்த்து அந்த அனுபவத்தையும் எழுதலாமே என்ற எண்ணத்தில் அடுத்த வருடப் போட்டியில் பதிவு செய்துகொண்டார். அந்த வருட சாம்பியன்ஷிப்பை ஜாஷுவா வென்றது அவரே எதிர்பார்க்காதது. அந்த அனுபவத்தை ஒட்டி நினைவாற்றல் பற்றி அவர் எழுதிய ‘Moonwalking with Einstein’, நரம்பியல் உலகில் பெரிதும் சிலாகிக்கப்படும் நூல்.

நரம்பியல் நோய்களான அல்சைமர் போன்றவை மூளையின் நினைவு சேமிப்பு இடங்களை பாதிப்பதால் தீவிரமான நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது. வயதாகும்போது, மூளையின் செல்களுக்கு ரத்த வேகம் குறைவதால், நினைவாற்றல் சற்றே மட்டுப்படுவது இயற்கைதான் என்றாலும், பயிற்சிகள் மூலம் நினைவாற்றலை வலுவாக வைத்திருக்க முடியும் என்கிறார்கள். உதாரணத்திற்கு, குறுக்கெழுத்து போன்ற புதிர்களைத் தொடர்ந்து தீர்ப்பதன் மூலம் நினைவாற்றலைக் கூர்மையாக்க முடியும். தொடர்ந்த ஆல்கஹால் நுகர்வு வைட்டமின்-பி குறைபாட்டிற்கு அழைத்துச் சென்று நினைவாற்றலைக் குறைத்துவிடும் என்பது ‘குடிமக்கள்’ கவனிக்க வேண்டிய தகவல்.

கடைசியாக, வாழ்வு என்பது நினைவுகளின் தொகுப்பு. ஒவ்வொரு நாளும் ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்தபடி இருந்தால், நாள்கள் வாரங்களுடன் இணைந்து, மாதங்களுடன் மையமாகி நினைவுகள் இறுகிப்போன பாறை போல ஆகிவிடும். இதைக் களைய, அவ்வப்போது பார்க்காத புதிய இடம் ஒன்றிற்குப் பயணம் செல்தல், படிக்காத நூல் ஒன்றைப் படித்தல், உண்டிராத உணவு ஒன்றை ருசித்தல் என வித்தியாசப்படுத்துவது வாழ்வின் நினைவிற்கு சுவை சேர்க்கும்.

இந்த வாரக் கட்டுரைக்கு சம்பந்தமான விவரங்களின் வலைப்பக்கம் - https://unlock.digital/20. கட்டுரைக்கான பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண் : +1 628 240 4194

- Logging in...