Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 21

UNLOCK அறிவியல்
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல்

அண்டன் பிரகாஷ்

மீபத்திய இரண்டு டெக் நிகழ்வுகளை முதலில் பார்த்துவிடலாமா?

முதல் நிகழ்வு காமெடி: அலைபேசிகளில் தரவிறக்கிப் பயன்படுத்தப்படும் ஆப் (App) என்ற அலைமென்பொருள்களின் சிறுபடங்களை (Logo) அவற்றைத் தயாரிப்பவர்கள் அவ்வப்போது மாற்றுவதுண்டு. தரவிறக்கிய பல மென்பொருள்களின் சிறுபடங்கள் பயனீட்டாளர்களின் அலைபேசிகளில் அமர்ந்திருக்க, தங்களது மென்பொருள் பளீரெனத் தெரியட்டும் என நினைப்பது முக்கிய காரணம். அமேசான் நிறுவனமும் சமீபத்தில் அப்படி தனது மென்பொருளின் சிறுபடத்தை மாற்றியது. அமேசானில் ஆர்டர் செய்யும் பொருள்கள் அனுப்பப்படும் பெட்டியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரின் பகுதியைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அந்தச் சிறுபடம் ஒரு கோணத்தில் பார்த்தால், ஹிட்லரின் பிரபல குட்டி மீசைபோலத் தெரிந்தது. நெட்டிசன்கள் பலர் போட்ட கும்மாளத்தில் அலறிய அமேசான், உடனடியாகப் படத்தை மாற்றிவிட்டது. புதிய சிறுபடத்தில் ஸ்டிக்கர் மடித்து ஒட்டப்பட்டது போல் காட்டப்பட, இந்த இணைய கலாட்டா ஒருவழியாக இனிதே முடிவுக்கு வந்தது.

UNLOCK அறிவியல் 2.O - 21

அடுத்த நிகழ்வு சீரியஸ்: மைக்கேல் விங்கல்மேன் கணினிகளில் படம் வரைவதும், குறும்படங்கள் இயக்குவதுமாக இருந்த, பலருக்கும் அறிமுகமில்லாத டிஜிட்டல் கலைஞர். தன் படைப்புகளைக் கலைப்படைப்புகள் விற்கப்படும் வலைதளங்களில் அவ்வப்போது விற்பதுண்டு. பீப்பிள் (beeple) என்ற புனைபெயர் கொண்ட அவருடைய ஓவியங்கள் சில நூறு டாலருக்கு மேலாக விற்கப்பட்டதில்லை. 2007ம் வருடத்திலிருந்து தினமும் சிறுபடங்களாக வரைந்தவற்றைத் தொகுத்து ‘முதல் 5,000 நாள்கள்’ (The first 5000 days) எனத் தலைப்பிட்டார் பீப்பிள். இந்தப் படம் சென்ற வாரத்தில் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. உயிருடன் இருக்கும் கலைஞர்களின் படைப்புகள் விற்கப்பட்டதில் மூன்றாவது பிரமாண்ட விற்பனை இது. மற்ற கலைப் படைப்புகள்போல, கான்வாஸில் வரையப்பட்ட ஓவியமோ, அல்லது வடிக்கப்பட்ட சிலையோ அல்ல, பீப்பிளின் ஓவியம். பிரபல ஏல விற்பனை புரோக்கரான கிறிஸ்டீஸ் நிறுவனம் விற்ற ‘முதல் 5,000 நாள்கள்’, jpg என்று கணினிகள் பயன்படுத்தும் அனைவராலும் அறியப்படும் ஓர் இணையக் கோப்பு வடிவத்தால் ஆனது.

UNLOCK அறிவியல் 2.O - 21

“அப்படியானால், இதை எளிதில் காப்பி செய்துவிடலாமே, ஒரிஜினல் எது என்பதை எப்படி நிரூபிப்பது, அண்டன்?” என்ற கேள்வி வருவதில் தவறில்லை.

பல வாரங்களுக்கு முன்னதாக இந்தத் தொடரில் நாம் பார்த்த தொடர்சங்கிலித் (Blockchain) தொழில்நுட்பம் இந்த வரலாற்று மைல்கல்லுக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. மையமற்ற பேரேடு (Decentralized Ledger) என்பதை அடிப்படை வடிவாகக் கொண்ட தொடர் சங்கிலித் தொழில்நுட்பத்தில், பிட்காயினுக்கு அடுத்த நிலையில் பிரபலமாக இருப்பது எத்தூரியம் (Ethereum) என நான் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். டோக்கன்களை எளிதாக உருவாக்கிப் பயன்படுத்தும் வழிமுறை எத்தூரியத்தில் இருப்பது இதற்கு முக்கிய காரணம். இரண்டு விதமான டோக்கன்கள் எத்தூரியத்தில் இருக்கின்றன. முதல் வகை, ஒன்றிலிருந்து மற்றதை வித்தியாசப்படுத்த முடியாத டோக்கன் வகையறா. Fungible Tokens என அழைக்கப்படும் இந்த டோக்கன்கள் மதிய உணவு வாங்கும்போது தயிருக்குக் கொடுக்கப்படும் டோக்கன் போல எனச் சொல்லலாம். ஒரு நாளில் கொடுக்கப்படும் டோக்கன் ஒன்றின் பரிவர்த்தனை மதிப்பு, ஒரு குவளைத் தயிர் என்ற எளிய வடிவத்தில் இது அமைகிறது. இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், ஒரு டோக்கனுக்கும், மற்ற டோக்கனுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டாவது வகை, தனித்துவமாக அடையாளம் கண்டுகொள்ளப்படும் டோக்கன். Non-Fungible Tokens, சுருக்கமாக, NFT என அழைக்கப்படும் இந்த டோக்கனின் வடிவத்திற்கு உங்கள் ஆதார் அட்டையை உதாரணமாகச் சொல்லலாம். ஆதார் எண் என்பது உங்களது பெயர், பிறந்த தேதி இன்னபிற தகவல்களுடன் தனித்துவம் கொண்டதாக அமைவதுபோல், ஒவ்வொரு NFT-யும் பிரத்யேகமாக எத்தூரிய பிணையத்தில் பதிவு செய்யப்படும். இதனால், மோனாலிசா ஓவியம் பிரதி எடுக்கப்பட்டாலும், ஒரிஜினல் என்பது எப்படி உறுதி செய்யப்படுகிறதோ, அதுபோல NFT டோக்கனையும் உறுதிசெய்யமுடியும்; விற்று, வாங்க முடியும். பீப்பிளின் ஓவியம் NFT-யாக விற்கப்பட்டது விசித்திரமான சம்பவம் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். கடந்த பல மாதங்களாகவே டிஜிட்டல் ஓவியங்கள் NFT டோக்கன்களாக விற்கப்படுவது சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. வானவில் பின்னணியில் பூனை ஒன்று வேகமாக நகர்வது போலிருக்கும் Nyan Cat ஓவியம் நாற்பது கோடி ரூபாய்க்கு கலைச்சந்தை ஒன்றில் சமீபத்தில் விற்பனையானது. இருநூறு வருடங்களுக்கு மேல் ஏல விற்பனையில் இருக்கும் கிறிஸ்டீஸ், NFT விற்பனைக்குள் நுழைந்து சில வாரங்களில் மிகப் பெரிய அளவில் டிஜிட்டல் ஓவியத்தை விற்றது என்பதால் மீடியா கவனத்தைப் பெரிதும் ஈர்த்துவிட்டது. இதையடுத்து, ட்விட்டரில் பதிவாகும் ட்வீட்டுகளை டோக்கன்களாக்கும் சந்தை பிரபலமாகிவருகிறது. பதினைந்து வருடங்களுக்கு முன்னால், அதாவது ட்விட்டரின் நிறுவனரும், இப்போது அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவருமான ஜேக் டார்சி 2006-ம் வருடம் மார்ச் 21 அன்று எழுதிய ட்வீட் - ‘just setting up my twttr’, இப்போது டோக்கனாகப் பதியப்பட்டு ஏலத்தில் இருக்கிறது. இந்த வரியை எழுதும் தருணத்தில் அதை வாங்கத் தயாரான ஏலத்தொகை பதினெட்டுக் கோடி ரூபாய். இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது அது எவ்வளவிற்கு விற்றிருக்கிறது என்ற விவரம் வந்திருக்கும். இதன் விற்பனைத் தொகை முழுவதையும் ஆப்பிரிக்கத் தொண்டு நிறுவனம் ஒன்றிற்குக் கொடுக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார் ஜேக். எந்தக் கணக்கில் இந்த பீப்பிள் ஓவியத்தின் டோக்கன் பதிவாகியிருக்கிறது போன்ற அதிக தகவல்கள் கட்டுரையின் கீழிருக்கும் துணை வலைப்பக்கத்தில் இருக்கிறது. NFT என்பது பரவலான பயனீட்டு வடிவத்திற்கு விரைவில் வரும் என்பது எனது கணிப்பு.

இருக்கட்டும்.

UNLOCK அறிவியல் 2.O - 21

சென்ற வருட மார்ச் 11 அன்று உலக சுகாதார நிறுவனம் ‘கோவிட்-19 என்பது பெருந்தொற்று’ (Pandemic) என அறிவித்தது. இந்த வருட மார்ச் 11-ல் கோவிட்-19க்கான ஃபைசர் (Pfizer) தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டேன். கொரானா வைரஸ் கொண்டுவந்த எதிர்பாராத, உலகளாவிய தடுமாற்றத்தில் இருந்து கிட்டத்தட்ட மீள ஆரம்பித்துவிட்டோம். அதற்கு மிகவும் உதவியாக இருப்பது தடுப்பூசி. இதன் விநியோகத்தில் முதலிடத்தில் உள்ள இஸ்ரேலில் இருந்து வரும் செய்திகள் உற்சாகமூட்டுகின்றன. இஸ்ரேல், விரைவில் மந்தை எதிர்ப்பு நிலைக்குச் சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, தடுப்பூசியை வடிவமைத்து, அதை விலங்குகளிடம் பரிசோதனை செய்து, பின்னர் சிறிய அளவில் மனிதர்களிடம் பரிசோதனை செய்து அதன் முடிவுகளைத் தீர ஆராய்ந்து, அதன்பிறகே அனைவருக்கும் வழங்க அனுமதி வழங்கப்படும். இதை முழுமையாகச் செய்து முடிக்க பத்து வருடங்கள் ஆகலாம்; பரிசோதனைச் செலவு பல்லாயிரம் கோடிகளில் அமையும்; கணக்கில்லாத அளவில் பரிசோதனை எலிகள், முயல்கள், சில தருணங்களில், குரங்குகளின் உயிர்களும் பலியாகும்.

இப்போது ஒரு வருடத்திற்குள் கிடுகிடுவெனத் தடுப்பூசியைக் கண்டறிந்து, அதன் விநியோகத்தையும் ஆரம்பித்துவிட்டதன் பின்னிருப்பது அறிவியல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியே. தடுப்பூசியின் பரிசோதனைத் தேவைகளைப் பெருமளவில் சந்திக்க உதவியது உறுப்பு சில்லுகள் (Organs-On-Chips) என்ற தொழில்நுட்பம். உடல் உறுப்புகளை மிமிக்ரி செய்வது எனப் பொருள்படும் Biomimetics என்ற பெயர் சூட்டப்பட்ட இந்த உயிரியல் கலந்த பொறியியல் துறை சமீப காலம் வரை பல்கலைக்கழக ஆய்வகங்களில் ஆராய்ச்சி வடிவில் மட்டுமே இருந்தது. நுரையீரல், கணையம், குடல் போன்ற உடல் உறுப்புகளில் இருக்கும் செல்கள் இயங்கும் விதத்தை ஒட்டி வடிவமைக்கப்படும் சில்லுகள், அந்த உறுப்புகளின் செயல்பாடுகளை அப்படியே பிரபலிக்கும். இப்படி உடலின் பல உறுப்புகளை சில்லுகளாக்கி அவற்றை அவை பணி செய்யும் முறைப்படி பொருத்திக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, நுரையீரலில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும், அவை நாற்பது வகையான செல்களினால் ஆனவையே. இந்த நாற்பது செல்களின் செயல்பாட்டையும் சில்லுகள் வடிவில் பிரதிபலிக்க வைத்துவிட்டால், சில்லு வடிவில் நுரையீரல் ரெடி. இப்படி, பல உறுப்புகளின் சில்லுகளை ஒன்றிணைத்து விட்டால், மனித உடல் உறுப்புகளின் முழுச் செயல்பாட்டு வடிவம் கிடைத்துவிடும். இதன் மொத்த அளவு நாம் கையால் பிடித்துவிட முடிகிற அலைபேசி அளவிற்கு சமமானதே. கொரானா வைரஸ் நுரையீரலைத்தான் பெரிதும் தாக்குகிறது என்பதால், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (Food and Drug Administration, சுருக்கமாக FDA) Emulate என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் நுரையீரல் சில்லைப் (Lung Chip) பயன்படுத்தி சென்ற வருட அக்டோபரில் இருந்து பரிசோதனைகளை மேற்கொண்டது. பேப்பர் வெயிட் போல இருக்கும் இந்தச் சாதனம், கோவிட்-19 நோய்க்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பின்விளைவுகளை எளிதில் கண்டறியப் பயன்பட்டிருக்கிறது. இதன்மூலம் நேரம், பணம் மற்றும் விலங்குகளின் உயிர்கள் தேவையில்லாமல் விரயமாவது தவிர்க்கப்பட்டுள்ளது. ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆராய்ச்சி அமைப்பான Wyss Institute இந்த ஆராய்ச்சியில் பெருங்கவனம் செலுத்துகிறது. அடுத்த பெருந்தொற்று தாக்க வரும்போது நாம் தயாராக இருக்க இந்த உறுப்பு சில்லுத் தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கப்போகிறது.

நிற்க!

UNLOCK அறிவியல் 2.O - 21

உடல் உறுப்புகள் அனைத்தையும் பத்திரமாகப் பதுக்கிவைத்து அதன் வெளிப்புறக் காவல் அரணாகச் செயல்படுகிறது சருமம் என்ற மாபெரும் உறுப்பு. இப்படி இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக இருப்பதால், சருமம் சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கு சில்லு என்பதைத் தாண்டிய செயற்கை சருமமே தேவைப்படுகிறது. உடலின் உள்ளுறுப்புகள் சூடாகாமல் பார்த்துக்கொள்வது, நீர்/கொழுப்பு/வைட்டமின்களைச் சேமித்து வைத்துக்கொள்வது, கதிர்வீச்சு/மாசு/கிருமிகள்/ஒவ்வாமை எனப் புறத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது போன்றவற்றிற்கு மேலாக மற்றொரு பணியும் சருமத்திற்கு இருக்கிறது. வெளியுலகைத் தொட்டு உணர்ந்துகொள்ளும் உணர்ச்சியைப் பகுத்தறியும் Sensory Organ என்ற மாபெரும் பணி அது. இந்தக் காரணங்களால், சருமத்தின் செயல்பாட்டைப் பிரதிபலிக்கும் பல வழிகளைக் கண்டறியும் கட்டாயம் ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்கிறது. மற்ற உறுப்புகள்போல எளிதாக சருமத்திற்கான சில்லுவை வடிவமைத்துவிட முடியாது.

இடைச் செய்தி: தீ விபத்துகளில் சருமம் கரிந்துபோவதன் காரணத்தால் மட்டுமே வருடத்திற்கு இரண்டு லட்சம் பேர் இறந்து போகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். மீன்வள ஆராய்ச்சி முனைவரான விக்டர் சுரேஷிடம் சமீபத்தில் பேசியபோது “ஜிலேபி கெண்டை எனப்படும் Tilapia மீனின் தோலை, தீயில் கருகிய மனித சருமம் குணமாகும் வரை செயற்கை சருமமாக ஒட்டிப் பாதுகாக்கலாம். இந்த மருத்துவ முறை நிரூபிக்கப்பட்டு, பயன்பாட்டில் இருக்கிறது’’ என்றார்.

இதுபோன்ற முயற்சிகளுக்கும் அப்பால், மனித சருமத்திற்கு நிகர் (Human Skin Equivalent) என்ற பிரிவில் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. சருமத்தின் திசுக்களைப் பரிசோதனைச் சாலையில் பிரித்து, வளர்த்து செயற்கை சருமமாக்கும் முயற்சி இது. இந்தச் செயற்கை சருமம் நேரடியாக சரும மாற்றிற்காகவும், ஆராய்ச்சி மருந்துகள் எப்படிப் பின்விளைவுகளை உண்டாக்குகின்றன என்பதைக் கண்டறியவும் பயன்படுகின்றது.

இந்த வாரக்கட்டுரைக்கு சம்பந்தமான விவரங்களின் வலைப்பக்கம் - https://unlock.digital/21. கட்டுரைக்கான பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண் : +1 628 240 4194

- Logging in...