
அண்டன் பிரகாஷ்
லண்டனில் உள்ள பாரம்பரிய கிரஷாம் கல்லூரி, 16-ம் நூற்றாண்டு முதல் இயங்கிவருகிறது. அந்தக் கல்லூரியில் கணித வடிவவியல் பேராசிரியர் (Professor of Geometry) பதவி பெருமைக்குரியது. 424 ஆண்டுகளில், 32 ஆண்களுக்குப் பின்னர் இந்தப் பதவியில் முதல் பெண் பேராசிரியராக அமர்ந்திருக்கிறார் சாரா ஹார்ட். கோவிட்-19 காலத்தில் பதவியேற்றதால், அவரது உரைகள் முழுக்க ஆன்லைனில் நடத்தப்படுகின்றன என்பது, லாக்டௌன் கொண்டுவந்த எதிர்பாரா சில நன்மைகளில் ஒன்று.
“கணிதமென்றால் எனக்கு எட்டிக்காய்; எனவே, கல்லூரியில் இலக்கியம் அல்லது வரலாறு படித்தேன்” என்று நண்பர்கள் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சாராவின் உரைகளைக் கேட்டால், கணிதம் அவர்களுக்கு இனிப்பாக மாறிவிடும். இலக்கியத்தில் உள்ள கணிதக் கூறுகளைச் சுவையாக அலசுவதும், கணித வரலாற்றை விவரிப்பதும்தான் அவரது சிறப்பு.


சில வாரங்களுக்கு முன்னால் ‘புதின உலகங்களுக்குக் கணிதப் பயணங்கள்’ (Mathematical Journeys into Fictional Worlds) என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையைக் கேட்டேன். வடிவியலில் Square-Cube விதி என்ற ஒன்று உண்டு. ‘பொருள் ஒன்று தனது வடிவத்தை மாற்றாமல், ஒரு விகிதத்தில் பெருக்கிறது என்றால், அதன் புதிய பரப்பளவு (Area) என்பது அந்த விகிதத்தின் வர்க்கம் (Square) என்றால், அதன் கொள்ளளவு (Volume) என்பது மும்மடிப் பெருக்கமாக (Cube) மாறும் என்பது அந்த விதி. உதாரணத்திற்கு, எறும்பு ஒன்று தன் உருவத்தின் தன்மையை மாற்றிக்கொள்ளாமல் பல மடங்கு பெரிதாகிறது என எடுத்துக்கொண்டால், அதன் உடலின் பரப்பளவு அந்த மடங்கின் வர்க்கம் ஆகும்; ஆனால், எடையோ மும்மடங்கு பெருத்துவிடும். சிறிய அளவில் இருந்தபோது தனது எடையைவிட அதிகமானவற்றைத் தூக்கிக்கொண்டு எளிதில் செல்ல முடிந்த எறும்பிற்கு, இந்தப் புதிய பகாசுர வடிவில் எழுந்து நிற்கக்கூட முடியாது. பாலங்களிலிருந்து விமானங்கள் வரை பொறியியல் வடிவமைப்பில் Square-Cube விதி பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், இதையெல்லாம் விவரித்துப் பார்வையாளர்களைக் கொட்டாவி விட வைக்காமல், சாராவின் உரை இலக்கியங்களுக்குள் குதிக்கிறது. ஜானத்தன் ஸ்ஃபிட் எழுதிய ‘கல்லிவரின் பயணங்கள்’ (Gulliver’s Travels) நூலில் வரும் ஆறு இஞ்ச் உயர துக்கடா மனிதர்களும், அறுபது அடி உயர பகாசுர மனிதர்களும் கணித விதிகளுக்குள் எப்படி அடங்குவார்கள் என்பதை விவரித்துவிட்டு, திமிங்கல வேட்டையைச் சுற்றி அமைக்கப்பட்ட பிரபல அமெரிக்கப் புதினமான ‘மோபி-டிக்’கில் வரும் கணிதக்கூறுகளை விளக்கி முடிக்கும் சாராவின் உரை கட்டுரையின் கீழிருக்கும் வலைப்பக்கத்தில் இருக்கிறது. ஆர்வமிருந்தால் நேரடியாகப் பார்த்துவிடுங்கள். உரையைப் பார்த்து முடித்த எனது எண்ணம் திமிங்கல வேட்டையை நோக்கி நீந்த ஆரம்பித்தது.
நிற்க! ஒருவேளை ஏப்ரல் 3 அன்று இதைப் படிக்க நேர்ந்தால், இன்று உலக நீர்வாழ் விலங்குகளின் நாள் (World Aquatic Animals Day). அதைச் சிறப்பிக்கும் வகையில் இந்த வாரக் கட்டுரை நீர்வாழ் விலங்குகளுக்கு சமர்ப்பணம்.
விலங்குகளில் மிகப் பெரியது 180 டன் எடை கொண்ட அண்டார்ட்டிக் நீலத் திமிங்கலம்; கிட்டத்தட்ட 98 அடி நீளம், தோராயமாக, 33 யானைகளுக்கு நிகரான எடை கொண்ட கம்பீரமான இந்த நீர் வாழ் விலங்கு வகை கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு வந்தது. அந்த நிலையில் இருந்து மீண்டதற்குக் காரணம், தொழில்நுட்ப வளர்ச்சியே.


நடந்தது இதுதான்: காலம் காலமாக திமிங்கல மாமிசம் உணவாகவும், எலும்புகள் மற்றும் வாயில் உள்ள கொம்பு போன்ற பலீன் என்ற உறுப்பு போன்றவை கைப்பைகள் செய்யவும் உதவும். இதற்காகவே இவை வேட்டையாடப்பட்டன. ஆனால், மேற்குலகம் இயந்திரமயமாகத் தொடங்கியதும் வேறு ஒரு தேவை ஏற்பட்டது. அது, திமிங்கலங்களின் தோலுக்குக் கீழிருக்கும் blubber எனப்படும் கொழுப்பு. சமையலுக்குப் பயன்படுத்துவதற்கும் மேல், திமிங்கலக் கொழுப்பு விளக்கு எரிவதற்கு நன்றாகப் பயன்படுகிறது என்பது தெரிய வந்ததும், திமிங்கலங்கள் வேட்டையாடப்படுவது பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் பல மடங்காக அதிகரிக்க ஆரம்பித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் திமிங்கலங்களைக் காண்பதே அரிது என்ற நிலை வந்தது. மின்சாரம் பரவலாகப் பயன்பாட்டிற்கு வர, திமிங்கலங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன. இருபதாம் நூற்றாண்டில் திமிங்கல வேட்டையைத் தடை செய்து பல நாடுகள் சட்டங்கள் கொண்டுவந்ததும் மற்றொரு காரணம். குறிப்பாக, ஜப்பானைக் குறிவைத்துப் போடப்பட்ட சர்வதேசச் சட்டங்கள். இவை இல்லாவிட்டால் ஜப்பானியர்களின் நாக்கிற்கே உலகிலுள்ள திமிங்கலங்கள் போதாது. இப்போதும் இந்தச் சட்டங்களின் ஓட்டைகளில் அவர்கள் தில்லாலங்கடி செய்கிறார்கள்.
திமிங்கலத்திற்கு அடுத்து அதிக அளவில் கொழுப்பு கொண்டவை Seal எனப்படும் நீர்நாய்கள், Walrus எனப்படும் கடற்குதிரைகள் மற்றும் Sea Lions என அழைக்கப்படும் கடற்சிங்கங்கள். இவை அனைத்தையும் பொதுவாக பின்னிபெட் (Pinnipeds) என அழைக்கிறார்கள். திமிங்கலங்களைப் போலவே கடுமையாக வேட்டையாடப்பட்ட நீர்நாய்களில் பத்திற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. ஆறு அடி மட்டுமே வளரும் ஹார்ப் நீர்நாய்களை ஆர்க்டிக் கடலருகே மட்டுமே காணமுடியும். ஒன்றரையில் இருந்து இரண்டு டன் வரை வளரும் யானை நீர் நாய்களை (Elephant Seals) பசிபிக் கடலோரத்தில் மட்டுமே காண முடியும். சாண்டா க்ரூஸ் நகரில் அமைந்திருக்கும் கலிபோர்னிய பல்கலைக்கழக ஆராய்ச்சித் தளத்திற்கு சமீபத்தில் சென்று யானை நீர்நாய்கள் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது.
கால அட்டவணையைத் துல்லியமாகப் பின்பற்றும் விலங்குகள் இவை. டிசம்பர் 15 ஆனால், மணி அடித்ததுபோல், கரைக்கு வர ஆரம்பிக்கும் யானை நீர்நாய்கள். குட்டிகளைப் பெற்றுக்கொள்வது, மீண்டும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது என மார்ச் கடைசி வரை பொழுதுபோகும். ஏப்ரலில் இருந்து ஆகஸ்ட் வரை அவற்றின் தோல் உரிந்து புதுத்தோல் வளர்த்துக்கொள்ளும் நேரம். இந்தத் தோலுரித்தலை molting என்கிறார்கள். செப்டம்பரில் இருந்து டிசம்பர் வரை கடலில் தொடர்ந்து நீந்தியபடி நான் ஸ்டாப் பாணியில் தின்று தீர்க்கும். டிசம்பர் 15 ஆனதும் மீண்டும் கரைக்கு வரும். சில யானை நீர்நாய்களில் பொருத்தப்படும் சென்சார்கள் மூலம் இந்த விலங்குகளின் வாழ்க்கையை ஆவணமாக்கி ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆராய்ச்சித் தளத்தில் எடுக்கப்பட்ட படங்களும், இனப்பெருக்க ஆர்வத்தில் இரண்டு ஆண் யானை நீர் நாய்களுக்கிடையே நடந்த சண்டையின் வீடியோவும் கட்டுரையின் இணைப்பு வலைப்பக்கத்தில் இருக்கின்றன.
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட நீர் வாழ் வகை விலங்குகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். இவை ஒவ்வொன்றின் வாழ்க்கையும் சிலாகிக்கக் கூடியதே. இவற்றில் இரண்டு சிறப்பான மீன் வகைகளை மட்டும் பகிர்கிறேன்.


சால்மன்: இந்த மீனின் வாழ்க்கை இயற்கையின் அற்புதம். நன்னீர் ஓடும் நதிகளின் குறிப்பிட்ட பகுதிகளில் தாய் மீன் குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்துக் கொண்டு, தன் முட்டைகளை இட, அதிலிருந்து பிறக்கும் குட்டிகள் நன்னீரில் வளர ஆரம்பிக்கின்றன. தாய்க்கு என்ன ஆகிறது என்பதைச் சில வரிகளுக்குப் பின்னர் சொல்கிறேன். சிறிது காலம் கழித்து ஓரளவு வளர்ந்த சால்மன் மீன் குட்டிகள் கடலை நோக்கிச் செல்லும். கடலில் முழுதும் வளர்ந்து இனப்பெருக்க வயது வந்ததும், மீண்டும் நன்னீரை நோக்கி நீந்த ஆரம்பிக்கும். ஷாப்பிங் செய்து வெளியே வரும்போது, எந்த இடத்தில் பார்க்கிங் செய்தோம் என்பதை மறந்து விழிக்கும் மனித விலங்குகளான நமக்கு மூக்கு மேல் விரல் வைக்கும் ஆச்சரியம் கொடுக்கிறது சால்மன். எந்த இடத்தில் பிறந்ததோ, அந்தக் குறிப்பிட்ட இடத்தை நோக்கியே சால்மனின் பயணம் அமைகிறது. கடலை நோக்கிப் பாய்ந்து வரும் நதி வெள்ளத்தை எதிர்த்த நீச்சல், கூரான கற்பாறைகள், வேட்டையாடக் காத்திருக்கும் கரடி உள்ளிட்ட விலங்குகள், அந்த விலங்குகளில் தலையான எதிரியாக மனிதர்கள் போன்ற அனைத்து இடர்களையும் தாண்டித் தனது பிறப்பிடத்திற்கு வந்து சேர்ந்து முட்டைகளைப் போடும். அந்தக் கடமை முடிந்த திருப்தியில் கடலுக்குச் செல்ல எத்தனிக்கும் தாய் சால்மனுக்குப் போதிய உணவு நன்னீரில் கிடைக்காதது, இனப்பெருக்க ஆர்வத்தில் நீந்தி வந்த பாதையின் கடுமை போன்ற காரணங்களால் தோலை இழந்து பரிதாபமான நிலைக்கு வந்து பெரும்பாலானவை இறந்துவிடும். இந்த மீனின் தொடர் நன்னீர்-கடல்-நன்னீர் வாழ்க்கைப் பயணத்தை ‘சால்மன் ஓட்டம்’ (Salmon Run) என அழைக்கிறார்கள். பல சால்மன் மீன்கள் ஆயிரக்கணக்கான மைல்களை இதற்காக நீந்திக் கடக்கின்றன. உதாரணத்திற்கு ரஷ்யாவில் அடையாளம் காணப்பட்ட சால்மன், அலாஸ்கா அருகே கண்டறியப்பட்டிருக்கிறது. பை தி வே, ‘இப்படி இறந்துபோகிறதே சால்மன், பாவம்!’ என்றெல்லாம் வருந்தத் தேவையில்லை. கடல் நீரில் வளர்ந்து இனப்பெருக்கத்திற்குப் பின்னர் நன்னீரில் மரிப்பதால், இவற்றின் உடலில் இருந்து வெளியாகும் சத்துகள், நீர்ப்பாசி போன்றவற்றுக்கு ஆதாரமாக அமைந்துவிடுகிறது.
ஈல்: பாம்புபோல இருக்கும் இந்த மீன் நன்னீரிலும், கடல் நீரிலும் வாழ்க்கையை அமைக்கிறது. ஆனால், சால்மனின் இனப்பெருக்க வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் விலாங்கு மீன் என அறியப்படும் ஈல் மீனின் வாழ்க்கை உல்டா. நன்னீரில் வளர்ந்து கடலுக்கு இனப்பெருக்கம் செய்யச் செல்லும் ஈல் பற்றிய ஆராய்ச்சி ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்கிறது. நீங்கள் படித்த முந்தைய வரியில் தவறு எதுவும் இல்லை. அரிஸ்டாட்டில் கிரேக்க தத்துவ ஞானி என்பது நமக்கெல்லாம் தெரியும். ப்ராய்டு உளவியல் மருத்துவம் என்பதன் பிதாமகன் என்பதும் தெரிந்திருக்கும். இவர்கள் இருவரையும் ஆராய்ச்சி நூல்கள் எழுத வைத்தன ஈல் மீன்கள். கி.பி. 350-ம் வருடத்தில் எழுதப்பட்ட அரிஸ்டாட்டிலின் ‘விலங்குகளின் வரலாறு’ நூல், விலங்கியல் ஆராய்ச்சியாளராக அவரது கடின உழைப்பைக் காட்டுகிறது. ஈல் மீன்களின் இனப்பெருக்கம் பற்றித் தீர்க்கமாகத் தெரியாததால், அவை தாமாக மண்ணில் உதயமாகின்றன எனத் தவறாக எழுதி வைத்திருந்தாலும், பிறக்கும்போது ஈல் ஆண் அல்லது பெண் என்ற தீர்க்கமான அடையாளத்துடன் இருப்பதில்லை என அவர் எழுதியது உண்மை என நிருபிக்கப்பட்டிருக்கிறது.
நீர்வாழ் விலங்கினங்கள் செழிப்புடன் இருப்பது ஆரோக்கியமான சூழலியலுக்கு மிகவும் முக்கியம். குறிப்பிட்ட வகை விலங்கினம் அழிந்துவிட்டதா (extinct), அல்லது அருகிவருகிறதா (endangered) என்பதை அறிய ஆராய்ச்சியாளர் களுக்கு முதல் தேவை, அதன் எண்ணிக்கையைக் கணக்கிடுவது. அதற்கடுத்து, அவை இருக்கும் இடத்தின் வெப்பம், தண்ணீர் அழுத்தம், மாசு போன்றவற்றை அறிந்து கொள்வது. சுறா மீன்களின் தகவல்களைச் சேகரிக்க இரைகளைத் தாங்கிய நீருக்கடியிலான கேமராக்களை (Baited remote underwater video systems, சுருக்கமாக, BRUVS) பயன்படுத்துகிறார்கள். ஆனால், மற்ற நீர்வாழ் விலங்குகளுக்கு இது சாத்தியமில்லை. காட்டு விலங்குகளைப் பற்றிய தகவல்களை, சாட்டிலைட் மற்றும் தரையில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் பெற்றுவிட முடியும். ஆனால், நீருக்குள் பேட்டரி பொருந்திய கருவிகளைத் தொடர்ந்து இயங்கவைப்பது கடினம் என்பதுடன், டேட்டா இணைப்புகள் ஆழ்கடலில் இயங்குவதில்லை என்பதெல்லாம் இதிலிருக்கும் சவால்கள். இதை எதிர்கொள்ள ‘பொருள்களின் இணையம்’ (Internet of Things, சுருக்கமாக IoT) தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. விலங்குகளின் உடலில் பொருத்தப்பட்ட சிறிய அளவிலான மின்னணுச் சாதனங்கள், தொடர்ந்து தகவல்களைத் தங்களுக்குள் சேகரித்தபடியே இருக்கும். சில மாதங்களுக்குப் பின்னர் ஸ்டிக்கர் போலப் பிரிந்து, தண்ணீர்ப் பரப்பில் மிதக்க ஆரம்பிக்கும். அப்படி மிதக்கும் சாதனங்களில் இருக்கும் தகவல்களை சாட்டிலைட்கள் மூலம் எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த வாரக் கட்டுரைக்கு சம்பந்தமான விவரங்களின் வலைப்பக்கம் - https://unlock.digital/22. கட்டுரைக்கான பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்: +1 628 240 4194
- Logging in...