Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - புதிய தொடர் 1

அண்டன் பிரகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
அண்டன் பிரகாஷ்

அண்டன் பிரகாஷ்

ந்திய சுதந்திரம், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் போன்ற பெரும் நிகழ்வுகளுக்குப் பின்னர் பிறந்த தலைமுறையான நம்மை அவற்றிற்கு நிகராகப் பேசப்படப்போகிற வரலாற்றுப் பக்கங்களின் நடுவில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது கொரோனா வைரஸ்.

நம் கல்வியமைப்பு, பணி முறைகள், சுகாதாரம் பேணல், பொழுதுபோக்கு, உணவுப் பழக்கங்கள், பயணங்கள், கொண்டாட்டங்கள் என தினவாழ்வின் பலவற்றில் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் மாறுதல்கள் தொடர்ந்து ஏற்பட்டபடி இருக்கிற 2020 வருடத்தின் கடைசிக் காலாண்டில் இந்தத் தொடரைத் தொடங்குகிறேன்.

நேரடியான உயிரிழப்புகள், மரணத்தின் வாயிலைத் தொட்டுத் திரும்பிய அனுபவங்கள், வேலையிழப்புகள், சிறு குறு தொழில்கள் மூடல் எனத் தொடர்ந்து கெடுதலான செய்திகளே வந்துகொண்டிருந்தாலும் கருமேகத்திற்குப் பின்னிருக்கும் சூரியனின் வெள்ளிடை வெளிச்சமாக சில நல்லவையும் நடந்திருப்பது உண்மை.

பள்ளியில் பத்தாம் வகுப்பிற்குப்பின் அற்றுப் போன தொடர்புகள் மீண்டும் இணைந்ததை எனக்கு நேர்ந்த ப்ளஸ்ஸாகச் சொல்வேன்.

UNLOCK அறிவியல் 2.O - புதிய தொடர் 1

“நான் விகடனின் ஆயுள் சந்தாதாரனாகிவிட்டேன்” எனக் குதூகலமாகச் சொல்லும் ஜெகன் கண்ணன் நியூயார்க்கில் ஐடி துறையில்; நானே மறந்துவிட்ட பழைய கட்டுரை வரிகளை நினைவுகூர்ந்து சொல்லும் பிரிவீன் அரசுப் பள்ளி ஆசிரியராக; தேசத்தின் எல்லைகள் மூடப்பட்டு விமானப்போக்குவரத்து பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஜோஃபி, ரதேஷ், ரசல் மூவரும் பூமிப்பந்தைச் சுற்றி வரும் வணிக மாலுமிகளாக. இவர்கள் அனைவருடன் என்னையும் தினமும் இணைக்க வைத்ததற்கு கொல்லும் கிருமியான கொரோனா ஒரு முக்கிய காரணம். இதுபோல பலரும் மீள்தொடர்புகள் ஏற்படுத்திய விவரங்களை நாம் அனைவருமே கேட்டிருக்கலாம்.

சரி, கட்டுரைக்குள் குதிக்கலாமா?

மேற்படி முன்னுரையைப் படித்து முடித்த உங்களது மூளையில் சில நரம்பியல் மாறுதல்கள் நடந்திருக்கின்றன. உங்களது மூளையின் வலது மற்றும் இடது அரைக்கோளங்களை இணைக்கும் corpus callosum என்ற நரம்புப் பகுதி தடித்திருக்கிறது. முகங்களை அடையாளம் காண்பதில் பொதுவாக வலது , இடது இரண்டு பகுதிகளும் சமமாகச் செயல்படும். உங்களுக்கு இந்தத் திறன் வலது புறத்திற்கு மாறிவிட்டது.

‘இதெல்லாம் எப்படி, எப்போது நடந்தது, அண்டன்’ எனக் கேட்கிறீர்களா?

வார்த்தைகளைப் படித்துப் புரிந்துகொள்ளும் திறனை எப்போது ஆரம்பித்தீர்களோ அப்போதே இந்த வேதியியல் மாற்றம் உங்கள் மூளைக்குள் நடக்க ஆரம்பித்துவிட்டது. எந்த மொழியானாலும் சரி, அதில் இருக்கும் வார்த்தைகளைப் படித்து அவற்றைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கையில், உங்களது மூளைக்குள் எழுத்துப் பேழை ( Letterbox ) என்றொரு பகுதி உருவாக ஆரம்பித்ததுதான் அந்த மாற்றம்.

பொது இடத்தில் இருந்தால், யாரும் உங்களைப் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு இடது கையைத் தூக்கி காதுக்குப் பின்னால் இருக்கும் பகுதியை லேசாக அழுத்திப் பாருங்கள். அதற்குப் பின்னால் இருப்பதுதான் எழுத்துப் பேழைப் பகுதி. எழுதிய வார்த்தைகளைப் படித்துக் கொண்டிருக்கையில், மூளையை ஸ்கேன் செய்தால் எழுத்துப் பேழைப் பகுதி ஒளிரும். விபத்து போன்ற சம்பவத்தால், மூளையின் எழுத்துப் பேழை பகுதி பாதிக்கப்பட்டால், படங்களை பார்த்து அவற்றை பகுத்து புரிந்து கொள்வதிலோ, அல்லது கணக்குகள் செய்வதிலோ சிக்கல் இருக்காது; ஆனால், வார்த்தைகளை மட்டும் படிக்க முடியாது.

UNLOCK அறிவியல் 2.O - புதிய தொடர் 1

இணையம் வந்த புதிதில் வார்த்தைகள்தான் வலைப் பக்கங்களை நிரப்பின. பின்னர் படங்களை இணைத்துக்கொள்ளும் வசதி வந்தது. யூடியூப் வந்தபின்னர் வீடியோ வடிவம் பிரபலமானது. கேமரா கொண்ட கைப்பேசிகள் உடலின் ஒரு பகுதியாகவே மாறிப்போனபின்னர் இணையம் விஷுவல் வடிவிலான தகவல்களால் நிரம்பி வழிய ஆரம்பித்தது; சமூக ஊடகங்கள் அதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றன.

இருப்பினும், எழுதிய வார்த்தைதான் முறையாகத் தொகுப்பதற்கு ஏதுவான தகவல் வடிவம் என்பதால், வார்த்தைகளுக்கு இன்னும் முதல் இடம். உதாரணத்திற்கு, வீடியோவில் இருக்கும் டயலாக்குகளை வார்த்தைகளாகப் பிரித்து அதைத் தொகுப்பதையே யூடியூப் உள்ளிட்ட வீடியோ சேவைகள் செய்கின்றன.

கட்டுரையின் முதல் வரைவில் இந்தப் பகுதி இடம் பெற்றிருக்கவில்லை. முதல் வரைவைப் பார்த்த இணை ஆசிரியர் கி.கார்த்தி இப்படி ஒரு பின்னூட்டத்தை அனுப்பியிருந்தார் “அண்டன் - கட்டுரை ஆழமாகவும், தகவல் நிறைந்தும் இருக்கிறது. ஆனால் , அதே வேளையில் சற்று அடர்த்தியாக இருக்கிறது. இதை இலகுவாக்க, எளிமையாக ஏதாவது ஜாலியான விஷயங்களை இடை செருக முடியுமா?”

திரைப்பட இடைவேளையில் கொரிக்கப்படும் பாப்கார்ன் போல உங்களது மூளைக்கு இரண்டு எளிய விளையாட்டுகள்:

இதைச் செய்யும் முன்னால், அருகில் நாற்காலி இருந்தால் அமர்ந்து கொள்ளுங்கள். கூகுளுக்கு சென்று do a barrel roll என எழுதித் தேட முயலுங்கள். தலை சுற்றியதா?

நாற்காலியில் இருந்து எழ வேண்டாம். மீண்டும் Askew என்ற வார்த்தையைக் கொடுத்துத் தேடுங்கள்.

டெக் நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பங்களில் வெளிப்படையாகச் சொல்லாமல் வைத்திருக்கும் இப்படிப்பட்ட சித்து விளையாட்டுகளுக்கு Easter Eggs என்று பெயர். ஈஸ்டர் பண்டிகை அன்று கலர் அடித்த முட்டைகளை ஒளித்து வைத்து குழந்தைகளைத் தேட விடுவதற்கு சமமாக நம்மையெல்லாம் குழந்தைகளாக்குவதால் இந்தப் பெயர்.

சரி, முட்டைகள் பெற்றுக் கொண்டோம்... இப்போது மூளைக்குள் திரும்புவோம்.

மனித மூளையானது எழுத்து வடிவத்தை எப்படிப் பகுத்தறிகிறது என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. அதை பொத்தாம் பொதுவாக செயற்கை அறிவு ( Artifical Intelligence ) என மேலெழுந்த வாரியாகச் சொல்லலாம். அதைவிட எந்திரக் கற்றல் ( Machine Learning ), நீட்சியான ஆழ் கற்றல் ( Deep Learning ) பிரிவில் இதைச் சேர்ப்பது பொருத்தமாக இருக்கும்.

பொதுவாக செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் என்றதுமே, பலருக்கும் ரோபாட்டிக்ஸ் எனப் புரிதல் வரலாம். பெரும்பாலான ரோபாட்டுகள் தங்களுக்கு எழுதி வைத்ததை சற்றே தன்னாட்சியுடன் செவ்வனே செய்து முடிப்பதற்காகத் தயாரிக்கப்படுபவையே. எந்திரன் 1-ல் “டிவியைப் போடு” என்றதும் தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கிப்போட்டு உடைக்கும் ரோபாட் இதற்கு நல்ல உதாரணம்.

செயற்கை அறிவு அதில் இருந்து பெரிதும் மாறுபட்டது. இயற்கை அறிவு போன்றதற்கு நிகரனான நுண்ணறிவை நிரலாக்க முயலும் பிரிவு இது. இயற்கை அறிவு என்பது நாம் படித்த, உணர்ந்த, அனுபவித்த தகவல்களை மூளையின் நியூரான்களில் சேகரித்துக் கொண்டு முடிவுகள் எடுக்கப் பயன்படும் விலைமதிப்பற்ற திறன். செயற்கை அறிவுப் பிரிவிலும், அதன் “எந்திரக் கற்றல்”அவ்வளவு முன்னேறியது அல்ல. தகவல்களைச் சேகரித்துக்கொண்டு அதைப் பகுக்கும் வழிமுறைகளைப் பயிற்சி செய்து கொண்டேயிருந்து அந்த வழிமுறைகளைச் செழுமைப்படுத்த முயல்கிற ஒரு உத்தி இது. இதற்கு நல்ல உதாரணம், நெட்ப்ளிக்ஸ் அல்லது அமேசான் பிரைம் வீடியோ சேவையில் வரும் பரிந்துரைகள். “இந்தப் படங்களை அல்லது டிவி சீரியல்களை நீங்கள் விரும்புவீர்கள் என நாங்கள் நினைக்கிறோம்” எனத் தலைப்பிட்டுப் பரிந்துரைக்கும் வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இது எப்படி நிகழ்கிறது ?

நீங்கள் எந்தப் படங்களை முழுமையாகப் பார்க்கிறீர்கள், மீண்டும் பார்க்கிறீர்கள், அதைப் பார்த்தபின்னர் நீங்கள் பார்க்கும் அடுத்த படம் என்ன போன்ற தகவல்களையும், உங்களைப் போலவே ரசிக்கும் தன்மை உள்ள மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் கொண்ட தகவலின் அடிப்படையில் முதல் கட்ட வழிமுறை பரிந்துரைகளைக் கொடுக்கிறது. இந்தப் பரிந்துரைகளின்படிதான் நீங்கள் நடந்து கொள்கிறீர்களா என்பதை அது தொடர்ந்து பார்த்துவிட்டு வழிமுறையின் தன்மையையே மாற்றிக்கொள்கிறது. இப்படி தன்னைத் தொடர்ந்து உங்களது தகவல்கள் மூலம், உங்களுக்காக மாற்றிக்கொள்வதன் மூலம், விரைவில் அது கொடுக்கும் பரிந்துரைகள் உங்களுக்கு விருப்பமானதாகவே இருக்கும். செயற்கை அறிவில் எந்திரக் கற்றல் எளிதானது.

ஆழ் கற்றல் ஒரு படி ஆழமாகச் செல்கிறது. மனித மூளையின் நியூரான்கள்போல பயிற்சியில்லாமல், தானாகவே பகுத்தறிய முடியுமா என்பதற்குள் ஆழமாகச் செல்லும் பிரிவு இது.

வார்த்தைகள் பற்றிய மிக முக்கிய ஆழ் கற்றல் ஆராய்ச்சி ஒன்று பரிசோதனை வடிவில் இருந்து பயன்பாட்டு வடிவிற்கு சமீபத்தில் வந்திருக்கிறது. அதன் வெளியீடு சிலிக்கான் வேலி நிறுவனங் களையும், டெக் தொழில் முனைவோரையும் ஒரு சேர பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

2015-ல் டெஸ்லாவின் எலான் மஸ்க் சிலருடன் சேர்ந்து தொடங்கிய OpenAI நிறுவனம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். லாப நோக்கம் கொண்ட ஆராய்ச்சி அமைப்பு எனத் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் இந்த நிறுவனம் தகவல் அறிவியல் ( Data Science ) சார்ந்த பல ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. சில மாதங்களுக்கு முன்னால் OpenAI வெளியிட்டது Generative Pre-trained Transformer ( சுருக்கமாக, GPT) என்று பெயரிடப்பட்ட ஒரு ஆழ் கற்றல் தொழில்நுட்பம். இது மூன்றாவது வெர்ஷன் என்பதால் GPT-3 என அழைக்கப்படுகிறது. பெயரிலேயே கிட்டத்தட்ட இந்தத் தொழில்நுட்பத்தின் விளக்கமும் உள்ளடங்கி விடுகிறது. முன்பயிற்சி அளிக்கப்பட்ட படைப்பாளி அல்லது மாற்றாளி என அதை மேலெழுந்தவாரியாக மொழி பெயர்க்கலாம். 175 பில்லியன் வார்த்தைக் கதம்பங்களுடன் முன்பயிற்சி அளிக்கப்பட்ட வழிமுறையாக GPT-3 இருப்பதால், அதற்கு நீங்கள் கொடுக்கும் வார்த்தைகளை கிட்டத்தட்ட மனித மூளைக்கு நிகராக கிரகிக்கும் ஆற்றல் இருக்கிறது. இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், ஒரு பிரமாண்ட வடிவிலான எழுத்துகள் உருவாக்கப் பட்டு இணையத்தில் நமக்காக வைக்கப்பட்டிருக்கிற எழுத்துப்பேழை இது.

இதையெல்லாம் ஒரு பரிசோதனை சாலை முயற்சி என்ற வடிவில் மட்டும் வைக்காமல், அதை யார் வேண்டுமானாலும் வணிக வடிவில் பயன்படுத்திக்கொள்ளலாம் என வெளியிட்டிருப்பது மிகச் சிறப்பு. மிகவும் பிரபலமாகிவிட்டதால், GPT-3 பயன்படுத்த விரும்புவோரின் காத்திருப்ப பட்டியலில்தான் நான் இன்னும் இருக்கிறேன். பயன்படுத்த வாய்ப்பு கிடைத்ததும், விளையாடி அனுபவம் பகிர்கிறேன். ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவர்கள் செய்திருக்கும் முயற்சிகள் மிகுந்த நம்பிக்கையூட்டுகிறது. அவற்றில் சிலவற்றை அடுத்த வாரத்தில் பார்க்கலாம்.

பின்குறிப்புகள்:

(1) இந்தத் தொடரில் ஒவ்வொரு வாரமும் bitly ஒன்றை இணைக்கப்போகிறேன். அந்த வாரக் கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உரலிகள், விக்கி பக்கங்கள் மற்றும் அதிக விவரங்கள் இந்த http://bit.ly/UnlockSeries01 bitlyல் இருக்கும்.

(2) கட்டுரையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை விகடன் டாட் காம் பயனீட்டாளராக இருந்தால் அங்கே எழுதுங்கள். அதோடு, +1 628-240-4194 என்ற வாட்ஸப் மூலம் ஆடியோ பதிவாகவும் உங்களது பின்னூட்டங்களைப் பகிருங்கள். தேர்ந்தெடுத்த சிலவற்றை அதே பக்கத்தில் பதிவேற்றம் செய்கிறேன்.


- Logging in...