Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 11 - twitch

UNLOCK அறிவியல்
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல்

- அண்டன் பிரகாஷ்

தேர்தல் பரபரப்பு அமெரிக்காவில் ஒரு வழியாக அடங்கிய படியிருக்கிறது. 117வது காங்கிரஸ் என அழைக்கப்படும் பிரதிநிதிகளின் சபை மாஸ்க் அணிந்தபடி பதவியேற்றுவிட்டது. 46-வது அதிபராக ஜோ பைடன் தடுப்பூசி போட்டுக்கொண்டு ஜனவரி 20 அன்று பதவியேற்கத் தயாராகிவிட்டார். இந்தியாவில் மாநிலத் தேர்தல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பது கடல் தாண்டித் தகிக்கிறது. கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளுமே டிஜிட்டல் திட்டம் வைத்திருக்கின்றன. ட்வீட்டுகளில் இருந்து மீம்கள் வரை தயாரிப்புத் தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்துவிட்டன.
UNLOCK அறிவியல் 2.O - 11 - twitch

ஒபாமா 12 வருடங்களுக்கு முன்பு தேர்தலில் போட்டியிட்டபோது ட்விட்டரைப் பயன்படுத்தி அரசியலில் சமூக ஊடகம் என்ற பிள்ளையார் சுழியைப் போட்டு வைத்தார். அடுத்து வந்த ட்ரம்ப் அதை வேறு லெவலுக்கு எடுத்துச் சென்றாலும், பொதுவாக அனைத்து அரசியல்வாதிகளும் ட்விட்டர், ஃபேஸ்புக் இரண்டையும் அறிவிப்பு ஊடகங்களாகத் தங்கள் வசதிக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை வாட்ஸப் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது தெரிகிறது.

நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் யாராவது புதிய சமூக ஊடகத்தை அல்லது புதிய வழிமுறைகளைப் பின்பற்றி வெற்றி அடைந்திருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தேன். 31 வயதான அலக்ஸாண்டிரியா ஒகாசியோ கோர்டோஸ், சுருக்கமாக அவர் விருப்பப் பெயரில் AOC, சென்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதத்தில் நியூயார்க் மாகாணத்தில் இருந்து வெற்றி பெற்றவர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர் என்றாலும் இந்த முறை தேர்தலில் அவர் பயன்படுத்திய சமூக ஊடக ஆயுத அணிவகுப்பு வித்தியாசமானது. இளைஞர்களை, குறிப்பாக 18 வயதை சமீபத்தில் தொட்ட புதிய வாக்காளர்களைக் கவரும் விதத்தில் அவர் பயன்படுத்தியது ட்விட்ச் - Twitch. நீங்கள் விளையாடும் வீடியோ விளையாட்டைப் பார்வையாளர்கள் பார்க்கும் விதத்தில் ஒளிபரப்பு செய்யும் இந்தத் தொழில்நுட்பத்தில் அவர் விளையாடியது, இப்போது படு பிரபலமாக இருக்கும் ‘Among Us.’ சேரும் உறுப்பினர்களில் ஒருவரை மட்டும் மோசடிக்காரன் (Imposter) என மற்றவர்களுக்குத் தெரியாமல் சொல்லிவிடும். அவர் யார் என்பதை மற்றவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். திறமையான மோசடிக்காரரே குழுவாகப் பேசும்போது, மற்றவர்களைக் கையைக் காட்டுவதும், எதுவும் தெரியாத அப்பாவி போல நடிப்பதுமாக இருப்பார். இதில் கண்டுபிடிக்க தனித் திறமை வேண்டும். இந்த விளையாட்டின் விதிகளை வைத்து தன் எதிரிகளை அரசியல் நையாண்டி + விமர்சனம் செய்வது, நேரலையில் பார்த்தவர்களுடன் உரையாடுவது என இதைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார் அவர். நேரடியாக நான்கு லட்சம் பேர் இதைப் பார்த்தனர். அது பதிவேற்றமாகியிருக்கும் ட்விட்ச் வீடியோ, ஐந்து மில்லியனுக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. விரைவில் தேர்தல் நடக்கவிருக்கும் VOC பிறந்த மண்ணில் அமெரிக்க AOC-யின் புதுமை முயற்சி பின்பற்றப்படுமா என்பதைப் பார்க்கலாம்.

UNLOCK அறிவியல் 2.O - 11 - twitch

அதிருக்கட்டும். எலக்ட்ரானிக்ஸ் பிரியர்களுக்குப் புது வருடம் தொடங்கியதும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். பல நிறுவனங்கள் தங்களது முதன்மையான வெளியிடல்களை நிகழ்த்தும் Consumer Electronics Show (நுகர்வோர் மின்னணுச் சாதனக் காட்சி), சுருக்கமாக CES, ஜனவரி இரண்டாம் வாரத்தில் நடக்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தவறாமல் நடத்தப்படும் CES நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சீரியஸான ஆசாமிகள் அக்டோபரிலேயே தயாராகிவிடுவார்கள். லாஸ் வேகாஸ் நகரின் தங்கும் விடுதிகளில் உள்ள அறைகளின் எண்ணிக்்கை ஒன்றரை லட்சம். கலந்துகொள்ள வருபவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டும் என்பதால், அறைகள் கிடைப்பது கடினம். இது நடக்கும் மூன்று நாள்களும் லாஸ் வேகாஸ் நகரமே மின்னணுச் சாதன விரும்பிகளால் நிரம்பி வழியும்.

UNLOCK அறிவியல் 2.O - 11 - twitch

கொரானா லாக் டௌன் காரணமாக இந்த வருட நிகழ்வு முழுக்க virtual ஆக நடத்தப்படுகிறது. கடந்த பத்து வருடங்களாக CES-ல் பங்கேற்ற நான், இந்த வருடமும் மிஸ் பண்ணுவதாக இல்லை. பயணக்களைப்பு இல்லாமல் காலையிலேயே கணினி முன் மூன்று நாள்களும் ஆஜராகத் திட்டம்.

CES-க்கு முந்தைய வாரங்களில் மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனங்கள் நேரடியாகவும், பூடகமாகவும் தாங்கள் வெளியிடப் போவதைப் பற்றி மீடியாவிற்குத் தெரிவிப்பதுண்டு. வெளியீட்டு விழாக்கள், அதையடுத்த பார்ட்டிகள் என மூன்று நாள்களும் அல்லோலகல்லோலப்படும். இந்த வருடம் virtual என்றாலும், தயாரிப்பாளர்கள் உற்சாகம் வடியாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த சில வருடங்களாக தானியங்கி வாகனம் சார்ந்த தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. வித்தியாசமாக வரலாற்றில் பதிவாகும் வருடம் என்பதால், இந்த வருடத்தில் ஹாட்டாக இருக்கும் மூன்று ஏரியாக்களை மட்டும் முதலில் பார்த்துவிடலாம்.

UNLOCK அறிவியல் 2.O - 11 - twitch

தூக்கம் (Sleep)

பெருந்தொற்று மற்றும் லாக்டௌன் கொண்டு வந்திருக்கும் சிக்கல்களில் முக்கியமானது தரம் குறைந்த தூக்கம். முன்போல் எளிதாகப் பயணம் செய்ய முடியவில்லை. பணி சார்ந்த அச்சம், நோய் தொற்றினால் என்ன செய்வது என்பது போன்ற பல கவலைகள் தூக்கத்தின் தரத்தைக் குறைக்கின்றன. தூக்கமின்மையால் அகமும் புறமுமாக பல தீய விளைவுகள்.

புற விளைவிற்கான உதாரணம்: இரவில் எட்டு மணிநேரத் தூக்கம் வேண்டும். ‘அதற்குக் குறைவாகத் தூங்குபவர்கள், எவ்வளவு குறைவான மணி நேரம் தூங்குகிறார்களோ, அந்த அளவுக்கு அதிகமாக வாகன விபத்துக்குக் காரணமாகிறார்கள்’ என்கிறது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு.

அக விளைவிற்கு ஓர் உதாரணம்: நம் உடலுக்குள் Free Radicals என்ற வில்லனும், Antioxidants என்ற கதாநாயகனும் சுற்றி ஓடியபடியே இருக்கிறார்கள். உடலின் அணு ஒன்றைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சரிவர அமையவில்லை என்றால் அந்த அணு நிலையற்றதாக மாறிவிடும். அப்படி நிலையற்ற அணுக்களை Free Radicals (தமிழில் ‘கட்டற்ற கயவர்கள்’) என அழைக்கலாம். இந்த நிலையற்ற அணுக்களை மீட்கும் ஆபத்பாந்தவர்களே Antioxidants எனப்படும் ஆக்சிஜனேற்றிகள். கீரை வகைகளிலும், ஸ்ட்ராபெரி போன்ற பழ வகைகளிலும், மஞ்சள் உள்ளிட்ட மசாலா வகைகளிலும் இந்த வேதிப்பொருள் இருக்கிறது. எலக்ட்ரான் இல்லாமல் தள்ளாடி, தடுமாறி வரும் நிலையற்ற அணுவிற்கு, தன்னிடம் இருக்கும் எலக்ட்ரான் ஒன்றை தானமாகக் கொடுத்து, அந்த அணுவைத் தடுமாற்றமில்லாமல் சுற்ற வைக்கிறது இது. ஆக்சிஜனேற்றிகள் இல்லாமல் நிலையற்ற அணுக்கள் உடலுக்குள் சுழன்று வரும் நிலையை Oxidative stress என்கிறார்கள். இந்த நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதுடன், இன்சுலின் சுரப்பதும் தடைப்படும். இது சர்க்கரை நோய்க்கு உடலை ரத்தக் கம்பளம் போட்டு அழைத்துச் செல்லும். தூக்கமின்மை Oxidative stressக்கு காரணமாக இருக்கின்றது என்பதைப் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

தூக்க நேரத்தை அளவிட்டுச் சொல்லும் வசதி ஆப்பிள் வாட்ச் போன்ற சாதாரண சாதனங்களில் வந்துவிட்டன. ஆனால், தரத்தை அளவிட்டு, உயர்த்துவதற்கு, அதற்காக பிரத்யேகமாக உள்ள தூக்க ஆராய்ச்சிக்கூடத்துக்குச் செல்ல வேண்டும். இதற்கு நேரமும் செலவும் அதிகம். இந்த வழிமுறைக்கு எளிதான, நாமே பயன்படுத்திக் கொள்ள முடிகிற தீர்வுகள் வந்தபடியிருக்கின்றன. CES நிகழ்வில் அப்படித் தொழில்நுட்பத் தீர்வு ஒன்றை Awarables என்ற நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இதை நெஞ்சில் கட்டிக்கொண்டு தூங்கினால், ப்ளூடூத்தால் இணைக்கப்பட்டுள்ள அலைபேசியின் மூலமாக நம் தூக்கத் தரத்தை அளந்து, தெளிவாக என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளைக் கொடுக்கிறது இது.

போஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் Sleep Buds, தூங்கும்போது நீங்கள் அணிந்துகொள்ள வேண்டியது. அவர்களது ஆராய்ச்சியில் இருந்து கண்டறியப்பட்ட சப்தங்களை மட்டுமே இரவு முழுதும் கேட்டபடி ஆழ்ந்து, தரமாகத் தூங்கலாம்.

UNLOCK அறிவியல் 2.O - 11 - twitch

Calm அலைபேசி மென்பொருள் நல்ல தூக்கத்திற்கான சத்தங்களையும், இசையையும் தொகுத்து வழங்குகிறது. இந்த மென்பொருள் 2.5 பில்லியன் டாலர் என்ற மதிப்பீட்டை அடைந்திருப்பது, தூக்கத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மைல் கல்.

நிகர் மெய் (Virtual Reality)

நிஜ உலகை நாம் பார்க்கும் புனைவுக்குள் கொண்டு வரும் நிகர் மெய் தொழில்நுட்பங்கள் சென்ற வருடம் வரை நுகர்வோர் மத்தியில் பிரதான இடத்தைப் பெறவில்லை. முக்கிய காரணம், முகத்தின் பாதியை மறைத்தபடி கண்களை மூடியிருக்கும் ஹெட்செட், கைகளில் அதை இயக்கும் கண்ட்ரோலர்கள் என பள்ளிக்கூட நாடகத்தில் வரும் விண்வெளி காமெடி வீரர்கள்போல தங்களை மாற்றிவிடும் எனப் பலருக்கும் இருந்த கூச்சம். கொரானா லாக்டௌன் அதை மாற்றிப் போட்டுவிட்டது. ஃபேஸ்புக் நிறுவனத்தால் சில வருடங்களுக்கு முன்னால் வாங்கப்பட்ட ஆக்குலஸ் சாதனம் வீடியோ விளையாட்டாளர் களுக்கு மட்டுமே என்ற நிலை இருந்தது. இன்றைய நிலையில் ஆக்குலஸ் சாதனம் பேக் ஆர்டரில் இருக்கிறது. இந்த டிமாண்டிற்கு முக்கிய காரணம், விளையாட்டுகளைத் தாண்டி, அதில் வெளியாகிவரும் உடற்பயிற்சி சார்ந்த மென் பொருள்கள். உதாரணத்திற்கு, ‘சூப்பர் நேச்சுரல்’ என்ற மென்பொருள் உங்களை நிகர் மெய் உலகிற்கு அழைத்துச் சென்று உடற்பயிற்சி செய்ய வைக்கிறது. கண்களால் பார்க்கும் உலகம் போலி என்றாலும், செய்யும் உடற்பயிற்சி 100% நிஜம். இந்தக் கட்டுரை எழுதுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் சில கடைகளில் படியேறி இறங்கினேன். எங்கும் ஸ்டாக் இல்லை. ஆக்குலஸிலேயே ஆர்டர் செய்திருக்கிறேன். ‘மார்ச் வாக்கில் அனுப்புவோம்; அதுவும் நிச்சயமில்லை’ என ஈமெயில் வந்திருக்கிறது.

UNLOCK அறிவியல் 2.O - 11 - twitch

தொலைநிலைப் பணி (Remote Working)

அத்தியாவசிய ஒரு சில பணிகளைத் தவிர ‘எங்கிருந்தும் நம் பணியைச் செய்யும் வசதி வேண்டும்’ என்ற லாக்டௌன் இயல்பு, பணித்தளங்களில் கலாசார மாற்றமாகவே வந்துவிட்டது. இந்த மாற்றம் வலியில்லாமல் நிகழத் தேவையானது - வலுவான இணைய இணைப்பு. அலுவலகக் கட்டடங்களில் இருக்கும் வணிகத்தரமான இணைப்புகள் போல வீடுகளில் பொதுவாக இருப்பதில்லை. பணிக்கு மட்டுமல்லாமல், பொழுதுபோக்குத் தேவைகளுக்காகவும் இணைய இணைப்பு வீடுகளில் பயன்படுத்தப்படலாம் என்பதால், இணைப்பை வலுவாக எப்போதும் வைத்திருப்பது என்பது கடினம். அமேசான் இந்தப் பிரச்னையை சத்தமில்லாமல் தீர்த்து வைக்க முனைகிறது. அவர்களது ரிங் கேமரா, எக்கோ ஸ்பீக்கர் எனப் பல்வேறு வகையான சாதனங்கள் வீட்டு வாசல்களிலும், வீட்டிற்குள்ளும் குடிபுகுந்து அமர்ந்திருக்கின்றன. இப்படி, உங்கள் வீட்டில் இருக்கும் சாதனங்களையும், உங்கள் பக்கத்துவீட்டுக்காரது சாதனங்களையும் வயர்லெஸ் முறையில் இணைத்துக்கொண்டு ஒரு கண்ணி வலைப்பிணையம் (Mesh Network) கட்டினால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்துக்குச் செயல் வடிவம் கொடுக்கிறது அமேசான். Side Walk எனப் பெயரிடப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், உங்கள் வீட்டில் இருக்கும் இணைய இணைப்பைச் சற்றே பயன்படுத்தும் என்றாலும், உங்கள் வீட்டு இணைப்பில் தற்காலிக சிக்கல் என்றால், எந்த சேதாரமும் இன்றி உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் இணைப்பு மூலமாக உங்களுக்குத் தகவல் பரிமாற்றம் நிகழும். அவசரச் சூழல்களில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டால், இதுபோன்ற கண்ணி வலைப்பிணையங்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்க உதவும்.

CES நிகழ்வு முடித்துவிட்டு இது தவிர்த்த புதுமையாக்கங்கள் வேறு ஏதேனும் இருந்தால் பகிர்கிறேன். இந்த வாரக் கட்டுரைக்கான ஆதாரங்கள், இணைப்புகள் https://unlock.digital/11 என்ற வலைப்பக்கத்தில் இருக்கின்றன. உங்களது கருத்துகளை +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலம் அனுப்புங்கள்.

- Logging in...