Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 12

UNLOCK அறிவியல் 2.O
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல் 2.O

- அண்டன் பிரகாஷ்

பிறந்த நாள், புத்தாண்டு, தீபாவளி, கடந்த வாரத்தின் பொங்கல் போல எதற்கு வாழ்த்த வேண்டுமென்றாலும் நாம் பயன்படுத்தும் வாழ்த்துகளின் முதல் வார்த்தை - மகிழ்ச்சி!

உலக நாடுகள் அனைத்துமே தங்களது வருடாந்தரப் பொருளாதார முன்னேற்றம் அல்லது குறைவை அளவிட மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product, சுருக்கமாக, GDP) என்ற மதிப்பீட்டைப் பயன்படுத்துகின்றன. நுகர்வோர் செல்வழிக்கும் தொகை, அரசு செலவழிக்கும் தொகை, நிகர ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றைப் பயன்படுத்தி இது கணக்கிடப்படுகிறது.

UNLOCK அறிவியல் 2.O - 12

இந்தியாவின் அண்மை நாடான பூட்டான் மட்டும் இந்தக் கணக்கீட்டிலிருந்து விலகி நிற்கிறது. அவர்களது நாட்டின் வளர்ச்சியை மொத்த நாட்டு மகிழ்ச்சி (Gross National Happiness, சுருக்கமாக, GNH) என்ற அளவீட்டில் ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறார்கள். 70களில் இருந்தே பின்பற்றப்படும் இந்தக் கணக்கீட்டு முறைக்கு மக்களின் வாழ்க்கைத் தரம், நேரத்தைப் பயன்படுத்தும் முறை, கல்வியமைப்பு உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்படுகின்றன. GDP என்பது பொருளாதாரச் செயல்பாடுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதால், அதை ஏற்றுக்கொள்வது எளிது. மக்களிடம் சர்வே செய்து, அவர்களது உணர்வுகளின் (feelings) அடிப்படையில் சேகரிக்கப்படும் தகவல்களைத் தொகுப்பது GNH என்பதால் இதை யாரும் முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

UNLOCK அறிவியல் 2.O - 12

பல ஆண்டுகளாக இதைத் தொடர்ந்து ஆராய்ந்துவந்த ஐக்கிய நாடுகள் சபை 2012-ம் ஆண்டில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ‘மகிழ்ச்சி மாநாடு’ என ஒன்றை அறிவித்து, அந்த வருடத்திலிருந்து உலக நாடுகளின் மகிழ்ச்சி அளவீட்டு அறிக்கை (World Happiness Report) என்ற ஒன்றை வெளியிடுகிறது. பொதுவாக நார்வே, ஸ்வீடன், பின்லாந்து உள்ளிட்ட ஸ்காண்டிநேவிய நாடுகள் முன்னிலையில் இருக்கும் இந்த அறிக்கையில் அமெரிக்கா 15க்கும் கீழ் போய்விடுகிறது. இத்தனைக்கும் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் (Declaration of Independence) மகிழ்ச்சியைத் தேடும் முயற்சி (Pursuit of Happiness) என்பது, உயிர், விடுதலை இரண்டுடன் சேர்த்து அடிப்படை உரிமையாக அமைத்திருப்பது குறிப்பிடப்பட வேண்டியது.

UNLOCK அறிவியல் 2.O - 12

தனி மனிதர்களைப் போலவே , சமூகங்களுக்கும் மகிழ்ச்சி முக்கியமானது என்பதை சர்வதேச அமைப்புகளும், அரசுகளும் சொல்வதில் இருந்து மகிழ்ச்சியின் முக்கியத்துவம் விளங்கும். மகிழ்ச்சிக்குப் பின்னிருக்கும் அறிவியல் புரிதல்களையும், தொழில்நுட்ப முனைவுகளையும்தான் இந்த வாரம் அலசப் போகிறோம்.

மகிழ்ச்சியை உணர்வது எங்கே?

மகிழ்ச்சி என்பது உணரப்படுவது நம் நரம்பு மண்டலத்தில், குறிப்பாக மூளையில். கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோ எடை இருக்கும் மனித மூளை, நூறு பில்லியன் நியூரான்களால் ஆனது. நமது பல்வேறு தேவைகளுக்காக ஒவ்வொரு நியூரானும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் மற்ற நியூரான்களுடன் தொடர்ந்து இணைந்து மின் அல்லது வேதியியல் சமிக்ஞைகளைப் பரிமாறியபடியே இருக்கிறது. Synapse எனப்படும் கட்டமைப்பு இந்தத் தகவல் பரிமாற்றத்தை மேற்பார்வை செய்கிறது. தகவலைப் பெற்றுக் கொள்ளும் நியூரான், அதை அடுத்த நியூரானுக்குக் கடத்துவதா, வேண்டாமா என்பதை இந்தக் கட்டமைப்புதான் தீர்மானிக்கிறது. இப்படித் தகவலை நகர்த்துவதை Neuron Firing என்கிறார்கள். இந்த மின்னல் வேகத் தகவல் நகர்த்தல் பணி, ஆக்ஸான் என்ற இணைப்புகள் மூலமாக நடக்கிறது. நம் வீடுகளில் உள்ள மின்சார வயர்கள் போல இருக்கும் ஆக்ஸான்களின் மீது பூசப்பட்டிருக்கும் பாதுகாப்புப் பூச்சிற்கு ‘மைலீன்’ என்று பெயர். இதுபற்றி தொடரின் முந்தைய கட்டுரையில் படித்தது நினைவிருக்கலாம். ஒவ்வொரு நியூரானும் ஒரு நொடிக்கு ஐந்திலிருந்து ஐம்பது முறை மேற்படி தகவல் நகர்த்தல்களைச் செய்து கொண்டே இருக்கின்றன. இந்த முழு வரியைத் தொடக்கத்திலிருந்து படித்து முடித்துப் புரிந்து கொள்வதற்குள் பல கோடி Neuron Firing நிகழ்வுகள் நடந்து முடிந்திருக்கும். இப்படி பலமான வேலை நடந்துகொண்டே இருப்பதால்தான், உடல் எடையில் இரண்டு சதவிகிதமே இருக்கும் மூளை, 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் மற்றும் ஆக்சிஜனைத் தனது இயக்கத்திற்கென எடுத்துக்கொள்கிறது.

UNLOCK அறிவியல் 2.O - 12

மகிழ்ச்சி ஹார்மோன்கள்!

நியூரான்களின் வழி கடத்தப்படும் பல வகையான ஹார்மோன்கள் நமது உணர்வுகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. உதாரணத்திற்கு, இரவானதும் மெலெட்டோனின் (Melatonin) ஹார்மோன் சுரந்து தூக்க உணர்வைக் கொண்டு வந்து கொட்டாவி விட வைக்கிறது.

அதிருக்கட்டும், மகிழ்ச்சிக்கு அடிப்படையானவை என்ன ஹார்மோன்கள், அண்டன்?

ஆர்வம் புரிகிறது. சொல்கிறேன்.

டோபமின் (Dopamine): உத்வேகம் கொடுக்கும் ஹார்மோன். தட்டுப்பாடாகிப் போதிய அளவில் கிடைக்கவில்லை என்றால், மனச்சோர்வும் கவலையும் வந்து குடிகொள்ளும்.

செரட்டோனின் (Serotonin): நம்மைச் சுறுசுறுப்பாகவும் மலர்ச்சியாகவும் இருக்க வைக்கும் ஹார்மோன். நல்ல அனுபவங்களை அசை போடும்போதும் செரட்டோனின் சுரக்கிறது என்கிறார்கள்.

UNLOCK அறிவியல் 2.O - 12

ஆக்ஸிடோசின் (Oxytocin): மனித உறவுகள் வளமுடன் இருக்கும்போது சுரந்திடும் ஹார்மோன். உதாரணத்திற்கு, எதிர்பாராத பரிசுப்பொருளை ஒருவருக்குக் கொடுத்தால் அந்தச் செயல் தரும் ஆச்சரியத்தில் இது சுரக்கலாம். அணைத்தல் போன்ற மனித உடல்களின் தொடுதல்கள் மற்றொரு காரணம்.

எண்டார்பின் (Endorphin): வலியைக் குறைப்பதற்காக இயற்கை உருவாக்கியிருக்கும் மருந்து இந்த ஹார்மோன். ஓடுதல், நீண்ட தூர நடை போன்றவற்றைச் செய்து முடித்ததும் உடலில் புதுரத்தம் பாய்வது போலிருக்கும் உணர்வைக் கொடுக்கும் Runners High உணர்விற்குப் பின்னிருப்பது எண்டார்பின்.

இந்த ஹார்மோன்களை ஆரோக்யமான முறையில் உடல் அதிகம் பெற்றுக்கொள்ள வைப்பது எப்படி?

இடைக் குறிப்பு: `ஆரோக்யமான' என்பதை அடிக்கோடிட்டுச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. கொக்கெயின் (Cocaine) போன்ற போதைப்பொருள்கள் டோபமினையும், மதுப்பழக்கம் எண்டார்பினையும் அதிகம் சுரக்கும் என்றாலும், சிறிது நேரமே அந்த மகிழ்ச்சி நிலைக்கும். அதன்பின் நீண்ட காலத்துக்கு, நிரந்தரச் சிக்கல்களைக் கொண்டு வருபவை அவை.

பல நல்ல வழிகள் இருக்கின்றன!

புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் இருக்கும் அமினோ அமிலங்கள், டோபமின் பெருமளவில் சுரக்க உதவுகின்றன.மாமிசக் கொழுப்பு, வெண்ணெய் போன்ற நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) வகை உணவுகள் டோபமின் சுரப்பதைக் குறைக்கிறது. எனவே, இவற்றின் அளவைக் குறைக்கலாம்.தொடர்ந்த உடற்பயிற்சி அவசியம். எண்டார்பின் தொடர்ந்து சுரந்தபடி இருக்க இது தேவை.இரவு 7 - 8 மணி நேரத் தூக்கம். தரமற்ற தூக்கத்தில் இருப்பவர்களுக்கு டோபமின் சுரப்பது மிகவும் குறைவு எனப் பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் காட்டுகின்றன. பிடித்த இசையைக் கேட்கும்போது டோபமின் அதிகம் சுரக்கிறதாம்.

மேற்கண்ட ஹார்மோன்களை அதிகரிப்பது ஒருபுறமிருக்க, மூளைக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம், மகிழ்ச்சி நிலை அடைய இன்னொரு சாத்தியமும் இருக்கிறது.

நியூரான்கள் இப்படித் தங்களுக்குள் தொடர்ந்து சமிக்ஞைகளை அனுப்பிக்கொண்டிருப்பதால், உங்கள் தலைக்குள் ஒரு பிரத்யேகத் தொலைபேசி நிறுவனம் இயங்குவதாகச் சொன்னால் தவறில்லை. இந்த நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற வேகத்திற்கு ‘மூளை அலைகள்’ (Brain Waves) எனப் பெயர். மின்வேதியியல் உறுப்பாகச் செயல்படும் மூளை அலைகளின் அதிர்வெண் (Frequency), எண்ணிக்கைகளின் தன்மைக்கேற்ப மாறுபடும். தூங்கும்போது நான்கிற்கும் குறைவாக அதிர்வெண் இருக்கும் அலைகள், தீவிரப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது நாற்பது வரை உயர்கின்றன. இதற்கும் அதிகமான அளவில் மூளை அலைகள் அதிர்வெண்ணில் துடிக்கும் தருணம் ஒன்று உண்டு - அது, ஆழ்ந்த தியானம். இதில் கிடைக்கும் பலன்கள் அளப்பரியவை என்றாலும், இதைக் கற்று, சரிவரச் செய்வது கடினம்.

தியானம் முடியவில்லையா? முந்திரி, நிலக்கடலை, பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிட்டால் சற்றே உயர்வான அதிர்வெண் கொண்ட மூளை அலைகளை உருவாக்கிப் பயனடையலாம் என்கிறது மற்றொரு ஆராய்ச்சி.

மகிழ்ச்சியின் அறிவியல் அடிப்படைகள் வலுவாக இருக்கின்றன. அடுத்த கட்டமாக, மகிழ்ச்சி சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுவருகிறது.

நம்மைச் சுற்றி இருக்கும் உலகை அலசி எடுத்து, தகவல்களாக மாற்றி அவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும்படி செய்வதில் பெரும் முன்னேற்றம் அடைந்துவிட்டோம். நமக்குள் நடக்கும் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, வகைப்படுத்திப் பயனுள்ளதாக்கும் தொழில்நுட்பத்திற்கு Empathetic Technology எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்தப் பிரிவில் பல வகை ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

உடலில் அணிந்துகொள்ளும் வகையிலான Wearable சாதனங்கள் பரவலாக வரத் தொடங்கிவிட்டன. உடல் எடை, கொழுப்பின் அளவு, இதயத் துடிப்பு போன்றவற்றைத் துல்லியமாக அளக்கின்றன இந்தச் சாதனங்கள்.

ஆப்பிள் வாட்ச் உடலின் தன்மையை அறிந்து மூச்சுப் பயிற்சி செய், எழுந்து நில் என்று எளிதான ஆலோசனைகளை இப்போதே சொல்கிறது. மூச்சில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு, உடல் சூடு, ஏன்... ஹார்மோன்களையே அளந்து பார்த்து மகிழ்ச்சி சார்ந்த தகுந்த ஆலோசனைகளை வழங்கும் ஸ்மார்ட் சாதனங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

நிற்க!

தனிமனிதனின் மகிழ்ச்சிக்குறைவு, மன அழுத்தம் போன்ற குறைபாடுகளை எப்படி சரி செய்வது என்பதில் நாம் நிபுணத்துவம் பெற்றுவிட்டோம். உடல் சோதனைகள், உரையாடல்கள் மூலம் குறைபாடுகளை அளந்து பார்த்து, தேவையான ஆலோசனைகளைக் கொடுத்து மன ஆரோக்கியத்தை முன்னேற்றி விடலாம்.

ஆனால், ஒரு சமூகத்தின் மகிழ்ச்சியையோ, சோகத்தையோ எப்படி அளந்து பார்ப்பது? வெர்மாண்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் அட்டகாசமான பணி ஒன்றைச் செய்து சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆராய்ச்சிக்கு அவர்கள் எடுத்த தகவல் தளம் நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த ட்விட்டர். அவர்களது தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டிருப்பது இப்படி:

நாளொன்றிற்குப் பத்தாயிரம் ட்வீட்டுகளைப் பதிவேற்றிக்கொள்ள வேண்டும். செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பம் மூலமாக அவற்றில் எத்தனை மகிழ்ச்சியானவை, எத்தனை சோகமானவை என்பதை நிர்ணயிக்கவேண்டும்.அதிலிருந்து அந்த நாளின் ‘மொத்த மகிழ்ச்சி ஸ்கோர்’ என்ன என்பதைக் கணக்கிட வேண்டும். ஹெடானோமீட்டர் என்று பெயரிடப்பட்ட இந்தத் தொழில்நுட்பத்தின் தொடர்ந்த முடிவுகளை http://hedonometer.org/ என்ற தளத்தில் பதிவேற்றியபடி இருக்கிறார்கள். 2020 வருட டேட்டாவைப் பார்த்தால், பிப்ரவரியில் வந்த காதலர் தினத்தில் தலைதூக்கியிருந்த மகிழ்ச்சி எண், மார்ச்சில் கொரோனா லாக்டௌன் அமலுக்கு வந்ததும் கீழே விழுந்துவிட்டது. அதுபோலவே இந்த வருட புத்தாண்டு அன்று 6.1 என இருந்த மகிழ்ச்சி எண், சில நாள்களுக்குப் பின்னர் அமெரிக்க கேப்பிடல் கட்டடத்தில் நடந்த வன்முறை நாளில் 5.7 எனச் சரிந்துவிட்டது.

இந்த வாரத்துக் கட்டுரைக்கான ஆதாரங்கள், இணைப்புகள் https://unlock.digital/12 என்ற வலைப்பக்கத்தில் இருக்கின்றன. உங்கள் கருத்துகளை +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலம் அனுப்புங்கள்.

- Logging in...