Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 9

UNLOCK அறிவியல் 2.O
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல் 2.O

- அண்டன் பிரகாஷ்

EARTH SENSE - BACK TO THE ROOTS

‘முன்னோடியில்லாத காலத்தில் நுழைந்திருக்கிறோம்’ -இந்த வருட மார்ச் வாக்கில் லாக் டௌன் பெருவாரியாக அமலான நாள்களில், உலக நாடுகளின் தலைவர்களில் தொடங்கி, வணிக நிறுவனங்களின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் வரை பலரது அறிக்கைகளும் இந்த வரியில்தான் தொடங்கின.

எதிர்காலம் பற்றிய இனம்புரியாத கலக்கம் இருந்ததை ட்வீட்டுகளிலிருந்து டிக் டாக் வீடியோக்கள் வரை வெளிச்சம் போட்டுக் காட்டின. மனித வரலாற்றில் மறக்காமல் இடம் பெறப்போகிற 2020 முடிவிற்கு வரும் தருணத்தில், கொரோனாத் தடுப்பூசியைத் தாண்டிய காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிவியல் / தொழில்நுட்ப உலகினூடாகக் கால எந்திரம் ஒன்றில் பயணித்துப் பார்க்கலாமா?

UNLOCK அறிவியல் 2.O - 9

பெரும் டெக் நிறுவனங்களுக்கு (BigTech) நெருக்கடி வருகிறது!

அடுத்த வருடங்களில் பெரும் டெக் நிறுவனங்கள் சிலவற்றிற்கு என்ன நேரப்போகிறது என்பதைப் பார்க்கும் முன்னால், ஒரு குயிக் ப்ளாஷ் பேக்:

டெக் உலகின் நிகழ்வுகளை ஆழ்ந்து படிப்பவர்களுக்கு 90களின் இறுதியில் மைக்ரோசாப்ட் ஒரு மாபெரும் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொண்டது நினைவிருக்கலாம். 90களின் தொடக்கத்தில் இணையம் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரத்தில், கணினிகளில் இருந்து இணையத்திற்குச் செல்லத் தேவைப்பட்ட பிரவுசர் மென்பொருளாக நெட்ஸ்கேப் பிரபலம். அதற்குப் போட்டியாக அவசர கோலத்தில் தங்களது பிரவுசர் ஒன்றைத் தயாரிக்கும்படி கட்டளையிட்டார் பில் கேட்ஸ். ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’ எனப் பெயரிடப்பட்ட அந்த மென்பொருள் மைக்ரோசாப்டின் விண்டோஸ் கணினிகளில் ஒருங்கிணைந்த பகுதியானது. அதற்குப் பதிலாக, நெட்ஸ்கேப் பிரவுசரைப் பதிவேற்ற முற்பட்டால், விண்டோஸ் முரண்டு பிடிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. விளைவு எதிர்பார்த்ததுதான். போட்டியாக இருந்த நெட்ஸ்கேப்பைத் தள்ளிவிட்டு எக்ஸ்ப்ளோரர் முதலிடம் பிடித்தது. ஆனால், ‘இது நியாயமற்றது’ என மைக்ரோசாப்ட் மீது அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனமே பல துண்டுகளாக உடைக்கப்படும் நிலை வந்தது. மயிரிழையில் உயிர்பிழைத்து “நாங்கள் எங்கள் வழிகளை மாற்றிக் கொள்கிறோம்; எங்களை மேற்பார்வை செய்யும் குழுவிற்கு ஆதரவளிக்கிறோம்” என்றெல்லாம் சம்மதித்தது மைக்ரோசாப்ட்.

UNLOCK அறிவியல் 2.O - 9

நிகழ்காலத்துக்கு வரலாம். இருபது வருடங்கள் கழித்து, பல நாட்டு அரசாங்கங்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் இப்போது மாட்டிக்கொண்டிருக்கின்றன பேஸ்புக்கும், கூகுளும்.

முதலில் பேஸ்புக்:

“தொடங்கப்பட்ட நிலையில் இருக்கும் நிறுவனங்களுடன் (Startups) போட்டி போடுவதைவிட அவற்றை வாங்கிவிடுவது நல்லது” என, தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு மார்க் சக்கர்பெர்க் எழுதிய இ-மெயில் அமெரிக்க அரசு தாக்கல் செய்திருக்கும் அத்தாட்சிகளில் ஒன்று. இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை வாங்கிய நாளின் களிப்பில் எழுதப்பட்ட அந்த 2008-ம் வருட இ-மெயில், 12 வருடங்களுக்குப் பின்னர், திரும்பி வந்த கரடியாகத் தன்னைக் கடிக்கும் என்பதைக் கனவிலும் நினைத்திருக்க மாட்டார் பேஸ்புக் நிறுவனர். இன்ஸ்டாகிராமிற்குப் பின்னர் பெருந்தொகை கொடுத்து வாட்ஸப் வாங்கப்பட்டதையும் சந்தேகமாகப் பார்க்கிறது அரசு. போட்டி போடுவதற்குப் பதிலாக போட்டியாக வரச் சாத்தியமான நிறுவனங்களைப் பணத்தை ஊற்றிக் கரைத்துவிடும் உத்தி, சந்தைப் பொருளாதாரத்தின் எதிரி. எனவே, பேஸ்புக்கைத் துண்டாக்க வேண்டும் என வாதங்களை வைக்கத் தயாராகிறது அரசு. வழக்கில் வெற்றிபெற்றால், பேஸ்புக்கிலிருந்து இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் தனித்தனி நிறுவனங்களாக்கப்பட வாய்ப்பு அதிகம்.

கூகுளின் கதை வேறு:

‘தேடல் தொழில்நுட்பத்தில் ஏகபோக உரிமையை சட்டத்திற்கு விரோதமாக வைத்திருக்கிறது கூகுள்’ என்பது அரசுகளின் பொதுவான குற்றச்சாட்டு. உலகின் தகவல்களைத் தான் மட்டுமே தொகுத்துவைத்து இணையத்தின் நுழைவுவாயில்போல அமர்ந்துகொண்டு மற்றவர்கள் நுழைந்துவிடாமல் தடுக்கிறது; இதற்காகவே, ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடன் பிரத்யேக ஒப்பந்தங்கள் (exclusive contracts) செய்துகொள்கிறது எனக் குற்றச்சாட்டு விரிகிறது. இந்திய அரசின் போட்டி கண்காணிப்பு ஆணையமும் கூகுள் தனது ஆண்ட்ராய்டு அலைபேசிகளில் தங்களது கூகுள் பே (Google Pay) வசதியை மட்டுமே கொண்டிருப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஐரோப்பாவின் பல நாடுகளும் இதுபோன்ற வழக்குகளைத் தயாரித்தபடி இருக்கின்றன.

பை தி வே, பயனற்ற ஒரு இடைச்செய்தி: அமெரிக்க அரசு தொடர்ந்திருக்கும் வழக்கில் நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதி அமீத் மேத்தா, கூகுளின் CEO சுந்தர் பிச்சை போலவே இந்தியாவில் பிறந்தவர்.

பேஸ்புக், கூகுள் இரண்டும் டிஜிட்டல் விளம்பர வணிகத்தில் இருப்பதால் தொழில்முறை எதிரிகள். “உனக்கும் அரசால் பிரச்னை; எனக்கும் அதே பிரச்னை. நாம் இருவரும் சேர்ந்துகொள்ளலாம்” என்ற ரீதியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை இருவரும் போட்டிருக்கிறார்கள். இது இருவருக்கும் பயனளிக்கிறதா என்பது அடுத்த வருடத்தில் தெரிய வரும்.

பேட்டரித் தொழில்நுட்பத்தில் புதுமையான உச்சங்கள் எட்டப்படும்.

சார்ஜ் செய்யும் நேரம் தவிர்த்து, அலைபேசி நம் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் அவசிய உறுப்பாகவே மாறிவிட்டது. எங்கும் சார்ஜரைத் தூக்கிக்கொண்டே அலைகிறோம். காரணம், அலைபேசி பேட்டரித் தொழில்நுட்பத்தில் பல ஆண்டுகளாகியும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இல்லை.

வேகமாக சார்ஜ் ஆக வேண்டும்; பல்லாயிரம் முறை சார்ஜ் செய்தாலும் பேட்டரியின் திறன் குறையக்கூடாது; சூழலை மாசுபடுத்தும் மூலப்பொருள்கள் குறைவாக இருக்க வேண்டும்; அளவில் சிறிதாக இருக்க வேண்டும் என்பதோடு, பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அதிக திறன் கொண்டதாக, சாம்சங் நிறுவனம் சொல்லி, சில வருடங்களுக்கு முன்னால் வெளியிட்ட நோட் 7 அலைபேசியின் பேட்டரி சூடாகி வெடிக்கும் சம்பவங்கள் காரணமாக, அந்த சாதனமே தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

அலைபேசி உள்ளிட்ட மொபைல் சாதனங்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி லித்தியம்-ஐயான் வகையறா. இவற்றில் பொதுவாக கோபால்ட் உலோகம் கலந்திருக்கும். கோபால்ட் சற்றே அரிது என்பதால், அதன் விலை அதிகம். அதற்கு மாற்றாக நிக்கல் மட்டுமே பயன்படுத்தி பேட்டரிகள் செய்யப்படும் ஆராய்ச்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தெரிகிறது.

பேட்டரியின் அடிப்படைத் திறனை முன்னேற்றுவதன் மூலம் விரைவில் சார்ஜ் செய்யப்படும் அலைபேசியைப் பல நாள்கள் பயன்படுத்த முடியும்.

அடுத்த எதிர்பார்ப்பு - கம்பியில்லா சார்ஜிங். சமீபத்திய மாடல் அலைபேசிகளில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கிறது. சீ என உச்சரிக்கப்படும் இந்த Qi தொழில்நுட்பத்தை முழுக்க வயர்லெஸ் எனச் சொல்ல இயலாது. காரணம், மின்னிணைப்பு கொண்ட தகட்டுடன் ஒட்டியிருப்பதன் மூலமாக மின்காந்தப்புலம் DC மின்சாரமாக மாற்றப்பட்டு அலைபேசியில் இருக்கும் பேட்டரி சார்ஜ் செய்யப்படுகிறது. இந்தப் பிரிவிலும் பல வருடங்களாக நடத்தப்படும் ஆராய்ச்சிகள் வணிக வடிவிற்கு வரும் எல்லையைத் தொடுகின்றன.

பல்வேறு ஆராய்ச்சிகள் பேட்டரியை மேம்படுத்துவதில் நடக்கின்றன. இவற்றில், பில்-மெலிண்டா பவுண்டேஷனின் நிதி ஆதரவுடன் பிரிஸ்டல் ரொபாட்டிக்ஸ் நிறுவனம் நடத்திவரும் ஆராய்ச்சியைக் குறிப்பிட்டேயாக வேண்டும். நுண்ணுயிர் எரிபொருள் செல்களை உருவாக்கி அதிலிருந்து மின்சாரம் பெற்றுக் கொள்வதுதான் இந்த ஆராய்ச்சியின் குறிக்கோள். இந்த செல்களை உருவாக்க அவர்கள் பயன்படுத்துவது - மனித சிறுநீர். நுண்ணுயிர்கள் (Micro Organisms) மூலம் சிறுநீரில் இருக்கும் அடிப்படை சத்துக்களைப் பகுத்தெடுத்து மின்சாரம் தயாரிக்கப்படும் தொழில்நுட்பம், அலைபேசிகளை சார்ஜ் செய்யும் அளவிற்கு இருக்கிறது. பயணம் செய்யும்போது சார்ஜர்களைத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டியதில்லை; மாறாக அலைபேசியில் சார்ஜ் குறைகிறது என்றால், தண்ணீர் சற்று அதிகம் குடித்துத் தயாராகிவிடலாம்.

இந்தத் தொழில்நுட்பத்தின் வெள்ளையறிக்கை மற்றும் விளக்க யூடியூப் காணொலி போன்றவை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பு வலைப்பக்கத்தில் இருக்கின்றன.

விவசாயத் தொழில்நுட்பம் (AgTech) பரவலாகும்.

தொழில்நுட்பத்தின் வலிமையை விவசாயத்தில் பயன்படுத்தும் பிரிவை AgTech என்கிறார்கள். கடந்த பல வருடங்களாக இந்தப் பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்குத் தொழில் முதலீடு (Venture Capital) கணிசமாகச் சென்று கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

2050-ல் உலகின் மக்கள்தொகை ஆயிரம் கோடியைத் தொட்டுவிடும். இவர்களது உணவுத்தேவையை எப்படிச் சந்திக்கப் போகிறோம் என்ற நோக்கில் நடத்தப்படும் இந்த முயற்சிகள், கொரானா காலத்தில் தரமான உணவின் தேவை பரவலாகப் பேசப்படுவதால் இன்னும் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன.

UNLOCK அறிவியல் 2.O - 9

உதாரணத்திற்கு இரண்டு தொழில் முன்னெடுப்புகளைப் பகிர்கிறேன்.

(1) பயிர்களின் விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என்றால், அது வளர்ந்து கொண்டிருக்கும்போது, அதன் நிறம், நீர்த்தன்மை, உயரம் உள்ளிட்ட பல தன்மைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இப்படித் திரட்டப்படும் தகவல்கள் மூலமாகத்தான் வலிமையான ஒட்டுப்பயிர் பற்றிய முடிவுகளையும் எடுக்கிறார்கள். மனித முயற்சியால் இந்தத் தகவல்களை மிகவும் மெதுவாகவே சேகரிக்க முடியும். பிழைகள் நேரவும் வாய்ப்புகள் அதிகம்.

Earthsense என்ற நிறுவனம் இதற்கான ஸ்பெஷல் ரோபாட்டுகளைத் தயாரிக்கிறது. இது பயிர்களின் ஊடே நகர்ந்து தகவல்களைத் திரட்டி, அவற்றை அலசி, தெளிவான ஆலோசனைகளை உடனுக்குடன் கொடுக்கிறது.

(2) நாமே வளர்த்த காய்கறி, கீரை, பழங்களை உண்பதென்பது அனைவருக்கும் எளிதல்ல. குறிப்பாக நகரங்களில் வாழ்பவர்களுக்கு இது மிகவும் கடினம். அதைச் சாத்தியமாக்குகிறது BackToTheRoots. எதை வளர்க்க வேண்டுமென விரும்புகிறீர்களோ, அதை ஆர்டர் செய்தால், விதை, மண் எனத் தேவையான அனைத்தும் எளிய விவரணைகளைக் கொண்ட கையேட்டுடன் வந்துவிடுகிறது. அதை வைத்து தேவைக்கேற்றபடி தண்ணீர் ஊற்றி, வளர்வதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வீட்டிற்குள்ளேயே இப்படித் தோட்டம் வைத்துக் கொள்வதைச் சாத்தியமாக்கும் இதுபோன்ற முயற்சிகளின் வணிக வடிவங்கள் வரும் வருடங்களில் இன்னும் அதிகம் வரும்.

இந்த கட்டுரைக்கான ஆதாரங்கள், இணைப்புகள் https://unlock.digital/09 என்ற வலைப்பக்கத்தில் இருக்கின்றன. உங்களது கருத்துக்களை விகடன் டாட் காமில் எழுதலாம். அல்லது எழுத்தாகவோ, ஆடியோவாகவோ +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலம் அனுப்பலாம்.

பின்குறிப்பு: சென்ற வாரக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த இணைப்பு பக்க முகவரி தவறாக அச்சாகிவிட்டது. சரியான பக்கம் - https://unlock.digital/08.

- Logging in...