
அண்டன் பிரகாஷ்
இந்தத் தொடருக்கு வாட்ஸப் வழியாகக் கருத்துகள் தெரிவிக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்! சென்ற வாரக் கட்டுரையில் மரபணு ஆராய்ச்சி பற்றிய தகவல்கள், பலரின் ஆர்வத்தைத் தூண்டியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக, தூத்துக்குடியிலிருந்து வந்திருக்கும் ஆடியோப் பதிவு இப்படி ஒரு கேள்வி எழுப்புகிறது - `திறமைக்கும் வெற்றிக்கும் காரணம் மரபணுக்களா, இல்லை, வளரும் சூழலா?’
இடைக்குறிப்பு: கட்டுரைக்கு சம்பந்தமான வலைப்பக்கங்கள், காணொலிகள் இன்னபிற உடன் பெறப்படும் பின்னூட்டங்களும் இணைந்திருக்கின்றன. மேற்பட்ட வாசகரின் ஆடியோவை நேரடியாகக் கேட்க, கட்டுரையின் இறுதிப்பகுதியில் இருக்கும் பிட்லி உரலிக்குச் செல்லுங்கள்.
திறமையின் அறிவியலை இந்த வாரத்தில் ஆழமாக அலசலாம்.
பிரபல எழுத்தாளர் மால்கம் க்ளாட்வெல் எழுதிய நூல்களில் ‘Outliers’ பிரசித்தமானது. கணிதத்தில் புள்ளியியல் அடிப்படை பயின்றவர்களுக்கு இந்தப் பதம் அத்துப்படி என்பதால், வரும் பாரா அவர்களுக்குத் தேவையில்லை. ஸ்பைடர்மேன் ஸ்டைலில் கை நீட்டி சிலந்திவலை வீசி அடுத்த பாராவுக்குச் சென்றுவிடுங்கள்.
புள்ளியியல் ஆராய்ச்சிக்குத் தேவைப்படுவது Samples எனப்படும் தகவல் துளிகள். உதாரணத்திற்கு அமேசான் ப்ரைமில் வீடியோ பார்ப்பவர்களின் வயது என்பதைத் தகவல் துளிகளாகத் திரட்டி அதை 1 - 100 வயது என இருக்கும் சார்ட்டில் பதிந்தால் 5 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 95 வயதிற்கு அதிகமானவர்களின் தகவல் புள்ளிகள் குறைவான அளவில் தள்ளியே இருக்கும், இல்லையா? இப்படி தூரத்தில் விலகியிருக்கும் புள்ளிகளுக்கு Outliers என்று பெயர். உலகில் இருக்கும் வங்கிக்கணக்குகளின் இருப்பு பேலன்ஸுகளை அதேபோலப் பதிவெடுத்தால், அமேசானின் ஜெப் பீசோஸ், டெஸ்லாவின் எலான் மஸ்க் போன்றோரின் வங்கிக் கணக்குத் தொகைகள் நமது இருப்பு அளவுகளைவிட மிக அதிக அளவில் எகிறி நிற்கும். இப்படி எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், திறமை மற்றும் வெற்றி என்பதை அளவிட்டால், அதில் தூரப்புள்ளி நபர்கள் இருப்பார்கள்.

இவர்களது வெற்றிக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதை அலசிய மால்கம் மேற்கண்ட நூலில் ஒரு தியரியை முன்வைத்தார். ‘விரும்பும் எதை எடுத்துக்கொண்டாலும் 10,000 மணி நேரம் பயிற்சி செய்தால், அதில் வித்தகர் ஆகிவிடலாம்’ என்பதுதான் அந்த தியரி. பிரபல இசைக்குழுவான பீட்டில்ஸில் தொடங்கி, மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ் வரை சாதித்தவர்களின் பழக்கங்களை இதற்கு அடிப்படையாக வைக்கிறார் மால்கம். Outliers நூல் வெளிவந்த காலத்தில், பரபரப்பாக விற்பனையானது. திறமைக்குப் பின்னிருக்கும் சூட்சமத்தை எளிமையாக விளக்க முடிகிறது என்பதால் நூலில் இருந்த இந்தப் பத்தாயிரம் மணி நேர தியரி வெகுவாகச் சிலாகிக்கப்பட்டது.
ஆனால், விரைவாக அறிவியல் சமூகத்திலிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. இலக்கே இல்லாமல் அப்படிப் பத்தாயிரம் மணி நேரம் பயிற்சி செய்வதெல்லாம் பயனளிக்காது என்ற வாதங்கள் அறிவியல் சஞ்சிகைகளில் ஆராய்ச்சி ஆய்வறிக்கைகளாக வெளிவந்தன. “அது வந்துங்ணா, நான் சொல்ல வந்தது என்னான்னா, 10,000 மணி நேரம் என்பது சராசரி. சிலருக்குக் கூடும்; சிலருக்குக் குறையும்” என வரும் வருடங்களில் தனது தியரியிலிருந்து மால்கம் சற்றே பேக் பெடல் அடிக்க நேர்ந்தது.
`அப்படியானால் பிறப்பின் மரபணுக்கள்தான் நிபுணத்துவம் வருவதற்கு காரணமா, அண்டன்?’ என்ற கேள்வி வரலாம்.
சுருக் பதில் - இல்லை!
முதலில் அறிவாற்றல் (Intelligence), நிபுணத்துவம் (Expertise) இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். மேதைமைக்கான குறிப்பிட்ட மரபணு (Genius Gene) என்று ஒன்று இல்லை என்பது அறிவியலாளர்களால் பல்லாண்டுகளுக்கு முன்பே ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும், அடிப்படை அறிவாற்றலுக்கும், மரபணுக்களுக்கும் இருக்கும் தொடர்பு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை அறிவாற்றலை எடைபோட அறிவாற்றல் அளவீடு (Intelligence Quotient, சுருக்கமாக IQ) என்ற மதிப்பீட்டு முறை இருப்பது தெரிந்திருக்கும். ஒருவரது பிறப்பு வயதிற்கும், மன வளர்ச்சி வயதிற்குமான விகித எண் அது. பை தி வே, “என்னுடைய IQ எண்ணைத் தெரிந்து கொள்ளப்போகிறேன்” என்றபடி கூகுள் பக்கம் சென்று பார்த்தால், ஏகப்பட்ட டுபாக்கூர் தளங்கள் பதிலில் வரும். அவற்றில் நேரத்தையோ, பணத்தையோ விரயம் செய்ய வேண்டாம். தகுதிபெற்ற உளவியல் நிபுணர்களாலேயே லேட்டஸ்ட் IQ தேர்வுகளைக் கொடுக்க முடியும்.
தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் தங்கள் சொந்தப் பெற்றோருக்கான மரபணு சார்ந்த IQ எண் கொண்டிருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால், விரும்பும் துறையில் வெற்றிபெற, அறிவாற்றலைத் தாண்டி அதில் நிபுணத்துவம் பெற்றிருப்பது அவசியம். அது சூழல் சார்ந்தும், தனி மனித முயற்சியில் வரும் பயிற்சியினாலும் மட்டுமே வருகிறது.

இது சாதாரணப் பயிற்சி அல்ல; ஆழ்ந்த/தீர்க்கமான பயிற்சி (Deliberate Practice). மரபணுவினால் வரும் அறிவாற்றலுடன் இந்த ஆழ்தீர்க்கப் பயிற்சி இணைந்துகொண்டால், விளைவு உயரிய நிபுணத்துவமாக உருவாகிறது என்பதை விளக்க ‘மத்தேயு விளைவு’ (Matthew Effect) என்ற விதி பயன்படுத்தப்படுகிறது. ‘உள்ளவனுக்கு இன்னும் அதிகமாகக் கொடுக்கப்படும்’ என விவிலியத்தில் வரும் வாக்கியத்தை நினைவுபடுத்துவதாக இருப்பதால், அதை எழுதிய மத்தேயுவின் பெயரை இந்த விதிக்குப் பொருத்தமானதாக வைத்தார் சமூகவியல் வல்லுநர் ராபர்ட் மெர்ட்டன்.
சரி, `என்னதான் இந்த ஆழ் தீர்க்கப் பயிற்சி? அதை எப்படிச் செய்வது? அதைப் பின்பற்றும்போது என்ன நடக்கிறது?’ எனப் பல கேள்விகள் எழலாம். கூர்கவனம் கொண்ட, பின்னூட்டத்தை அடிப்படையாகக் கொண்ட மீண்டும் மீண்டும் செய்து பார்த்து முன்னேற்றம் காணும் ஒரு பயிற்சி முறை இது.
எளிதான ஓர் உதாரணத்தை முதலில் பார்க்கலாம். ‘உலகத் தரமான சமையல் கலைஞராக வர வேண்டும்’ என்ற இலக்கை அடைய ஒருவர் விரும்புகிறார். சமையல் பற்றிய அடிப்படைகளைக் கற்றறிந்த பின்னர் தனது நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு முதலில் சமையல் செய்து கொடுத்து அவர்களது பின்னூட்டத்தைப் பெறுகிறார். பின்னர் சிறிய உணவகத்தில் வேறொரு சமையல் கலைஞருக்கு உதவியாளராக இருந்து வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களைப் பெற்றுக்கொண்டு, தனது திறனை மேம்படுத்திக்கொண்டே போகமுடியும். இப்படிப் பின்னூட்டம் பெற்று அதை மீண்டும் புகுத்த, என்ன மசாலா வகையை எந்த எண்ணெயில் சேர்த்து, எவ்வளவு வெப்பத்தில் என சமையலின் சூட்சுமம் அடுக்கடுக்காக மூளையில் சேகரமாகிவிடும்.
வேறு சில உதாரணங்கள்:
முறையாக ஓவியம் பயிலாத நீங்கள் ஓவியராக வேண்டும் என விரும்பினால் என்ன செய்வீர்கள்? ஆழ் தீர்க்கப் பயிற்சி முறைப்படி, புகழ்பெற்ற ஓவியங்களைப் பிரதி எடுப்பதில் ஆரம்பிக்கலாம். அசலுடன் பிரதியை ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, மீண்டும் வரைய வேண்டும். அசலுக்கும் பிரதிக்கும் துளியும் வேற்றுமை இல்லை என்ற நிலை வரும்போது ஓவியம் வரைவதன் சூட்சுமம் மூளைக்குள் பதிந்திருக்கும். அதற்குப் பின்னர் உங்களது சொந்த ஓவியங்களைத் தீட்டுவது எளிதாகிவிடும்.
சரியான உச்சரிப்பில் ஆங்கில வார்த்தைகளைப் பேச நினைக்கிறீர்கள். என்ன செய்யலாம்? முதலில் 10 வார்த்தைகளில் ஆரம்பியுங்கள். கூகுளில் என்ன வார்த்தையோ அதை எழுதி அதனுடன் `how to pronounce’ என்பதைச் சேர்த்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, Neurology என்பதற்கு கூகுளில் `Neurology how to pronounce’ என்பதைக் கொடுங்கள். அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் உச்சரிப்பு வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அது எப்படி உச்சரிக்கிறது என்பதை முதலில் கேட்டுக் கொண்டபின்னர் `Practice’ என்பதை அழுத்தி நீங்கள் உங்களது உச்சரிப்பைப் பதிவு செய்யுங்கள். தவறாகச் சொன்னால், கூகுள் இடித்துரைக்கும். சரியாகச் சொல்லி அதனிடம் ‘Good job!’ வாங்கும் வரை அந்த வார்த்தையை மீண்டும், மீண்டும், மீண்டும் சொல்லுங்கள். 10 வார்த்தைகள் முடிந்ததா? அடுத்து 20 வார்த்தைகளை எடுத்து இதே பயிற்சியை ஆரம்பியுங்கள். 2,000 வார்த்தைகள் முடிந்தபின்னர் மீண்டும் ஒரு முறை முதல் வார்த்தையில் தொடங்கி உச்சரிப்பைப் பதிவு செய்து மதிப்பீடு வாங்கிக் கொள்ளுங்கள். வார்த்தைகளின் உச்சரிப்பு சூட்சுமம் உங்கள் மூளைக்குள் சேகரமாகிவிடும்.

இதற்கு மேல் அடுத்த அடி வைத்து, மேடைப் பேச்சில் வல்லவராக விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்ளலாம். சிறப்பாகப் பேசும் சிலரது பேச்சுகளை யூடியூபில் பார்த்தபின்னர், உங்களது பேச்சைத் தயாரித்துக்கொள்ளுங்கள். அலைபேசி கேமராவிற்கு முன் நின்று பேச்சைப் பதிவு செய்து, அதில் எங்கெல்லாம் தவறான உச்சரிப்பு, தேவையில்லாத இடைவெளி, பொருந்தாத உடல்மொழி போன்ற தப்பு செய்கிறீர்கள் என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். மீண்டும் ரெகார்டு செய்யுங்கள். இதை தேவையானவரை ரிபீட் செய்து குறையே காண முடியாதது வரும் வரை பயிற்சி செய்து கொண்டே இருந்தால், மேடைப் பேச்சுக்கான சூட்சுமம் உங்கள் மூளையில் பதிந்துவிடும்.
மேற்கண்ட உதாரணங்களில் ‘சூட்சுமம்’ என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் வந்ததற்குக் காரணம் உண்டு. ஆழ் தீர்க்கப் பயிற்சி செய்கையில் நமது மூளையில் செய்யும் செயல் பற்றிய மனச் சித்திரம்தான் (Mental Representation) அந்த சூட்சுமம். அது நீண்ட கால சேமிப்பில் (Long term memory) சேர்ந்துவிடுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் துறையில் நிபுணத்துவம் வளர்ந்து நம்மை வெற்றிபெற வைக்க இந்த மனச் சித்திரம் மிகவும் அவசியம். இதை எப்படி சாதிக்க வைக்கிறது உடற்கூறு அறிவியல்?
ஆக்ஸான் (Axon) என்பதை நமது நரம்பியல் மண்டலத்தை இணைக்கும் வயர்கள் என்று சொன்னால், அதற்கு மேல் போடப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக் போல பாதுகாப்பு தருவது மைலின் (Myelin) எனப்படும் ஒரு கொழுப்பு வகை. குறிப்பிட்ட ஆக்ஸான்களின் இணைப்புகளுக்கு அதிக மைலின் இருந்தால் அவற்றிற்கிடையே நியூரான்கள் வேகமாகச் செல்லும். ஆழ் தீர்க்கப் பயிற்சியில் ஈடுபட்டு நிபுணத்துவம் பெறும் இசைக்கலைஞர்களின் மூளை ஸ்கேனிங் செய்யப்படுகையில் மைலின் அளவு குறிப்பிட்ட இடங்களில் அதிகமாக இருப்பதும், அந்த இடங்களே அவர்களுடைய கை விரல்கள், குரல் வளை போன்ற அவர்களது இசைப்பயிற்சியின் போது இயக்கும் மண்டலங்கள் என்பதும் தெளிவாகத் தெரிய வந்திருக்கிறது. சில வகையான நோய்கள் மற்றும் வயதின் காரணமாக மைலின் அளவு குறையும்போது நிபுணத்துவமும் குறைய ஆரம்பிக்கிறது. இதை மைலின் இழப்பு (Demyelination) என்கிறார்கள்.
அறிவியல், இசை, பொருளாதாரம்; ஏன், உடல் வளம் சார்ந்த விளையாட்டு என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் ஆழ் தீர்க்கப் பயிற்சியே நிபுணத்துவத்தையும் அது சார்ந்த வெற்றியையும் கொடுக்கிறது என்பது பலதரப்பு ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
Bottomline: வெற்றியின் அறிவியலை unlock செய்தால் கிடைக்கும் தீர்ப்பு - பிறப்பைவிட பயிற்சியே படுமுக்கியம்.
இந்த வாரக் கட்டுரைக்கான மேற்கோள் வலைப்பக்கங்கள் மற்றும் விவரங்களின் இணைப்பு வலைப்பக்கம் https://bit.ly/UnlockSeries06. வாட்ஸப் மூலம் கருத்துகளைத் தெரிவிக்க +1 628-240-4194 என்ற எண்ணைப் பயன்படுத்துங்கள்.
- Logging in...