
அண்டன் பிரகாஷ்
முகநூல், ட்விட்டர், வாட்ஸப், டிக்டாக் என சமூக வலைதளங்கள் மனிதர்களை இணைத்து வைக்க, அவர்கள் கதைப்பதும், படங்கள் பகிர்வதும் என நாளின் 24 மணி நேரத்தையும் பயன்படுத்தி இணையத்தைத் தகவல்களால் நிறைக்கிறார்கள். சென்ற வருடத்தின் கடைசிப் புள்ளிவிவரத்தின்படி, நாளொன்றிற்கு 30 கோடிப் படங்கள் முகநூலில் பதிவேற்றப்பட்டு, 100 கோடிச் செய்திகள் வாட்ஸப் மூலம் அனுப்பப்படுகிறதாம். வேகமாக செய்தியைப் பரப்பலாம் என்பதால் வதந்திகள் போன்றவை பரப்பப்படும் அபாயம் ஒருபுறமிருந்தாலும், மனித இணைப்பு என்பதன் வலிமையைப் பயன்படுத்தி நடக்கும் நல்ல சில நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அதில், சமீபத்தில் நான் பார்த்த ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
மருத்துவரான லீசா சாண்டர்ஸ் நோய்ப் பரிசோதனையியல் (Diagnostics) நிபுணர். அவரிடம் ஆலோசனைக்காக வந்த நோயாளிகளுக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய மிகவும் கடினமாக இருந்தால் அவர்களை மற்ற மருத்துவர்களிடம் அனுப்புவதுண்டு. அவர்களாலும் கண்டறியமுடியாத காரணங்களை எப்படித் தீர்ப்பது? மருத்துவராவதற்கு முன்னால் இதழியலாளராக இருந்த லீசா ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழில் புகழ், இணையத்தின் வீச்சு, நோயாளிகளின் ஒப்புதல் - இந்த மூன்றையும் இணைத்து ‘Diagnosis’ என்ற பெயரில் தொடர் எழுதுகிறார். தீர்க்க முடியாத சிக்கல் இருக்கும் நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களது விவரங்களையும், அறிகுறிகளையும் தெளிவாகக் கொடுத்து, உலகில் எங்கிருந்தாலும் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அதுபற்றியும், அதற்கான சிகிச்சைகள் ஏதேனும் இருந்தால் அதுபற்றியும் தெரிவிக்கும்படி கேட்டு crowdsourcing முறையில் செய்யும் முயற்சி பெரும்பலனைக் கொடுத்திருக்கிறது. முடிந்தால், நியூயார்க் டைம்ஸ் இதழின் கட்டுரைகளைப் படியுங்கள் அல்லது அதே பெயரில் வெளிவந்திருக்கும் நெட்ப்ளிக்ஸ் டாக்குசீரிஸைப் பாருங்கள்.
மருத்துவ நிகழ்வில் ஆரம்பித்ததால், இந்த வாரத்தில் அதில் நடந்துகொண்டிருக்கும் முயற்சிகளையும் வளர்ச்சிகளையும் பார்க்கலாம்.

கணினிப் பயன்பாட்டாளர்களுக்கு - படி (Read), எழுது (Write), செயலாற்று (Execute) என்ற அடிப்படை வார்த்தைகள் நன்றாகத் தெரிந்திருக்கும். கோப்பு ஒன்றில் எழுதப்பட்டிருப்பவற்றைப் படிக்க மட்டும் அனுமதி இருந்தால் படிக்க மட்டுமே முடியும். அதற்கு அடுத்த நிலையான எழுதும் அனுமதி கொடுக்கப்பட்டால், அந்தக் கோப்பில் எழுத முடியும். அதைத்தாண்டி செயலாற்றும் அனுமதி கொடுக்கப்பட்டால், அதில் எழுதி வைத்திருப்பதை வரிசையாக கணினி செயலாற்ற முடியும்.
உங்களிடம் கணினி இருந்தால், ஏதோ ஒரு கோப்பின் பெயர்மீது அழுத்தி ‘Properties’ என்பதைப் பாருங்கள் (சந்தேகமிருந்தால், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்தக்கட்டுரைக்கான இணைப்பு வலைப்பக்கத்தில் நான் காட்டியிருக்கும் வீடியோவைப் பாருங்கள்).
பல துறைகளில் மேற்படி படி/எழுது/செயலாற்று என்பது பல விதங்களில் இருப்பது தெரிய வரும். உதாரணத்திற்கு, அகழ்வாராய்ச்சியை எடுத்துக்கொண்டால், அதைப் படிக்க மட்டுமே முடியும். கண்டுபிடித்த கல்வெட்டில் எழுத உங்களுக்கு உரிமையில்லை. மருத்துவத்தில் நோய் நாடி, நோய் முதல் நாடி படிக்க முடியும். மருந்துகளைக் கொடுப்பதன் மூலம் சரிசெய்து செயலாக்க வைக்கமுடியும்; ஆனால், கண்டுபிடித்ததைத் திருத்தி எழுத அனுமதியில்லை.
இன்னும் ஒரு படி மேலே சென்று பார்த்தால் உயிரியலில் இதுபோன்ற குறுகிய நெறிமுறைதான் பெரும்பாலும் இருந்துவந்திருக்கிறது. ஆராய்ச்சிகள் செய்து அதன் முடிவுகளை ஆராய்ந்து, சிறிய மாற்றங்களைச் செய்து அவை செயல்படுகிறதா என்பதைப் பார்க்கும் Trial & Error எனப்படும் `பரிசோதனையின் பிழைகளைக் களைதல்’ சுழற்சிதான் ஆண்டாண்டுகளாகச் செய்யப்பட்டு வந்தது. அதில் முக்கிய மைல்கல் நிகழ்வு - 1990-ல் தொடங்கப்பட்ட ஒரு மெகா ஆராய்ச்சிப் பணி. ‘மனித மரபணு தொகுப்புத் திட்டம்’ (Human Genome Project) என்ற பெயரில் தொடங்கப்பட்டு 2003-ல் முடிக்கப்பட்ட இந்தப் பணி உயிரியல் ஆராய்ச்சியில் இதுவரை நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் பெரிது.
உயிரினம் ஒன்றின் மரபணுக்களின் தொகுப்பான Genome என்றால் என்ன என்பதை முதலில் பார்த்துவிடலாம். மனித உடலை ஒரு வாகனமாக ஒப்பிட்டால், Genome என்பதை அந்த வாகனத்துடன் வரும் பயனீட்டாளர் கையேடு என்று சொல்லலாம். இந்தக் கையேட்டில் இருக்கும் அத்தியாயங்களை குரோமசோம்கள், ஜீன்கள் எனப்படும் மரபணுக்களை அந்த அத்தியாயத்தில் எழுதப்பட்டிருக்கும் சில பாராக்கள் எனப் புரிந்துகொண்டால், ஜினோம் என்பது முழுக்கையேட்டுப் புத்தகம் எனப் புரிவது எளிது.

பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களது ரத்தம் முதலானவற்றை மாதிரியாகக் கொடுக்க, பல்வேறு பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் கரம்கோத்து ஜினோம் கையேட்டைத் தயாரித்து முடித்தனர். இது மனித இனத்திற்கே சொந்தமானது என்பதால், எந்தத் தனிநபரும் நிறுவனமும் சொந்தம் கொண்டாடவோ காப்புரிமைக்கு விண்ணப்பிக்கவோ முடியாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் கருத்து கூறிய பின்னர், ஜினோம் கையேடு தயாரிக்கும் வழிமுறையை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது.
இதைத்தொடர்ந்து, வந்த சில தொழில் முனைவுகள் நாம் அனுப்பும் மாதிரியில் இருந்து ஜினோம் கையேட்டின் தேவையான பகுதிகளை வரிசைப்படுத்தி, நம் முன்னோர்கள், கண் நிறம், பார்க்கின்சன் போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிந்து சொல்கிறார்கள். நான் சமீபத்தில் 23-and-Me என்ற இணைய சேவைக்கு உமிழ்நீர் அனுப்பி, சில வாரக் காத்திருப்பிற்குப் பின்னர் முடிவுகளை இ-மெயிலில் பெற்றேன். “உனது முன்னோர் 98% தென்னிந்தியாவிலிருந்து வந்திருக்கக்கூடும்” என இருந்தது.
ஆக, ஜினோம் கையேட்டைப் படிக்கும் வசதி எல்லோருக்கும் வந்துவிட்டது. ஜினோம் வரிசையை வெட்டி மாற்றும் திறனும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது. ஆணின் விந்தணுக்களில் மாறுதல்களைச் செய்வதன் மூலம் அவன் சந்ததியினருக்கு குறிப்பிட்ட நோய் வரும் வாய்ப்புகளை நீக்கவோ, குறைக்கவோ முடியும். CRISPR என அழைக்கப்படும் இந்தப் பிரிவில் பணிபுரியும் ஆராய்ச்சி விஞ்ஞானிகளான கார்ப்பெண்டியர், டவ்ட்ணா என்ற இருவருக்கும் சென்ற மாதத்தில் நோபல் பரிசு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நிற்க!
கடந்த பலவருடங்களாக கணினியியலும் உயிரியலும் இணைந்து புதிய பிரிவுகளை உருவாக்கிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஜினோமைப் படிக்க முடிவதும், திருத்த முடிவதும் பெரும் சாதனைகளே. ஆனால், அறிவியல் உலகம் அடுத்தபடிக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. மூர்ஸ் விதிப்படி கணினிக்கும் திறன் ( computing power) தறிகெட்ட வேகத்தில் அதிகமாகியிருப்பதை உயிரியலும் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கி விட்டது. செயற்கை உயிரியல் (Synthetic Biology) என்ற புதிய பிரிவு இப்படியான கேள்விகளை ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கிறது:
இதுவரை கண்டறியப் பட்டிருக்கும் - போலியோ, எபோலா விலிருந்து இன்றைய கொரானா வைரஸ் வரை - வைரஸ்கள் மட்டு மல்லாமல் நாளை வரப்போகும் வைரஸ்களின் தாக்குதல்களி லிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ளும் உயிரணுவை (cell) புதிதாகத் தயாரித்தால் எப்படி இருக்கும்?

நம் உடலில் தேவையென்றால் எடுத்துப் பொருத்திக்கொள்ளும் கல்லீரலைப் புதிதாக வளர்க்க முடியுமா?
மூளை ஒன்றை சோதனைச் சாலை ஒன்றில் உருவாக்க முடியுமா?
`இதெல்லாம் கேட்க ஜீபூம்பா மந்திரக்கதை போல இருக்கிறதே, இதெல்லாம் சாத்தியமானதுதானா, அண்டன்?’ என்று கேட்டால் அது வியப்பில்லை.
ஒவ்வொருவருக்கும் பொருத்தமான கல்லீரலை வளர்ப்பது என்று மேலே சொல்லியிருப்பது கனவுக் கேள்வி அல்ல. மனிதர்களைப் பயன்படுத்தி அதுபோல உடல் உறுப்புகளை வளர்க்க முடியாது என்பதால், பன்றிகளைப் பயன்படுத்தி மனித உடல் உறுப்புகளை வளர்க்கும் முயற்சிகள் வேகமாக வளர்ச்சி கண்டுவருகின்றன. பன்றிகளைத் தாக்கும் வைரஸ்கள் மனித உடலைத் தாக்கிவிடும் என்பதால், முதல்படியாக பன்றிகளைத் தாக்கும் வைரஸ்களிலிருந்து காத்துக்கொள்ளும்படி ஜினோமை வெட்டி உருவாக்கிவிட்டார்கள். இந்தப் பன்றிகளின் குட்டிகள் வைரஸ் அபாயம் இல்லாது வளர்வது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அடுத்த சில வருடங்களில், குரங்குகளில் இப்படி வளர்க்கப்பட்ட கல்லீரல்கள் பொருத்தப்பட்டு சோதிக்கப்படும்; பின்னர் மனிதர்களுக்கான பரிசோதனை தொடங்கும். இன்னும் பத்து வருடங்களுக்குள் மனித உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை என்பது பெரும் முன்னேற்றம் அடைந்திருக்கும். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் சர்ச் இந்தத் துறையில் வித்தகராக அடையாளம் காணப்படுகிறார்.
கடைசியாக, கணினிப் பொறியியலும் உயிரியலும் தெரிந்தவர்களின் தேவை மிக அதிகமாகப்போகிறது. இதில் நுழைய விரும்புவர்களுக்கு இரண்டு பாதைகள் இருக்கின்றன.
கணக்கீட்டு உயிரியல் (Computational Biology) - உயிரியல் துறையில் ஆராய்ச்சி செய்யும் விருப்பம் கொண்டவர்கள், கணினியம் எப்படிப் பயனாகிறது என்பதைப் புரிந்துகொண்டு அதை உயிரியல் ஆராய்ச்சிக்குள் பயன்படுத்துவது.
உயிரியல் தகவலியம் (Bioinformatics) - கணினியத்தில் விருப்பம் கொண்டு, உயிரியல் பற்றிய அறிவையும் கலந்து செய்யும் பணி.
இதில் எந்த இரண்டு பிரிவுகளிலும் பயனளிக்கும் நிரலாக்க மொழி (programming language) ஒன்று இருக்கிறது. அதன் பெயர் - R. இதைத் தெரிந்தவர்களின் தேவை ஆராய்ச்சி உலகில் அதிகரித்துவருவதையும் பார்க்கிறேன். இயந்திரக்கற்றல் போன்றவற்றில் நுழைவதற்கும் R உதவியாக இருக்கும்.
இந்த வாரக் கட்டுரைக்கான மேற்கோள் வலைப்பக்கங்கள் மற்றும் விவரங்களின் இணைப்பு வலைப்பக்கம் : https://bit.ly/UnlockSeries04 இந்தத் தொடரின் கட்டுரைகளுக்கு விகடன் டாட் காம் தளத்தில் மற்றும் வாட்ஸப்பில் அனுப்பிய பின்னூட்டங்களுக்கு நன்றி. அவற்றை அந்தந்த வாரங்களுக்கு இணைப்புப் பக்கத்தில் சேர்த்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து கருத்துகளைத் தெரிவிக்க +1 628-240-4194 என்ற வாட்ஸப் எண்ணைப் பயன்படுத்துங்கள். எழுத்து, ஆடியோ என எந்த வடிவிலும் ஓகே.
- Logging in...