Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 5

அறிவியல்
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவியல்

அண்டன் பிரகாஷ்

னித உடலுக்கும் கடலுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை - உடலின் மூன்றில் இரண்டு பங்கு நீர் இருப்பதுபோல், புவிப்பந்தில் கடல் அதே அளவு நீரைத் தேக்கி வைத்திருக்கிறது. உலகளாவிய வர்த்தகத்திற்கும், தேச எல்லைகளைப் பாதுகாக்கவும், புரத உணவுத் தேவைக்காகவும் கடலை நாம் நம்பியிருந்தாலும், ஆண்டு 2020 ஆகியும், அதன் அறிவியல் கூறுகளை இன்னும் இருபது சதவிகிதம்கூடக் கண்டறிய முடியவில்லை.

50,000க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஒவ்வொரு நாளும் கடலின் மேல் மிதந்து விரைகின்றன. ஒரு வருடத்தில் ஒரு லட்சம் கோடியில் இருந்து மூன்று லட்சம் கோடி வரை மீன்களை நாம் உண்பதற்குத் தருகிறது கடல். உலக மக்கள் தொகை 760 கோடிதான் என்பதை மனதில் கொண்டால், கடல் ஓர் அற்புத உணவுச் சுரங்கம் என்பதை உணரலாம். தொழில் நுட்ப யுகம் வந்தபின்னர் கடலிலிருந்து பெறப்படும் பயன் அதிகமானது. கடலுக்குள் கட்டப்பட்டு 1,500 கச்சா எண்ணெய் உறிஞ்சு நிலையங்கள் இருக்கின்றன. அது ஏன், அலைபேசிகளும், வைபை பிணையங்களும் நம்முடன் ஒன்றாகக் கலந்து, கம்பியற்ற தொலைத்தொடர்பில் நாம் ஊறிப்போயிருந்தாலும், உலக இணைய இணைப்பு என்பது கடல்களின் கீழே பதிக்கப்பட்டிருக்கும் கேபிள்களால்தான் சாத்தியமாகிறது. குறுக்கும் நெடுக்குமாக கடலின் அடியில் அமர்ந்துகொண்டு அமைதியாக தகவல்களை நகர்த்திக்கொண்டிருக்கும் இந்த கேபிள்களின் மொத்த நீளம் இன்றைய நாளில் 12 லட்சம் கிலோமீட்டர்கள். கூகுள், ஃபேஸ்புக், அமேசான் என இணையத்தின் ஒரு பிட் டேட்டாவால் ஒரு தங்கக் காசு ஈட்டும் பெரும் இணைய நிறுவனங்கள் இதைப் பங்கு போட்டுக் கொள்கின்றன.

UNLOCK அறிவியல் 2.O - 5

விண்வெளியையே பகுத்து அலசிவிட்டோம். கருந்துளையைப் புகைப்படம் எடுத்துவிட்டோம். செவ்வாய்க் கிரகத்தில் ரோவர் என்ற ரிமோட் கார் ஓட்டிப் பார்த்துவிட்டோம். இருப்பினும், இவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் நம் கண்ணெதிர் கடலின் அறிவியல் சூட்சுமங்களை முழுக்க அறிந்துகொள்ள ஏன் முடியவில்லை? சூரிய வெளிச்சம் ஆழமாகச் செல்ல முடியாது என்பதுடன், ஆழம் அதிகரிக்க அதிகரிக்க நீரின் அழுத்தம் அதிகரிக்கும் என்பதால் ஆராய்ச்சியாளர்கள் ஆழ்கடலில் நேரடியாக இறங்கிப் பணிபுரிவது கடினம் என்றாலும், மேலிருக்கும் துணைக்கோள்கள், நீந்த முடிகிற ரோபாட்டுகள் எனத் தொழில்நுட்பங்கள் வந்த பின்னும் எளிதாகக் கடலை ஏன் கற்று முடிக்க முடியவில்லை?

ரேடியோ அலை சமிக்ஞைகள் தண்ணீருக்குள் பயணிக்க முடியாமல் திணறும் இயற்பியல் வரம்புதான் பெருந்தடை. ரேடியோ அலை பற்றிய அடிப்படைகள் தெரிந்திருந்தால் அடுத்த பாராவைத் தாண்டிச் சென்றுவிடுங்கள்.

நமது இயற்கை வாழ்வு மின்காந்த மாலையால் (Electromagnetic spectrum) சூழப்பட்டிருக்கிறது. ஆற்றலைத் தன்னகத்தே பெட்டகம் செய்து கொண்ட போட்டான்களால் (Photon)சூடப்பட்டது இந்த மாலை. போட்டான்கள் அலைவடிவில் துடித்து ஒளிவேகத்தில் பயணிக்கின்றன. இந்த மாலையின் ஒரு புறத்தில் ஆற்றல் அதிகம் கொண்ட போட்டான்களை எக்ஸ்ரே, அகச்சிவப்பு ஒளி, புற ஊதா ஒளி என்றெல்லாம் வகைப்படுத்தலாம். அதற்குச் சற்று ஆற்றல் குறைந்த மாலையின் பகுதிதான் நம் கண்களுக்குத் தென்படும் ஒளி. அதற்கும் குறைவான ஆற்றல் கொண்ட போட்டான்களைக் கொண்ட பகுதியை ரேடியோ அலை என்கிறது இயற்பியல். ஆற்றல் குறைந்த, கண்ணால் காணமுடியாத, மாலையின் பகுதியில் இருக்கும் ரேடியோ அலை சமிக்ஞைகள் நவீன உலகின் கம்பியற்ற தகவல் தொடர்புத் தொழில் நுட்பங்களுக்கான அடிப்படை. அலைபேசியில் யூடியூப் காணொலியை புளூடூத் ஹெட்செட்டில் பார்த்தபடி வைபை பிணையத்தில் இணைக்கப்பட்ட லேப்டாப்பில் இ-மெயில் எழுதி அனுப்புகிறீர்கள் என்றால், பல வித ரேடியோ சமிக்ஞைகளை உங்களுக்குத் தெரியாமலேயே பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். இருக்கட்டும் - தண்ணீருக்குள் மீண்டும் குதிக்கலாம்.

ஆற்றல் மற்றும் அதன் அதிர்வெண்ணின் (Frequency) தன்மைக்கேற்ப திறந்தவெளியில் பயணிக்கும் ரேடியோ அலைக்கற்றையால் தண்ணீருக்குள் தடையில்லாமல் செல்ல முடிவதில்லை. ஆண்டாண்டுக் காலமாக தண்ணீருக்குள் தொடர்புத் தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வந்தாலும், உலகப்போரின் போது அது முக்கிய இடத்திற்கு நகர்ந்தது. வான்வழித் தாக்குதல்களை ரேடார் மூலம் கண்டறிந்து தப்பிக்கவும் பதில் கொடுக்கவும் முடிந்தாலும், ஜெர்மனியின் நீர் மூழ்கிக் கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் பெரும் சவாலாக அமைய, இந்த ஆராய்ச்சி முடுக்கிவிடப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் விளைவாகக் கண்டறியப்பட்ட தொழில்நுட்பம் - Sound navigation and ranging, சுருக்கமாக சோனார். போர் முடிந்தாலும் ஒலி ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து வலுவாக நடத்தப்பட்டு வருகிறது.

UNLOCK அறிவியல் 2.O - 5

‘வெயிட் அண்டன் - இப்போது கடலில் போர் என்றெல்லாம் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. கடலுக்குள் ஒலியை கிரகிக்கும் ஆராய்ச்சிகளுக்கும் அது சார்ந்த தொழில்நுட்பங்களுக்கும் 21-ம் நூற்றாண்டில் என்ன தேவை வந்தது’ என்ற கேள்வி மனதில் எழுகிறதா?

போரைவிடப் பெருங்கொடூரம் கடலில் நடந்துகொண்டிருக்கிறது. மனித வர்த்தக நிகழ்வுகள் எழுப்பும் பெரும் ஒலி மாசு (Noise pollution) பெரும் பாதகத்தை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்திருக்கிறார்கள். வணிகக்கப்பல்கள், எண்ணெய் எடுக்கும் தளங்கள், பொழுதுபோக்குக்காகப் பயன்படும் சொகுசுக் கப்பல்கள் என கடலில் பெருஞ்சத்தத்தை நாள் முழுக்க ஏற்படுத்தியபடி இருக்கிறோம் நாம். அமைதியாக இருந்துவந்த கடலில் கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் இந்த சப்த வன்முறை. இந்த வன்முறையால் பாதிக்கப்படுவது கடல் வாழ் உயிரினங்கள். செய்திகளில் அவ்வப்போது திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறந்து கிடக்கின்றன என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். டால்பின்கள், திமிங்கலங்கள் போன்றவை தங்களுக்குள் விசில் மற்றும் ஊளை போன்ற சப்தங்களால் குழுவாகத் தொடர்பு கொண்டபடி இருக்கும். அவற்றை பாதிக்கும் வகையில் சப்தம் வந்தால், அவை நிலைகுலைந்துபோய் திகைத்து திசை திரும்பி எங்கே செல்கிறோம் என்பது தெரியாமல் கரை ஒதுங்கி மூச்சுத் திணறி இறந்துவிடும் அவலம் நடக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். இப்படிப் பெரிய அளவில் இருக்கும் பாலூட்டி கடல் விலங்குகள் என்றில்லை; வெள்ளைக் கனவா (White squid) எனப்படும் மீன் வகைகள் கொத்துக் கொத்தாக இறந்து கிடக்க, அதை ஆராய்ச்சி செய்தனர் கடல்துறை ஆராய்ச்சியாளர்கள். இந்த வகை மீன்களில் மனிதக் காதுகளுக்குள் இருப்பது போன்ற நரம்பு முடிகள் இருப்பதும் அவை அதீத ஒலியால் பாதிக்கப்படுவதால், கனவா மீனின் கண்டறியும் திறன் பாதிக்கப்பட்டு இறந்து போவதும் நிருபிக்கப்பட்டது.

ஒலியை உள்வாங்கி அதை மின் சமிக்ஞையாக மாற்றித் தகவல் பரிமாறும் சாதனங்களுக்கு Acoustic modem எனப் பெயர். கடல் ஆராய்ச்சிகளில் ஒலியைக் கண்டறிய இது போன்ற சாதனங்கள்தான் பயன்படுத்தப் படுகின்றன. இந்தச் சாதனங்களின் பெருங்குறை, இவற்றை இயக்கத் தேவைப்படும் பேட்டரி. தண்ணீர் பாதிப்பில்லாமல் வடிவமைக்க வேண்டியது ஒருபுறம் என்றால், தீர்ந்துபோன பேட்டரிகளை எடுத்துப் புதிய பேட்டரிகளை மாற்றி மீண்டும் தண்ணீருக்குள் விட வேண்டும் என்பது சிரமம் என்பதால் இவற்றின் பயன்பாடு மட்டுப்பட்டது. சூரிய ஒளி புகாத இடம் என்பதால் சோலாரையும் பயன்படுத்த முடியாது.

ஒலியைக் கிரகித்துப் பதிந்துகொள்ளும் அதே சாதனம் அதே ஒலியின் மூலமாகத் தனக்குத் தேவையான பேட்டரியை ரீ-சார்ஜ் செய்து கொண்டால் எப்படி இருக்கும்? MIT பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம் இதைச் சாத்தியப்படுத்தி விட்டது. இதை கடந்த பல மாதங்களாக பரிசோதனை அளவில் பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். அட்லாண்டிக் பெருங்கடலின் பல இடங்களில் ஆழ்கடல் மைக்ரோ போன்களாக நிறுவப்பட்டிருக்கும் இந்தச் சாதனங்கள் கடலுக்குள் எழும் ஒலிகளை தொடர்ந்து பதிவு செய்துகொண்டே வருகின்றன. அதோடு ஒலியின் மூலமாகத் தொடர்பு + ஆற்றல் புதுப்பிப்பு என இரண்டையும் செய்து கொள்வதால், இந்தச் சாதனங்களை இணைத்து ஒரு பிணையமாகக் கட்டமைக்க முடியும்.அதாவது, கடலுக்கடியில் ஒரு இணையமாக இது இயங்கும். இதைப் பயன்படுத்தி எந்த வகையான ஒலிகள் எந்த விலங்கினங்களுக்கு ஊறு விளைவிக்கின்றன என்பதை எளிதாகக் கண்டறிய முடியும்.

UNLOCK அறிவியல் 2.O - 5

பை தி வே, ஜெர்மனியுடன் போரிட்டு வெற்றி பெறுவதற்கு உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மருத்துவத் துறைக்குள் நுழைந்தது தற்செயல். மின்காந்த மாலையில் இருக்கும் எக்ஸ்ரே அலைக்கற்றை மூலமாக உடலின் உள்ளிருக்கும் சிக்கல்களைக் கண்டறிய முடியும்தான். ஆனால், எக்ஸ்ரே பயன்படுத்துவது கருவில் இருக்கும் சிசுவை பாதிக்கும் என்பதால் பயன்படுத்த முடியாமல் இருந்ததற்கு மாற்றாக வந்த Ultrasound தொழில்நுட்பம் சோனார் வகையானதே. கருவில் இருக்கும் சிசுவின் நலமறியப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், பின்னர் பெண் சிசு அகற்றலுக்குப் பயன்படுத்தப்பட, அதனால் சீனாவில் ஆண்/பெண் மக்கள் தொகை எண்ணிக்கை பாதிப்பு; இந்தியாவில் குழந்தையின் பாலினம் என்ன என்பதைச் சொல்ல மருத்துவர்களுக்குத் தடை என நடந்த நிகழ்வுகள் யாரும் நினைத்திராத தொடர் விளைவுகள். இப்படி நன்மைக்காகக் கண்டறியப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பங்களும் எதிராகச் சென்றுவிடுவது பல முறை நடந்திருக்கிறது. அவற்றை வரும் வாரங்கள் ஒன்றில் Unlock செய்யலாம்.

இந்த வாரக் கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி சம்பந்தமான வலைதளங்களையும், யூடியூப் காணொலிகளையும் https://bit.ly/unlockSeries05 பக்கத்தில் பாருங்கள்.

- Logging in...