Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 7

பிட்காயின்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின்

அண்டன் பிரகாஷ்

ந்த வாரத்தில் நாம் பார்க்கப் போகும் விஷயம், பிணத்தையும் வாய் பிளக்க வைக்கும் பணம்.

இப்போது இதைத் தேர்ந்தெடுக்கக் காரணம் இருக்கிறது. 2014க்குப் பின்னர் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு கிடுகிடுவென பரமபத ஏணியில் ஏறியபடி இருக்க, பலரும் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் மந்தை மனநிலையில் திடீர் குபேரர்கள் ஆகப்போகிறோம் என்ற கனவுடன் பணத்தைக் கொட்டினர். 2017-ல் தடாலென பாம்பு கொத்தியது போல மதிப்பு சரேலெனக் குறைந்துபோக, திகிலானார்கள்.

கிரிப்டோவின் மதிப்பு கொரானா லாக்டௌனிற்குப் பின்னர் உயர்ந்தபடி இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்னிருந்த 20,000 அமெரிக்க டாலர் என்ற அளவை பிட்காயின் கிட்டத்தட்ட இந்தக் கட்டுரை எழுதப்படும் நாளில் மீண்டும் தொட்டுவிட்டது.

இடைக்குறிப்பு: இந்த வாரக் கட்டுரையை முழுக்கப் படித்து முடித்தால் உங்களுக்கு கிரிப்டோ பற்றிய தெளிவு கிடைப்பது மட்டுமல்ல; சுறுசுறுப்பாக முனைந்து செயல்படும் சிலருக்குப் பரிசுகளும் காத்திருக்கின்றன. தொடர்ந்து படியுங்கள்.

முதலில் எளிய அடிப்படைகள்.

பணம் என்றால் என்ன? புன்னகைக்கும் காந்தியைக் கொண்ட வண்ணக் காகிதம்தான் பணமா? அந்தக் காகித கரன்சிகளைப் பணத்தின் தற்காலிகப் பரிமாற்ற ஊடகம் (medium of exchange) என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். நமது சமீபத்திய அனுபவத்தின்படி, காகித கரன்சி எளிதில் காலாவதியாகலாம். பணம் என்பது அடிப்படையில் உழைப்பின் மதிப்பைப் பொதிந்து வைத்திருப்பது (store of value). அது புழக்கத்திற்கு வருவதற்கு முன்பு, உழைப்பு என்பது பண்டமாற்று முறை மூலமாகவும், அதன் பின்னர் தங்கம் மூலமாகவும் பொதிந்துவைக்கப்பட்டது.

UNLOCK அறிவியல் 2.O - 7

பணத்தின் மதிப்பை நிர்ணயிப்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி அமைப்பு. இந்தியாவில் அதை ரிசர்வ் வங்கி என்கிறோம். அமெரிக்காவில் Federal Reserve என்றும், ஜப்பானில் Bank of Japan என்றும் பல நாடுகளில் பல பெயர்களில் இந்த வங்கி அழைக்கப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரத் தேவைக்கேற்ப பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன் இந்த மத்திய வங்கிகளின் மற்றொரு கடமை, பணப் பரிவர்த்தனைகளை மேற்பார்வை செய்வது. ஒரு பணப் பரிமாற்றத்தில், கொடுப்பவரது கணக்கில் பணம் இருக்கிறது என்பதை உறுதி செய்து, பெற்றுக்கொள்பவரின் கணக்கிற்கு மாற்றிக்கொடுப்பதை மேற்பார்வை செய்வது மத்திய வங்கியே. பரிமாறிக்கொள்ளும் நபர்களோ, நிறுவனங்களோ வேறு நாடுகளில் இருந்தால், அந்தந்த நாடுகளின்வங்கிகள் இந்தப் பரிமாற்றத்தில் தலையிட்டாக வேண்டும். மத்திய வங்கிகள் மூலமாக நாளொன்றிற்கு நாடுகளுக்குள் பரிமாற்றம் ஆகும் தொகை, ஏழு ட்ரில்லியன் டாலர்களுக்கு மேல்.

இனி டிஜிட்டல் பணத்திற்கு வருவோம்

டெக் துறையில் இருப்பவர்களுக்கு பிரச்னைகள் என்றால் ரொம்பவே ஆர்வம். அவற்றைத் தீர்ப்பதன் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் எனத் தீர்க்கமாக நம்புபவர்கள் நிறைந்த உலகம் இது. மத்திய வங்கிகளின் மேற்பார்வை இல்லாமல், மக்கள் தங்களுக்குள் டிஜிட்டல் வடிவில் பணத்தைப் பரிமாற்றிக்கொள்ள முடியுமா என்பதற்கான பரிசோதனை முயற்சிகள் 90களின் தொடக்கத்திலிருந்தே எடுக்கப்பட்டன. அவை எதுவும் வெற்றிபெறாத நிலையில் 2008-ல் ஷட்டோசி நாக்கமாட்டோ என்பவரின் வெள்ளை அறிக்கையும், அதைச் சார்ந்து அவர் வெளியிட்ட பிட்காயின் என்ற மென்பொருளும் பொறியாளர்கள் இணைந்து பேசிக்கொள்ளும் ஆன்லைன் தளம் ஒன்றில் வெளிவந்தது.

ஷட்டோசி மிக ஆர்வமாக, தனது ஐடியாவைப் பற்றிக் கதைப்பதும் தனது மென்பொருள் எப்படி இயங்குகிறது என மற்றவர்களைக் கேட்டுக்கொள்வதுமாக இருக்க, சிலர் அதைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தனர். தான் உருவாக்கிய பிட்காயின் மென்பொருளைப் பற்றி முதலில் ஆர்வமாக இருந்த ஷட்டோசி அதை அனைவருக்கும் பொதுவானதாக்கிவிட்டு (Open Source) 2010-ம் ஆண்டு வாக்கில் தன்னைப் பற்றிய விவரம் எதுவும் கொடுக்காமல் ஆன்லைனில் இருந்தே மறைந்துவிட்டார்.

ஷட்டோசி ஒளிந்திருக்க முடிவு செய்துவிட்டாலும், பிட்காயின் தொடர்ந்து பிரபலமாக ஆரம்பித்தது. காரணம், பிட்காயினின் அடிப்படைக் கட்டமைப்பு (Architecture). குறிப்பாக, அந்தக் கட்டமைப்பிற்குப் பயன் படுத்தப்படும், Public Key Cryptography, சுருக்கமாக PKC / பிகேசி. மொழிபெயர்த்தால், ‘பொது விசை குறியாக்கவியல்’ எனக் கடமுடாவாகக் காதில் பட்டாலும், இதன் அடிப்படை மிகவும் எளிதானது.

நீங்களும் நானும் ரகசியத் தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டும். காகிதத்தில் எழுதி தபாலில் அனுப்பினால், இடையில் யாராவது கவரைத் திறந்து படித்துவிட்டு மீண்டும் ஒட்டிச் சேர்த்துவிடலாம். குறுந்தகவலில் அனுப்பினால், உங்கள் அலைபேசி சேவை நிறுவனத்தால் அதைப் பார்க்க முடியும். இமெயில் அனுப்பி னால் கூகுளால் அதைப் படிக்க முடியும். இந்த மூன்று உதாரணங்களில் பொதுவான ஒன்றைப் பார்க்கலாம்... ஒரு தகவல் தொடர்பில் இருவரிடையே மையமாக ஓர் அமைப்பு இருந்தால், தகவலை ரகசியமாக அனுப்புவது மிகவும் கடினம்.

பிகேசி இந்தச் சிக்கலை இலகுவாகத் தீர்க்கிறது. பயனீட் டாளர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு விசைகள் (Keys) கொடுக்கப்படும். ஒன்று பொது (Public), மற்றது பிரத்யேகமானது (Private). இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது. பொது விசையை யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம். ஆனால், பிரத்யேக விசையை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நான் உங்களுக்குப் பாதுகாப்பாகத் தகவல் ஒன்றை அனுப்ப வேண்டுமா ? உங்களது பொது விசையைப் பயன்படுத்தி அந்தத் தகவலைக் குறியாக்கம் (Encrypt) செய்து அனுப்பிவிடுவேன். உங்களிடம் இருக்கும் பிரத்யேக விசையைப் பயன்படுத்தி மட்டுமே அதை மறைகுறியாக்கம் (Decrypt) செய்ய முடியும். தகவல் என்பது சரவணபவன் மசாலா தோசை என வைத்துக் கொள்ளுங்கள். Encrypt செய்யப்பட்டது தூத்துக்குடிக் கொத்து புரோட்டா வடிவில் இருக்கும். இணையத்தில் யாராவது தகவலைத் திருட முற்பட்டால், அவர்களுக்குக் கொத்தப்பட்ட தகவலே கிடைக்கும். உங்களிடம் வந்த புரோட்டாவை பிரத்யேக விசை கொண்டு Decrypt செய்தால், அது தோசையாக மாறிவிடும்.

பை தி வே, பிகேசி-யை நாம் தினமும் பயன்படுத்தியபடிதான் இருக்கிறோம். இந்தக் கட்டுரையை ஆன்லைனில் படித்துக் கொண்டிருந்தால், முகவரியைப் பாருங்கள். https://www.vikatan.com/ என இருப்பதில் இருக்கும் ‘s’ என்பது Secure என்பதைக் குறிக்கிறது. அதற்கு முன்னால் பூட்டு ஒன்றும் காட்டப்பட்டு இது பாதுகாப்பான தளம் என்பதை உறுதிப்படுத்துகிறது. நீங்கள் விகடன் டாட் காம் சென்றதும் உங்களது பொது விசை, விகடன் டாட் காமின் சர்வருக்குக் கொடுக்கப்பட, வலைப்பக்கம் Encrypt செய்யப்பட்டு உங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது. உங்களது பிரவுசர் அதை உங்களது பிரத்யேக விசை கொண்டு Decrypt செய்து காட்டுகிறது. வாட்ஸப்பில் ‘End to End Encryption’ என்பதை நிறுவிக்கொண்டால், இது போன்ற பிகேசி சார்ந்த பாதுகாப்பான தகவல் தொடர்பே நடத்தப்படுகிறது.

சரி இருக்கட்டும், பிட்காயினிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம், அண்டன்? சொல்கிறேன்.

பிட்காயினின் அடிப்படையே இந்த பிகேசி-தான். வலைப்பக்கங்களைப் பாதுகாப்பாகப் பரிமாறும் அதே அடிப்படையில் பணத்தைப் பரிமாற வைத்தால் எப்படி இருக்கும் ? பிட்காயின் என்பதையே இணையம் போன்றதொரு குட்டிப் பிணையமாகக் கருதி அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிட்காயின் முகவரி கொடுக்கப்படுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். அந்த நபரின் பொது விசை எண்தான் அந்த முகவரி. யாருக்காவது பணம் அனுப்ப வேண்டுமானால், பணம் பெறும் நபரின் முகவரியை, அதாவது பொது விசையை, வாங்கி இவ்வளவு அனுப்புகிறேன் என்பதைப் பதிந்து அனுப்பிவிட வேண்டும். அதைப் பெற்றுக் கொள்ளும் நபர், தனது பிரத்யேக விசையைப் பயன்படுத்திப் பணத்தை மற்றொருவருக்கு இதே பாணியில் அனுப்ப முடியும்.

அனுப்பிய சில நிமிடங்களில், பிணையத்தில் இருக்கும் சில பிட்காயின் நிறுவப்பட்ட கணினிகளால் இந்தத் தகவல் சரி பார்க்கப்படும். அனுப்ப எத்தனிக்கும் நபரின் முகவரியில் பணம் இருக்கிறதா என்ற இந்தச் சரிபார்ப்பு (Verification) முடிந்ததும், பிணையத்தில் இருக்கும் ஒவ்வொரு கணினியிலும் புதிதாக உருவான இந்த ப்ளாக் பதிவாகிவிடும்.

இந்த ப்ளாக்குகளை உருவாக்குபவர்கள், பிட்காயின் உலகில் சுரங்கத் தொழி லாளர்கள் (Miners) என அழைக்கப்படு கிறார்கள். தனி ஆட்களாகவும், குழுக்களாக இணைந்தும், நிறுவனங் களாகவும் மைனிங் செய்கிறார்கள். நானே எனது அலுவலக அறையில் மைனிங் செய்யும் கணினி ஒன்றை சில மாதங்கள் வைத்திருந்தேன். அது கிளப்பும் சூடு தாங்காமல் நிறுத்திவிட்டேன்.

UNLOCK அறிவியல் 2.O - 7

பிட்காயின் பிணையத்தில் இருக்கும் எல்லாக் கணினிகளும் தொடர்ந்து ஜெராக்ஸ் காப்பிகளாக டேட்டாவை காப்பி செய்தபடியே இருக்கும். இப்படி இருப்பதால், பிட்காயினைப் பரவலான பிணையம் (Decentralized Network) என்பதுடன் அதில் சேகரமாகும் தகவல்கள் மாற்றப்பட முடியாதவை (Immutable) என்பதும் தெளிவாகிறது. தனிப்பட்ட எவராவது பிணையத்தில் புகுந்து தனது கணக்கில் பணம் வருவதாக ஹேக்கிங் செய்தால், அது வேலைக்காகாது. காரணம், ஓரிரு கணினிகளை ஹேக்கிங் செய்து அப்படி போலியான பரிமாற்றத்தை எழுத முடியும். ஆனால், முழுப் பிணையமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அதில் இருக்கும் ஒவ்வொரு கணினியையும் ஹேக்கிங் செய்தாக வேண்டும். அது நடைமுறையில் சாத்தியமேயில்லை.

அதெல்லாம் இருக்கட்டும், பணம் என்பதை ஒரு நாடு அச்சடித்து உருவாக்கலாம். பிட்காயின் என்பதை எப்படி ‘அச்சடிக்கிறார்கள்’ என்று எழும் கேள்விக்கான பதில் - கடினமாக புதிய புதிர்களை பிட்காயின் மென்பொருள் கொடுக்கும். அவற்றை மற்றவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தீர்வு காண வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றால் அதற்கான சன்மானமான பிட்காயின் உங்கள் முகவரிக்கு வந்து சேரும். தொடக்க வருடங்களில் ஒவ்வொரு முறையும் 50 பிட்காயின் எனக் கொடுக்கப்பட்டது. பின்னர் குறைந்து வந்து இப்போது 6.25 பிட்காயின் மட்டுமே வழங்கப்படுகிறது.

2.1 கோடி பிட்காயின்கள் தயாரானதும், மேற்படி சன்மானம் நின்றுவிடும். கடந்த 12 வருடங்களாக 1.8 கோடி பிட்காயின்கள் தயாராகிவிட்டன. ஆனால், கடைசி 26 லட்சம் பிட்காயின்கள் வழங்கப்பட இன்னும் 120 வருடங்களுக்கு மேலாகும்.

பிட்காயினை சம்பாதிக்க இன்னொரு வழி: பரிவர்த்தனைகள் நடக்கும்போது அவற்றைச் சரிபார்த்து ப்ளாக்குகளை உருவாக்கிக் கொடுக்கும் மைனர் பணி செய்வது. இதற்கான கூலி பிட்காயினில் வழங்கப்படும். இந்தக் கூலிக்கு transaction fee அல்லது gas fee எனப் பெயர்.

பிட் காயினின் வெற்றியைத் தொடர்ந்து அது வடிவமைக்கப்பட்டி ருக்கும் தொடர் சங்கிலி (Blockchain) என்பது டெக் உலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. பிட்காயின் இன்னும் பெரியண்ணன்தான் என்றாலும், 12 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட மென்பொருள் என்பதால், அதன் வேகம் குறைவு. ஒரு நொடிக்கு பிட்காயின் பிணையத்தில் 4 பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடிகிறது. இது எவ்வளவு குறைவு என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். VISA கிரெடிட் கார்டு பிணையம் ஒரு நொடிக்கு 65,000 பரிவர்த்தனைகளைச் செய்கிறது.

2015-ல் வெளிவந்த எத்தூரியம், இன்னும் அரசனாக அமர்ந்திருக்கும் பிட்காயின் மென்பொருளையே எடுத்து மேம்படுத்தப்பட்ட லைட் காயின் போன்றவை கிரிப்டோ உலகில் பிட்காயினுக்கு அடுத்த இளவரசர்களாக வலம் வருகிறார்கள்.

இந்தக் கட்டுரைக்கான ஆதாரங்கள், இணைப்புகள் https://bit.ly/UnlockSeries07 என்ற வலைப்பக்கத்தில் இருக்கின்றன. கிரிப்டோ தொழில்நுட்பம் பற்றி நீங்கள் என்ன புதிதாக இந்தக் கட்டுரையிலிருந்து தெரிந்துகொண்டீர்கள் என்பதைப் பதிவாகவோ, ஆடியோவாகவோ +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலம் அனுப்புங்கள். பதிலுக்கு உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.

- Logging in...