Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 8

UNLOCK அறிவியல் 2.O
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல் 2.O

- அண்டன் பிரகாஷ்

இந்த வாரக் கட்டுரையின் இந்த வரியை எழுதும் நாளில், அமெரிக்காவின் கொரானா இறப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தொட்டிருக்கிறது; இதே நாளில் நியூயார்க் நகரில் சாண்ட்ரா லிண்ட்ஸி என்ற பெயர் கொண்ட செவிலியருக்குப் போடப்பட்ட முதல் தடுப்பூசி, வரலாற்று நிகழ்வாகியிருக்கிறது.

நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஒரு சதவிகிதம் பேரை கொரானா கொன்றிருக்கும் அதிர்ச்சி ஒருபுறம் இருக்க, ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது எப்படி அமெரிக்கா, ஐரோப்பாவில் மட்டும் இப்படி அதிக அளவில் இறப்பு விகிதம் அதிகம் இருக்கிறது என்பதைப் பற்றிய பல்வேறு அலசல்கள் நடக்கின்றன.

UNLOCK அறிவியல் 2.O - 8

தட்பவெப்பம், முதியோர் விகிதம் அதிகம் இருப்பது, ஏற்கனவே ஆசிய நாடுகளில் சார்ஸ் வகை வைரஸ்கள் வந்து சென்றதால் கிடைத்திருக்கும் எதிர்ப்பு சக்தி, மஞ்சள்/ பூண்டு/ இஞ்சி போன்றவை அதிகம் சேரும் உணவுப்பழக்கம் - என உத்தேசிக்கப்படும் எல்லாக் காரணங்களையும் கருத்தில் எடுத்துக் கொள்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எதுவும் உறுதியாக ஒதுக்கித் தள்ளப்படவில்லை. “கலிபோர்னியாவில் காட்டுத்தீ எரிகிறதே; அதில் கொரானா உருகிப் போய்விடாதா?” என்று என்னிடம் கேட்ட திருவனந்தபுரம் ஜெசி ரூபனுக்கு மட்டும் உறுதியான பதில் - “நோ.”

கொரானாப் பெருந்தொற்றுக் காலம் (Pandemic) நிறைவுற்றபின்னர் தகவல் ஆராய்ச்சி நடந்து நிச்சயம் இது பற்றிய தெளிவான முடிவு கிடைக்கும். அதுவரை காத்திருக்கலாம்.

ஆனால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், கொரானா வைரஸினால் வரும் கோவிட், ஏற்கெனவே இணை நோய் (Co-morbidity) இருப்பவர்களை மட்டுமே இறப்பின் விளிம்பிற்குத் தள்ளுகிறது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிறுவப்பட்டுவிட்டது. அதுவும் குறிப்பாக சர்க்கரை நோய் கொண்டவர்களை எளிதில் சாய்த்துவிடுகிறது என்பது அமெரிக்க இறப்பு தகவலிலிருந்து தெளிவாகிறது. பிறக்கும்போதே இன்சுலின் சுரப்பதில் பிரச்னை இருக்கும் சர்க்கரை நோயை டைப் 1 என்றும், தரமற்ற உணவு மற்றும் உடற்பயிற்சியின்மை - இவை இரண்டையும் உள்ளடக்கிய வாழ்வுமுறையால் வரும் சர்க்கரை நோயை டைப் 2 என்றும் சொல்வது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

இந்த இரண்டிற்கும் சம்பந்தமான சமீபத்திய நிகழ்வுகளையும், அதற்குப் பின்னிருக்கும் அறிவியலையும்தான் இந்த வாரம் அன்லாக் செய்யப்போகிறோம்.

UNLOCK அறிவியல் 2.O - 8

முதலில் உணவு

கொரானா லாக்டௌன் உலகெங்கிலும் அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்ததும் சினிமா தியேட்டர்கள், கச்சேரி வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் என மக்கள் கூட்டமாகக் கூடும் இடங்களில் தடாலென சரிந்த வணிகம் இன்று வரை முன்னேறவில்லை. மளிகைப் பொருள்கள் விற்பனை போன்ற வணிகங்கள் முதலில் சற்றுத் தடுமாறினாலும், அடிப்படை சேவைகள் என்பதால் ஓரளவிற்கு பழைய நிலைமைக்கு மீண்டு வந்துவிட்டன. ஆனால், ஆன்லைன் சேவைகள் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தன. மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டி இருந்ததால் இ-காமர்ஸ் அத்தியாவசியமானது. அமேசான் கடந்த பத்து மாதங்களில் மட்டும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களைச் சேர்த்துக்கொண்டு, மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 1.2 கோடி என்ற உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அதுபோலவே, கூகுள், பேஸ்புக், ஜூம் போன்ற நிறுவனங்களின் வருமானம் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்திருக்கும் செய்திகளை நீங்கள் படித்திருக்கலாம்.

அதிக அலட்டல் இல்லாமல் ரேடாரில் தெரியாமல் பறக்கும் விமானமாக இன்னொரு துறையும் சத்தமில்லாமல் பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. அது - வளர்ப்பு மாமிசம் (Cultured Meat). ஆராய்ச்சிகள் தொடங்கிப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும் இந்த வருடத்தில் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம் இருக்கிறது. சராசரி அமெரிக்க உணவை SAD என்பார்கள். Standard American Diet என்பதன் சுருக்கம். ‘பொது மக்களுக்கு உணவுப் பரிந்துரை என்ற பெயரில் அதிக அளவில் மாவுச்சத்தும், சர்க்கரையும் இருப்பதன் விளைவு, பெருகிவரும் சர்க்கரை நோய்’ என அழுத்தமான குரல்கள் உணவு அறிவியல் உலகிலிருந்து வர ஆரம்பித்திருக்கின்றன.

அது மட்டுமல்ல - மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள், சமூக விலகலுடன் நடந்து கொள்ளுங்கள் என்ற அறிவுரைகளோடு, உடலை வளப்படுத்தி நோய் எதிர்க்கும் விதத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனைகளும் வலுவாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. தரமான உணவுதான் அதற்கு முதல் படி.

தொடர்ந்து செல்வதற்கு முன்னால், சில புள்ளிவிவரங்கள்:

2020 வருடம் முடியும் இந்தத் தருணத்தில் உலகில் 780 கோடிப் பேர் வாழ்கிறோம். நமது உணவுத் தேவைகளுக்காக 150 கோடி மாடுகளும், 100 கோடிப் பன்றிகளும், 2,000 கோடிக் கோழிகளும் நம்முடன் புவிப்பந்தில் வசிக்கின்றன. இவற்றுடன் ஒப்பிடும்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. உதாரணத்திற்கு நாற்பதாயிரம் சிங்கங்களும், ஐந்து லட்சம் யானைகளுமே இன்றைய நாளில் இருக்கின்றன.

விலங்கு மாமிசம் சார்ந்த வணிகம் உலகில் மிகப் பெரிது. 1.5 ட்ரில்லியன் டாலர்களுக்கு மேலாக ஆண்டுதோறும் பணம் புழங்கும் இந்த வணிகத்தால் மனித இனத்தின் புரதத் தேவை பூர்த்தியாகிறது என்றாலும், வேறு பல சிக்கல்கள் கூடவே வருகின்றன.

UNLOCK அறிவியல் 2.O - 8

வெப்பத்தைத் தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும் வாயுக்களை பச்சையக வாயுக்கள் (Green house gases) என்கிறார்கள். நிலக்கரி எரியும்போதோ, பெட்ரோலால் இயங்கும் வாகனங்களில் இருந்தோ கார்பன் டை ஆக்சைட் வருவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட் போன்றவையும் இந்த வகையறாவில் வரும். மாடுகள் உணவைச் செரிக்கும்போது உருவாகும் மீத்தேன், கார்பனைவிட இருபது மடங்கு அதிகமாக வெப்பத்தை அடக்கி வைக்கிறது.உலகின் மொத்தப் பச்சையக வாயுக்களில் 25%, உணவுக்காக நாம் வளர்க்கும் விலங்குகளால் வருவது என்கிறது ஓர் ஆராய்ச்சி முடிவு. உலகம் முழுதும் இருக்கிற கார்கள், விமானங்கள் உமிழும் கார்பனைவிட இது அதிகம்.

தண்ணீரும் இதற்கு அதிகம் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு கிலோ மாட்டிறைச்சிக்கு 12,000 லிட்டர்களுக்கு மேல் தண்ணீர் தேவை. மூன்று கிலோ உணவைக் கொடுத்துத்தான் ஒரு கிலோ மாமிசத்தைப் பெற முடிகிறது.

இதுபோன்ற சூழல், பொருளாதார சிக்கல்களுடன், ‘உயிர்களை ஏன் உணவுக்காகக் கொல்ல வேண்டும்’ என்ற அறச்சிக்கலும் சேர்ந்த சிக்கல் கலவைக்கான தீர்வுதான் வளர்ப்பு மாமிசம்.

சோயா பீன் போன்ற தாவரங்களிலிருந்து மாமிசம்போல உருவாக்கப்பட்டு, நம் அரும்புகளை ஏமாற்ற முயலும் மீல் மேக்கர் போன்றவற்றைச் சொல்லவில்லை. அதுபோன்ற தாவரம் சார்ந்த புரத உணவுகள் பிரபலமாகி வருவது உண்மைதான். சென்ற வருடத்தில் பங்குச்சந்தைக்கு வந்த Beyond Meat தயாரிக்கும் உணவு வகைகள், பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் கிட்டத்தட்ட மாமிசம் போலவே இருப்பதால், அதில் செய்த பர்கரில் ஒரு துண்டு வெட்டி எங்கள் வீட்டு நாய்க்குக் கொடுத்தேன். நீளமாக மோந்து பார்த்துவிட்டு, ஏமாற்றப்பட்ட பாவனையுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டது. நாய்களின் உணவு பற்றிய நுண்ணறிவு, நம்மைப் போல ஏமாறுவதில்லை. பை தி வே, இந்தத் தாவரப் புரத உணவு வகைகளை உருவாக்கப் பயன்படுத்தும் சோடியம் போன்றவை உடல்நலத்திற்கு உகந்தவை அல்ல என்கிறார்கள்.

எந்த மிருங்களையும் கொல்லாமல், மாமிசத்தை விலங்குகளின் செல்களிலிருந்து வளர்த்தெடுக்கும் அறிவியல் பிரிவுதான் - வளர்ப்பு மாமிசம். எப்படி வளர்க்கப்படுகிறது இந்த மாமிசம்? சொல்கிறேன்.

அதற்கு முன்னால், நமது உணவில் பெரும்பாலானவை செல்களே. தோலுரித்த கோழியின் வறுவல் என்றாலும், தோலுரித்து செய்யப்படும் வாழைக்காய் பஜ்ஜி என்றாலும், நாம் உண்பது அவற்றில் இருக்கும் செல்களையே. மனிதர்கள் மற்றும் மிருகங்களின் தசைகளில் காயம் நேர்ந்து அழிவு ஏற்படும்போது, அவற்றைப் புதிய செல்களை வளர்த்து நிரப்புவது ஸ்டெம் செல் என அழைக்கப்படும் செல்களின் தலையாய பணி. தசைகளில் இருக்கும் ஸ்டெம் செல்களுக்கு மையோசாட்டிலைட் என்று பெயர். இந்த செல்களில் சிலவற்றை எடுத்து அவற்றிற்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அறுவடையான அந்த செல்கள் பல கோடிகளாகப் பல்கிப் பெருகத் தொடங்கும். குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும் வளர்வதற்கான காரணிகளை நிறுத்திவிட்டால், அவை தசை வடிவில் உருவெடுக்கும். அவற்றைத் தண்ணீர் சார்ந்த ஜெல் ஒன்றில் வைத்திருந்தால், அவை மாமிசம் போலவே மாற ஆரம்பிக்கும். சில செல்களிலிருந்து பல நூறு கிலோ மாமிசத்தை வளர்த்து எடுத்துவிடலாம். ஆக, எந்த விலங்கைக் கொன்று அதன் மாமிச செல்லை உண்கிறோமோ, அதேதான் கத்தியின்றி ரத்தமின்றிக் கிடைத்து விடுகிறது.

பரிசோதனை முயற்சிக்காக ஆய்வாளர்களும், சமையல் விற்பன்னர்களும், சில பத்திரிகையாளர்களும் மட்டுமே ருசி பார்த்திருக்கும் வளர்ப்பு மாமிசத்தை உலகில் முதல்முதலாக சந்தைக்கு வர அனுமதித்திருக்கிறது சிங்கப்பூர். சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் JUST என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் கோழி இறைச்சி சிறு துண்டுகள் (Nuggets) வடிவில் விரைவில் சிங்கப்பூரில் கிடைக்கும்.

UNLOCK அறிவியல் 2.O - 8

உணவுக்கு அடுத்தது உடற்பயிற்சி

கொரானா காலத்தால் கிட்டத்தட்ட நிரந்தர முடிவை எட்டிவிட்டன, தெருமுனைக்கு ஒன்றாக இருந்த உடற்பயிற்சிக் கூடங்கள். குறுகிய அறைகளில், உபகரணங்களோடு பலரும் வியர்வை ஒழுக நெருக்கமாகப் பயிற்சி செய்வது வைரஸ், பாக்டீரியா இன்ன பிற கிருமிகளுக்குக் கொண்டாட்டம் என்பதால் தடை செய்யப்பட்டிருக்கும் இவை மீண்டும் உயிர்ப்பது சந்தேகம்.

காரணம், உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்வதற்குப் பதில், தொழில்நுட்பம் சார்ந்து எடுக்கப்பட்ட மாற்று முயற்சி ஒன்று பெரு வெற்றிகொண்டு வருவதைப் பார்க்க முடிகிறது.

வீட்டில் இருந்தே உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனம், Peleton. சென்ற வருடம் வரை யாரென்று தெரியாமல் இருந்த Peleton-க்கு இந்த வருடத்தில் வருமானம் குவிகிறது. எட்டு வருடங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு சராசரி வளர்ச்சி கண்டு கொண்டிருந்த நிறுவனம், கடந்த எட்டு மாதங்களின் விளைவால் உயர்ந்திருக்கும் சந்தை மதிப்பு - 35 பில்லியன் டாலர்.

Mirror Fitness - செவ்வக வடிவில் ஆளுயரத்தில் இருக்கும் ஸ்பெஷல் மானிட்டர் என்று சொல்லலாம். உபகரணத்தை வாங்கிப் பொருத்திக்கொண்டு அவர்கள் நடத்தும் லைவ் உடற்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

இதையெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஆப்பிள் இன்று Apple Fitness+ என்ற சேவையை ஆரம்பித்திருக்கிறது. ஆப்பிள் வாட்ச் உரிமையாளர்களுக்கு மட்டுமே சந்தாதாரர்களாக முடிகிற இந்த சேவையில், ஆப்பிளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உடற்பயிற்சி நிபுணர்கள் வகுப்புகளை நேரலையில் எடுப்பார்களாம். கணினியும், அலைபேசியும் விற்று வந்த ஆப்பிள் தளத்தில் உடற்பயிற்சிக்குத் தேவையான எடைகளும், போட்டுக்கொள்ளும் உடைகளும் இருப்பது மாறும் காலத்தின் அடையாளம்.

இந்தக் கட்டுரைக்கான ஆதாரங்கள், இணைப்புகள் https://UnlockSeries08 என்ற வலைப்பக்கத்தில் இருக்கின்றன. உங்கள் கருத்துகளை எழுத்தாகவோ, ஆடியோவாகவோ +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலம் அனுப்பலாம்.

- Logging in...