
அண்டன் பிரகாஷ்
பார்வை சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளும், அதன் உதவியில் வெளியிடப்படும் புதிய பொருள்களும், அது சார்ந்த சேவைகளும் தொடர்ந்து உச்சங்களை எட்டியபடி இருக்கின்றன.
அதற்குள் செல்லும் முன்னால் சில அடிப்படைகள்...
காணுதல் என்பது மூளையின் செயலாக்கத்திற்கு மிக முக்கியமாகப் பயன்படும் உணர்வு என்பதால், மூளை கண்களை எப்போதும் தயார் நிலையிலேயே வைத்திருக்கும். தூக்கத்தின் சில பகுதிகளில் மட்டுமே கண்ணை ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது மூளை.

உடல் கடிகாரம் (Body Clock) என அழைக்கப்படும் சிர்கேடிய தாளத்தின் (Circadian Rhythm) இரவுப் பகுதி தூக்கத்திற்கானது. ஒவ்வொரு நாள் இரவும், மூளை இப்படி ஓய்வு எடுத்து சேதமாகியிருக்கும் செல்களை சரிசெய்துகொண்டு, அன்றைய நிகழ்வுகளை ஆழமாக அதற்கான இடத்தில் பதிந்துவிட்டு, புத்துணர்ச்சியுடன் அடுத்த நாளில் நம்மை எழுந்து இயங்கச்செய்ய வேண்டும். இதற்கு, மேற்படி சுழல்முறைச் செயல்பாடு மிகவும் முக்கியம். அதிக அளவில் காபி/டீ குடிப்பது, மிகத்தாமதமாக இரவுணவு உண்பது, மதுப்பழக்கம் போன்றவை தரமான தூக்கத்தைக் கெடுப்பவை என்பது பொதுவாகத் தெரிந்த ஒன்றுதான். ஆனால், பொதுவாக அறியப்படாமல் இருக்கும் தூக்க எதிரி - சூரியன் மறைந்த பின்னர் நம் கண்களின் ஊடாக நாம் தொடர்ந்து பெற்றுக் கொள்ளும் வெளிச்சம்.

சிர்கேடிய தாளத்தை வரைமுறைப் படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது மெலட்டோனின் (Melatonin) என்ற ஹார்மோன். மூளையில் சுரக்கும் மெலட்டோனின் நம்மைத் தூங்கச் செல்லும்படி உந்துகிறது. தூக்கம் வரும் நேரத்தில் கண்கள் களைத்து, கொட்டாவி வருகிறதென்றால், மெலட்டோனின் சுரந்து, தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டதென்று பொருள். கண்கள் மூலமாக வரும் படிமங்களைத் தொடர்ந்து பகுத்தும் தொகுத்தும் முடிவுகளை எடுத்தபடியேயிருக்கும் மூளைக்கு இரவானதும் ஓய்வு தேவை.
கண்களால் கிரகிக்கப்படும் ஒளியை லக்ஸ் (Lux) என்ற யூனிட்டால் அளக்கிறார்கள். மெழுகுதிரியிலிருந்து வரும் ஒளி 3 லக்ஸ். வீடுகளில் இரவு நேரத்தில் பயன்படுத்தும் பல்புகளிலிருந்து 100 லக்ஸ் அளவிலான வெளிச்சம் வருகிறது. கடைகளில் தொகுப்பாகப் போட்டிருக்கும் விளக்குகளில் 1000 லக்ஸுக்கு மேலாக வரலாம். லக்ஸ் அளவு கூடக்கூட மெலட்டோனின் சுரக்கும் அளவு குறையும். 9000 லக்ஸ் உள்ள வெளிச்சத்தைக் கண்கள் உள்வாங்கினால் மெலட்டோனின் அந்த இரவில் சுரக்காமல் நின்றுபோகும்.

கண்களின் வழியாக, திரைகளிலிருந்து வரும் நீல வெளிச்சம் புகும்போது, மூளையால் மெலட்டோனின் சுரத்தலை சரிவரச் செய்ய முடிவதில்லை. நீண்டநேரம் டிவி அல்லது அலைபேசியைப் பார்த்ததன் விளைவாக தேவையான மெலட்டோனின் சுரக்காமல் தூக்கச் சுழற்சி சரிவர நடப்பதில்லை. ஆழ்ந்த மற்றும் REM தூக்கம் வராமல், மெல்லிய தூக்கம் முடிந்து எழுகையில் புத்துணர்ச்சி இருப்பதில்லை. அதைச் சரிக்கட்டுகிறேன் பேர்வழி என காட்டமாக காபியைக் குடிப்பதும், அது அடுத்த நாளின் தூக்கத்தைக் கெடுப்பதுமாக, உடலின் நலத்தை மொத்தமாகச் சீர்குலைவிற்கு இட்டுச் சென்றுவிடும்.
சரி, இதைச் சரிக்கட்ட என்ன செய்யலாம்?
தூங்குவதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன்னால், எல்லாவித ஒளித்திரைகளையும் பார்ப்பதைத் தவிருங்கள். இது சாத்தியமில்லை எனில், திரைகளிலிருந்து வரும் நீல வெளிச்சத்தை மட்டுப்படுத்தும் blue-light blocking கண்ணாடிகள் வந்துவிட்டன. அந்தி சாய்ந்த பின்னர் அப்படிக் கண்ணாடி அணிவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கண் நலம் பார்த்தோம். பார்வைப் படிமங்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் என்னவாக இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

புதிதாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு அலைபேசிகள் வெளியாகும்போதெல்லாம் அவற்றில் பிரதானமாக முன்னேற்றம் செய்யப்படுபவை அவற்றில் இருக்கும் கேமராக்கள். அலைபேசியில் பின்னால் மட்டும் முதலில் வைக்கப்பட்ட கேமரா, முன் பகுதியிலும் வைக்கப்பட்டு செல்பி என்ற கலாசார வடிவைத் தொடங்கியது. 2020-ல் மட்டும் 1.4 ட்ரில்லியன் புகைப்படங்கள் அலைபேசிகளால் எடுக்கப்பட்டு சேகரிக்கப்படுகின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம். தனி மனிதர் ஒரு நொடிக்கு ஒரு படம் எனத் தொடர்ந்து எடுத்தால், மேற்கண்ட அளவிற்கான படங்களை எடுக்க 45,000 வருடங்களுக்கு மேலாகும். இந்தப் படங்களில் பெரும்பாலானவை மேகக்கணினிய சேமிப்பு அமைப்புகளில் சேகரமாகிக்கொண்டே இருக்கின்றன. இப்படி சேகரமாகும் படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து தகவல்களைப் புரிந்துகொள்ளும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் டெக் உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் மூன்றுமே முனைப்பாக இருக்கின்றன. படிமப் பகுப்பாய்வு (Image Processing), முக அடையாளம் (Facial Recognition) என இந்தச் செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தில் பல உட்பிரிவுகள்.
செயற்கை அறிவு ஆராய்ச்சிகளை முழுமூச்சில் எடுத்துச் செல்லும் Deep Mind நிறுவனத்தின் ஆராய்ச்சிகளில் பார்வை சார்ந்த முயற்சிகள் பிரமிக்கவைக்கின்றன. குறிப்பாக, கண் நோய் சம்பந்தமான ஆராய்ச்சிகள். உரிய நேரத்தில் கண்டறியப்படாவிட்டால் கண் பார்வை இழப்பு நேரிடும் பேராபத்து பல சர்க்கரை நோயாளிகளுக்கு இருக்கிறது. கண்களை ஸ்கேன் பதிவுகள் மருத்துவர்களால் மட்டுமே அலசப்படும்போது இதைக் கண்டறிவது மிகக் கடினம். செயற்கை அறிவாற்றலின் ஆழ் கற்றல் மூலமாக “நோய் நாடி நோய் முதல் நாடி” சாத்தியமாகியிருக்கிறது.
கூகுள், Vision AI எனத் தனியாக ஓர் எந்திரக் கற்றல் அமைப்பை வைத்திருக்கிறது. அவர்களது ஆராய்ச்சிகளிலிருந்து பெறப்படுவதை எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளும் API (Application Programming Interface) இதில் இருக்கிறது. அதன் பயன்பாட்டைப் புரிந்துகொள்ள அந்த வலைப்பக்கத்திலேயே எளிய சோதனை வசதியை வைத்திருக்கிறார்கள்.
Step 1
முதலில் சில செல்பி படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். சிரிப்பு, சோகம், வருத்தம், கோபம் என உணர்ச்சிகளைக் காட்டுங்கள். சில படங்களில் நண்பர்கள் அருகில் இருந்தால் அவர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். தொப்பி இருந்தால் சிலவற்றில் போட்டுக்கொள்ளுங்கள்.
Step 2
https://cloud.google.com/vision என்ற வலைப்பக்கத்திற்குச் சென்று படங்கள் ஒவ்வொன்றாகப் பதிவேற்றி எந்திர அறிவு என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள்.

எத்தனை பேர் இருக்கிறீர்கள், ஒவ்வொருவரது முகம் என்ன உணர்வுகளைத் தெரிவிக்கிறது என்பதைத் துல்லியமாகக் காட்டிவிடும், மேற்படி முக அடையாளத் தொழில்நுட்பம் மனித முகங்கள் மட்டுமன்றி, பொருள்களை அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும்.
இதுபோன்றவற்றால், சாதாரண மனிதனுக்கு என்ன பயன்?
நிறைய இருக்கிறது.
பல காலம் பயன்படுத்திவந்த காய்கறி வெட்டும் கத்தி உடைந்துவிட்டது. அது எந்த நிறுவனம் தயாரித்தது என்பதெல்லாம் உங்களுக்கு நினைவில்லை. உங்களுக்குத் தேவை அதே கத்தி. அதைப்பற்றிய விவரங்களைத் தேடிக் கொண்டிருக்காமல், உடைந்த கத்தியைப் படமெடுத்துப் பதிவேற்றினால், எந்திரக் கற்றல் அந்தக் கத்தியைப் புதிதாக வாங்கும் பக்கத்திற்கு நொடியில் கொண்டுபோக முடியும்.
வணிகத் தளங்களில் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை அவர்களது முக அமைப்புகளின் தன்மையில் இருந்தே தெரிந்துகொண்டு அவர்களது தேவைகளை அவர்கள் கேட்கும் முன்னரே பூர்த்தி செய்துவிடலாம்.
வெயிட் - இப்படிப் பொதுவிடங்களில் படங்களை நேரில் எடுத்து அலசுவது எனது பிரைவசியை பாதிக்காதா என்ற அச்சம் வந்தால் அது இயல்பே. அது பற்றி இன்னொரு வாரத்தில் விரிவாக unlock செய்வோம்.
இந்த வாரக் கட்டுரைக்கான மேற்கோள் வலைப்பக்கங்கள் மற்றும் விவரங்களுக்கு http://bit.ly/UnlockSeries02 என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
கட்டுரையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை விகடன் டாட் காம் பயனீட்டாளராக இருந்தால் அங்கே எழுதுங்கள். அதோடு, +1 628-240-4194 என்ற வாட்ஸப் மூலம் ஆடியோ பதிவாகவும் உங்களது பின்னூட்டங்களைப் பகிருங்கள். தேர்ந்தெடுத்த சிலவற்றை அதே பக்கத்தில் பதிவேற்றம் செய்கிறேன்.
- Logging in...