Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 10

UNLOCK அறிவியல் 2.O
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல் 2.O

- அண்டன் பிரகாஷ்

கொரோனாவின் அடுத்த அலை வேகமாக வலுக்கிறது என்பதால் மீண்டும் பல வித லாக்டௌன் விதிகளும், வேண்டுதல்களும் அறிவிக்கப்படுவதைத் தொடர்ந்து, கிறிஸ்துமஸை ஒட்டி நடத்தப்படும் இசைக் கச்சேரிகள், பார்ட்டிகள் போன்ற அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. தெருக்களில் பண்டிகைப் பரபரப்பில்லாமல் மாஸ்க் சகிதம் ஓரிரு சான்டாகிளாஸ்கள் ஆங்காங்கே நின்று கொண்டு சோம்பி வழிந்தார்கள். அதிருக்கட்டும்.

டிசம்பர் என்றாலே அமெரிக்காவின் பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு வேறொரு முக்கியமான பாரம்பரியம் இருக்கிறது. கடந்த 120 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ‘கிறிஸ்துமஸ் பறவை எண்ணிக்கை கணக்கிடல்’ (Christmas Bird Count) நிகழ்வுதான் அது.

உங்கள் மைண்ட் வாய்ஸ்: என்னது, பறவை எண்ணிக்கையா? கிறிஸ்துமஸ் அன்று அமெரிக்காவில் தின்று தீர்த்த வான்கோழி/வாத்து இன்னபிற பறவைகளின் எண்ணிக்கைதானே அது, அண்டன்?

UNLOCK அறிவியல் 2.O - 10

எனது பதில்: இல்லை! தொடர்ந்து படியுங்கள்.

ஒரு குயிக் ப்ளாஷ்பேக்: பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை பின்பற்றப்பட்ட கிறிஸ்துமஸ் நாள் பாரம்பரியம் - பறவை வேட்டை. மக்கள் ஆங்காங்கே இணைந்து, இரு குழுக்களாகப் பிரிந்துகொள்வார்கள். இந்த இரண்டு குழுக்களில் இருப்பவர்களும் கண்மூடித்தனமாக பார்க்கும் பறவைகளை எல்லாம் சுட்டுக் கொல்வார்கள். வேட்டை நேரம் முடிந்ததும், அவற்றைக் கொண்டு வந்து எண்ணிப் பார்த்து, ‘எந்தக் குழு வெற்றி பெற்றது’ என அறிவிப்பார்கள்.

‘Side Hunt’ என்றழைக்கப்பட்ட இந்தக் குழு வேட்டையின் கொடூரத்தை ரசிக்காத ப்ராங் சேப்மென் என்பவர் மாறுதலாக ஓர் ஐடியாவைப் பரிந்துரைத்தார் - குழுக்களாகப் பிரிந்து பறவைகளைச் சுட்டுக் கொல்வதற்குப் பதில், அதுபோலவே குழுக்களாகப் பிரிந்து, கிறிஸ்துமஸ் நாளில் அவற்றை எண்ணிக் கணக்கெடுக்கலாம்; பின்னர் அந்த விவரங்களை வெளியிடலாம் என்ற ஒரு எதிர் இயக்கத்தைத் தொடங்கினார். பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட ‘ஆடபான் சமூகம்’ என்ற அமைப்பின் பகுதியாக 1900-ம் வருடத்தில் மாறிய, இந்தக் காட்டுப்பறவைத் தகவல் திரட்டு நிகழ்வு இன்றுவரை தொடர்கிறது.

UNLOCK அறிவியல் 2.O - 10

உலகின் மிகப்பெரிய பறவைத் தகவல் சேகரிப்பு நடத்தப்படுவது இப்படித்தான்:

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 14 அன்று ‘பறவைக் கணக்கு வட்டங்கள்’ அறிவிக்கப்படும். அந்த வட்டத்திற்குள் இருக்கும் பகுதிகளை 15 மைல் தூரங்களாகப் பிரித்துக்கொண்டு, தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் குறிப்பிட்ட நாளின் காலையிருந்து மாலைவரை அந்த எல்லைக்குள் நடந்து பறவைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பார்கள். தகவல்களைச் சேகரிக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டவர், அன்று மாலை எல்லோரிடமிருந்தும் இவற்றைப் பெற்றுக்கொள்வார். நாளின் இறுதியில், அனைவரும் ஒன்றாக விருந்துண்டு கலைந்துபோகவேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஜனவரி 5-ம் தேதிக்குள் எல்லாப் பறவை வட்டங்களிலும் தகவல் சேகரிப்பு முடிந்துவிடும். தொகுக்கப்பட்ட தகவல்கள், பறவைகளின் நலம் பற்றிய பல்வேறு வகையான ஆராய்ச்சிகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும். பை தி வே, பறவைகள்மீது அதீத விருப்பம் கொண்ட தன்னார்வலர்களால் மட்டுமே இதுபோன்றதொரு முயற்சி சாத்தியம். இதுபோல, பொதுமக்களை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளும் குடிமை அறிவியல் (Civic Science) பிரிவு பல துறைகளில் சிறப்பாகச் செயல்படுகிறது. அதை மற்றொரு வாரம் தனியாக அன்லாக் செய்யலாம்.

இந்த வாரம் பறவைகளுக்கு மட்டுமே!

அப்படி என்ன பறவைகளுக்கு முக்கியத்துவம் வேண்டியிருக்கிறது?

சூழலியலுக்குப் பறவைகளின் பணி எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் பல நூல்களாக வெளிவந்திருக்கின்றன. பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, பூக்களில் இருந்து மகரந்தத்தை எடுத்து நிலப்பரப்பில் கொண்டு சேர்ப்பது, கடலில் இருந்து செத்துக் கரையில் ஒதுங்கும் விலங்கினங்களைத் தின்று நாம் வாழும் புவிப்பந்தைத் தூய்மையாக வைத்திருப்பது எனப் பல்வேறு உதவிகளைச் செய்வதில் பறவைகள் முக்கியப் பங்களிப்பது பரவலாக அனைவருக்கும் தெரிந்த விவரங்கள்.

UNLOCK அறிவியல் 2.O - 10

பத்துக் கோடி வருடங்களுக்கு முன்னால், பரிணாம வளர்ச்சியில், முதுகெலும்பு கொண்ட மிருக (vertebrate) வரிசையில், மனித இனம் உட்பட்ட பாலூட்டிகளுடன் (mammal) ஒன்று விட்ட அண்ணன்/தம்பியாகப் பறவைகள் இருந்தது உண்மைதான். ‘அதன்பின்னர், பாலூட்டிகள் உடலின் எடையையும் அளவையும் பெருக்கிக்கொள்வதில் குறியாக இருக்க, பறவைகள் உடலின் எடையைக் குறைத்துப் பறக்கும் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கின’ என்கிறார்கள் பரிணாம உயிரியலாளர்கள் (Evolutionary Biologists).

90களின் கடைசியில் உலகம் முழுதும் இருக்கும் காட்டுப் பறவைகளின் எண்ணிக்கை பற்றிய ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதன்படி, மொத்தப் பறவைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட முப்பதாயிரம் கோடியாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். உலக மக்கள்தொகை அப்போது 700 கோடி எனக் கொண்டால், ஒரு மனிதருக்கு நாற்பதிற்கும் மேல் பறவைகள் இருப்பதாக விகிதம் வருகிறது. பிரபஞ்ச விதிகளின்படி, தக்கன பிழைத்து வாழ்வதில் (Survival of the fittest) பறவைகள் நமக்குச் சளைத்தவை அல்ல என்பது நிரூபணமாகிறது.

அதை நிரூபிப்பதுபோலத்தான் சமீபத்திய பறவைகளின் அறிவாற்றல் பற்றிய ஆராய்ச்சிகளின் முடிவுகள் இருக்கின்றன.

குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த சில:

மூளையின் அளவு: மூளையின் அளவு பெரிதாக இருக்கையில் அறிவாற்றலை அதிகம் வளர்க்க முடியும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ‘அதிக எடைகொண்ட மூளையில் அதிக நியூரான்கள் கடத்தப்பட முடியும்’ என்ற அடிப்படைதான் இந்த முடிவிற்குக் காரணம். யாரையாவது மூடன் என மட்டம் தட்டுவதென்றால், அதற்கு ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் பதம் - அவன் பறவை மூளைக்காரன் (Bird brain). மனித மூளையின் எடை கிட்டத்தட்ட 1.3 கிலோ. யானையின் மூளை ஐந்து கிலோ இருக்கிறது. இவற்றுடன் ஒப்பிடும்போது, ‘மொத்த உடல் எடையே சில நூறு கிராம்களைத் தாண்டாத சிறு பறவையின் மூளை எப்படி அறிவாற்றல் மிகுந்ததாக இருக்கும்’ என்ற மேதாவித்தனத்தில் உருவு கண்டு உருக்கொண்ட எள்ளல் அது.

UNLOCK அறிவியல் 2.O - 10

இது முழுதும் தவறு என்கிறது ஆராய்ச்சி முடிவு. மூளையின் எடை என்பதை அப்படியே பார்க்காமல், உடல் எடையில் எத்தனை சதவிகிதம் மூளையின் எடை என்பதைப் பார்க்க வேண்டும். மனித உடலில் இரண்டு சதவிகிதம் மூளையின் எடை இருக்கிறது. இரண்டு டன் கொண்ட யானைக்கோ மூளையின் எடை ஒரு சதவிகிதத்திற்கும் குறைவே. காகம் போன்ற பறவைகளின் மூளையின் எடை, தனது உடல் எடையில் மூன்று சதவிகிதத்திற்கு மேல் இருக்கிறது. இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், பரிணாம வளர்ச்சியில் பல உடல் உறுப்புகளை தானம் கொடுத்து அறிவாற்றலின் வளர்ச்சிக்காக மூளையின் அளவை வளர்த்துக்கொண்டுள்ளன பறவைகள்.

மூளையின் செயல்பாடு: ‘சரி, எல்லாப் பறவைகளின் மூளையின் எடையும் மனித மூளைபோல உடல் எடையில் 2% இருப்பதில்லையே. அப்படியானால், அவற்றின் அறிவாற்றல் குறைவுதானே’ என்ற லாஜிக்கலான கேள்வி மனதில் வரலாம். அதில்தான், பறவைகளின் பரிணாம வளர்ச்சி அடுத்த அதிசயத்தைக் கொண்டு வருகிறது. தேடிப்பிடித்த உணவை, பல நூறு இடங்களில் மறைத்து வைப்பது பறவைகளின் வழக்கம். இந்த இடங்கள் எங்கே இருக்கின்றன என்பது மட்டுமன்றி, அவை எப்போது வைக்கப்பட்டன என்பதையும் தெளிவாக நினைவில் வைத்து, அந்த உணவு கெட்டுப்போவதற்கு முன்னால், தேடிச் சென்று எடுக்கும் திறன் பறவைகளுக்கு இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்பதைத் தோண்டித் துருவி ஆராய்ந்து பார்த்தால், நம்மைவிட நியூரான்களின் அடர்த்தி பறவை மூளையில் அதிகம் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டுமல்ல, புதிய நியூரான்களை உருவாக்கிக்கொள்ளும் படைப்பாற்றல் (neurogenesis) வலிமையும் பறவைகளுக்கு அதிகமாக இருப்பது தெரியவருகிறது. இந்தக் கட்டுரையின் கீழ் இருக்கும் இணைப்பு வலைப்பக்கத்தில் ராவன் எனப்படும் காகம், எட்டுப் பகுதிகளாக தனக்கு முன்னால் இருக்கும் சோதனையை வெற்றி கொள்கிறது என்பதைப் பாருங்கள். அதன்பின் பறவைகளைப் பற்றிய உங்கள் கண்ணோட்டமே மாறியிருக்கும்.

பாட்டம் லைன்: உங்களை யாராவது ‘பறவை மூளைக்காரா’ எனத் திட்டினால் மகிழ்ச்சி கொள்ளுங்கள். காரணம், மனித மூளை 40 வருடங்களுக்கு முன்னால் இருந்த ஐபிஎம் சூப்பர் கம்ப்யூட்டர் என்றால், பறவை மூளை லேட்டஸ்ட் ஐபோன் 12. ஆக, அளவு என்பது அறிவாற்றலிலும் பெரும்பொருட்டல்ல.

நிற்க!

கோவிட் காரணமாக (merced research) கிறிஸ்துமஸ் பறவை எண்ணிக்கை நிகழ்வு பல இடங்களில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தன்னார்வலர்களின் பணி அளப்பரிதுதான் என்றாலும், மனிதர்களை நம்பிப் பணிகளைச் செய்யும்போது இதுபோன்ற தடைகள் வருவதில் ஆச்சரியம் இல்லை. மனிதர்களின் தயவு இல்லாமல், மேகக் கணினியம் (Cloud Computing), தகவல் அறிவியல் (Data Science) மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பறவைகளின் தகவல்களைத் திரட்டும் பணிக்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றனவா என்பதைத் துழாவிப் பார்த்தேன். பல தளங்களில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. அதில் ஒன்று இந்த வாரம்.

பொதுவாகப் பறவைகளை அடையாளம் காண்பது என்பது தொலைநோக்கி (binocular) மூலம் பார்த்து, அவற்றின் நிறம், அளவு, செயல்கள் போன்றவற்றை விளக்கமாகக் குறிப்பெடுத்துக்கொள்வதன் மூலம் நடக்கிறது. மிக அருகில் செல்ல முடிந்தால், அவற்றின் கீச்சு மற்றும் பாடல்களைக் கேட்டு இனம் பிரித்துக் குறிப்பெடுக்க முடியும்.

பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கலிபோர்னியாவின் மெர்செட் பல்கலைக்கழகத்தில் ‘கிறிஸ்துமஸ் பறவைக் கணக்கெடுப்பு’ போன்றதொரு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதன் ஸ்டெப் பை ஸ்டெப் விவரங்கள்:

ஆடியோமாத் (Audio Moth) என்றதொரு ஆடியோப் பதிவு வடிவமைப்பு இருக்கிறது. இது நம்மால் கேட்க முடிகிற சத்த அலைவரிசைகளையும், நம்மால் கேட்கமுடியாத அல்ட்ராசானிக் அலைவரிசைகளையும் பதிவு செய்துவிடும். பேட்டரியிலேயே இயங்கும் இந்த சாதனங்களைப் பல இடங்களில் வைத்துவிட்டு, அவை வைக்கப்பட்டிருக்கும்அட்ச/தீர்க்க ரேகைப் புள்ளிகள் குறித்துவைத்துக்கொள்ளப்படும்.

இந்த சாதனங்கள் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை விழித்து ஒரு நிமிடம் ஆடியோப் பதிவு செய்யும். மேகக்கணினிய சேவையில் சேகரமாகிவிடும் இந்த ஆடியோக்களை உருட்டி, கழுவி, அலசிப் பார்த்து பறவைகளின் சத்தங்களைத் தனியாக எடுத்துவிட முடியும்.

ஒரே இனப் பறவைகளாக இருந்தாலும், அதன் சத்தங்களில் சற்றே மாறுதல் இருக்கும். அதிலிருந்து, ஒவ்வொரு பறவையும் எங்கே இருந்து எங்கே பறக்கிறது என்பதை மேற்கண்ட ஆடியோமாத் மூலம் பின்னப்பட்ட பிணையம் ஒன்றிலிருந்து எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு வாரக் கட்டுரையையும் படித்துவிட்டு பாளையங்கோட்டை ஆசிரியை மேரி விஜயராணி, கோயம்புத்தூர் பாஸ்கர் போன்றோர் தவறாமல் கொடுக்கும் தீர்க்கமான பின்னூட்டங்களும், ஆழ்ந்த அலசல்களும், இந்தத் தொடர் யாரையெல்லாம் சென்று சேர்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவைக்கிறது. இந்த வாரக் கட்டுரைக்கான ஆதாரங்கள், இணைப்புகள் https://unlock.digital/10 என்ற வலைப்பக்கத்தில் இருக்கின்றன. உங்களது கருத்துகளை +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலம் அனுப்புங்கள்.

- Logging in...