உத்தரப்பிரதேச மாநிலத்தில், தந்தையின் உடலைத் தகனம் செய்த மகனுக்கு, அவரின் தந்தை உயிருடன் இருப்பதாக மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்திருப்பது பலரையும் குழப்பமடையச் செய்திருக்கிறது.
ஆகஸ்ட் 22 அன்று அஜீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில், அடையாளம் தெரியாத 60 வயது முதியவரின் சடலம் ஒன்று போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. பின்னர் போலீஸாரும், அடையாளம் தெரியாத முதியவரின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.

மறுநாள், லக்கிம்பூர் கேரியைச் சேர்ந்த இந்திரன் என்பவர், போலீஸாரால் கண்டெடுக்கப்பட்ட அந்த உடல், தன்னுடைய தந்தை ராணா லாலின் உடல் என போலீஸிடம் அடையாளம் காட்டியிருக்கிறார். பின்னர் இந்திரனும் மருத்துவமனையிலிருந்து உடலை வாங்கிக்கொண்டு சென்று, குடும்பத்தினருடன் முறைப்படி தகனம் செய்திருக்கிறார். இது நிகழ்ந்து ஒரு வாரம் கழித்து கடந்த செவ்வாயன்று இந்திரனுக்கு ஒரு மருத்துவமனையிலிருந்து, ``உங்கள் தந்தை சாலை விபத்துக்குள்ளாகி கால் உடைந்து அனுமதிக்கப்பட்டிருக்கிறார்" என அழைப்பு வந்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து இந்திரனும் போலீஸை அணுகிவிட்டு, தன் குடும்பத்தினருடன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்ததில், அது உண்மை எனத் தெரியவந்திருக்கிறது. பின்னர் இது குறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார், ``மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்த பிறகு, இது பற்றி இந்திரன் காவல் நிலையத்துக்கு வந்து அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார். பின்னர், தன்னுடைய தந்தையின் உடல் என நினைத்து தவறுதலாக, வேறொரு முதியவரின் உடலை வாங்கிச் சென்று தகனம் செய்திருக்கிறார். ஆனால், தற்போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்தான் சந்திரனின் தந்தை என்பது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக விசாரித்துவருகிறோம்" என்றார்.