சினிமா
தொடர்கள்
Published:Updated:

“இந்தப் பணியே திருப்தி கொடுக்கும்!”

இலவசப் பயிற்சி முகாம்
பிரீமியம் ஸ்டோரி
News
இலவசப் பயிற்சி முகாம்

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு டீம் ஸ்பிரிட் முக்கியம். குழுவாகச் சேர்ந்து தயாராக வேண்டும். ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானால், IB, RAW, CBI போன்ற அமைப்புகளின் உயர் பதவிக்குச் செல்லலாம்.

மாணவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது, கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. அக்டோபர் 31-ம் தேதி, ஆனந்த விகடனும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியும் இணைந்து நடத்திய UPSC, TNPSC GROUP I, II தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் உற்சாகம் புரள நடந்து முடிந்தது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், கோவை மாநகரக் காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குநர் சத்திய  பூமிநாதன் ஆகியோர் மாணவர்களோடு உரையாடினார்கள்.

“இந்தப் பணியே திருப்தி கொடுக்கும்!”

‘‘போட்டித் தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு உருவாக்கத்தான் இந்த நிகழ்ச்சி. அடுத்த 12 - 18 மாதங்களில் 18 லட்சம் காலிப் பணியிடங்களை UPSC, RRB, SSC தேர்வுகளின் மூலம் மத்திய அரசு நிரப்ப உள்ளது. இதுதான் சரியான தருணம். முறையாகப் படித்தால் அரசு வேலை உறுதி” என்றார், முதலில் பேசிய கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் சத்திய  பூமிநாதன்.

‘‘வடமாநிலங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர். அதனால் அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். யு.பி.எஸ்.சி. தேர்வு என்பது ஆளுமைகளைக் கண்டறிவதற்கான ஒரு தேர்வு. முதல் மதிப்பெண் எடுப்பவர்கள்தான் தேர்ச்சி பெற முடியும் என்று இல்லை. விடாமுயற்சி உள்ளவர்கள் எளிதாக வெல்லலாம்’’ என்றார் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்.

கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ‘‘சிவில் சர்வீஸ் தேர்வுக்கு டீம் ஸ்பிரிட் முக்கியம். குழுவாகச் சேர்ந்து தயாராக வேண்டும். ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானால், IB, RAW, CBI போன்ற அமைப்புகளின் உயர் பதவிக்குச் செல்லலாம். மக்களுடன் எப்பொழுதும் நேரடித் தொடர்பில் இருக்க விரும்புபவர்களுக்கு ஐ.பி.எஸ். சிறந்த தேர்வாகும். எதையுமே தோல்வியாகப் பார்க்காதீர்கள். தோல்வியே வெற்றியின் முதல் படி’’ என்றார்.

“இந்தப் பணியே திருப்தி கொடுக்கும்!”

இறுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசினார். ‘‘.ஓர் இந்தியக் குடிமகன் எதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அவைதான் யு.பி.எஸ்.சி. தேர்வுப் பாடத்திட்டம். அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது சவால் அல்ல. வேறு எந்த வேலைக்குச் சென்றாலும் நன்கு சம்பாதிக்கலாம். ஆனால், இதுபோன்ற பணி மட்டுமே திருப்தி கொடுக்கும். நானும் அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரியில் படித்தவன்தான். தேர்வுகளைக் கண்டு பயப்படாதீர்கள்’’ என்றார் சமீரன்.

நான்கு உரையாளர்களிடமும் சந்தேகங்கள் கேட்டு, பதில் பெற்று, நம்பிக்கையோடு விடை பெற்றார்கள் மாணவர்கள்.