உத்தரகாண்ட் மாநிலத்தில், சீனாவுடனான சர்வதேச எல்லையில் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பயிற்சி, இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறுவதாக சீனா கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து சீனா தரப்பில், " உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 100 கி.மீ. தொலைவுக்குள் இந்தக் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வருகிறது. இது இரு நாட்டு எல்லை ஒப்பந்தத்தை மீறுவதாகும்" என்றனர்.

இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம், ``இப்படியான குற்றச்சாட்டுகளை சீனா தரப்பில் இருந்து முன்வைக்கும்போது, 1993 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை சீனா மீறியது தொடா்பாக நினைவில் கொள்ள வேண்டும். இந்தியா விரும்பிய நாடுகளுடன் போா்ப் பயிற்சி மேற்கொள்கிறது. இந்த விவகாரத்தில் மூன்றாவது தரப்பினர் யாரும் கருத்து சொல்ல வேண்டாம்'' என்றது.
இந்த நிலையில், இது தொடர்பாக அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ், ``இந்தியா தெரிவித்த கருத்தை நான் இங்கு மேற்கொள்காட்ட விரும்புகிறேன். இந்தியா - அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சியில் தலையிடுவது சீனாவுக்கு தேவையில்லாத வேலை'' என்றார்.