வளரும் தலைமுறையை ஸ்மார்போன்கள் தவறான திசைக்கு கொண்டு செல்கின்றன என்று பெற்றோர்கள் அச்சம் தெரிவிப்பதுண்டு. என்னதான் `நல்ல பிள்ளை ஸ்மார்ட்போனால கெட்டுப்போகாது’ என வசனம் பேசிக் கொண்டாலும், பெரும்பாலானவர்கள் இதற்கு இரையாவதுண்டு.

இதுபோன்ற ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் சுகாதார நிர்வாகியாகப் பணிபுரிந்து வருபவர் லாரி (Laurie). இவருடைய மகள் 12 வயதில், தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியாகவும் இருந்துள்ளார்.
அவரின் மகள் 14 வயதை நெருங்குகையில், தூக்கமின்மை, பசியின்மை, பயம், தற்கொலை எண்ணம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, தன்னைத்தானே காயப்படுத்தி அறுத்துக் கொள்ளும் நிலைக்குச் சென்றிருக்கிறார்.
இதற்குக் காரணம் அம்மாவுக்குத் தெரியாமல் ஸ்மார்ட்போனை உபயோகிப்பதது மட்டுமன்றி, இரவு நேரங்களில் தன்னைத்தானே வதைத்துக் கொள்ளும் ஆன்லைன் போஸ்ட்களை தேடிக் கண்டிருக்கிறார்.
ஒருநாள் தன்னுடைய அம்மாவிடம், `அம்மா, எனக்கு ஏதும் உதவி கிடைக்கவில்லை எனில், என்னை மோசமாகக் காயப்படுத்திக் கொள்வேன்’ எனக் கூறியிருக்கிறார். பதறிய லாரி, தன்னுடைய மகளை மீட்க, மனநல மருத்துவமனையை நாடியிருக்கிறார்.

இரண்டு வருடங்களாக மகளின் வாழ்வில், கல்வி பாதிக்கப்பட்டதுடன், குடும்ப பொருளாதாரமும் சிதைந்துள்ளது. கடனுக்குத் தள்ளப்பட்டதோடு, கலிஃபோர்னியாவில் உள்ள தன்னுடைய வீட்டையும் விற்றிருக்கிறார்.
தன்னுடைய மகளின் இந்நிலைக்கு சமூக வலைத்தள பக்கங்களான இன்ஸ்டாகிராம், ஸ்நாப் சாட், டிக் டாக் போன்றவையே காரணம் என, ஆகஸ்ட் மாதத்தில் மகளின் சார்பில் வழக்கு தொடர்ந்தார். இவரைப் போன்றே பல பெற்றோரும் சமூக ஊடகங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
இது குறித்து மூத்த வழக்குரைஞர் மாட் பெர்க்மேன் கூறுகையில், ``லாரியை போன்று சமூக ஊடகத்தால் பாதிக்கப்பட்ட 1,200 வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறோம். இவர்களில் 600 பேர் உணவு பிரச்னைகளாலும், 70 குழந்தைகள் தற்கொலையிலும் ஈடுபட்டிருக்கின்றனர்’’ எனத் தெரிவித்துள்ளார்.